காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர்.
சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்.
இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
என் பெயரில் கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றெல்லாம் கனவு கொண்டிருந்த நான் 1992-ம் ஆண்டு M.Sc., முடித்த பின்னர், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது?’ என்று என் பெற்றோர் கொடுத்த ஒரு சிறு பொறியில் அவர்கள் முழு ஆதரவோடு 1992 ஆம் ஆண்டு ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் எங்கள் நிறுவனம் பிறந்தது.
என் பெயரை ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று மாற்றியமைத்தேன். என்னையே நிறுவனமாக்கி உழைக்கத் தொடங்கினேன். இன்று எங்கள் நிறுவனப் படைப்புகள் அனைத்தும் என் பெயரிலும், எங்கள் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன. கனவு பலித்தது. என்னுடைய பெயரே எங்கள் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது.
என் பெயர் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்து, விடா முயற்சியுடன் கூடிய உழைப்பு வெற்றிக்கு வித்திடும் என்பதை நிரூபணம் செய்துள்ளது.