ஹலோ With காம்கேர் -88:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 88
March 28, 2020

கேள்வி:  வாய்ச்சவடால் பேர்வழிகளை வழிக்குக் கொண்டு வருவது எப்படி?

என்னிடம் சில மாதங்களுக்கு முன்னர் ஓர் அம்மா தன் டீன் ஏஜ் மகளுக்காக என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

அவரது மகள் உறவினர்களிடமும் நண்பர்களிடம் இவளைப் போல் உண்டா என்று எண்ணும் வகையில் கனிவாக பேசிப் பேசியே நல்ல பெயர் வாங்கி விடுகிறாள். ஆனால் சோம்பேறியாக இருக்கிறாள். எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. ஆனால் பேசும்போது அந்த வேலை குறித்து பிரமாதமாக பேசுவாள். உண்மையிலேயே அந்த வேலையில் கெட்டிக்காரராக இருப்பவர்களுக்குக்கூட அத்தனை நுணுக்கங்கள் தெரிந்திருக்காது.

ஒருமுறை வயதான உறவினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது அத்தனை உருக்கமாக அவரிடம் பேசி நலம் விசாரித்து அவர் செய்த நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி ‘வரும் ஞாயிறு உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்குப் பிடித்த மைசூர் கேக் செய்து வருகிறேன்’ என்று சொல்லி ஆறுதல் சொன்னவள் அதன் பிறகு பல ஞாயிறுகள் வந்து சென்ற பிறகும் மைசூர் கேக்கையும் செய்யவில்லை, அவரை சந்திக்கவும் நேரில் செல்லவில்லை.

இது இளம் வயதினருக்கான பிரச்சனை மட்டுமல்ல.

பலர் நம்மிடம் பேசி பேசி அவர்கள் மீது ஒரு நம்பிக்கையையும் பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவராக இருப்பர். ஆனால் அவர்கள் பேசுவதில் ஓரு சதவிகிதத்தைக் கூட செயலில் காட்ட மாட்டார்கள். அவர் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு அவர் பேசுவது வாய்ச்சவடால் என்று தெரிந்திருக்கும். ஆனால் முன் பின் அறியாதவர்கள் அவர் பேச்சை முதன்முறை கேட்கும்போது அசந்து விடுவார்கள். அத்தனை சாதுர்யமான பேச்சாக இருக்கும்.

இது பிறரை ஏமாற்றுவதற்காக செய்வதில்லை. இது ஒரு மனோநிலை. அவ்வளவே.

மார்க்கெட்டிங் செய்பவர்களின் பேச்சை கவனித்திருப்பீர்கள். பொருளை நம் தலையில் கட்டும்வரை பொருள் குறித்து ஆஹா, ஓஹோதான். நாம் வாங்கிய பிறகு சர்வீஸுக்காக நாம் எதற்கேனும் அணுகினால் என்னவோ இப்போதுதான் புதிதாக பார்ப்பவரைப் போல் பார்ப்பார்கள்.

இந்த மனோபாவம் பணியில் மட்டும் இருந்தால் நல்லது. அதே குணத்தை வீட்டில் உள்ளவர்களிடமும் காண்பிக்கும்போது உறவுமுறையில் சிக்கல் உண்டாவது நிச்சயம்.

இந்த மனோபாவத்துக்கு பின் ஓர் உளவியல் உள்ளது.

அதாவது எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் அது குறித்து நம் மனதில் ஆனந்த அலை தோன்றும். அந்த உணர்வை உன்னிப்பாக கவனிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த ஆனந்தத்தை பொக்கிஷமாக்கி நமக்குள்ளேயே தேக்கி வைத்து அந்த எனர்ஜியை செயலை நடைமுறைப்படுத்துவதில் காண்பிக்கும்போது அந்த செயல் பூரணத்துவம் பெற்று அழகாக வெளிப்படும். அந்த மகிழ்ச்சியே நாம் எடுத்துக்கொண்ட செயலை ஆத்மார்த்தமாக செய்து முடித்ததற்கான சாட்சி.

அதைவிட்டு நாம் செய்ய இருக்கும் செயல் குறித்த நம் மன ஓட்டத்தை நாம் எடுக்கின்ற முன்னேற்பாடுகளை நாம் போடும் திட்டங்களை உற்சாகத்துடன் பிறரிடம் கொட்டி முடித்துவிட்டால் அந்த செயலை செய்துமுடித்த திருப்தி உண்டாகிவிடும்.

அந்த மனநிறைவே செயலை செய்துமுடித்த ஆத்மதிருப்தியையும் கொடுத்துவிடுவதால் ஒருசிலருக்கு செயலை செய்வதற்கான மனநிலையே உண்டாவதில்லை. அந்த நிலைக்கே அவர்கள் செல்வதில்லை. அதனால்தான் அவர்களுக்கு வாய்ச்சவடால் பேர்வழி பட்டம் சுலபமாக கிடைத்துவிடுகிறது.

இதில் இருந்து மீள்வதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வாயை கட்டிப்போட வேண்டும். அதாவது எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் அது குறித்து யாரிடமும் பேசாமல் வாயைக் கட்டிப் போடுவதே ஒரே வழி.

அப்போதுதான் அவர்களால் அந்த செயலை செய்துமுடிக்கும்போது உண்டாகும் மனநிறைவை அனுபவிக்க முடியும். அந்த மனநிறைவு வெறும் வாய்ச்சவடால் செய்யும்போது கிடைத்த மகிழ்ச்சியைவிட பலமடங்கு அதிகம் இருப்பதை அவர்களாலேயே உணர முடியும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari