ஜம்முனு வாழ காம்கேரின் OTP-43: பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா?


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 43
பிப்ரவரி 12, 2021

பணிக்காலம் முழுவதும் Work From Home சாத்தியப்படுமா?

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் Work From Home திட்டத்தை இந்த வருடத்தில் இன்னும் சில மாதங்கள் நீட்டித்துள்ளதாகவும், ஒரு சில நிறுவனங்கள் வாழ்நாள் முழுவதும், அதாவது அவர்களின் பணிகாலம் முழுவதும் அவர்கள் விருப்பப்பட்டால் Work From Home திட்டத்தின் கீழ் பணிபுரியலாம் என்பதை அமல்படுத்தப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

Work From Home இந்த வார்த்தையை நம் மக்களிடம் புரிய வைக்க கொரோனா வைரஸ்தான் பெருமளவில் உதவி இருக்கிறது என்று சொல்வேன். நம் நாட்டைப் பொறுத்த வரை Work From Home என்பது கொரோனாவுக்குப் பிறகுதான் பிரபலமாக ஆரம்பித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை நான் 1996-லேயே அமல்படுத்தினேன்.

1992-ல் முதன் முதலில் தமிழகத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கிய பெண் என்ற அங்கீகாரத்தைப் பெற்றதைப் போலவே Work From Home திட்டத்தை 1996-லேயே அமல்படுத்தினேன். அநேகமாக முதன் முதலில் தமிழகத்தில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும்.

கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பிரபலமாகாத காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

1992-களில் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படித்தவர்களும் குறைவு. அதிலும் பெண்கள் மிகக் குறைவு. மேலும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் வேலைக்கு வருவதும் அரிதான காலகட்டம் அது.

அந்த சூழலில் நாங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், மளிகைக்கடை என அங்கிங்கெனாதபடி அனைத்துத் துறையினருக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப விழிப்புணர்வைக் கொடுத்து, மிகக் குறைந்த விலைக்கு கம்ப்யூட்டர்களை அசம்பிள் செய்துகொடுத்து, அவர்கள் தேவைக்கான சாஃப்ட்வேர்களையும் தயாரித்துக் கொடுத்து, அவற்றை சில காலங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கும் வசதியையும் கொடுத்து, பயன்படுத்திப் பார்த்துப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்ற வசதியையும் கொடுத்திருந்தோம்.

அவர்களை கம்ப்யூட்டரை வாங்க வைப்பதற்கு முன்னர் அவர்களுக்கு கம்ப்யூட்டர் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்பதால் அவர்களின் அன்றாட பில்லிங், இன்வாய்ஸ், அக்கவுண்ட்ஸ் போன்றவற்றுக்குத் தேவையான டாக்குமெண்ட்டுகளை அன்றன்றைக்கு பெற்று வந்து அடுத்த நாள் அவர்களுக்காக நாங்கள் தயாரித்த சாஃப்வேர் மூலம் தகவல்களை பிராசஸ் செய்து பிரிண்ட் எடுத்துக்கொடுப்போம். அதனால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்க முன் வந்தார்கள்.

இப்படியாக எங்களைச் சுற்றி இயங்கிய சமுதாயத்தை தொழில்நுட்பத்துக்குள் இணைக்கத் தொடங்கினோம்.

அப்படி அன்றாடம் அவர்களின் தகவல்களை பெற்று வந்து அடுத்தடுத்த நாட்களில் அவற்றை பிராசஸ் செய்து பிரிண்ட் எடுத்துக்கொடுத்துவிட வேண்டும். இதில் தாமதமானால் அவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கைக் குறைவு உண்டாகிவிடும்.

ஏன் எனில் அன்று கம்ப்யூட்டர் என்பது படித்து பட்டம் பெற்றவர்களுக்காகவும், ஆங்கிலம் அறிந்தவர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் என்ற தவறான நம்பிக்கை பரவி இருந்தது. மேலும் வேலை வாய்ப்பை குறைத்துவிடும் என்பதால் அதை பயன்படுத்தவே கூடாது என்பதுபோன்ற அதிதீவிர எதிர்ப்புகள் கூட இருந்தது கம்ப்யூட்டரை பயன்படுத்துவதற்கு.

இந்த சவால்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்றால் நேரம் தவறாமை மிக முக்கியம் என்பதால் சாஃப்ட்வேர்களை நானும் என் சகோதரன் சகோதரியும் தயாரித்துக் கொடுக்க, தகவல்களை உள்ளீடு செய்து பிரிண்ட் எடுக்க பணியாளர்களை அமர்த்தத் தொடங்கினோம். பெண்களாக இருந்தால் பொறுமையாக தவறில்லாமல் செய்வார்கள் என்பதால் பெண்களை வேலைக்கு அமர்த்தினோம்.

பெண்கள் பொறுமைசாலிகள்தான். அந்த காலத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெண்கள் குறைவு, கம்ப்யூட்டரை பயன்படுத்தத் தெரிந்த பெண்களும் குறைவு என்பதால் நாங்கள் பயிற்சி கொடுத்து அவர்களை வேலைக்குத் தயார் செய்து ‘அக்கடா’ என அமரும் நேரத்தில் வீட்டில் பிரச்சனை, திருமணம், குழந்தைகள் என ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி திடீர் திடீரென நின்று விடுவார்கள்.

எங்கள் பயிற்சி வீணாவதுடன் வேலையும் நின்றுவிடுவதால் ஒரு முயற்சி செய்து பார்த்தோம். அவர்கள் வீட்டில் கம்ப்யூட்டரை (டெஸ்க்டாப்) கொண்டு வைத்துவிட்டு வேலைகளை முடித்து வைத்திருந்தால் நாங்கள் சென்று ஃப்ளாப்பியில் காப்பி செய்து எடுத்து வருவது என முடிவு செய்தோம். இந்த ஐடியா நன்றாக வேலை செய்தது.

பெண்களுக்கு தங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருப்பது மிகப் பெரிய கெளரவமாகக் கருதினார்கள். அதுவும் தாங்கள் பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து கொடுத்திருக்கிறார்கள் எனும்போது அவர்கள் பெருமையாக உணரத் தொடங்கினார்கள்.

இப்படியாக நாங்கள் Work From Home திட்டத்தை அமல்படுத்தினோம். அந்த காலத்தில் நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அப்போதுதான் அடி எடுத்து வைத்திருந்தது, இண்டர்நெட் எல்லாம் அறிமுகமே ஆகவில்லை என்பதுதான்  ஹைலைட்.

பிறகு படிப்படியாக எங்கள் நிறுவனம் வளர வளர புரோகிராம் எழுதவும், அனிமேஷன் செய்யவும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஓவியர்களை அனிமேட்டர்களை பணிக்கு எடுக்க ஆரம்பித்தோம். ஆண், பெண் என பேதமின்றி அந்தந்தத் துறையில் படித்த வல்லுநர்களாக இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். அவர்களை திறமையானவர்களாக்குவதில் மட்டும் நாங்கள் கவனம் எடுத்தோம்.

அவர்களுக்கும் தேவையான நேரத்தில் வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதியைக் கொடுக்க ஆரம்பித்தோம். Work From home எங்கள் நிறுவனத்துக்கு புதிதல்ல.

சூழல்தான் எந்த ஒரு மாற்றத்துக்கும் அடித்தளம் போடும். அந்த வகையில் கொரோனா கால லாக்டவுன் காலகட்ட சூழல்தான் Work From Home திட்டத்தை மிக சரியாக நம் மக்களுக்குப் புரிய வைத்துள்ளது.

அதற்கு முன் நம் நாட்டில் பெரும்பாலானோர் Work From Home என்றால் வீட்டில் இருந்தே ஊதுவத்தி, மெழுகுவர்த்தி போன்றவற்றை தயார் செய்யும் சிறுதொழில் செய்பவர்களாகவே கருதி வந்தர்கள். மேலை நாடுகளில் பல வருடங்களாகவே Work From Home அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா – Work From Home என்பதை பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் கண்ணோட்டத்தை கொடுத்துள்ளது. Online Class, Work From Home என்பது இப்போது கெளரவமான பெருமிதமான விஷயங்களாக உணரத் தொடங்கி உள்ளனர் நம் மக்கள்.

கடந்த மார்ச் 2020 இறுதியில் இருந்து இப்போது வரை Work From Home கொடுத்துள்ளோம். நான் தினமும் வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறேன். நேரடியாக செய்து முடிக்க வேண்டிய பணியில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களை மட்டும் அலுவலகத்துக்கு வரச் செய்து முடிக்கிறோம். மற்றபடி பெரும்பாலானோருக்கு Work From Home. ஆனால் தினமும் அந்தந்த டீம் உறுப்பினர்களுடன் வழக்கம்போல அலுவலகத்தில் நடைபெறும் மீட்டுங்குகளைப் போலவே ஜூமில் மீட்டிங், டிஸ்கஷன் என அத்தனையும் ஒன்றுவிடாமல் நடந்துகொண்டே இருக்கிறது.

Work From Home – ல் வேலை செய்யும் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 8-9 மணிநேர வேலை என்றால் எல்லா ப்ராஜெக்ட்டுகளையும் ஒருங்கிணைத்து இம்ப்ளிமெண்ட் செய்யும் எனக்கு 24 மணிநேரம் போதவில்லை. நிறுவனமும் வீடும் அரை மணி நேர பிரயாண தொலைவில் இருக்கும்போது வீட்டுக்கு வந்துவிட்டால் கொஞ்சமாவது பணி சம்மந்தப்பட்ட நினைவுகள் குறையும். இப்போது வீட்டிலும் அலுவலக செட் அப் கொண்டு வந்துவிட்டதால் 24 மணி நேரமும் R & D (Research and Development) தான். இதுவும் நன்றாகத்தான் உள்ளது.

பிரயாண நேரம் குறைகிறது. ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட மீட்டிங்குக்காக வெளி நிறுவனங்களுக்கு நேரில் செல்வதும் வருவதும் அடியோடு குறைந்து அனைத்தும் ஆன்லைன் எனும்போது அலைச்சலால் உண்டாகும் உடல் சோர்வும் மனச்சோர்வும் சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். தொழில்நுட்ப வல்லுநர்களை ஆன்லைனில் மட்டுமே சந்திப்பதால் நேரில் பரிமாறும் தகவல்களைவிட இன்னும் தெளிவாகவே புரிந்துகொள்கிறார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே ஆன்லைன் தொடர்பில் வருவதால் இருக்கலாம். அலுவலகம் என்றால் 8-9 மணி நேரமும் என் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டுமே.

வீட்டில் குடும்பத்துடன் இருக்க முடிகிறது, சேர்ந்து சாப்பிட முடிகிறது, அவ்வப்பொழுது நினைத்ததை பேசி பகிர முடிகிறது, விரும்பியதை செய்து பார்க்கவும் நேரத்தை ஒதுக்க முடிகிறது. இரண்டு வேளை வாக்கிங் செல்ல முடிகிறது. வித்தியாசமான வாழ்க்கை முறைதான்.

எங்கள் நிறுவனத்திலும் Work From Home திட்டத்தின் கால அளவை நீட்டிக்கலாமா என்று பேசி வருகிறோம். விருப்பப்படுபவர்களுக்கு அவரவர்கள் ஊரில் இருந்தே பணிபுரியும் வசதியையும் கொடுக்கலாம் என்றிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளில் இருக்கிறோம்.

பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 2,095 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon