ஜம்முனு வாழ காம்கேரின் OTP-55: ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்?


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 55
பிப்ரவரி 24, 2021

ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்?

ஆவணப்படங்களையும், இலக்கியம் இதிகாசம் கல்வி சார்ந்த அனிமேஷன் படைப்புகளையும், தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கள் காம்கேர் மூலம் என் இயக்கத்தில் நடத்தி வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

ஜெயா டிவி, மக்கள் டிவி, பொதிகை டிவி என பல்வேறு சேனல்களில் 2000 வருடம் முதல் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறேன். அத்தனையும் கல்வி தொழில்நுட்பம் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் சார்ந்தவைகளே.

அதுபோல ஆவணப்படங்கள் எடுப்பதும், அனிமேஷன் படங்கள் எடுப்பதும் எங்கள் பணிதான். அமெரிக்காவில் புகழ்பெற்ற மிசெளரி பல்கலைக்கழகத்தில் நான் இயக்கிய ‘இந்திய நாட்டு உயர் கல்விக்கும், அமெரிக்க நாட்டு உயர்கல்விக்குமான ஒப்பீட்டு’ என்ற ஆவணப்படம் பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. பெருத்த வரவேற்பைக் கொடுத்த ஆவணப்படமும்கூட. அதுபோல எங்கள் அப்பா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ மிகப் பெரிய அளவில் பெயரைப் பெற்றுத்தந்தது.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக 365 நாட்கள் தொடர்ச்சியாக தொழில்நுட்ப தொடரை தயாரித்து TTN தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் மூலம் வழங்கி இருக்கிறோம்.

தினமும் ஏதேனும் ஒரு ஷூட்டிங் நடந்துகொண்டே இருக்கும். எந்த நேரமும் மனமும் உடலும் பரபரப்பாக இருக்கும்.

ஸ்கிரிப்ட் எழுதுதல், நிகழ்ச்சிக்குத் தேவையான கிராஃபிக்ஸ் அனிமேஷன்களை வடிவத்துக்கொள்ளுதல், கேமிராவுக்கு முன் பேச இருப்பதை முன்கூட்டியே பேசி பயிற்சி எடுத்தல், பெரிய அளவில் இல்லை என்றாலும் கொஞ்சமாக மென்மையான மேக் அப், திரைக்குப் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல் என மனம் பரபரப்பாகவே இருக்கும். திரையிலும் தோன்றுவதால் மனதில் எத்தனை பிரஷர் இருந்தாலும் அவற்றை வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் வேறு இருக்க வேண்டும்.

அத்தோடு முடிந்ததா, எடிட்டிங், குவாலிட்டி செக், பிராசசிங் அதுஇது என நேரத்தை விழுங்கும் பணிகள் அவை. சில தினங்கள் தொடர்ச்சியாக ஷீட்டிங் நடந்துகொண்டே இருக்கும்.

இப்போது நினைத்த நேரத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி எங்கள் காம்கேர் டிவி யு-டியூப் சேனலில். அதற்கான ஷீட்டிங், எடிட்டிங், பிராசசிங். பத்து நிமிட நிகழ்ச்சிக்கு 5 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நம்ப முடிகிறதா?

அதுப்போன்ற தினங்களில் இரவு தூக்கம் வருவதற்கு முன் மனம் பரபரப்பாக இருக்கும். என்னதான் வேலைகள் சரியாக நடந்திருந்தாலும் கேமிரா, வெளிச்சம், கேமிராவுக்கு முன் நம் மனதை குவிக்கும் நுணுக்கம், பேசும் பேச்சில் நாம் காட்ட வேண்டிய நளினம் என பல்வேறு விஷயங்களினால் மிக பரபரப்பாக நாள் முழுவதும் இருந்துவிட்டு அந்த சூழலை விட்டு வந்து உறங்கச் செல்லும்போது அந்த அதீத உற்சாகமே நமக்கு ஏதோ ஒரு வெறுமையை ஏற்படுத்துவதைப் போல இருக்கும். அதில் இருந்து வெளியே வர சில முயற்சிகள் தேவைப்படும்.

காரணம் கேமிராவுக்கு முன் தோன்றுவது என்பது, நாம் வேறொரு பிம்பமாக மாறி  இரண்டு நபர்கள் செய்ய வேண்டிய  வேலையை ஒருவர் செய்வதற்கு ஒப்பாகும் பணி. நம்மை நாம் தள்ளி வைத்து அந்தந்த கேரக்டர்களை நம்முள் ஏற்றி நடித்து பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பி, மறுபடியும்  நாம் நாமாக மாற வேண்டிய நிர்பந்தம்.  இது நடிகர்,  நடிகைகளைப் பொருத்தவரை.

என்னைப் பொருத்த வரை எங்கள் நிறுவனத்தில் வாரத்தில் 2,3 தினங்கள் 4,5 மணி நேர ஷூட்டிங் எடுப்போம். அதற்கே மனதை இயல்பு நிலைக்கு கொண்டு வர சிறந்த பயிற்சி இருக்க வேண்டும். அதுவும் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் படைப்புகளின் எண்ணன், இயக்கம், ஆக்கம் அத்தனையும் என் தலைமையில் என்பதால் அந்த உலகத்துக்குள் சென்று வந்தால் உடல் சோர்வாக இருக்கும். அதுதானே இயற்கை.

இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வேறுவேலைகளில் நான் கவனம் செலுத்துவேன். என் நிறுவன அனிமேஷன் பிரிவுக்கு சென்று ஆர்டிஸ்ட்டுகளுடன் அமர்ந்து அவர்களுக்குப் புதுமையான ஐடியாக்களைக் கொடுப்பேன் அல்லது ஆடியோ ரெகார்டிங் பிரிவுக்குச் சென்று ரெகார்டிங்கில் ஈடுபட்டிருப்பவர்களுடன் இணைந்து செயல்படுவேன் அல்லது சாஃப்ட்வேர் டீமை அழைத்து அன்றைய பணிகளுக்கான மீட்டிங்கை நடத்துவேன்.  இப்படியாக உடல் சோர்வை விரட்டி மனதையும் புத்துணர்வாக்கிக்கொள்வேன். மாற்று வேலை என்பதையே ஓய்வாகக் கருதுவேன்.

நான் இயங்கும்துறை தொழில்நுட்பம். ஆவணப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் என் பணியில் ஓர் அங்கமே. இதற்கே என் மனதைப் பக்குவப்படுத்த இத்தனை பிரயத்தனப்பட வேண்டி உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் முழு நேரமும் கேமிராவும், ஷீட்டிங்குமாக இருப்பவர்கள் மனநிலையை.

சந்தோஷம் என்பது பணமா, பதவியா, புகழா, விருதுகளா, பட்டங்களா?

இவைதான் சந்தோஷம் என்றால் புகழின் உச்சியில் இருக்கும் திரைபிரபலங்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள். திகட்டத் திகட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் அவர்கள் மனதை எது சிதைக்கிறது? எது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது? எது அவர்களை அதலபாதாளத்தில் தள்ளுகிறது?

பிரபலங்கள் அல்லாதவர்கள், இயல்பாக வாழ்க்கையை நடத்துபவர்கள், மூன்று வேளை சாப்பாட்டுக்குக் கூட வழி இல்லாத ஏழ்மையில் இருப்பவர்கள் சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் உணர்வு ரீதியான பிரச்சனைகளை, புகழிலும் பணத்திலும் புரள்பவர்களை புரட்டித்தான் போடுகின்றன.

ஆக, மகிழ்ச்சி என்பது பணத்திலும் புகழிலும் இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது அல்லவா?

காதல் தோல்வி, வாய்ப்புகள் கிடைக்காமல் முடங்கிவிடுதல், தன் துறையில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒதுக்கப்படுதல் இப்படி பல்வேறு காரணங்களினால் மனச்சிதைவுக்குள் விழுந்துவிடுகிறார்கள் பிரபலங்கள்.

இயல்பாக வாழ்க்கையை நடத்துபவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மகளின் பள்ளிக்கூட ஃபீஸ் கட்ட வேண்டும், மகனுக்கு கல்லூரி கல்விச் சுற்றுலா செல்ல பணம் கொடுக்க வேண்டும், பெற்றோருக்கு மருத்துவச் செலவு, மனைவியின் பிறந்தநாளுக்கு குறைந்தபட்சம் சாதாரண புடவை ஒன்றை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் செய்துவிடவேண்டும் இப்படி சின்னதும் பெரியதுமான கடமைகள் அவர்கள் மனதை திசைதிருப்பி வருத்தங்களையும் சோகங்களையும் மறைத்துவிடுகின்றன. சுருங்கச் சொன்னால் சோகப்பட நேரம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பணமும், புகழும் இந்த வேலையை சரிவரச் செய்வதில்லை. சோகங்களை தூக்கி சுமக்க நிறைய நேரம் இருப்பதால் உண்டாகும் சிக்கல் அது. நினைத்த நேரத்தில் எதற்கும் செலவு செய்ய பணம் இருக்கிறது. நினைத்தாலே மனது உற்சாகமாகிக்கொள்ளும் அளவுக்கு புகழும் இருக்கிறது. அப்புறம் என்ன, கிடைக்கின்ற நேரத்தில் சோகங்களை தூக்கி சுமந்துகொண்டிருக்க வேண்டியதுதான். சுருங்கச் சொன்னால் சோகப்பட நிறைய நேரம் இருக்கிறது அல்லது கிடைக்கின்ற சொற்ப நேரத்தை சோகங்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. எத்தனை நேரம்தான் கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்க முடியும். மனதுக்கும் போரடிக்கும் அல்லவா?

பொதுவாகவே நமக்குத் தேவையானதை மனதுக்குள் சுமப்பதைவிட தேவையற்றதையே அதிகம் சுமக்கிறோம், நாம் அறிந்தும் அறியாமலும். அதனால்தான் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் கொடுக்கின்ற மகிழ்ச்சியை நினைத்துப் பார்ப்பதைவிட சோகங்களை  நினைத்து நினைத்து மனம் குமைகிறது. ஆற்றாமையால் அழுது தீர்க்கிறது. மகிழ்ச்சி நேர்மறையையும், வருத்தம் எதிர்மறையையும் தூண்டும்.

மகிழ்ச்சியான சம்பவங்கள் நூறு நடந்திருந்தாலும், ஒரே ஒரு வருத்தமான சம்பவம் மனதைக் குடைந்தெடுத்து நூறு மகிழ்ச்சியான நிகழ்வுகள் கொடுத்த உற்சாகத்தை, ஒரே ஒரு மெல்லிய  கைதட்டலுக்கு மிரண்டு சிட்டாய் பறக்கும் காகங்களைப் போல பதறச் செய்து சிதற அடித்துவிடும். அத்தனை சர்வவல்லமை பெற்றது எதிர்மறை சிந்தனைகள்.

அதனால்தான் எதிர்மறை சிந்தனைகள் மனதுக்குள் தோன்றும்போதெல்லாம் நேர்மறை சிந்தனையை அதிகரித்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் மனச் சோர்வு ஏற்பட்டு மெல்ல மெல்ல மன அழுத்தத்துக்குக் கொண்டு சென்று நம்மை செயலிழக்கச் செய்துவிடும்.

எலுமிச்சை பழ சர்ப்பத்தில் எலுமிச்சை சாறு அதிகமாகிவிட்டால் கொஞ்சம் தண்ணீரையும், கொஞ்சம் சர்க்கரையையும் அதிகமாக சேர்த்து சர்பத்தை பதமாக்கிக்கொண்டு சாப்பிடுவதைப் போல சோகம் தோன்றும்போதெல்லாம் மகிழ்ச்சியைக் கூட்டுவதற்கான முயற்சியை நாம் மிகப் பிரயத்தனப்பட்டு எடுக்க வேண்டும்.

முயற்சி செய்து பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon