ஜம்முனு வாழ காம்கேரின் OTP-65: சின்ன சின்ன வார்த்தையிலே அர்த்தம் இருக்கு!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 65
மார்ச் 6, 2021

சின்ன சின்ன வார்த்தையிலே அர்த்தம் இருக்கு!

நேர்மறை சிந்தனை என்பது நாமாக நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உணர்வல்ல. தானாகவே உள்ளுக்குள் பிரவாகமெடுக்கும் ஓர் அற்புத சக்தி வாய்ந்த உணர்வு. சின்ன வார்த்தைகள்கூட அந்த உணர்வைத் தூண்டிவிட்டு நம்மை அழகுபடுத்தும். அதே சின்ன வார்த்தையில் துவளவும் செய்துவிடும். இருமுனை கூரான சக்திவாய்ந்தது வார்த்தைகளின் பிரயோகம்.

என் எழுத்தை தொடர்ச்சியாக வாசிக்கும் அன்பர் ஒருவர் காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஃபேஸ்புக்கில் என் பதிவினைப் படித்துவிட்டுதான் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வதாக சொல்லி இருக்கிறார். எப்படிப்பட்ட வருத்தமான சூழலாக இருந்தாலும் என் பதிவுகளைப் படித்த பிறகு ஒரு புத்துணர்வு ஏற்படுவதாகவும், அன்றைய நாள் முழுவதும் எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் உண்டாவதாகவும் அடிக்கடி தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

நேற்று நான் எழுதி இருந்த பதிவிற்கு ‘தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது?’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இணைத்திருந்தேன். அந்த வார்த்தைகளைப் படித்த உடனேயே அவருக்குள் ‘என்னடா இது, மேடம் எப்பவும் நேர்மறையாகத்தானே எழுதுவார்கள், இன்று இப்படி எதிர்மறையாக உள்ளதே…’ என நினைத்துக்கொண்டு பதிவை படித்து முடித்தாராம். பதிவு முழுக்க முழுக்க நேர்மறையாக இருந்தாலும் தலைப்பும், படமும் அவருக்குள் பதட்டத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லி இருந்தார்.

விடியற்காலையில் எழுந்ததும் நாம் முதன்முதலில் தொடங்கும் செயல் அன்றைய தினத்தை செதுக்குகிறது என்பதற்கு இதைவிட அனுபவப்பூர்வமான சான்று வேறு வேண்டுமா என்ன?

அதனால்தான் நம் முன்னோர்கள் ‘கோபத்துடன் எழுந்தவன் நஷ்டத்துடன்தான் உட்காருவான்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள். கோபத்துடன் மட்டுமில்லை சோகத்துடன் எழுந்தால், பதட்டத்துடன் எழுந்தால் இப்படியாக, காலையில் நாம் எந்த உணர்வுடன் அன்றைய தினத்தைத் தொடங்குகிறோமோ அந்த உணர்வுதான் அன்றைய தினம் முழுவதும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

வீட்டுப் பெரியவர்களை கவனித்துப் பாருங்கள். காலையில் கண்விழித்ததும் சிறிது நேரம் அமர்ந்து பிராத்தனை செய்துவிட்டு மற்ற வேலைகளைத் தொடங்குவார்கள். ஒருசிலர் கண் விழித்ததும் கைகளை விரித்து உள்ளங்கைகளை பார்த்த பிறகே படுக்கையில் இருந்து எழுந்திருப்பார்கள். ஒருசிலர் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம்.

இன்று பெரும்பாலானோர் கண் விழிப்பதே மொபைல் போனின் திரையில்தான். அதுவும் நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுதிப் பதிவிடும் பதிவுகளைப் படித்த பிறகே மற்ற வேலைகளை கவனிப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது நாம் இன்னும் சிறப்பாக மேன்மையாக செயல்பட வேண்டும் என்கின்ற உத்வேகம் உண்டாகிறது.

கிட்டத்தட்ட 40 வருடங்களாக தினமும் எழுதி வருகிறேன். சமூக வலைதள வளர்ச்சிக்குப் பிறகு நான் எழுதுகின்ற சின்னச் சின்ன வார்த்தைகளில்கூட  அர்த்தம் உள்ளது என்பதை நேரடியாக வாசகர்களின் அனுபவங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

நேற்று காலை எட்டு மணிக்கு வந்த ஒரு அலைபேசி அழைப்புதான் நேற்றைய தினத்தின் முதல் அழைப்பு.

கலைத்துறைச் சார்ந்த ஒருவர் போன் செய்திருந்தார். அது என்ன கலைத்துறை என என்னிடம் கேட்காதீர்கள். அவர் அப்படித்தான் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அது பெரிய திரையா, சின்னத் திரையா, இலக்கியமா, ஓவியமா என்றெல்லாம் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. காரணம் அவர் பேசிய விதம்.

‘ஹலோ புவனேஸ்வரி…’

‘ஹலோ யார் சொல்லுங்க…’

‘நான் So & So…’ (So & So என்ற இடத்தில் அவர் பெயரையும், அவர் வேலை செய்யும் நிறுவனத்தையும் அறிமுகம் செய்துகொண்டார்)

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை, நீண்ட காலமாக தெரிந்தவர்களைப் போல், சட்டென உரிமை எடுத்துப் பேசுபவர்களை எந்தப் பிரிவில் சேர்ப்பது என தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டே ‘ஓ.கே. சொல்லுங்க சார்…’ என்றேன்.

‘ம்… எனக்கு தொழில்நுட்ப உதவி வேணும்…’

‘ஓ.கே. என்ன வேணும்… சொல்லுங்க சார்… என்னால் முடிந்தால், எனக்குத் தெரிந்தால் செய்கிறேன்…’

‘சொல்றேன். அதுக்கு முன் ஒரு ரெக்வெஸ்ட்…’

‘என்னை சார் சார்னு அழைக்க வேண்டாம்… பெயர் சொல்லியே அழைக்கலாம்…’

நான் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

‘நானெல்லாம் பெரிய அளவில் மரியாதை எதிர்பார்க்க மாட்டேன் புவனேஸ்வரி…’

‘அப்படியா சார், நான் எதிர்பார்ப்பேன் சார்…’

அப்புறம் என்ன எதிர்முனையில் அமைதியோ அமைதி.

‘ஹலோ… லைன்ல இருக்கீங்களா சார்…’

‘ஹாங்… இருக்கேன் மே…ட…ம்’  என்று திணறியபடி பேச ஆரம்பித்தார்.

எப்படி எல்லாம் பாடம் எடுக்க வேண்டி உள்ளது என பாருங்கள்.

இந்த நிகழ்வை எதற்காக சொல்கிறேன் என்றால், காலையில் முதல் அலைபேசி அழைப்பிலேயே பாடம் எடுக்க ஆரம்பித்ததால் அடுத்தடுத்த வேலைகளில் அதன் தாக்கம் பரவுவதை தவிர்க்க முடிவதில்லை. சொல்லி வைத்தாற்போல அதன் பிறகான ஒவ்வொரு விஷயத்திலும் நான் ஏதேனும் ஒரு விஷயத்தை விளக்கிப் பாடம் எடுப்பதைப் போல் அமைந்துவிட்டது நேற்றைய தினம்.

எப்படி நாளை தொடங்குகிறோமோ அப்படியே அந்த நாளுக்கானப் பாதை அமைகிறது என்பது பேருண்மை.

எனவே நல்லதையே நினைப்போம். நல்லதையே பேசுவோம். நல்லதையே செய்வோம். எண்ணம், சொல், செயல் இவை மூன்றையும் ஒரே நேர்கோட்டில் நல்வழிப்படுத்துவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari