ஹலோ With காம்கேர் -252: நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்வதில்லையா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 252
September 8, 2020

கேள்வி:  நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்ற மனோபாவம் ஏன் வருகிறது?

பப்ஜி கேம் விளையாட முடியாத சோகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் வீட்டை விட்டு ஓட்டம், ஃபேஸ்புக்கில் நட்பு என்ற போர்வையில் தனிப்பட்ட முறையில் தன் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துகொண்ட பள்ளி மாணவியை ப்ளாக் மெயில் செய்யும் கும்பல், இன்ஸ்டாகிராமில் ஆண் நட்புகளினால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் விரக்தியில் தற்கொலை இப்படியாக பலதரப்பட்ட செய்திகள் கொரோனாவுடன் சேர்ந்து பயணம் செய்வது நேரடியாகவே என் காதுகளுக்கு வரும்போது தொழில்நுட்ப வளர்ச்சி மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.

சமீபமாய் நிறைய தொலைபேசி அழைப்புகள், கவுன்சிலிங்கிற்காக.

நான் இயங்குவது முழுக்க முழுக்க தொழில்நுட்பத் துறைதான் என்றாலும் நிர்வாகியாக என் துறையில் நான் சாதித்த விஷயங்களின் அடிப்படையில் என் அனுபவம் காரணமாக என்னிடம் ஆலோசனை கேட்பார்கள்.

கவுன்சிலிங் என்பது என் முழுநேர பணியும் அல்ல. முழுநேர சர்வீஸும் அல்ல.

நேரம் கிடைக்கும்போது (மட்டுமே) என்னிடம் பிரச்சனைகளை சொல்லி கேட்பவர்களுக்கு என் அனுபவத்தின் வாயிலாக ஆலோசனை சொல்கிறேன்.

மருத்துவ ஆலோசனையும் அல்ல; மனநல ஆலோசனையும் அல்ல. அனுபவ ஆலோசனை. அந்த சூழலில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்பதன் அடிப்படையிலான ஆலோசனை. அவ்வளவுதான்.

இதன் மூலம் தீர்வு கிடைக்கப் பெற்றவர்கள் பலர் என்பதைவிட தெளிவு பெற்றவர் பலர்.

கொரோனா கால லாக் டவுனுக்குப் பிறகு ஒவ்வொருவருக்குள்ளும் ஏகப்பட்ட  பிரஷர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒவ்வொருவிதமாய். பெண்களுக்கு சமையலறை, குழந்தைகளுக்கு வெளியே எங்கும் செல்ல முடியாமல் சதா டிவியிலேயே இருப்பது, கடனில் வீடும் காரும் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க வேண்டுமே என்கின்ற கவலை, பலருக்கு வேலை போய்விட்டதே என்ற மன அழுத்தம், சிலருக்கு சம்பளம் குறைந்துவிட்டதே என்ற மனப்புழுக்கம் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் பிரச்சனைகள்.

இதற்கிடையில் மாணவ மாணவிகள் இன்ஸ்ட்ராகிராம் வாட்ஸ் அப் ஃபேஸ்புக் இவற்றுக்கு அடிமை ஆகி பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

நன்றாக படித்துக்கொண்டும் குறிக்கோளுடன் வளர்ந்துகொண்டும் இருந்த ஒரு பள்ளி மாணவி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆண் நட்புகளின் தொடர்புக்கு பலியாகிக்கொண்டிருப்பதை கடைசி கட்டத்தில் கண்டறிந்த ஒரு பெற்றோர் என்ன செய்வது என தெரியாமல் பதறிய நேரத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார்கள். தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, மனோ ரீதியாகவும் அதில் இருந்து வெளிவருவதற்கு சிறப்பான ஆலோசனை சொன்னேன். மாற்றம் ஏற்படுவதாக தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆன்லனில் ரம்மி விளையாடி பல லட்சங்களில் ஏமாந்துபோன ஓர் இளைஞனின் பெற்றோர் பேசியபோது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு டிவி விளம்பரம்  கண்ணில் பட்டது.

இந்தந்த மொபைல் ஆப்களில்  ரம்மி  விளையாடுங்கள். நான்  நிறைய சம்பாதித்தேன். நீங்களும் சம்பாதிக்கலாம். இன்னும் விளையாடி ஒரு பைக் வாங்க போறேன்னு  ஓர் இளைஞர்   சொல்கிறார். நான் கார் வாங்கி விட்டேன் என மற்றொருவர் சொல்கிறார். என் மனைவிக்கு விலை உயர்ந்த மொபைல் வாங்கித் தந்தேன் என்று ஒருவர் சொல்கிறார்.

பின்னர் இது பல தொலைக்காட்சி சேனல்களிலும் விளம்பரமாக வந்தது.

லாக்டவுன் காலத்தில் வேலை இழந்த இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி மூலமாவது சம்பாதிக்கலாமே என்று நினைத்து தங்கள்  வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் ஆப்பில் கட்டி  விளையாடத் தொடங்குகிறார்கள்.

ஆன்லைன் ரம்மியில் எதிரில் விளையாடும் நபர் அந்த விளையாட்டில் புலியாக இருப்பார்.

முதலில் ஒரிரு முறை எதிராளியை ஜெயிக்கச் செய்து தூண்டில் போட்டு அவர்களிடம் பணத்தைக் கறப்பதே அவரின் நோக்கமாக இருக்கும். ஓரிரு முறை ஜெயித்ததும் பண வெறி அதிகரிக்கும்.

அடுத்தடுத்த முறை தோல்விகளை சந்தித்தாலும் அந்த விளையாட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு போதை அதிகரிக்கும். வங்கி கணக்கில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் அத்தனை பணத்தையும் வைத்துவிளையாடி எல்லாவற்றையும் இழந்த பிறகுதான் தாங்கள் புதை குழியில் விழுந்ததே தெரியும் பலருக்கு. பணத்துக்கு பணமும் போய், வீட்டில் அதை சொல்ல முடியாத மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி, வீட்டை விட்டு சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடுதல் என சீரழிந்து வருபவர்கள் குறித்து சமீபமாய் அதிகம் கேள்விப்படுகிறேன்.

இவ்வளவு ஏன் நம் பதிவுகளுக்கு லைக் போடாதவர்கள் நம்மையே லைக் செய்யவில்லை என்பதுபோன்ற மன இறுக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

அதுபோல் நம் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுவிட்டு அதற்கு நம் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பலரை நான் நித்தம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் வேலை பிசியில் நம் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டுவிட்டால் போச்சு. அதற்குள் அவர்கள் அடையும் மன அழுத்தம் சொல்லிமாளாது.

அதுபோல்தான் வாட்ஸ் அப்பில் தகவல் ஏதேனும் அனுப்பி விட்டு நாம் பார்த்த அடுத்த நொடி நம்மிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் மனோநிலையும். நாம் என்ன ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலுமா பணி புரிகிறோம். நம் பணிக்கு அவை உதவுகிறது. அவ்வளவுதானே. அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்.

சாதாரண லைக், கமெண்ட்டுக்கே இத்தனை மன அழுத்தம் என்றால், ஆன்லைன் ரம்மியிலும், பப்ஜி கேமிலும், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் நட்புகளின் தொந்திரவுகளினால் உண்டாகும் மன அழுத்தத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா?

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே ஒரு ஆலோசனையை மட்டும்தான் நான் வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் பெற்றோர்களிடத்தில் பப்ளிக் மோடிலும், வெளி உலகில் பிரைவேட் மோடிலும் இருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ பெற்றோர்களிடத்தில் பிரைவேட்டாகவும் வெளிஉலகில் பப்ளிக்காகவும் இருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எல்லாவற்றையும் பகிரங்கமாக வெளிப்படையாக பகிரும் இளைஞர்கள் வீட்டில் தங்கள் பெற்றோரிடத்தில் ‘அது எங்கள் ப்ரைவசி’ என்று சொல்லி எல்லாவற்றையும் மூடி மறைக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல் படியாக, பெற்றோர்கள் தங்கள் மொபைலை பிள்ளைகளிடம் கொடுத்து இதில் வாட்ஸ் அப், மெசன்ஞர், எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக் என எதை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள். எதுவுமே மறைப்பதற்கில்லாமல் இருக்கும் என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர் மன சுத்தமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது பிள்ளைகளும் அப்படி செயல்பட முயற்சிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் வாட்ஸ் அப் தகவல்களை பிள்ளைகளிடம் மறைக்க முயலும்போது அதையேதான் அவர்களும் செய்வார்கள். மாற்றம் பெரியவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.

அதுபோல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும்போது தாங்கள் என்னவோ தவறுகளே செய்யாமல் சேட்டைகள் எதுவும் செய்யாத சமர்த்துப் பிள்ளைகளாய் வானத்தில் இருந்து நேரடியாக குதித்து வந்த அதிசயப் பிறவிகள் போல பேசுவதை தவிர்த்துவிட்டு தாங்கள் சிறுவயதில் செய்த சின்ன சின்ன சேட்டைகள், தவறுகள் இவற்றை மனம் திறந்து பிள்ளைகளுடன் பேச வேண்டும்.

எதனால் தவறுகள் செய்தோம் என்று சொல்லும் அதே நேரம் எப்படி அதில் இருந்து மீண்டு வந்தோம் என்பதையும் மறக்காமல் சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் இயல்பாக கதைபோல அவர்களுடன் அரட்டை அடித்தபடி பேசினால் பிள்ளைகளுக்குள் அறிவுரையாகச் செல்லாமல் அனுபவமாக உள்ளே செல்லும். இப்படி இருங்கள், அப்படி இருங்கள் என்று அறிவுரை சொல்வதைவிட பல மடங்கு நற்பலனை கொடுக்கும் இப்படியான மனம் திறந்த பேச்சு.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் வகுப்பாசிரியை எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த ஆசிரியைக்கு அப்போது 45 வயதிருக்கும்.

ஒருநாள் அவர் சாலையில் பள்ளிக்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞன் அவரை கீழே தள்ளிவிடாத குறையாய் சைக்கிளில் வேகமாக வந்திறங்கி ‘டீச்சர், நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க…’ என்று சொல்லிவிட்டு பறந்துவிட்டான். முதல்நாள் என்பதால் பதட்டமடைந்திருக்கிறார்.

அடுத்த நாளும் சாலையில் வேறொரு திருப்பத்தில் பைக்கில் காத்திருந்து இதுபோல சொல்லிவிட்டு பறந்திருக்கிறான். இரண்டாம் நாள் மன அழுத்தம் அடைந்திருக்கிறார்.

அதற்கும் அடுத்த நாள் கொஞ்சம் உஷாரான மன நிலைக்கு வந்துவிட்டார். ஒரு தியேட்டர் அருகே நடந்து வந்துகொண்டிருந்த போது நடந்து வந்து அவரிடம் இதுபோலவே சொல்ல வர, அவர் அவன் கைகளை அழுத்தமாக பிடித்து கண்களை உற்று நோக்கி ‘என்னப்பா என்ன படிக்கிறாய், எனக்கு உன் வயதில் ஒரு மகன் இருக்கிறான்… உன் அப்பா அம்மா என்ன செய்கிறார்கள்…’ என்று இயல்பாக பேச ஆரம்பிக்க அந்த இளைஞன் தடுமாறி கைகளை விடுவித்துக்கொள்ள எத்தனை முயற்சித்தும் முடியாமல் தலை குனிந்திருக்கிறான்.

‘பார்த்துப்பா படிப்பில் கவனம் வை… வாழ்க்கையை தொலைச்சுடாதே… உன் அப்பா அம்மா உன்னை நம்பி வீட்டில் காத்திருக்கிறார்கள்’ என்ற தோரணையில் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன் பின்னர் அவன் பின் தொடர்வது நின்று போனதாம்.

இந்த நிகழ்வை வகுப்பில் எங்கள் ஆசிரியை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் எங்களிடம் கதைபோல சொல்லி, ‘இந்த வயதுக்கு எனக்கு இதுபோல பிரச்சனை வருகிறது. நான் இப்படி சமாளித்தேன். உங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என ஒரு கேள்வியை முன் வைத்தார்.

ஆளுக்கொரு பதில். பதிலில் தெளிவில்லை என்றாலும் இதுபோன்ற சூழல் ஏற்படலாம். ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்வது என்பதை நாசூக்காக எங்களுக்குப் புரிய வைத்தார் அந்த ஆசிரியை.

இப்படித்தான் அறிவுரைகள் அமைய வேண்டும். அதைவிட்டு ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது…. நாம் ஒழுக்கமாக இருந்தால் யார் நம்மிடம் வாலாட்டுவார்கள்’ என்ற தோரணையில் அறிவுரை இருந்தால் குழந்தைகள் கூட அந்த அறிவுரைக்கு கட்டுப்படமாட்டார்கள்.

அப்பா அம்மா மட்டும்தான் நம் அந்தரங்கங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். வேறு யாரிடம் என்ன பகிர்ந்தாலும் அது பாதுகாப்பில்லை. வெளிய கசிந்துவிடும் என்ற ஆழமாக நம்பிக்கையை பிள்ளைகளுக்குள் எப்பாடுபட்டாவது விதைத்து அந்த லகானை தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வழிநடத்துவது ஒன்றே பிள்ளைகள் பாதை மாறிப் பயணிக்காமல் இருக்கச் செய்யும் ஒரே யுக்தி.

கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் முடியாததில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர்  10,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari