ஜம்முனு வாழ காம்கேரின் OTP-40: நாம் ஒவ்வொருவருமே வெற்றியாளர்கள்தான்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 40
பிப்ரவரி 9, 2021

நாம் ஒவ்வொருவருமே வெற்றியாளர்கள்தான்!

எப்போதுமே அடுத்தவர்களின் வெற்றிகளுக்கு ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி அவர்களை புறந்தள்ளுவதில் சிலருக்கு அலாதி ஆனந்தம். இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது.

ஒவ்வொருவராலும் அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும்தான். பெரும்பாலானோர் வெற்றிகரமான வாழ்க்கையைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் அவர்கள் வெற்றியாளராக இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை.

என் நிறுவனத்தில் நாங்கள் வசிக்கும் தெருவில் இருந்து ஒரு பெண் பணியில் இருந்தாள். அவள் அம்மா ஒருமுறை ‘அவளைப் பார் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறாள். காலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுகிறாள்… இரவுதான் வருகிறாள்… சனி ஞாயிறு எல்லா நாட்களும் வேலைக்குச் செல்கிறாள்…’ அப்படி இப்படி என என்னை புகழ்ந்துத் தள்ள அவளுக்கு வந்ததே கோபம்.

‘ஆமாம்மா, அவள் என்ன மீட்டிங் மீட்டிங் என்று பேசிக்கொண்டே இருப்பாள். அதுதான் அவள் வேலை. எங்களைப் போலவே முதுகொடிய ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வேலைபார்த்தால் அவளும் என்னை மாதிரி தூங்கத்தான் செய்வாள்…’ என்று பதில் சொல்லி இருக்கிறாள்.

மீட்டிங்!

அதை எத்தனை எளிதாக சொல்லிவிட்டாள் அந்த பெண்.

பிராஜெக்ட் என்றால் PreProcessing, PostProcessing உட்பட அத்தனையையும் முன்பே அனலிஸிஸ் செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் அடுத்தடுத்த பிராஜெக்ட் எடுக்க வேண்டிய நிலையில் மீட்டிங் இருக்கும்.

தவிர செய்துகொண்டிருக்கும் பிரஜெக்ட்டில் அத்தனை டீமிலும் ஏதேனும் ப்ராப்ளம் இருந்தால் அதற்கும் மீட்டிங் இருக்கும்.

மீட்டிங்கில் எனக்குள் எத்தனை டென்ஷன் இருக்கும் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வெறும் மீட்டிங். எனக்கு மீட்டிங் என்பது மண்டைக்குள் லாஜிக்குகள் கொதித்துக்கொண்டிருக்கும்.

அனிமேஷன் போன்ற கிரியேடிவ் பிராஜெக்ட் என்றால் கற்பனைகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்.

லாஜிக்கோ, கற்பனையோ ஏதோ ஒன்று என் மண்டைக்குள் தளும்பத் தளும்ப நிரம்பி இருக்கும்.

இத்தனை உணர்வுக் குவியல்களுக்குள் தான் அவள் ஒரே வார்த்தையில் சுலபமாக என் உழைப்பைப் புறம் தள்ளிய ‘மீட்டிங்’ என்ற ஒற்றை வார்த்தையின் பலமும் உள்ளன.

நான் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்த போது நானும் என் தம்பியும் ஒரு அறை எடுத்து தங்கி படிக்க வேண்டிய சூழல். அப்பா அம்மா இருவருக்கும் வேறு ஊருக்கு திடீர் பணியிட மாற்றல் காரணமாக.

அப்போது பக்கத்து வீட்டில் ஒரு மாமியும் அவரது மூன்று மகள்களும் (என் வயதை ஒத்தவர்கள்) மெஸ் வைத்து நடத்தி வந்தார்கள். அவர்கள் மெஸ்ஸில்தான் மூன்று வேலையும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் என் பெற்றோர். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லூரி. கல்லூரி முடிந்ததும்  நேராக அவர்கள் மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்புவேன்.

அப்போதே நான் கதை கவிதை எல்லாம் எழுதுவேன். ஒருமுறை ஆவலில் அந்த பெண்களிடம் காண்பித்தேன். உடனே அந்த பெண்கள் ஒரு சேர சொன்னார்கள், ‘எங்களுக்கும் இதுபோல யாராவது சமைத்துப் போட ஆள் இருந்தால் நாங்களும் கதை கவிதை என்ன சினிமாவே எடுப்போம்’  அவர்கள் குரலில் பொறாமை அப்பட்டமாக தெறித்தது.

எனக்கு என்ன வியப்பு என்றால் அந்த பெண்கள் மூவரும் அவள் அம்மாவுடன் சேர்ந்து மெஸ் நடத்துவதையே நான் மிக பெருமையாக நினைத்திருந்தேன். படித்துக்கொண்டே பிசினஸ் செய்கிறார்கள். படித்து முடித்த பின் சொந்தமாக ஹோட்டல் கூட ஆரம்பித்து விடுவார்கள் என்றெல்லாம் எண்ணி வியந்துகொண்டிருந்தேன்.

எனக்கு எப்போதுமே சுயமாக ஏதேனும் ஒரு தொழில் செய்பவர்களைப் பார்த்தால் மிகவும் பிடிக்கும். அவர்களின் செயல்பாடுகளை மனதுக்குள் ரசித்து கவனிப்பேன். அதுவும் பெண்கள் என்றால் இன்னும் கூடுதல் கவனம் இருக்கும் என் கவனிப்பில்.

கல்லூரியில் புரோகிராம் எழுதும்போதுகூட ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு பில் தயாரிப்பதைப் போல புரோகிராம் எழுத வேண்டும் என்றால் Bhuvaneswari & Co என்று போட்டே பில் தயாரிப்பேன். அந்த அளவுக்கு சொந்தமாக தொழில் புரிவதில் ஈடுபாடு. நான் ஐடி நிறுவனம் தொடங்குவேன் என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது.

இப்படி அந்த பெண்களைப் பார்த்து நான் வியந்துகொண்டிருந்தபோது அவர்கள் நான் எழுதும் கதை கவிதை கட்டுரைக்குப் போய் இத்தனை பொறாமையை வெளிப்படுத்துகிறார்களே என நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு பிறரிடம் என் படைப்புகளை காண்பிக்கும்போது மற்றவர்களை என் சந்தோஷம் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க ஆரம்பித்தேன்.

நேற்று என் அம்மாவின் பிறந்தநாள். என் அம்மாவின் பிறந்தநாளுக்கு, ஃபேஸ்புக் நட்புத் தொடர்பில் உள்ளவர்களின் வாழ்த்து மழையில் நனைந்தேன்.

அத்தனை வாழ்த்துக்களிலும் சட்டென என் கவனத்தை ஈர்த்தது ஒரு வாழ்த்துச் செய்தி. பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் சேது அவர்களின் வாழ்த்து உங்கள் பார்வைக்கு!

‘உங்களின் ஐநூறாவது புத்தக வெளியீட்டை அம்மா தலைமையில் நடத்திட வாழ்த்துகிறேன். ஆற்றலாளரை உருவாக்கித் தந்துள்ள தாயை வணங்குகிறேன். நூறாண்டுகள் கடந்த பின்னும் குறையேதுமின்றி நிறைந்து வாழ்ந்திருக்க வாழ்த்தி மகிழ்கிறேன்’

இந்த வாழ்த்து என் கவனத்தை ஈர்த்தமைக்கு மிக முக்கியக் காரணம், அந்த வாழ்த்துச் செய்தி என் பணியை ஒட்டிய வாழ்த்தாக அமைந்ததால் இருக்கலாம்.

இதைப் படித்தபோது எனக்குள் சில விஷயங்கள் ஓடின.

ஒன்று நான் என் 500-வது புத்தகத்தை சீக்கிரம் முடித்துவிடக் கூடாது, அந்த எண்ணிக்கையை அடைய நீண்ட நாள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டேன். காரணம். இவருடைய இந்த வாழ்த்து பலிக்க வேண்டும். என் அம்மா நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்கள் உடல் மன நலத்துடன் வாழ வேண்டும் என்பதே நோக்கம். என் அம்மாவின் 120-வது பிறந்த நாளில் என் 500-வது புத்தகம் வெளிவர வேண்டும் என கற்பனையில் நினைத்துக்கொண்டேன். அதுவும் என் அப்பா அம்மா இருவரின் தலைமையில் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். இந்த வேண்டுதலில் என் அப்பா அம்மா இருவரும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமும், என் ‘அப்பா அம்மா’ இருவரின் தலைமையில்தான்  என் 500-வது புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அவாவும் அடங்கி உள்ளதை கவனிக்கவும்.

ஆனால் புத்தகம் என்றில்லாமல் எங்கள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் என ஒவ்வொரு படைப்பையுமே எங்கள் நிறுவனத்தில் வீற்றிருக்கும் நம்பிக்கைப் பிள்ளையார் முன்னிலையில் பூஜை செய்து என் அப்பா அம்மாவின் தலைமையில்தான் தொடங்குகிறேன். பிராஜெக்ட் முடிந்த பிறகும் அவர்கள் தலைமையில்தான் அதை இன்ஸ்டால் செய்யவும் செய்கின்றேன் என்பது வேறு விஷயம்.

ஒரு வாழ்த்து, அதுவும் பிறந்தநாள் வாழ்த்து, முன்பின் அறியாத பலரும் பார்த்துப் பாராட்டி மனதார வாழ்த்தும் வாழ்த்து பலிக்க அந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் நிச்சயம் உதவும் என்பதால் அவர்கள் வாழ்த்தில் என் விருப்பத்தையும் சேர்த்து இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் சென்று பிரார்த்தனை செய்து திரும்பினோம்.

நேற்று அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்தி பின்னூட்டமிட்ட, லைக் செய்து மானசீகமாக வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகளும் பேரன்புகளும்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon