ஜம்முனு வாழ காம்கேரின் OTP-53: நீங்கள் அழகாக வேண்டுமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 53
பிப்ரவரி 22, 2021

நீங்கள் அழகாக வேண்டுமா?

இன்றைய பதிவு ப்யூட்டி டிப்ஸா என நினைக்க வேண்டாம். இது பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் போன்றவை கொடுக்கும் அழகுக் குறிப்பு அல்ல. கொஞ்சம் வித்தியாசமானது.

நம்முடைய செயல்பாடுகளை அழகாக நேர்த்தியாக செய்தால் அது கொடுக்கும் மனநிறைவில் நாம் நிச்சயமாக அழகாக வெளிப்படுவோம். அதுதான் நான் கொடுக்கும் ப்யூட்டி டிப்ஸ்.

எங்கள் தெருவில் தினமும் அரசு வழங்கியுள்ள மினி பேட்டரி காரில் வந்து வீடு வீடாக குப்பைகளை பெற்றுக்கொண்டு செல்லும் தூய்மைப் பணியாளர்களைப் பார்க்கும்போது ‘சூழல் அழகானால் செய்கின்ற வேலையின் தன்மையும் மேம்படும்’ என்பதுதான் எனக்குத் தோன்றும்.

தூய்மைப் பணியாளர்கள் ஏற்கெனவே கைகளால் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை செய்து வந்தவர்கள்தான். அப்போதும் அவர்களை கவனித்திருக்கிறேன். இப்போதும் கவனிக்கிறேன். முன்பும் இதே வேலையைத்தான் செய்தார்கள். இப்போதும் அதே வேலையைத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல்மொழியில்தான் வித்தியாசத்தை உணர்கிறேன். எத்தனை அழகான வித்தியாசங்கள்?

முன்பு தங்கள் கடமையை செய்தார்கள். இப்போது கடமையை கம்பீரமாக செய்கிறார்கள். அவர்களுக்கான பெயரும் ‘தூய்மைப் பணியாளர்கள்’ என்று கொடுக்கப்பட்டு, பேட்டரி கார் ஓட்ட கற்றுக்கொடுத்து அவர்கள் முன்பு செய்துவந்த அதே பணியை இன்னும் சுகாதாரமான முறையில் செய்ய வழிவகை செய்துகொடுத்ததால் அவர்கள் மனதிலும், உடலிலில் அத்தனை மகிழ்ச்சி. அதன் காரணமாய் கம்பீரம்.

உண்மையிலேயே பணியின் பெயருக்கு ஏற்ப தூய்மையாக பளிச்சென்று தலை சீவி, பூ வைத்து, குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு நல்ல புடவையை கண்ணியமாக அணிந்து, அதற்கு மேல் தூய்மைப் பணியாளர் சீருடையையும் அணிந்துகொண்டு  காரை கம்பீரமாக ஓட்டி வரும் அவர்களின் கம்பீரமே பார்ப்பவர்களை அசத்துகிறது. அவர்கள் காட்டுகின்ற பணிவும், மரியாதையும், பண்பும் அட்டகாச லெவல். எப்போதுமே அப்படித்தான் என்றாலும் இப்போது இன்னும் கூடுதலாக வெளிப்பட்டு அவர்கள் மனநிறைவுடன் வேலை செய்வதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

அதனால்தான் சூழலை மேம்படுத்தினால் செய்கின்ற பணியின் தன்மையிலும் மாற்றமும் ஏற்றமும் இருக்கும் என்று சொல்கிறேன்.

பத்து வயதில் நான் கதை எழுத ஆரம்பித்தேன், கிட்டத்தட்ட அதே வயதில் என் தங்கை ஓவியம். தம்பி கார்ட்டூன். பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பும்போது எங்கள் பெயரையும், வீட்டு முகவரியையும் கைகளால் எழுதாமல் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அச்சடித்து அனுப்புவதற்காக ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தார்கள் என் பெற்றோர். படைப்புகள் தேர்வாகாவிட்டால் திருப்பி அனுப்புவதற்காக சுய முகவரி எழுதிய கவரை வைத்தனுப்புவோம். அந்த கவரில் பெறுநர் என்ற இடத்திலும், எங்கள் படைப்புகளின் கீழேயும் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பெயரையும் முகவரியையும் அச்சடித்து அனுப்புவோம். மிக பெருமையாக இருக்கும். நன்றாக கவனியுங்கள். கர்வமாக இருக்கும் என சொல்லவில்லை. பெருமையாக இருக்கும் என்றே சொல்லி இருக்கிறேன்.

அந்த பெருமிதமான உணர்வில் எங்கள் படைப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட்டன. அழகும் நேர்த்தியும் கூடின. காரணம் மனதுக்குள் ஏறி சிம்மாசனமிட்ட பெருமிதம் செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களிலும் கம்பீரத்தைக் கொடுத்தது.

சாதாரணமாக நான் சுடிதார் அணிந்துகொண்டு மீட்டிங்கில் பேசுவதற்கும், சுடிதார் மேல் எளியமையான கோட் ஒன்றை அணிந்துகொண்டு பேசுவதற்கும் அக, புற வித்தியாசங்களை நிறைய உணர்ந்திருக்கிறேன்.

அதென்ன அகம் புறம் வித்தியாசம்?

அக வித்தியாசம் என்பது என் மனதுக்குள் உண்டாகும் உற்சாகம், கம்பீரம் போன்ற உணர்வுகள். புற வித்தியாசம் என்பது என் மீதான மற்றவர்களின் பார்வை. கோட் அணிந்துகொண்டு பேசும்போது என்னையும் அறியாமல் மனதுக்குள் கொஞ்சம் கம்பீரம் ஒட்டிக்கொள்ளும். என் செயல்பாடுகளிலும் ஆளுமைத்திறன் கூடும். பார்ப்பவர்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் இருக்கும்.

2019 ஜனவரியில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற  புத்தகக் கண்காட்சியில் ‘நின்னைச் சரணடைந்தேன்’புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். அழைத்தவர் எழுத்தாளரும் பதிப்பாளருமான திருமிகு. ஷெண்பா. அரங்கம் முழுவதும் அவரது வாசகிகளால் நிரம்பி வழிந்தது.

நான் புத்தக வெளியீடு என்பதால் இயல்பாக சுடிதார் அணிந்து சென்றிருந்தேன். மேலே கோட் போடவில்லை.

நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேசிய என் உரை பெருத்த வரவேற்பை பெற்றது. என்னை அடுத்துப் பேசிய எஸ்.பி.முத்துராமன் அவர்கள், ‘நான் சொல்ல நினைத்ததையெல்லாம் இவர் சொல்லிவிட்டார். அதுவும் திருக்குறள் உவமையோடு… இனி நான் பேச என்ன இருக்கிறது?’ என்று சொல்லி என்னை உயர்த்தினார்.

குறிப்பாக என் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாக பக்கபலமாக இருக்கும் என் பெற்றோர் குறித்தும் எடுத்துச் சொல்லி விழாவில் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த என் அப்பாவை மேடை ஏற்றி உயர்வு செய்து நெகிழச் செய்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் அவர் சொன்ன ஒரு கருத்து இன்றளவும் மனதில் நிற்கிறது.

‘இவ்வளவு எளிமையாக இருந்ததினால் நீங்கள் ஒரு நிறுவன சி.ஈ.ஓ போலவே தெரியவில்லை. நிகழ்ச்சியில் உங்களை அறிமுகப்படுத்தும்போதுதான் தெரிந்தது உங்கள் சிறப்புகள்… வாழ்த்துகள்’ என்று சொன்னார்.

நான் கோட் அணிந்து சென்றிருந்தால் அது சி.ஈ.ஓ என்ற பார்வையைக் கொடுத்திருக்கும். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் புத்தகங்கள் குறித்து பேசுவதற்கு சி.ஈ.ஓ கண்ணோட்டம் அவசியம் இல்லை என்பதால் எளிமையாகச் சென்றிருந்தேன்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நம் மீது நமக்கே நம்பிக்கை உண்டாகவும், பிறரின் பார்வையில் நம்மை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளவும் நம் புற வெளிப்பாடுகளில் நேர்த்தியை கூட்ட வேண்டியது அவசியம்.

என் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றேனும் புது சட்டை அணிந்து வந்தால் வீட்டில் ஏதோ பெரிய பிரச்சனை என்று புரிந்துகொள்ளலாம். ஆம். அதை அவரே சொல்லி இருக்கிறார். இப்போதெல்லாம் வருடம் முழுவதும் நினைத்த நேரத்தில் ஆடைகள் வாங்க முடிகிறதே. வீட்டில் மனைவியுடன் உண்டாகும் சின்ன சின்ன சண்டைகளைத் தவிர்த்து பெரிய வாக்குவாதங்கள் உண்டானால் அந்த ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளிவருவதற்காகவும், அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்துவதற்காகவும் அவர் புத்தாடை அணிந்து வருவதாக அவர் பின்பற்றும் லாஜிக்கைக் கூறினார். சந்தோஷமாக இருக்கும் தினங்களிலும் விசேஷ தினங்களிலும் மட்டுமில்லாமல் மனம் சோர்வாக இருக்கும் நாட்களிலும் புத்தாடை அணியும்போது நம்முள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நல்ல விஷயம்தானே!

என் அப்பா வருடத்தின் 365 நாட்களிலும் 24 மணி நேரமும் தன்னை நேர்த்தியாக வைத்துக்கொள்வார். வீட்டில் இருந்தாலும், உடல் நலமில்லாவிட்டாலும் பளிச்சென்ற முகத்துடன் விபூதி இட்டுக்கொண்டு நல்ல சுத்தமான வெள்ளை வெளேர் வேட்டி சட்டை அணிந்துகொண்டுதான் வலம் வருவார். அவரிடம் நிரந்தரமாக விபூதி வாசனை வரும். இத்தனைக்கும் அவர் அன்றாடம் சமையல் வேலைகளையும், சமையல் அறை வேலைகளையும் செய்யும் வழக்கம் உள்ளவர். கார் பைக் என எல்லாம் இன்றளவும் self Drive தான். எலக்ட்ரிகல் வேலை, மர வேலை, வீட்டு வேலை என எந்த வேலையையும் மிக நேர்த்தியாக  செய்வார். குறிப்பாக ஆண் பெண் பேதமின்றி எங்கள் மூவருக்கும் அனைத்தையும் கற்றுக்கொடுத்து தானும் கம்பீரமாக எங்களையும் கம்பீரமாக வாழ வழிவகுத்தவர்.

நம்மை நாம் நேர்த்தியாக வைத்துக்கொண்டால் நம்முடைய செயல்பாடுகள் தானாகவே நேர்த்தியாகும்.

முயற்சித்துப் பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 5 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari