நிம்மதியான பெற்றோராய் வாழ!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்!

‘நிம்மதியான பெற்றோராய் வாழ’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த குறுந்தொடர் பதிவுகளைப் போல 40 விஷயங்களை கட்டுரைகளாக்கி ‘குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற தலைப்பில், ஒரு வருடம் முன்பு காம்கேர் நிறுவன படைப்பாக இ-புத்தகமாக வெளியிட்டிருந்தோம். ஏற்கெனவே வாங்கி இருப்பவர்கள் வாங்கத் தேவையில்லை. இ-புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளோர் https://www.amazon.in/dp/B08XN9GGMT என்ற லிங்கில் செல்லவும்.

தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும், புதிய தயாரிப்புகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளதால் அவ்வப்பொழுது வருகிறேன். எப்போது வந்தாலும் நான் எழுதுவதை வாசித்து ஊக்கப்படுத்தும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜீன் 1, 2022 | புதன் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 10

பழக்கங்கள் வழக்கமாகும்போது…!

உங்கள் குழந்தைகள் ஏதேனும் ஒரு புது விஷயத்தை பழக ஆரம்பிக்கிறார்கள் என்றால் உடனே அதற்கான விதிமுறைகளை சொல்ல ஆரம்பிக்க வேண்டாம். அவர்கள் எப்படி செய்கிறார்களோ அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுங்கள். புதுவிஷயத்தை அவர்கள் பழகி அதையே தொடர் வழக்கமாக்கிக்கொள்ளும் நேரம் வரும்போது தாங்களாகவே அந்த விஷயத்தை எப்படி எப்படியெல்லாம் சிறப்பாக செய்யலாம் என்று யோசித்து அதற்கான புது வடிவத்தை உருவாக்கிக்கொள்வார்கள்.

உதாரணத்துக்கு வாக்கிங் செல்வதையே எடுத்துக்கொள்வோமே. நீங்கள் வாக்கிங் செல்லும் போது ஹெட்போன் மாட்டியபடி பாட்டு கேட்டுக்கொண்டே நடக்கிறீர்கள். இதை கவனித்த உங்கள் வீட்டுப் பெரியவர் யாரேனும் ‘நடைப்பயிற்சி செல்லும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்லக் கூடாது. தியானம் போல அமைதியான மனநிலையில் செல்ல வேண்டும்’ என்று சொல்வதுடன் அடுத்தடுத்த தினங்கள் வாக்கிங் கிளம்பும்போது உங்கள் ஹெட்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு தங்கள் அறிவுரையை நச்சரிக்கத் தொடங்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படி இருக்கும்? அதே எரிச்சல்தான் உங்கள் பிள்ளைகளுக்கும் உண்டாகும்.

உங்கள் பிள்ளைகள் வாக்கிங் பழக்கத்தை ஆரம்பிக்கும் தொடக்கக் காலத்தில் எந்த அறிவுரையும் வேண்டாம். முதலில் நடக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ளட்டும். ஆரம்பத்தில் தங்களுக்குப் பிடித்த சினிமா பாடல்கள் கேட்டபடி நடக்கும் அவர்கள், நடைப் பழக்கம் வழக்கமாகும்போது ஆடியோ புத்தகங்கள், யு-டியூபில் உரைகள் என பயனுள்ள விஷயங்களை கேட்டபடி நடக்க ஆரம்பிப்பார்கள். நடக்கவே செய்யாமல் அந்த நேரத்தையும் படுக்கையில் தூக்கத்தில் கழிக்காமல் நடக்கவாவது செய்கிறார்களே, அதுதான் முயற்சியின் முதல்படி. நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் ‘டிராஃபிக் உள்ள சாலையில் ஹெட்போன் போட்டபடி வாக்கிங் செல்ல வேண்டாம்’ என்பது மட்டுமே. இங்கு உதாரணத்துக்காக எடுத்துக்கொண்டது வாக்கிங். இதே லாஜிக்தான் எல்லா விஷயங்களுக்கும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 31, 2022 | செவ்வாய் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 9

குழந்தைகளின் பரிசுகள் ‘காப்பிரைட்’ செய்யப்பட்டதா?

பள்ளியில் நடைபெறும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு பெற்றோர் எழுதிக்கொடுத்து பரிசுகள் பெறும் குழந்தைகளைப் பார்க்கிறோம். தங்கள் குழந்தைகளுக்கு போட்டிகளில் பங்கேற்க கருத்துக்களை சேகரித்துக் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் முழு படைப்பையும் தயாரித்துக் கொடுத்தனுப்பி பரிசுகள் பெறச் செய்வது உளவியல் ரீதியாக பின்னாளில் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்கு அந்த லாஜிக்கை மறைமுகமாக பின்பற்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது ஆரோக்கியமானதாக இருக்காது. போட்டிகளுக்கு கருத்துக்களை சேகரித்துக் கொடுக்கும்போதே அவற்றை முழுமையாக வாழ்வியல் உதாரணங்களுடன் விவரித்து எடுத்துச் சொன்னால் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் பெறுவதுடன் அறிவுசார் பிள்ளைகளாகவும் வளர முடியும். அப்படி இல்லை எனில், மனப்பாடம் செய்யும் நல்ல இயந்திரமாகவே உருவாவார்கள்.

சமீபத்தில் ஆன்லைனில் நடந்த பேச்சுப் போட்டி ஒன்றில் முதல் பரிசு பெற்ற எட்டாம் வகுப்பு மாணவனிடம் ‘நன்றாக பேசினாய்’ என்று பாராட்டி அதில் அவன் குறிப்பிட்ட ஒரு கருத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியபோது அவன், ‘ஆண்டி, என் அப்பா நெட்டில் பார்த்து எழுதிக்கொடுத்தார். எனக்கு அது என்னவென்றே புரியவில்லை. மக்அப் செய்து ஒப்பித்தேன். அவ்வளவுதான்’ என்று வெகுளியாக சொல்லிவிட்டு ஓடினான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்காய், பேச்சுப் போட்டியில் தான் பேசியதன் சாராம்சம் அப்பாவின் சொந்தக் கருத்து இல்லை, நெட்டில் தேடி எழுதிக்கொடுத்தார் என்றும், தனக்கும் எதுவும் தெரியாது என்றும் சொன்னது அந்த நேரத்துக்கு ஜோக்காக ரசித்து சிரிக்கலாம்தான். ஆனால் அது ஆரோக்கியமான விஷயம் அல்ல.

உங்கள் பிள்ளைகளின் பரிசுகள் அவர்களின் உரிமம் / ‘காப்பிரைட்’ செய்யப்பட்டதாக இருக்க வேண்டுமானால் பரிசுகளுக்குப் பின்னால் உள்ள அவர்களின் படைப்புகள் அவர்களின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டுமல்லவா? சிந்திக்க வேண்டும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 30, 2022 | திங்கள் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 8

ஸ்ட்ரெஸ் நல்லது!

‘நம் காலத்தோடு இந்த ஸ்ட்ரெஸ்ஸெல்லாம் போகட்டும், நம் பிள்ளைகளாவது நிம்மதியாக இருக்கட்டும்…’ என்பது இந்தத் தலைமுறை பெற்றோர்களின் பொதுவான வெளிப்பாடாக உள்ளது. ஆனால், முதல் மதிப்பெண் வாங்குவதிலும், போட்டிகளில் முதலாவதாக வருவதிலும், மீடியா வெளிச்சம் பெறுவதிலும் மட்டும் தாங்களும் ஸ்ட்ரெஸ்ஸாகி குழந்தைகளையும் ஸ்ட்ரெஸ் ஆக்குகிறார்கள்.

பொதுவான குடும்ப விஷயங்களில் ஸ்ட்ரெஸ் ஆகும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? ‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, வீட்டு விஷயங்களில் நீ தலையிட வேண்டாம்… இதற்கெல்லாம் உன்னை ஸ்ட்ரெஸ் ஆக்கிக்கொள்ள வேண்டாம்…’. இந்த அறிவுரை எத்தனை ஆபத்தானது தெரியுமா? பின்னாளில் தான், தன் மனைவி / கணவன், தன் குழந்தைகள் என மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளும் அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோரைகூட கவனிக்க மனம் இல்லாமல் தள்ளிச் சென்றுவிடுகிறார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ‘ஸ்ட்ரெஸ்’தான் உயரிய மாற்றங்களுக்கும், பெரிய ஏற்றங்களுக்கும் வித்திடுகிறது. ஒருவர் செய்த உதவியை காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பதற்கும், செய்த சிறு தவறுக்கும் உளமார மன்னிப்பு கேட்பதற்கும் நமக்குள் உண்டாகும் ‘ஸ்ட்ரெஸ்’தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? இதுபோல தன்னளவில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் புதுமைகளும் புரட்சிகளும் வெடிப்பதற்கு ஸ்ட்ரெஸே காரணம்.

ஒரு விஷயத்தின்பால் நமக்குள் உண்டாகும் அதிருப்தியைக் கூட ஸ்ட்ரெஸ் எனலாம். உதாரணத்துக்கு, நம்மால் அடுத்தவர் மனம் புண்படுகிறதே என நினைத்து நம் செயல் மீது நமக்கே உண்டாகும் அதிருப்தியும் ஸ்ட்ரெஸ்ஸுமே நாம் பண்பாளராக உருவாக வழிவகை செய்கிறது. அதனால்தான் சொல்கிறேன், தனிநபர் சார்ந்தும், சமுதாய அளவிலும் நல்லவை நடக்க ஸ்ட்ரெஸ் அவசியம். ஸ்ட்ரெஸ்ஸே இல்லாமல் ‘டோண்ட் கேர் மாஸ்டராக’ இருந்தால் அந்த க்ஷணத்தை மகிழ்ச்சியாக கடக்கலாம். நீண்ட கால மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் கொஞ்சமாகவாவது ஸ்ட்ரெஸ் அவசியம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 29, 2022 | ஞாயிறு | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 7

அதீத பெருமிதமும் ஆபத்தே!

குழந்தைகளை ‘அவன் / அவள் ரொம்ப சாது…’, ‘ரொம்ப சமர்த்து, பேசவே மாட்டான்/ள்…’ என்று அடிக்கடி பிறர் முன்னிலையில் பெருமைப்படுவதாகவோ அல்லது பெருமைப்படுத்துவதாகவோ நினைத்து விமர்சிக்க வேண்டாம். இப்படி சொல்வதால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் உண்மையான குணத்தை பெற்றோர் முன் வெளிப்படுத்துவதில்லை.

நாம் நாலு பேரிடம் பேசினால் அப்பா அம்மாவுக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விடுமோ, பேசாமல் அமைதியாக இருப்பதுதான் சமர்த்துக் குழந்தைக்கு அழகோ என்றெல்லாம் தனக்கான விதிமுறையை தப்பும் தவறுமாக தானே வடிவமைத்துக்கொண்டு அவசியமாக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில்கூட பேசாமல் அமைதியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. மாறாக பெற்றோர் முன்னிலையில் சாது, பிற இடங்களில் தன் சுய குணத்துடன் வளரும் அபாயமும் உண்டாகும். அதாவது Dual Personality குழந்தைகள் அதிகரிக்க குழந்தைகள் பற்றிய பெற்றோர்களின் இதுபோன்ற பெருமிதங்களும் வெளிப்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம்.

‘என் பையன் / பெண் ஈ காக்காய்க்குக் கூட கெட்டது செய்ய மாட்டானே’ என்று வன்முறைகளில் ஈடுபட்டு மாட்டிக்கொண்ட பெற்றோர்கள் குழம்பிப் புலம்புவதும் இதே காரணத்தினால்தான். அவர்கள் புலம்புவதில் உண்மையும் இருக்கக் கூடும். காரணம், அவர்கள் முன் அவர்களின் பிள்ளைகளின் சொரூபம் அப்படி இருந்திருக்கலாம். இதைத்தான் Dual Personality என்கிறேன். முந்தைய காலத்து பெரியோர்களை கவனித்துப் பாருங்கள். ஓர் உண்மை புலப்படும். வேறு யாராவது தங்கள் குழந்தைகளை பாராட்டினால்கூட அதை ஒரு பொருட்டாக நினைத்து கொண்டாட மாட்டார்கள். சிரித்துக்கொண்டே கடந்து சென்று கொண்டிருப்பார்கள். அதீத பெருமிதமும் ஆபத்தே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 28, 2022 | சனி | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 6

தற்சார்புள்ள குழந்தைகள்!

உங்கள் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கூடுமானவரை தங்கள் தேவைகளை தாங்களே செய்யப் பழக்குங்கள். காலை எழுந்தவுடன் தன் படுக்கை போர்வை தலையணையை மடித்து வைப்பது, தான் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, துவைத்த தன் துணிமணிகளை தானே மடித்து வைத்துக்கொள்வது முடிந்தால் தானே இஸ்திரி செய்துகொள்வது, அவசரம் சமயத்துக்காவது சாதம் வைப்பது, இட்லி தோசை செய்வது, டீ காபி போடுவது என சமையல் அறை வேலைகளை தெரிந்து வைத்திருப்பது, தான் சாப்பிட்ட தட்டு டம்ளர்களை தானே தேய்த்து வைப்பது என தன்னளவில் தற்சார்புள்ள குழந்தைகளாக வளர்க்க முயற்சியுங்கள்.

நன்றாக படிப்பது, முதல் மதிப்பெண் வாங்குவது, போட்டிகளில் பரிசுகள் பெறுவது, எல்லோரையும்விட முதலாவதாக இருப்பது இவை எல்லாவற்றையும்விட பிறரைச் சார்ந்திராமல் சுயமாக இயங்குவதும், முடிந்தால் பிறருக்கு உதவும் இடத்தில் தங்களை வைத்துக்கொள்வதும்தான் எல்லா காலங்களிலும், எந்தவிதமான சூழலிலும் தலை நிமிர்ந்து சுதந்திரமானவர்களாக வாழ்வதற்கு வழிகாட்டும்.

நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து இலட்சங்களில் சம்பாதிப்பது என படிப்பும் பொருளாதாரமும் மட்டுமே சார்ந்ததல்ல Independant என்பது. பொருளாதாரம் தவிர்த்து தான் வளர்ந்த வீட்டுக்கும், தன்னை வளர்க்கும் இந்த சமுதாயத்துக்கும், இவ்வளவு ஏன் தனக்குமே தான் ஏதேனும் ஒருவகையில் பயனுள்ள வாழ்க்கையை வாழ முடிகின்ற குழந்தைகளே உண்மையில் So Independant. மாதத்தில் ஒரு நாளாவது தங்கள் குழந்தைகள் தயாரித்துக்கொடுக்கும் டீ, காபி, டிபன் சாப்பிடும் பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள், நீங்களும் Independant, உங்கள் குழந்தைகளும் Independant.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 27, 2022 | வெள்ளி | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 5

உங்கள் உணர்வுகளை பிள்ளைகளுக்குள் கடத்தாதீர்!

உங்கள் மனம் வருத்தமாகவோ, சோகமாகவோ அல்லது குழப்பமாகவோ இருக்கும்போது உங்கள் குழந்தைகளிடம் அறிவுரை என்ற பெயரில் எதையும் சொல்லாதீர்கள். அப்போது உங்கள் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் அந்த நேரத்து உணர்வுகளை சுமந்திருக்கும். நிச்சயம் நேர்மறையாக இருக்கப் போவதில்லை. எனவே, அந்த நேரத்தை கூடுமானவரை மவுனமாகக் கடந்து செல்லுங்கள்.

அதற்காக உம்மென்ற முகத்தை குழந்தைகளிடம் காட்ட வேண்டும் என சொல்லவில்லை. உங்கள் உணர்வுகளை குழந்தைகளுக்குள் கடத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். நிச்சயமாக அவை அவர்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும்.

‘இந்த உலகமே இப்படித்தான், ரொம்ப மோசம்…’, ‘இந்த மனிதர்களே இப்படித்தான் சுயநலவாதிகள்…’ என்றெல்லாம் உங்கள் அனுபவங்களை அவர்களுக்குள் இறக்க வேண்டாம். ‘உலகத்தில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்’ என்ற கோணத்தில்தான் உங்கள் அறிவுரைகள் இருக்க வேண்டும். அதைவிட்டு ‘யாரையும் நம்பாதே…’, ‘இந்த ஆண்களே இப்படித்தான்…’, ‘இந்த பெண்களே இப்படித்தான்…’ என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை சரியாக வழிநடத்தாது. மாறாக அவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக உருவாக்கும். கவனம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 26, 2022 | வியாழன் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 4

தம்பட்டம் அடிக்காதீர்!

உங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள், குறிக்கோள்கள் இவற்றை எல்லாம் வருவோர் போவேரிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். கனவுகளும் குறிக்கோள்களும் எந்த நேரத்திலும் மாறலாம் அல்லது எதிர்காலத்தில் எதிர்பார்த்தபடி அமையாமல் போகலாம்.

அவற்றைப் பற்றி நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோகூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்லும் மனப்பக்குவத்தில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் யார் யாரிடம் பெருமையாக சொல்லி இருந்தீர்களோ அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் மனதில் இருந்து அவை அழியவும் அழியாது.

அவர்கள் உங்களிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் சோக கீதம் பாடி ‘என்ன ஆயிற்றோ?’, ‘ஐயோ பாவம்… என்னமா கனவு கண்டான்/ள்’ என்பது போன்ற வேண்டாத கேள்விகளால் மனதை நிரப்பி பரிதாபப் பார்வைப் பார்த்து எக்குதப்பான கேள்விகளைக் கேட்டு மனதளவில் பாதிப்படையச் செய்வார்கள்.

எனவே, கனவோ கற்பனையோ குறிக்கோளோ எதுவாக இருந்தாலும் உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இயங்கும் தளத்தில் / களத்தில் அதற்கான பாதைகள் தானாகவே உருவாகும். அவை நிறைவேறும்போது தானாக வெளியுலகுக்குத் தெரியவரும். பிரமிக்க வைக்கும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 25, 2022 | புதன் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 3

சுயநலமும் நல்லதே! 

உங்கள் குழந்தைகள் மீது பாசமாக இருக்க வேண்டியது உங்கள் கடமையும் கூட. ஆனால் அதற்காக உங்கள் சின்ன சின்ன ஆசைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு ‘குழந்தைகளுக்காக…’ என்ற காரணத்தைச் சொல்லி உங்களை ஏமாற்றிக்கொண்டால் பின்னாளில் வருந்தப் போவது நீங்கள்தான். ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இப்போதெல்லாம் பிள்ளைகளை பெற்றோர் மட்டும் வளர்ப்பதில்லை. கல்விக்கூடங்கள், நண்பர்கள், சமுதயம், இணையம் என ஏராளமான காரணிகள் பிள்ளைகள் வளர்ப்பில் பங்கேற்கின்றன.

‘எப்படி எல்லாம் வளர்த்தேன், என் சின்ன சின்ன ஆசைகளைக் கூட பூட்டி வைத்துக்கொண்டு வளர்த்தேனே, இப்படி பேசுகிறானே/ளே… செய்கிறானே/ளே’ என்று மனது வெம்பி வெம்பி உருகாமல் இருக்க கால ஓட்டத்தில் உங்கள் சிறிய ஆசைகளையும் பூட்டி வைக்காமல் காலத்தோடு அனுபவியுங்கள். ‘அப்படி செய்தால் நம் எதிர்பார்ப்பின்படி நம் பிள்ளைகள் வளர்வார்களா’ என்று கேட்க வேண்டாம்.

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பின்படி வளர்கிறார்களோ இல்லையோ, நீங்கள் அதிகமான வலிகளை சுமக்க வேண்டி இருக்காது. எதார்த்தத்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை உங்கள் மனது பெறுவதற்கு எதற்காகவும் யாருக்காகவும் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம், நல்லதோ கெட்டதோ பிள்ளைகளோடு பிள்ளைகளாய் சேர்ந்து அனுபவியுங்கள், அனுபவிக்கக் கற்றுக்கொடுங்கள். அதுபோதும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 24, 2022 | செவ்வாய் | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 2

பாசத்தை சொல்லிக் காட்டாதீர்!

உங்கள் குழந்தைகள் மனதில் சிம்மாசனம் போட்டெல்லாம் அமர வேண்டாம், அவர்கள் மனதின் மூலையில் ஒரு இடம் இருந்தால் போதும் என்று ஏதோ அந்த அந்த ஆசை அல்ப ஆசை என நினைத்து பெருமைப்படுகிறீர்களா? அது அல்ப ஆசையோ அல்லது அற்ப ஆசையோ அல்ல. அதுதான் உலகத்திலேயே மிகப் பெரியக் கொடுப்பினை. அந்த கொடுப்பினை உங்களுக்கும் கிடைக்க ஒரே ஒரு வழி உள்ளது. அது என்ன தெரியுமா?

‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கிறேன், எவ்வளவு தியாகங்கள் செய்திருக்கிறேன்…’ என்ற ஆதங்கத்தை மட்டும் எந்தக் காலத்திலும் சொல்லிக் காட்டாதீர்கள். ஏனெனில், உலகில் எல்லா தாய் தந்தையும் தங்கள் குழந்தைகளை உயிரையும் கொடுத்துத்தான் வளர்க்கிறார்கள். மனிதன் மட்டுமல்ல, எல்லா ஜீவராசியும் அப்படியே. ஆனால் மனிதர்கள் மட்டுமே அதற்குக் கடமை என்றும், தியாகம் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்.

தியாகமோ கடமையோ எதையும் சொல்லிக்காட்டாதீர்கள். சொல்லிக் காட்டுவதால் பாசம் ஒன்றும் புரிந்துவிடப் போவதில்லை. எரிச்சல் மட்டுமே அதிகரிக்கும். கவனம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 22, 2022 | ஞாயிறு | காலை 6 மணி

நிம்மதியான பெற்றோராக வாழ! – 1

நம் காலத்துக்குப் பிறகும்!

முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்கள் காலத்துக்குப் பிறகும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்து அறிவுரைகள் சொல்வார்கள், அவர்களுக்குள் ஏதேனும் சண்டை சச்சரவு இருந்தால் தீர்த்து வைக்க முயல்வார்கள், அந்தக் குழந்தைகள் இளம்பருவத்தினராக இருந்தாலும் சரி, வளர்ந்து வேலைக்குச் சென்று திருமணம் ஆகி குழந்தைகள் பெற்றவர்களாக இருந்தாலும் சரி.

ஆனால் இன்று ‘பெற்றவர்களையாவது மதிக்கிறார்களே அது போதும்’ என்ற மனநிலை பெருகிவிட்டது.

இது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்துதான் சொல்கிறார்களா அல்லது மேம்போக்காக சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி சொல்பவர்கள் பெருகி வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 21, 2022 | சனிக்கிழமை | காலை 6 மணி

#Parenting, #compcareBhuvaneswari, #compcareKBhuvaneswari #காம்கேர்புவனேஸ்வரி, #காம்கேர்கேபுவனேஸ்வரி

(Visited 98 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon