ஜம்முனு வாழ காம்கேரின் OTP-42: கோபம் வேறு, அறச்சீற்றம் வேறு!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 42
பிப்ரவரி 11, 2021

கோபம் வேறு, அறச்சீற்றம் வேறு!

நேர்மையாக இருப்பதை சண்டைபோட்டுக்கொண்டே இருந்து நிரூபிக்க வேண்டியதில்லை.

ஒரு சிலரை பார்த்திருப்பீர்கள். எப்போதும்னே மிகவும் சீரியஸாக இருப்பார்கள் அல்லது பொது இடத்தில் நான்கு நபர்கள் கூடும் இடங்களில் சீரியஸாக இருப்பதாக காண்பித்துக்கொள்வார்கள்.

நகைச்சுவையாக பேசுபவர்கள் எந்த சூழலையும் அனுசரித்துக்கொண்டு செல்வார்கள் என்றும், சீரியஸாக இருப்பவர்கள் நேர்மையானவர்கள் என்பதால் அவர்களால் எல்லா சூழல்களையும் அனுசரித்து செல்ல முடியாது என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு.

நேர்மையாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கை முறை. எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் அது அங்கிங்கெனாதபடி நிரம்பி இருக்கும். அவர்கள் ஒருபோதும் அதை புறக்காரணிகளாக தங்களின் அடையாளமாக காண்பித்துக்கொள்ளவே மாட்டார்கள். அதாவது சீரியஸாக இருப்பதைப் போல, அமைதியாக இருப்பதைப் போல, கோபப்படுவதைப் போல.

நேர்மையாக இருப்பவர்கள் சீரியஸாகவே இருப்பார்கள், சிரிக்கவே மாட்டார்கள், கோபப்படுவார்கள் என்றெல்லாம் தவறான அபிர்ப்பிராயங்கள் இருக்கின்றன. உண்மையில் அப்படி கிடையாது. நியாயங்களை கேட்பதால் சில நேரங்களில் அவர்கள் பேசுவது கடுமையாக இருப்பதாக வெளியில் தெரியலாம். அவர்களில் நேர்மையான கருத்துகளுக்கு பயப்பட்டுதான் எதிராளி பயப்படுவார்களே தவிர அவர்கள் யாருக்கும் பயம் காட்டுவதெல்லாம் கிடையாது.

அதுபோல நேர்மையாக இருப்பவர்கள் ஒருசிலர் எப்போதுமே சண்டை போடுவதைப் போல பேசுவார்கள். அதுதான் அவர்களுக்கு நேர்மையானவர்கள் என்ற அங்கீகாரத்தைத் தவிர்த்து ‘சண்டைக்கோழிகள்’ என்ற பட்டத்தைப் பெற்றுத்தருகிறது.

நேர்மையாக இருந்தால் சண்டைப் போட வேண்டிய அவசியம் இல்லை. கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. சொல்வதை அமைதியாக அழுத்தமாக கண்களைப் பார்த்து நேராக பேசினாலே எதிராளி அந்த பொறுமைக்கு கட்டுப்பட்டு தடுமாறி தன்னை கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள முயற்சிக்க வாய்ப்புள்ளது. அதைவிட்டு கோபப்பட்டு பேசினால்தான் நேர்மை வெளிப்படும் என்ற நோக்கில் ஆக்ரோஷமாக பேசும்போது பேசுபவரின் நேர்மை நீர்த்துப் போய் சூழலை கடுமையாக்கிவிடுவது ஒன்றுதான் மிஞ்சும்.

ஹோட்டலில் காபி ஆர்டர் செய்கிறீர்கள். காபி நீங்கள் எதிர்பார்த்ததைப் போல சூடாக இல்லை. ஆறி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.

சர்வரை கூப்பிட்டு ‘இது காபியா இது, கூல்டிரிங்கா, மனுஷன் சாப்பிடுவானா இதை, முதலாளிகிட்ட புகார் அளிக்கவா…’ என கத்தி கூப்பாடுபோட்டால் சர்வர் அவமானத்தில் கூனிக்குறுகுவார்.

‘சாரி சார் / மேடம்’ என்று சொல்லி அந்த காபியை எடுத்துச் சென்றுவிட்டு வேறு காபி கொண்டு வைப்பார். ஆனால் இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார் கவனதுக்கும் வராமலேயே.

அதாவது, உங்கள் கோபத்தை உள்வாங்கிக்கொண்ட அவமானத்தில் உங்களுக்கு சூடாக தயார் செய்துவரும் காபியை வேண்டும் என்றே தான் எச்சில் செய்து சுவைத்த பிறகு உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு பவ்யமாக நின்று மீண்டும் குனிந்து சாஷ்டங்கமாய் நமஸ்காரம் செய்யாத குறையாக ‘சாரி’ சொல்லி உங்களை கூல் செய்தால் உங்களுக்குத் தெரியவா போகிறது?

மனிதர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். எல்லோராலும் தாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கடுமையான பேச்சுகளை எதிர்கொள்பவர்கள் நேரடியாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் சூழலில் இல்லாதவர்கள் மறைமுகமாக எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பு உண்டு என்பதை சொல்லவே இந்த உதாரணம்.

அதற்காக ஹோட்டல்களில் சர்வர்கள் / சப்ளையர்கள் அனைவருமே இப்படித்தான் என சொல்ல வரவில்லை.

இப்படி கத்தி கூப்பாடுபோட்டு சர்வரை அவமானப்படுத்துவதைவிட அருகே அழைத்து, அவர் கண்களை நேராக பார்த்து மிக மென்மையாக, அவர் காதில் நீங்கள் பேசுவது விழ வேண்டுமானால் அவர் குனிந்து கூர்ந்து கவனித்தால் மட்டுமே காதில் விழ வேண்டும் என்ற அளவில் மிக அமைதியாக வேறு காபி சூடாக கொண்டுவரச் சொல்லிப் பாருங்கள். அவர் முகத்தில் சந்தோஷம் கொப்பளிக்கும். காரணம் அவரிடம் நீங்கள் சொல்வது அவருக்கு மட்டுமே காதில் விழும். பார்ப்பவர்களுக்கு நீங்கள் ஏதோ ஆர்டர் செய்கிறீர்கள் என்று மட்டுமே தெரியும். அவருடைய தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாமல் பேசுவதால் உண்டான சந்தோஷத்தில் சூப்பர் காபியை கொஞ்சம் கூடுதலாகவே கொண்டு வருவார்.

பெரும்பாலானோருக்கு தங்கள் தவறுகள் தெரிவதில்லை. அதை யாரேனும் எடுத்துச் சொல்லும்போது ஒருசிலர் காயப்படுகிறார்கள். சிலர் புரிந்துகொள்கிறார்கள். சிலர் மாறுகிறார்கள். சிலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

எனவே நேர்மையாக இருப்பவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கும்போது கோபமாக ஆக்ரோஷமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. மென்மையாக சொல்லியும் உங்கள் நேர்மையான கருத்தை முன்வைக்கலாம்.

மாற வேண்டும் என முடிவெடுத்தவர்கள் நீங்கள் சின்னதா ஒரு கோடிட்டுப் பேசினாலே புரிந்துகொள்வார்கள். ஆனால் தங்கள் தவறை உணரவே உணராதவர்கள் அல்லது உணர்ந்தும் ஏன் மாற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் நீங்கள் எப்படிச் சொன்னாலும் புரிந்துகொள்ளப் போவதில்லை.

பின் எதற்காக உங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உங்கள் உடல்நிலையை பாதித்துக்கொள்ள வேண்டும். மென்மையாகச் சொல்லியே குறைந்தபட்சம் அப்போதைய சூழலை சரி செய்துகொண்ட பிறகு அதற்கு நிரந்தர தீர்வுக்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்து செயல்படுங்கள்.

ஒருமுறை பிரபலமான கொரியர் சர்வீஸில் இருந்து ஒரு கொரியர் வந்தது. அன்று ஏதோ பண்டிகை தினம். நிறுவனத்துக்கு விடுமுறை. நான் மட்டுமே அலுவலகத்தில் இருந்தேன். கொரியர் கொண்டு வந்துகொடுத்த இளைஞர் முகத்தில் கர்சீஃப்பை கட்டி இருந்தார். மாஸ்க் அல்ல. இது நடந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகி இருக்கும்.

நான் என்னுடைய அறையில் இருந்து வேகமாக வாசலுக்கு ஓடி வந்தேன், ‘பாவம் காத்திருக்கிறாரே’ என்ற ஆதங்கத்தில். நான் வேகமாக வந்ததை அந்த இளைஞர் கிண்டல் செய்து பேசியபோது ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தேன். நான் கையெழுத்திட்ட ரசீதை என் கைகளில் இருந்து வேகமாக வாங்கிக்கொண்டு சட்டென சென்றுவிட்டார்.

நான் அவரிடம் கோபப்படவோ எச்சரிக்கவோ செய்வதற்குள் சென்றுவிட்டார். நான் இல்லாத நேரங்களில் ரிசப்ஷனில் இருக்கும் பெண்களிடம் இப்படி நடந்துகொண்டால் ஆபத்தாயிற்றே என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியது. அந்த கொரியர் சர்வீஸின் முதன்மை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதன் உரிமையாளரிடமே பேசினேன். நடந்ததை சொன்னேன். ‘அவர் வழக்கமாக கொரியர் கொண்டு வருவதால் நட்பு ரீதியில் பேசி இருக்கலாம்’ என்று சமாதானம் சொன்னார்.

‘இல்லை சார், அவர் புதிதாக இருந்தார். அவரை இதற்குமுன் பார்த்ததில்லை. விடுமுறை தினத்தில் ஸ்பெஷல் சர்வீஸுக்காக வந்திருக்கும் புது ஸ்டாஃப்’ என்று நான் விளக்கம் கொடுத்தேன்.

அவர் நான் சொன்ன அடையாளங்களை வைத்து அவர் பெயரை கண்டுபிடித்துவிட்டார். ‘நான் எச்சரிக்கிறேன் மேடம்…’ என்றபோது நான் என்ன சொன்னேன் தெரியுமா?

‘அவரை எச்சரியுங்கள். வேலையில் இருந்து எடுக்க வேண்டாம். ஆனால் அவர் செய்தது தவறு என்பதை உணரச் செய்யுங்கள். வேறு யாரிடமும் அப்படி நடந்துகொள்ளாத அளவுக்கு அறிவுரை சொல்லி புரிய வையுங்கள். குறிப்பாக நான்தான் புகார் அளித்தேன் என்பதை சொல்ல வேண்டாம். நாளை நான் இல்லாத நேரங்களில் அவரே கொரியர் கொடுக்க வந்தால் என் நிறுவன பெண்களுக்கு ஆபத்தாக முடியலாம். எனவே, பொதுவாக ஒன்றிரண்டு நபர்களிடம் இருந்து இதே புகார் வந்துள்ளது என்று சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

‘இனி அவர் உங்கள் பகுதிக்கு வராமல் வேறு பகுதிக்கு மாற்றல் செய்து விடுகிறோம். கவலை வேண்டாம். மன்னிக்கவும் மேடம்’ என்றபோது ‘அவர் எந்தப் பகுதிக்கு சென்றாலும் நல்லவராக நடந்துகொள்ளும் அளவுக்கு மனதளவில் தயார்படுத்துங்கள். தொடர்ச்சியாக கண்காணியுங்கள். அப்படியும் மாறவில்லை என்றால் உங்கள் விதிமுறைக்கு ஏற்ப நடவடிக்கை எடுங்கள்’ என்று சொல்லி மாறுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வலியுறுத்தினேன்.

இதுதான் நிரந்தர தீர்வு. அதைத்தான் நான் செய்தேன். இந்த விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களிலும் என் அணுகுமுறை இப்படித்தான்.

கோபம் வரும்தான். ஆனால் அந்த கோபத்தினால் எதுவுமே நடப்பதில்லை என்பதை என் இளம் வயதிலேயே உணர்ந்துகொண்டதினால் நேர்மையை வெளிப்படுத்த அறச்சீற்றத்தை மட்டுமே கையில் எடுக்கிறேன். கோபத்தை கையில் எடுப்பதில்லை.

கோபப்படும்போது நம் உடல் நலனும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. ஏனெனில் கோபம் உணர்வுரீதியாக வெளிப்படுகிறது. அறச்சீற்றம் கொள்ளும்போது அறிவால் சிந்தித்து சொல்ல வருவதை அழகாக சொல்ல முடிகிறது, நம் உடல்நலத்தை சிதைத்துக்கொள்ளாமல். ஆம். அறச்சீற்றம் அறிவால் ஆளப்படுகிறது.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 16 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon