‘குங்குமம்’ கே.என்.சிவராமன் வாழ்த்து

காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் என்னை நேரடியாக வாழ்த்தியவர்கள் பலர்.

ஆனால், திரு. கே.என்.சிவராமன், நான் அவருடைய வெப்சைட்டை சற்றே மெருகேற்றிக் கொடுத்ததை பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டதன் மூலம், தன்னைச் சார்ந்தவர்களும் என்னைப் பாரட்டும் அளவுக்கு  பெருமை சேர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

திரு. கே.என்.சிவராமனின் ஃபேஸ்புக் பதிவு

எவ்வளவு முயற்சித்தும் நிதானமாக இருக்க முடியவில்லை. ஏனெனில் கடந்த 10 நாட்களாக நெகிழ்ச்சியில் மூச்சுத்திணறுகிறேன். காரணம், எனது வலைப்பதிவு. https://knsivaraman.blogspot.in/

நிறைய குறிப்புகளாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் சேகரிப்போம் என்பதற்காக ஆரம்பித்தேன். அது மட்டும்தான் செய்தேன். நிலைத்தகவலாகவும் இதை நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்.

உடனே Compcare K Bhuvaneswari சாட்டில் தொடர்பு கொண்டார். ஏன் எதற்கு என்று கேட்காமல் எனது வலைப்பூவில் அவரை அட்மின் ஆக்க சொன்னார். அவராக சொல்லும்வரை வலைப்பூ பக்கம் வர வேண்டாம் என்றார்.

அப்படியே செய்தேன்.

இரு நாட்களுக்கு பின், வலைப்பூவை பார்க்கச் சொன்னார்.

கண்கள் கலங்கிவிட்டன. வாங்கிய காணி நிலத்தில் அழகான வீடு ஒன்று கட்டப்பட்டிருந்தது.

என்ன சொல்வதென்று தெரியவில்லை. 25 ஆண்டுகளாக தனியாக Compcare Software Private Limited என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். சாஃப்ட்வேர் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை பல்வேறு பதிப்பகங்களில் எழுதியிருப்பவர். இணையம் சார்ந்த வடிவமைப்பு உட்பட அவரது நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் தன் பணிக்கு மத்தியில் இந்த வீட்டைக் கட்டி கொடுத்திருக்கிறார், அதுவும் இலவசமாக.

இத்தனைக்கும் அவரை இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ‘சூரியன் பதிப்பக’த்தில் அவர் எழுதிய மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அது தொடர்பான மின்னஞ்சல் போக்குவரத்து மட்டுமே எங்களுக்குள் நடந்திருக்கிறது.

இந்த சூழலில்தான் இந்த நண்பனின் வலைப்பக்கத்தை வடிவமைத்துக் கொடுத்து கவுரவித்திருக்கிறார்.
அடிப்படையில் ரொம்பவே சென்டிமெண்ட் ஆள் என்பதால் நெகிழ்ந்துவிட்டேன்.

அதை அதிகரித்தது வலைப்பூவில் இருந்த ‘யார் இவர்?’ https://knsivaraman.blogspot.in/p/blog-page.html பகுதி.

அவராகவே எடுத்த முடிவு. மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய மாலன் மாலன் நாராயணன் சாரை அவராகவே தொடர்பு கொண்டு என்னைக் குறித்து எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார்.

மாலன் சார் அதை ஆடியோவாகவே அனுப்பியிருக்கிறார்.

போலவே அமெரிக்காவில் இப்போது தன் மகன், மருமகள், பேரனுடன் விடுமுறையை கழித்து வரும் பாமா கோபாலன், வேதா கோபாலன் Vedha Gopalan ஆகியோரை சாட்டில் தொடர்பு கொண்டு குறிப்புகளை வாங்கியிருக்கிறார்.

இத்துடன் திருப்தி அடையாமல் என் நேசத்துக்குரிய நண்பர் யுவகிருஷ்ணாவிடம் Yuva Krishna இருந்தும் ஒரு வெர்ஷனை வாங்கி சேர்த்திருக்கிறார்.

இவை அனைத்தும் ‘யார் இவர்?’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

எப்படி இதுவரை புவனேஸ்வரியை நான் சந்தித்ததில்லையோ அப்படி மாலன் சார், பாமா கோபாலன், வேதா கோபாலன், யுவகிருஷ்ணா ஆகியோரும் அவரை சந்தித்ததில்லை. சாட்டிலோ மின்னஞ்சலிலோ உரையாடியதில்லை.
இப்படி அறிமுகம் இல்லாதபோதும் முயற்சி எடுத்து என் வாழ்க்கையுடன் எல்லா வகையிலும் தொடர்புடைய அவர்கள் நால்வரிடம் இருந்தும் கோட்ஸ் பெற்று பதிவாக்கியிருக்கிறார்.

இந்தளவுக்கு ஒரு நண்பனுக்காக மெனக்கெட்டிருக்கும் புவனேஸ்வரியின் பிரதிபலன் பாராத உதவி கசிய வைத்தது என்றால்…
‘யார் இவர்?’ பகுதிக்காக தங்கள் பங்களிப்பை செய்திருக்கும் மூத்தோர்களும் வழிகாட்டிகளுமான மாலர் சார், பாமா கோபாலன், வேதா கோபாலன் ஆகியோரும் சகா யுவகிருஷ்ணாவும் அழ வைத்துவிட்டார்கள்.

வார்த்தைகள் கேவுகின்றன. அவர்கள் சொல்லியிருக்கும் அளவுக்கானவன் இல்லை. என்றாலும் ‘நல்லா படிக்கணும்…’ என பள்ளி சிறுவனை ஊக்கப்படுத்துவது போல் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கேற்ப இனியாவது நடக்க வேண்டும்.

மற்றபடி…

ஒன்றுமில்லை. காணிநிலத்தில் எனக்கே எனக்காக நண்பர் கட்டிக் கொடுத்திருக்கும் வீட்டில்-

மூத்தோர்கள் ஆசிர்வதிக்க –

சகா தட்டிக் கொடுக்க –

குடி புகுந்திருக்கிறேன், உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன்.

அனைவருக்கும் நன்றி

இப்படிக்கு,

கே.என்.சிவராமன்
நவம்பர் 30, 2017

(Visited 119 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari