ஹலோ With காம்கேர் -259: பெற்றோர்களும் வளர்ந்த குழந்தைகளே!

ஹலோ with காம்கேர் – 259
September 15, 2020

கேள்வி: பெற்றோர்களும் வளர்ந்த குழந்தைகளாக(வே) நடந்துகொள்வது எதனால்?

பத்தாம் வகுப்புப் படிக்கின்ற ஒரு மாணவியின் தாய் ஓர் ஆலோசனைக்காக என்னை தொடர்பு கொண்டார். அவர்களின் மகள் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகி விட்டாள். நிறைய நண்பர்களுடன் சாட் செய்வதை பார்த்ததில் இருந்து மனதே சரியில்லை. எப்படியாவது அவளை இந்த மனச் சிக்கலில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என கேட்டிருந்தார்.

‘என் மகள் கொள்ளை அழகு. நல்ல கலர். அதனால்தான் இப்படி ஆண் நண்பர்கள்…’ என்ற நோக்கில் ஏதேதோ தவறான புரிதல்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவருக்கு புரிய வைப்பதற்காக சில விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டி இருந்தது.

பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் சரி, அவர்களின் கலர், உயரம் என்னவாக இருந்தாலும் சரி, படித்திருக்கிறார் படிக்கவில்லை, அழகு அழகில்லை என்ற அளவுகோல் எல்லாம் அவசியமே இல்லை பிரச்சனை  கொடுக்க நினைப்பவர்களுக்கு.

‘பெண்’ என்ற அடையாளம் போதும் அவர்களுக்கு.

காதலியாக மனைவியாக வருபவர்களிடம் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் எல்லாம். பிரச்சனை கொடுக்க நினைக்கும் பெண்களிடம் எதிர்பார்ப்புகள் எல்லாம் வைத்துக்கொள்வதில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் அலைந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு மட்டும் பிரச்சனை வருவதில்லையா? அவர்களையும் விட்டு வைப்பதில்லையே இந்த சமூகம்.

தூணுக்கு புடவை கட்டி வைத்தாலும் அதை பெண்ணாக பாவிக்கும் (பார்க்கும்) உலகம் இது என என் கொள்ளுபாட்டி (அம்மாவின் பாட்டி) அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்களாம். அப்படி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றல்ல நேற்றல்ல எந்த காலத்திலும் ‘பெண்’ பெண்ணுக்கான பிரச்சனைகளுடன்தான் இயங்கி வந்திருக்கிறாள்.

இப்படி விலாவாரியாக பேசியதுடன் இணைப்பாக சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு நிகழ்வையும் எடுத்துச் சொன்னேன்.

75 வயதாகும் கணவனை இழந்த எங்கள் குடும்ப நண்பர் ஒருவருக்கு அவர் குடும்பத்தைச் சேர்ந்த அவர் வயதை ஒத்த உறவினர் ஒருவர் ‘நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என தினமும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி தொந்திரவு கொடுக்க அவர் அதை தன் பிள்ளைகளிடம் சொல்ல, அவர்கள் அந்த உறவினரை கண்டித்து வைத்தார்கள்.

இப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்த பெண்மணி ‘ஆமாம் மேடம், பெண்கள் ஆண் துணை இல்லாமல் வாழ்வது கடினம்…’ என்று நான் சொல்லிக்கொண்டிருந்த கருத்துக்களுக்கு சற்றும் பொருந்தாத ஒரு சித்தாந்தத்தை எடுத்துவிட எனக்கு அலுப்பு ஏற்பட்டது.

நான் சொல்லிக் கொண்டிருந்தது, ‘பெண்களின் வயது, அழகு, சமூக அந்தஸ்து இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல அவர்களுக்கு தொந்திரவு கொடுக்க நினைப்பவர்களுக்கு. பெண் என்ற அடையாளம் போதும்’

ஆனால் அந்தப் பெண்மணி புரிந்துகொண்டதோ அதற்கு நேர்மாறாய். இத்தனைக்கும் அந்த பெண்மணி பட்டப்படிப்பு படித்து பணியில் இருப்பவர்.

‘சரி மேடம், ஆன்லைனில் ஒரு கவுன்சிலிங் வைத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டேன்.

‘ஓகே மேடம். நீங்கள் சொல்லும் நாள் அன்று என் மகளை ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு வரச் சொல்கிறேன்’ என்றார் அவசரமாக.

‘நான் ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு வரச் சொன்னது உங்களைத்தான் மேடம்…’ என்றபோது அந்த பெண்மணி கொஞ்சம் தடுமாறினார்.

இப்படித்தான் பல பெற்றோர்களுக்கே பிள்ளைகளை வழிநடத்த விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது. இதைச் சொல்லி அவரை புண்படுத்த விரும்பாமல் ‘மேடம் உங்கள் மகளிடம் எப்படி எடுத்துச் சொல்லி இந்த மொபைல் மோகத்தை விட்டொழிக்கலாம் என உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் மகளை வழிநடத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் நெருக்கம் அதிகமாகும். உங்கள் மகள் உங்களை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்’ என்று சொன்னேன்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு கவுன்சிலிங்கிற்கு வருவதாக சொல்லி இருக்கிறார்.

இன்று பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்குத்தான் விழிப்புணர்வு அதிகம் தேவையாக உள்ளது என்பதை நித்தம் நிரூபணம் செய்துகொண்டே இருக்கிறார்கள் என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பெற்றோர்கள். அந்த நேரத்தில் பெற்றோர்களும் வளர்ந்த குழந்தைகளாகவே எனக்குத் தெரிகிறார்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 279 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari