’ஈகோ’ உடைத்த கே.என்.சிவராமன்

2017 – காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் இறுதியில் நான் சந்தித்த நேர்மையாளர் திரு.கே.என்.சிவராமன்.

நேர்மையாக இருப்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் பரிசு. அத்தகைய பரிசை நித்தம் தனக்குத் தானே கொடுத்து வருகிறார் இவர்.

பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் பெருமை. மிக அரிதானவர்களுக்கு மட்டுமே அவர்களால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குப் பெருமை. அப்படிப்பட்ட அரிதானவர்களுள் ஒருவர்தான் திரு.கே.என்.சிவராமன்.

செய்யும் பணியில் நேர்த்தி, நேர்மையான அணுகுமுறை, எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான கண்ணோட்டம், தெளிவான தொலைநோக்குப் பார்வை, மனிதநேயத்துடனும் பண்புடனும் பழகும்விதம், தான் மட்டும் உயராமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அவரவர்கள் திறமைக்கு ஏற்ப உயர்த்துதல், ஆழமான வாசிப்பு, கைதேர்ந்த எழுத்துநடை, கூடுமானவரை வாசிப்புக்கும், எழுத்துக்கும், பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் முரணாக நடந்துகொள்ளாத வாழ்க்கைமுறை என இவருடைய குணநலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சூரியன் பதிப்பகத்தில் நான் எழுதிய புத்தங்கள் வெளிவரும் நேரங்களில் லேஅவுட், புரூஃப், அட்டைப்பட வடிவமைப்பு, புத்தகத் தலைப்பு என அனைத்துக்கும் அஃபிஷியலாக இமெயில் மற்றும் போன் செய்கின்ற போது மிகவும் சின்சியராக உடனுக்குடன் அனைத்திற்கும் பதில் கொடுப்பார்.

எந்த ஓர் விஷயத்தையும் ‘இதோ அதோ’ என காரணமே இல்லாமல் இழுக்கடிப்பதோ, தான் வகிக்கும் பதவிக்கான ஈகோ காண்பிப்பதோ இவரிடம் கிடையாது.

இந்த காலகட்டத்தில்தான் இவர் எழுதத் தொடங்கி இருந்த Blog என் பார்வைக்கு வந்தது.

‘எழுத்துதான் வாழ்க்கை’ என்றிருப்பவர்கள் தாங்கள் செய்கின்ற பணிக்காக எழுதுவதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவருக்குள் இருக்கும் வற்றாத படிக்கும் ஆர்வத்துக்கும், எழுதும் ஆர்வத்துக்கும் வடிகாலாக பிளாகிலும் எழுத ஆரம்பித்ததை அறிந்துகொண்டேன்.

இவர் 2007-ம் ஆண்டிலேயே பிளாகில் பரபரப்பாக எழுதி நன்கு அறிமுகமானவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

குறிப்பாக மனிதர்களை மனிதநேயத்துடன் அணுகும் இவருடைய பண்பான அணுகுமுறைக்கு மதிப்புக் கொடுத்து, இவரது நேர்மையை பாராட்டும் விதமாக, இவர் தானாகவே வடிவமைத்து எழுதத் தொடங்கி இருந்த Blog–ல் சற்றே மாற்றம் செய்து மெருகேற்றிக்கொடுத்தேன். பின்னர் அது வெப்சைட்டாக உருவெடுத்தது. http://www.knsivaraman.com/

அந்த வெப்சைட்டை விழா எடுத்து கொண்டாடும் விதமாக ஃபேஸ்புக்கில் பிரமாதமாக வார்த்தைகளால் சிறப்பித்துவிட்டார். நீங்களும் அதில் கலந்துகொள்ளுங்களேன்… https://www.facebook.com/nagarajan.sivaraman1/posts/10214817257774586

மனித நேயம் தன் சுயத்தில் இருந்து உருமாறி தேவையும், எதிர்பார்ப்பும் சார்ந்த தொடர்புகள் அதிகரித்து வரும் இந்த கமர்ஷியல் உலகில், எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து வரும் இவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவே இந்தப் பதிவு.

இன்றுபோல் என்றும் மாறாமல் வாழ்க்கையில் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு. கே. என். சிவராமன்.

இந்த இனிய நினைவுகளை தொகுத்த இன்று(ம்) ஓர் இனிய நாள்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 26, 2017

(Visited 66 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari