2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு.
திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த 25 ஆண்டுகால தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கம் சாஃப்ட்வேர் தயாரித்தலில் இருந்தாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப அனிமேஷன் படைப்புகள், ஆவணப் படங்கள் தயாரித்தல், இ-புக்ஸ் உருவாக்குதல், ஆப்ஸ் தயாரித்தல் என பல்வேறு கிளைகளாக வலுபெற்று வளர்ந்து வந்தது.
இந்நிலையில், என் நிறுவனம் மூலம் நான் பெற்ற தொழில்நுட்ப அறிவை என்னுள் மட்டும் தேக்கி வைக்க விரும்பாமல், ஒரு நிர்வாகியாக மட்டும் இல்லாமல் படைப்பாளியாகவும் தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்கள் எழுதி வெளியிட ஆரம்பித்தேன்.
இந்த நெடிய பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆன பத்திரிகை, பதிப்பகம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் என அனைத்து மீடியாக்களும் என் திறமைக்கு மகுடம் சூட்டி என்னை இந்த சமுதாயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தும் விதத்தில் அவர்களையும் சிறப்பித்த மீடியாக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், என்னுடைய வெற்றிப் பயணத்தில் என்னுடன் பயணித்த நல்லுள்ளங்களை நினைவுகூறும் வகையிலும் நல்லோர்கள் சிலரை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி வந்தேன்.
இந்தத் தருணத்தில், திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி இரண்டும் Outstanding Alumni Member என்று என்னை கெளரவித்ததும், ஏ.வி.சி கல்லூரியில் என்னை Educational Consultant ஆக நியமித்ததும் என் மனதைவிட்டு அகலாத நிகழ்வுகள்.
மனித நேயம் தன் சுயத்தில் இருந்து உருமாறி தேவையும், எதிர்பார்ப்பும் சார்ந்த தொடர்புகள் அதிகரித்து வரும் இந்த இயந்திர காலகட்டத்தில், அன்றில் இருந்து இன்றுவரை அப்படியே மாறாமல் இருக்கும் மனிதர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும், நேர்மையாகவும், கொள்கைப்பிடிப்புடனும் வாழ முடியும் சாதிக்கவும் முடியும் என எடுத்துக் காட்டுவதற்காகவே அந்த ஃபேஸ்புக் பதிவுகள்.
அவற்றை படித்து லைக் செய்தும், கமெண்ட் செய்தும் வாழ்த்திய அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஃபேஸ்புக் பதிவில் படிக்க தவறியவர்கள் #காம்கேர்_25, #Compcare_25 என்ற ஹேஷ்டேக் மூலம் ஃபேஸ்புக்கில் படிக்கலாம்.
எங்கள் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பயணத் தொகுப்பை இந்த வெப்சைட்டில் (http://www.compcarebhuvaneswari.com/) ‘காம்கேர் 25’ என்ற மெனுவில் ஒன்றன்பின் ஒன்றாக படிக்கலாம்.
என்னுடன் பயணித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், காம்கேரில் எல்லோர் நலனுக்காகவும் நான் வரையறுத்திருந்த அத்தனை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை ஒத்துழைப்பு கொடுத்து என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் / பணியாற்றி வருபவர்களுக்கும் என் அன்பினை நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கிவிட முடியாதுதான்.
சிஸ்டம் சரியில்லை, சமுதாயம் சரியில்லை, மனிதர்கள் மாறிவிட்டார்கள் என புலம்புவதைவிட்டு மாற்றத்தைக் கொண்டு வர நான் எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் ஒத்துழைப்புக் கொடுத்து, நம்மைச் சுற்றிய உலகில் சிறிய அளவில் அசைவை ஏற்படுத்தி ஓரளவுக்காவது அதனுடைய பலனை கொண்டு வர உதவிய அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
காம்கேரில் என் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்த அனுபவத்தை புத்தகமாகக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். அந்த வகையில், நான் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்று 100-ஐத் தாண்டியுள்ளது.
புத்தகங்கள்தான் என் உழைப்பின் விசிட்டிங் கார்டாக அமைந்திருந்தது என்றே சொல்லலாம். தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் காம்கேரின் உழைப்பின் பலன் சென்றடைய உதவிய கோடானு கோடி வாசகர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
20-12-2017