ஏஐ துறையில் கோலோச்சும் காம்கேர் கே. புவனேஸ்வரி!

ஏஐ – ல் சுயசரிதை

சமீபத்தில் ‘சிறந்த ஏஐ ஆராய்ச்சியாளர்’ என்ற விருதைப் பெற்றுள்ள காம்கேர் கே. புவனேஸ்வரி, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற ஐ.டி நிறுவனத்தின் நிறுவனர் & தலைமைச் செயல் அதிகாரி, ஏஐ ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யு-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் என பன்முக சாதனையாளர். நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் ‘தொழில்நுட்பப் பெண் பொறியாளர் ’ என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

ஆன்மிகம், கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், இராணுவம், என்ஜினியரிங், விவசாயம், அக்கவுண்ட்டிங், சட்டம் என இவரது ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளின் எல்லைகள் பிரமாண்டமானவை. இவர் நுழையாத துறையே இல்லை. ஒவ்வொரு  துறைக்காகவும் சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முன்னர் அந்தத் துறையின் நீள அகலங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அதில் நுழைவதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளார். அதனால் பல துறைகளில் சாதனை செய்து கொண்டே இருக்கிறார்.

நம் நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவரது நிறுவன தயாரிப்புகளும், இவரது படைப்புகளும் வியாபித்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாக உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று அங்கு தம் நிறுவன தயாரிப்புகளை கொண்டு சேர்ப்பதுடன் அந்தந்த நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கூர்ந்து நோக்கி அவற்றை இன்னும் எப்படி மேம்படுத்தி பயன்படுத்தலாம் என சிந்தித்து நம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவி வருபவர்.

2025 –ல் முழுக்க முழுக்க ஏஐ-ல் இவர்  இயக்கி வெளியிட்டுள்ள இவர் தந்தையின் ஆட்டோபயோகிராஃபி படம் (‘விகே (எ) விக்டரி கிங்’) உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட Ai சுயசரிதை படம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

2024 ஜனவரி புத்தகக் காட்சியில், அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai- Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் உலக அதிசயமாக ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் முன்னர் ஒரு Ai அவதார் கண் முன் தோன்றி பேசுகின்ற சாதனையை புகுத்தியுள்ளார். இது உலக அளவில் பதிப்பக உலகின் முதல் முயற்சி.

அண்மையில் 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஏஐ குறித்து பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அது ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

2022 ஆம் ஆண்டு ஏஐ தொழில்நுட்பத்தில் திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்கள், 658 பாடல்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு, கொரோனா காலகட்டம். மாணவ மாணவிகள் முழுமையாக டிஜிட்டல் யுகத்துக்கு மாற வேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில், இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக ‘அறம் வளர்ப்போம்’ என்ற அறநூலை எழுதினார். அதை ஏஐ தொழில்நுட்பத்திலும் வெளியிட்டார். ஆத்திச்சூடி ஒரு வரியிலும், திருக்குறள் இரண்டு வரிகளிலும், நாலடியார் நான்கு வரிகளிலும் அறத்தை சொல்வதைப் போல் காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய ‘அறம் வளர்போம்’ மூன்று வரிகளில் அறத்தை விளக்குகிறது.

மற்ற அறநூல்கள் அச்சு வடிவில் மட்டுமே இருப்பதால் அவற்றை மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கும். ‘அறம் வளர்ப்போம்’ என்ற அறநூல் ஏஐ-ல் தயாராகி இருப்பதால் அவற்றை கற்கும் பள்ளி மாணவ மாணவிகளும் ‘அறம் வளர்ப்போம்’ படைப்பில் பங்கேற்று அவர்களும் அறத்தை கதை, கவிதை என அவரவர்கள் திறமைக்கு ஏற்ப வெளிப்படுத்தலாம். அதாவது கற்கும்போதே அவர்களும் படைப்பாளி ஆகலாம். அந்த வகையில் இந்த ஏஐ படைப்பும் உலக அளவில் முதல் முயற்சி.

Ai –யில் தொடர்ச்சியாக சாதனைகள் புரிந்து வரும் காம்கேர் கே. புவனேஸ்வரி  தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஏஐ-ல் ஆர்வம் எப்படி உண்டானது?

இன்று நேற்றல்ல, நான் நிறுவனம் தொடங்கிய 1992 களில் இருந்தே Ai ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன்.

1996 -லேயே சாதாரண டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டெஸ்க்டாப்பிலேயே C மொழியில் புரோகிராம் எழுதி ஒரு யானை நடந்து  வருவதைப் போல் அனிமேஷனில் ஸ்கிரீன் சேவர் தயாரித்தோம். ஒவ்வொரு முறை சிஸ்டத்தை ஆன் செய்யும்போதும் அதே யானை வெவ்வேறு விதமாக நடந்துவருவதைப் போல் அமைத்தோம்.

2000-களில் அனிமேஷன்களுக்கான சாஃப்ட்வேர்கள் வந்த பிறகு கார்ட்டூன்களை உருவாக்கி பின்னணி குரல் கொடுத்து அவற்றை பேச வைத்தோம். அதுவும் பல மொழிகளில்! எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அந்த மொழியில் அந்த அனிமேஷன் இயங்கும். அப்படி உருவானதுதான் அனிமேஷனில் இராமாயணமும், கந்தர் சஷ்டிக் கவசமும், குழந்தைப் பாடல்களும், திருக்குறளும், திருவாசகமும்.  பொதுவாக அனிமேஷன் வீடியோ என்றால் அதை கிளிக் செய்தால் அது இயங்கும். ஆனால் நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா? அனிமேஷனில் கதாபாத்திரங்களை பார்வையாளர்களே தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளும் வகையில் தயாரித்தோம். இவற்றை எல்லாம் இன்று  Ai  மூலம் தயாரித்து அவற்றை செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.

இதற்கெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அடித்தளம் போட்டவர்கள் நாங்கள்.  படம் / ஓவியம் / கார்ட்டூன் வரைந்து அது என்ன பேச வேண்டும் என்பதை இன்புட்டாகக் கொடுத்து அது எப்படி அசைய வேண்டும் என்பதையும் புரோகிராமாக எழுதி சொல்லிக் கொடுத்து அனிமேஷன் செய்து வந்தோம். இதுவும் ஒருவகையில் Ai-தான்.

2002 -லேயே நம் குரலை குளோன் செய்து நாம் எழுதிய புத்தகங்களை, படித்து ரெகார்டிங் செய்யாமல் நம் குரலிலேயே தானாகவே ரெகார்ட் ஆகும் நுட்பங்களை எல்லாம் கண்டுபிடித்து இந்த சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தினோம்.

2005 -ல் கூகுள் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே திருவாசகம் ஆன்மிக படைப்பை Search வசதிகளை எல்லாம் பொருத்தி கண் பார்வைத் திறன் அற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டோம்.

2008 -ல் பார்வையற்றவர்கள் ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், அவர்கள் தாங்களே வாயால் சொல்ல சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளிப்படுமாறு சாஃப்ட்வேர்கள் எல்லாம் தாயாரித்து வெளியிட்டுள்ளோம். இவை அனைத்துமே Ai தொழில்நுட்பமே. ஆனால் என்ன அப்போது Ai என்ற பெயர் கிடையாது. பொதுவாக எல்லாவற்றுக்குமே சாஃப்ட்வேர் என்ற பெயர்தான்.

ஏஐ என்பது ஒரு சிறப்பு சாஃப்ட்வேர். சாதாரண சாஃப்ட்வேர்கள் நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே செய்யும், ஏஐ என்ற சிறப்பு சாஃப்ட்வேர் நாம் இடும் கட்டளையை மேம்படுத்தியும், அதில் இருந்து தானாகவே கற்றுக் கொண்டும், நமக்குத் தேவையானதை துல்லியமாக செயல்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

தொடர்ச்சியாக இன்றும் Ai குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிகளை செய்து Ai நுணுக்கங்களை உருவாக்கி வருகிறோம்.

ஆக Ai-கான ஆராய்ச்சிகள் என்பது உலகம் முழுவதும் எங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்ததுதான்.

ஒன்றில் இருந்து இன்னொன்று, அதில் இருந்து மற்றொன்று என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி Ai இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கக் காத்திருக்கிறது.

ஏஐ ஹிட்லர் காலத்திலேயே அறிமுகம் ஆகிவிட்டது என சொல்கிறார்களே? அது உண்மையா? 

இரண்டாம் உலகப் போரில் அடால்ஃப் ஹிட்லர், உலகம் முழுவதும் உள்ள தனது போர் ஆயுதங்களை தன் இருப்பிடத்தில் இருந்தே இயக்கி போர் செய்ததாகவும், எந்த இடத்தில் உள்ள ஆயுதம் எப்போது வெடித்துச் சிதறும் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது என்றும், அந்த காலகட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவுக்கான ஆதாரப் புள்ளி ஆரம்பமாகிவிட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன. அவர் பயன்படுத்திய நுட்பத்துக்கு அன்று Ai என்ற பெயர் கிடையாது. அது ஒரு நுட்பம். அவ்வளவு தான்.

ஹிட்லர் பயன்படுத்திய ‘எனிக்மா’ என்பது செய்திகளை மறைத்து அனுப்ப பயன்பட்ட ஒரு இரகசிய குறியீட்டு இயந்திரம். அந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படுத்தப்பட்ட நுட்பம் எதிர்காலத்தில் Ai முழுமையாக கண்டுபிடிக்கப்பட உதவியது எனலாம்.

பொதுவாகவே ஒரு இயந்திரத்துக்குள் மனிதனின் இயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதனுள் தகவல்களையோ அல்லது இரகசிய குறியீடுகளையோ அனுப்பி அதை இயக்க வைக்க முடியும் என்றால் அப்போதே செயற்கை நுண்ணறிவுக்கான தொடக்கப் புள்ளி போட்டாயிற்று என்றே சொல்ல வேண்டும். அந்த இயந்திரம் கம்ப்யூட்டராகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஹிட்லர் பயன்படுத்திய ‘எனிக்மா’போன்ற இயந்திரமாகவும் இருக்கலாம். அதனால்தான் நான் சொல்கிறேன், ஹிட்லர் பயன்படுத்தியதே செயற்கை நுண்ணறிவு நுட்பம்தான் என்று.

ஹிட்லரின் ‘எனிக்மா’என்ற இயந்திரத்தை முறியடிக்க, 1941 -ஆம் ஆண்டு ஒரு சிறு புள்ளியில் ஆரம்பமான செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகள் 1950-ல் ஒரு வடிவம் பெற்று பெருநம்பிக்கையை அளித்த ஏஐ தொழில்நுட்பம், நடைமுறையில் பயன்பாட்டிற்கு வருவதற்கு நீண்ட நெடும்காலமாகிவிட்டது. அதற்கு, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருந்தன.

சொந்தமாக நிறுவனம் தொடங்கும் ஆர்வம் எப்படி உண்டானது?

நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முழுமையாக அடிஎடுத்து வைப்பதற்கு முன்பே, அந்தத் துறையில் இரட்டைப் பட்டம் பெற்றேன். பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியிலும், எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியிலும் படித்தேன். பிறகு பிசினஸ் செய்யும்போது எம்.பி.ஏ பட்டம்.

1992-ஆம் ஆண்டு எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றார்கள்.

ஆனாலும் அந்த வாய்ப்புகளை எல்லாம் உதறிவிட்டு நம் நாட்டிலேயே சுயமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் உலகம் முழுவதும் உலா வர வேண்டும் என்ற கனவுடனும் அதற்காக உழைக்கத் தொடங்கினேன். ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் ஐடி நிறுவனத்தை என் தாய் தந்தையின்  பேராதரவுடன் ஆரம்பித்தேன்.

என் பலம் கிரியேட்டிவிடி. சிறு வயதில் இருந்தே என் பெயரில் தயாரிப்புகள் வர வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. நான் கல்லூரி முடிப்பதற்குள்ளேயே 100-க்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி, முன்னணி பத்திரிகைகளில் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளன.

என் கிரியேட்டிதான், நான் நிறுவனம் தொடங்க பிராதன காரணம் என்றால் மிகையில்லை.

உங்கள் குடும்பப் பின்னணி?

என் அப்பா வி. கிருஷ்ணமூர்த்தி, அம்மா கே. பத்மாவதி. இருவருமே தொலைபேசி துறையில் (பி.எஸ்.என்.எல்) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இருவருக்கும் பணி இட மாற்றல் காரணமாக ஏராளமான ஊர்களில் வசிக்கும் சூழல்.

நான் பிறந்தது கும்பகோணம். அப்பாவின் சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள முளப்பாக்கம். அம்மாவுக்கு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டி.

எனக்கு ஒரு தங்கை (ஸ்ரீவித்யா), ஒரு தம்பி (சுவாமிநாதன்). இருவரும் சாஃப்ட்வேர் துறையில் உயர்பதவியில் உள்ளனர்.

ஏராளமான ஊர்கள், வெவ்வேறு பழக்க வழக்கங்களை பின்பற்றும் மனிதர்கள் என எங்கள் வாழ்க்கை அமைந்ததால், எங்கள் மூவருக்குள்ளும் இருந்த கிரியேட்டிவிடி தானாகவே கொழுந்துவிட்டு எரிந்தது. எழுத்து, ஓவியம், கார்ட்டூன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை.

நேர்மையினாலும், திறமையினால், உழைப்பினாலும் கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே நிரந்தரம் என வாயால் சொல்லி பாடம் புகட்டாமல், என் பெற்றோர் வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் வாழ்க்கையில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம்.

உங்கள் ஐடி நிறுவனம் மற்ற ஐடி நிறுவனங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது?

இறையருளால், 33 ஆண்டுகள் தொய்வில்லாமல் எங்கள் நிறுவனத்தை தலைமை தாங்கி வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறேன்.

நான் கண்ட கனவு நனவாகி பல வருடங்கள் ஆகின்றன. உழைப்பினாலும், திறமையினாலும் தான் கற்ற கல்வியை முதலீடாகப் போட்டு உருவாக்கிய எங்கள் நிறுவனத்துக்கு என் பெயரான ‘காம்கேர் கே. புவனேஸ்வரி’என்பதே அடையாளம், விளம்பரம் எல்லாமே.

மற்ற ஐடி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ப்ராஜெக்ட்டுகளை எடுத்து செய்து கொடுக்கிறார்கள். ஆனால், எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தயாராகும் ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் நம் நாட்டு மக்களுக்காக தயாரிக்கப்படுபவை. அவற்றை உலக அளவில் கொண்டு சேர்க்கிறேன். அதுதான் மற்ற நிறுவனங்களில் இருந்து எங்கள் நிறுவனம் வித்தியாசப்படுகிறது.

மற்ற நிறுவனங்கள் மேலைநாடுகள் தயாரித்த சாஃப்ட்வேர்களை பயன்படுத்துபவர்கள் என்றால், நானும், எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’நிறுவனமும், தொழில்நுட்பத்துக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை கண்டுபிடித்து உருவாக்கி வடிவமைத்துக் கொடுப்பவர்கள். அவற்றை உலக அளவில் கொண்டு செல்கிறோம்.

நாங்கள்  தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகள் ஏராளம். ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளையும் (குறிப்பாக தமிழையும்) கம்ப்யூட்டரையும் இணைத்த முதன்மையானவர்களுள் நானும், எங்கள் நிறுவனமும் ஒன்று. அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளேன்.

இப்படியாக தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் நான் முனைந்த  முயற்சிகளில் பல  ‘முதன் முதல்’முயற்சிகள். முன் உதாரணங்கள். ரோல் மாடல் ப்ராஜெக்ட்டுகள்.

  1. தமிழில் கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியவர். (1994)
  2. அனிமேஷன் சிடிக்களை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து அறிமுகப்படுத்தியவர். (1999)
  3. கூகுள் அறிமுகம் ஆகி நம் நாட்டில் பிரபலம் ஆகத் தொடங்கும் முன்பே தனி கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களிலும் அனிமேஷன்களிலும்  ‘பல்கோணத்தில் தேடும் வசதியை’ (Search) பொருத்தியவர்.  (1999)
  4. முதன் முதலில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பொறியாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்து Work From Home திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். (1996)
  5. இன்டர்நெட் அறிமுகமான தொடக்க காலத்திலேயே தனிநபர்களுக்கும் ஒருபக்க வெப்பேஜ் தயாரித்துக்கொடுத்தவர். (1998)
  6. யு-டியூபெல்லாம் அறிமுகம் ஆகாத நாட்களிலேயே ஆடியோ (ABT), வீடியோ (VBT) படைப்புகளை அறிமுகம் செய்து விற்பனைக்கும் வைத்தவர்.
  7. கம்ப்யூட்டர் அறிமுகம் ஆகி பிரபலம் ஆகும் முன்னரே Computer Based Tutorial (CBT), இன்டர்நெட் அறிமுகம் ஆகி பிரபலம் ஆவதற்கு முன்பே Web Based Tutorial (WBT) போன்றவற்றை தயாரித்து அதிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
  8. அழகான தமிழில் மிக அதிகமாக கல்வி சம்மந்தப்பட்ட கம்ப்யூட்டர்  மற்றும் தொழில்நுட்பப் புத்தகங்களை எழுதிய ஒரே தொழில்நுட்ப வல்லுநர்.
  9. பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை கதை எழுத வைத்து அவற்றை அச்சு புத்தகமாக பதிப்பித்து வெளியிட்டவர். (2008)
  10. முதன் முதலில் இவர் எழுதிய கல்வி சார்ந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் புத்தகங்கள்தான் பல்கலைக்கழகங்களில் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டமாகின.
  11. 250 புத்தகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார், அதில் 200 புத்தகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தது. பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக வைக்கும் அளவுக்கு ஆராய்ச்சி புத்தகம்போல எழுதுவதில் கைதேர்ந்தவர். இவர் எழுதும் தொழில்நுட்பப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வழிகாட்டி இல்லாமலே தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவும் அளவுக்கு ஏராளமான விளக்கப்படங்களுடன் அமைந்திருக்கும். அதனால் இவர் எழுதியுள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியருக்கு சமம்.
  12. இவரது முதல் இரண்டு புத்தகங்களான ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர்’, ‘இவ்வளவுதான் இன்டர்நெட்’ என்ற இரண்டு நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இவர் வயது அப்போதில் இருந்து வருடா வருடம் ஏதேனும் ஒரு புத்தகம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டமாகிவிடுவது வழக்கமாக உள்ளது.
  13. தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், ஏன் உலகளாவிய முறையில் இவரது காம்கேரின் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகள் வியாபார நோக்கில் சென்றடைந்ததுடன் மட்டுமில்லாமல் கல்விக்கூடங்களிலும், மற்ற சாஃப்ட்வேர் நிறுவனங்களிலும் ஆய்வுக் குறிப்பேடுகளாக வீற்றிருக்கின்றன.

நீங்கள் 250 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளீர்கள்? எப்படி சாத்தியமானது?

நான் ஏற்கெனவே சொன்னதைப் போல், என் பலம் கிரியேட்டிவிட்டி. என் 12 வயதில் சிறுவர்களுக்கான கோகுலம் மாத இதழில் என் முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’ வெளியானது. இன்று வரை ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தாரக மந்திரத்தையே என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன்.

நான் படித்தது தொழில்நுட்பம் என்றாலும், அந்த தொழில்நுட்பத்தை எங்கள் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஏஐ படைப்புகளில் புகுத்தி லாஜிக்கலாக இயங்கும் தொழில்நுட்பத்துறையையும் அழகான நந்தவனமாக வளர்த்தெடுத்தேன்.

நிறுவனம் தொடங்கிய 1992 முதல், இப்போது 2026 வரை எங்கள் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை எல்லாம் அந்தந்த காலகட்டதிலேயே நூல்களாகவும், ஆடியோ வீடியோ படைப்புகளாகவும், கருத்தரங்குகள் வாயிலாக நேரடியாகவும் இந்த சமுதாயத்துக்குக் கொண்டு செல்வதால் எனது நூல்களை ‘சமுதாயத்தின் தொழில்நுட்ப டைரி’ என சொல்லலாம்.

ஏஐ-ல் உலகத்திலேயே முதல் முதலாக ஆட்டோபயோகிராஃபி படத்தை இயக்கி உள்ளீர்களே? அந்த எண்ணம் எப்படி உண்டானது?

ஏஐ ஆராய்ச்சிகளை நாங்கள் 1992 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கி, ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான படைப்புகளை தயாரித்துள்ளதால், இன்று பரபரப்பாக மக்களால் பேசப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு அழகிய படைப்பை உருவாக்கி, ஏஐ-ன் முழு ஆற்றலையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், அதற்கு நானே முன் உதாரணமாக இருக்க நினைத்தேன். இதுவே ஏஐ-யில் அப்பாவின் ஆட்டோபயோகிராஃபியை இயக்க நினைத்ததன் முதல் காரணம்.

தொலைபேசி துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பெற்றோர் விரைவில் சதாபிஷேகம் (80) கொண்டாட இருக்கிறார்கள். அவர்களுக்கு நானும் என் உடன்பிறந்தோரும், என் பெற்றோரின் ஆட்டோபயோகிராஃபி படத்தை பரிசாகக் கொடுக்க நினைத்தோம். இதுவே இரண்டாவது காரணம்.

‘விகே (எ) விக்டரி கிங்’ – ஆட்டோபயோகிராஃபி படத்தின் பெயர் காரணம்?

என் அப்பாவின் பெயர் ‘வி. கிருஷ்ணமூர்த்தி’. சுருக்கமாக ‘விகே’. சிறுவயதில் என் அப்பா ‘விகே’ என்பதன் விரிவாக்கமாக ‘விக்டரி கிங்’ என புனைப்பெயர் வைத்துக் கொண்டார். இன்றும் ‘விக்டரி கிங்கின் சிந்தனைத் துளி’ என்ற தலைப்பில் தினமும் வாட்ஸ் அப்பில் வாழ்வியல் ஸ்டேட்டஸ் எழுதி வருகிறார். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இவரது வாழ்வியல் பதிவுகள் பிரபலம். அதனால் ‘விகே (எ) விக்டரி கிங்’ என்பதையே தலைப்பாக வைத்தேன்.

அப்பாவுக்கு மட்டும் ஏன் சுயசரிதைப் படம் எடுத்துள்ளீர்கள்?

யார் சொன்னது அப்பாவுக்கு மட்டும் சுயசரிதைப் படம் எடுத்துள்ளேன் என்று? அப்பாவுக்கு Ai தொழில்நுட்பத்தில் சுயசரிதைப்படம் எடுத்துள்ளேன் என்பது மட்டும்தான் புதிது. மற்றபடி, என் அம்மா பத்மாவதிக்கு, கொரோனா காலகட்டத்தில்  நேரடியாக ஷீட்டிங் செய்தே சுயசரிதைப் படம் எடுத்துள்ளேன்.

அது மட்டும் இல்லாமல், 2007 ஆம் ஆண்டு ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற பயோகிராஃபியை, என் பெற்றோருக்கும் தங்களுக்குமான பிணைப்பை 1-1/2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக ஷீட்டிங் எடுத்து இயக்கி உள்ளேன். அதையே புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘குடும்பப் புத்தகம்’ இருக்க வேண்டும் என்பேன். நம் மூதாதையர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் அல்லவா? அதுதானே நம் அடுத்தத் தலைமுறைக்கு நாம் கொடுக்கும் ஆகச் சிறந்த பரிசு.

ஆட்டோபயோகிராஃபி படம் எத்தனை மணி நேரம் ஓடக் கூடியது? எவ்வளவு நாட்கள் ஆகின?

மூன்று சீசன்கள், ஒவ்வொரு சீசனிலும் 7 எபிசோடுகள், ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடங்கள். ஆக மொத்தம் 21 எபிசோடுகள், 7 மணி நேரம் ஓடக் கூடியது. ஏஐ-ல் உருவான இத்தனை பெரிய முழு நீள ஆட்டோபயோகிராஃபி படம் இதுவாகத்தான் இருக்கும்.

இதனை முழுமையாக முடிக்க 1-1/2 வருடங்கள் ஆகின.

தொழில்முனைவோராக நீங்கள் சாதித்தது என்ன? சந்தித்த தடைகள் என்ன?

செய்கின்ற செயல்களில் நேர்மை இருக்கும்பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் தானாகவே மக்களை சென்றடைகின்றன. என் கல்வி, திறமை, நேர்மை, உழைப்பு இவற்றால் நான் தொட்ட உச்சங்கள் ஏராளம். கிடைத்த அங்கீகாரங்களும், விருதுகளும் என் செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன. மனநிறைவு அதைவிட ஏராளம். என்னைப் போலவே ஆண்கள், பெண்கள் என பலரை சுயமாக தொழில் செய்ய ஊக்குவித்திருக்கிறேன். அதுவே பெரும் சாதனை எனலாம்.

பல்கலைக்கழகங்கள் கொண்டாடும் தொழில்நுட்ப வல்லுநராகவும், இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், வெளிநாட்டினராலும் கொண்டாடப்படும் படைப்பாளியாகவும் உருவாகி இருப்பதே சாதனை தானே.

தடைகள் என்பதையும் குறிப்பிட்டு தனியாக சொல்ல முடியாது. வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கங்களுடன் கூடியதுதானே? நான் இயங்கிக் கொண்டிருக்கும் போது எதிர்படும் நல்லவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதைப் போல, இன்னல்களையும் எப்படி களை எடுக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பேன். அது எனக்கு இயல்பான ஒரு திறமையாகி விட்டது.

என் பெற்றோர் இருவரும் 24 மணிநேர பணி சுழற்சியில் இருந்ததால் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எப்படி சுயசார்புடன் வாழ்வது, தன்னம்பிக்கையுடன் எப்படி செயல்படுவது என்பதை எல்லாம் வாழ்க்கைப் பாடமாக வாழ்ந்து காட்டி கற்றுக் கொடுத்திருப்பதால் ஒரு நிறுவனம் நடத்துவதோ, பிசினஸ் செய்வதோ கடினமாக இல்லை.

அதனால்தான், தொழில்நுட்ப நூல்களுக்கு இடையே தன்னம்பிக்கை நூல்களையும், வாழ்வியல் நூல்களையும் எழுதுவது சாத்தியமாகிறது.

பெற்றோர் பெயரில் அறக்கட்டளை!

எனக்கு இந்த சமுதாயத்தின் மூலம் கிடைத்த நல்லவற்றை அந்தந்த காலகட்டத்திலேயே இந்த சமுதாயத்துக்கு திரும்ப செய்து வந்தாலும் 2007 ஆம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறேன். குறிப்பாக பார்வைத்திறன் அற்றவர்கள் தாங்களே வாயால் சொல்லி, கம்ப்யூட்டர் மூலம் தேர்வெழுத ‘விசியோ எக்ஸாம்’ என்ற சாஃப்ட்வேர் தயாரித்தோம். அது மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

ஏஐ சலிப்பை ஏற்படுத்துவதாக தோன்றுகிறதே!

மேலோட்டமாக பார்த்தால் ஏஐ மூலம் ஒரு விஷயத்தை உருவாக்குவது சுலபம் போல் தோன்றலாம். பொழுதுபோக்கிற்காக ஏஐ-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் படமோ, வீடியோவோ அந்த நேரத்துக்கு அற்புதமாக தோன்றலாம். ஆனால் குறிப்பாக ஒரு பணிக்காக அமரும்போது, நாம் திறமைசாலியாக இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும் விஷயம் அற்புதமான காட்சியாக கிடைக்கும்.

சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் படங்களும்  வீடியோக்களும் மட்டுமே கண்களில்படுவதால் உண்டாகும் சலிப்புதான் இது.

படங்கள், ஆடியோ, வீடியோவைத்தாண்டிய உலகம் இருக்கிறதல்லவா? உதாரணத்துக்கு விவசாயத்தில் ஏஐ செயல்படும் விதம் ஆச்சர்யத்தை உண்டாக்கும். கிராமத்தில் இருக்கும் தன் விவசாய நிலத்துக்கு நீர்பாய்ச்ச சென்னை போன்ற மாநகரத்தில் அமர்ந்து கொண்டு போனில் உள்ள ஆப்பை வைத்து மோட்டரை ஆன் ஆஃப் செய்ய முடியும். என் உறவினர் ஒருவர் இப்படித்தான் விவசாயம் செய்கிறார். மாதம் ஒருமுறையோ, இரு மாதங்களுக்கு ஒரு முறையோ ஊருக்குச் சென்று நேரடியாக பார்வையிடுகிறார். நீர்பாய்ச்சுவது மட்டுமல்ல, உரம் இடுவது. விலங்கினங்களினாலும், பறவைகளினாலும் பயிருக்கு ஆபத்து வராமல் காப்பாற்றுவது என அத்தனையும் ஏஐ மூலமே செய்து வரும் பலரை நான் அறிவேன்.

அதுபோல மருத்துவத்துறையில் ஏஐ அசத்தி வருகிறது. ஆபரேஷன் இல்லாமல், துளையிடாமல், துல்லியமாக நோய்களை கண்டறிந்து தீர்வையும் கொடுக்கிறது.

இதுபோல இராணுவம், இயந்திரத்துறை, ஓட்டல் நிர்வாகத்தில் என ஏஐ அசத்தி வருகிறது.

வெளிப்படையாக தெரியும் ஏஐ அசத்தல்கள் சலிப்பாக இருக்கலாம், கண்களுக்குத் தெரியாமல் பின்னணியில் அசத்தி வரும் ஏஐ சவால்கள் பிரமாண்டமானவை. இனி வரும் உலகை ஆளப் போவதும் அதுவே.

ஏஐ வேலைவாய்ப்புகளை குறைத்துவிடுமா?

நிச்சயம் இல்லை. கம்ப்யூட்டர்கள் நம் நாட்டில் அறிமுகம் ஆனபோது அது வேலை வாய்ப்புகளை குறைத்துவிடும் என பயந்தார்கள். ஆனால் அப்படி ஆனதா என்ன? கம்ப்யூட்டர்கள் வந்த பிறகுதானே சாஃப்ட்வேர் துறை செழித்து ஓங்கி வளர்ந்தது. மேலைநாடுகளுக்கு நம் நாட்டு இளைஞர்கள் பெருவாரியாக செல்ல முடிந்தது. நாட்டின் பொருளாதாரமும், வீடுகளின் பொருளாதாரமும் உயர சாஃப்ட்வேர் துறைதானே உதவின. நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் ஒழிய சாஃப்ட்வேர் துறை மிக முக்கியக் காரணம்.

அதுபோல ஏஐ வருகையால் வேலை வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும் என பயப்படுகிறார்கள். நிச்சயம் குறையாது. இப்போது பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும். மற்ற பணிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். இதனால் நாம் செய்துகொண்டிருக்கும் பணிகள்தான் சுலபமாகுமே தவிர, வேலை வாய்ப்புகள் குறையாது. நிச்சயமாக ஏஐயின் வருகை வேறு மாதிரியான புது வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

நேற்று வரை AI ஒரு அதிசயம்; இன்று அது நம் வாழ்வின் அவசியம். புரிந்து கொள்வோமே!

—***—-

(Visited 27,865 times, 6 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon