ஸ்ரீபத்மகிருஷ் 2007 – அறக்கட்டளை தொடக்கம்

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. என் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில்  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரை உருவாக்கினோம்.

பத்மாவதி-கிருஷ்ணமூர்த்தி இருவரின் பெயரின் சுருக்கமே ஸ்ரீபத்மகிருஷ். PADMAVATHY-KRISHNAMURTHY = SRI PATHMAKRISH

காம்கேர் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே மாற்றுத்திறனாளிகள் பலர் என்னிடம் ஏதேனும் ஒரு உதவி கேட்டு வந்துகொண்டே இருந்தனர். மேலும் சிறுவயதில் இருந்தே அவ்வப்பொழுது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. என் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம். அதன் உச்சமாக பார்வையற்றோர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியுள்ளோம்.

பெருமைமிகு பெற்றோர் தினம் 

 

 

இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றோர் தினம்- Ideal Parents Day’  என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம். இந்த விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

 

சிறப்பு விருந்தினர்கள்

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக

திருமதி ஜெயஸ்ரீ ரவீந்திரன், Executive Director, Ability Foundation,
திரு R . ஜெயச்சந்திரன் Reader, Dept. of Tamil, Presidency College,
திரு H. ராமகிருஷ்ணன் Televion Journalist

ஆகியோர்கள் வந்திருந்து வாழ்த்துரைத் தந்து விழாவை சிறப்பித்தார்கள்.  இவர்கள் மூவருமே ஒவ்வொரு விதத்தில் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1. டாக்டர் சரஸ்வதி ராமநாதன் 2. திரு. H. ராமகிருஷ்ணன் 3. திருமதி. ஜெயஸ்ரீ ரவீந்திரன் 4. திரு R . ஜெயச்சந்திரன்

Speech by Dr.Saraswathi Ramanathan: https://youtu.be/sqLpJ6hUbZg
Speech by Mr. H.Ramakrishnan: https://youtu.be/UZMP9Fj_SIY
Speech by Ms.Jayshree Ravindran & Dr. R. Jayachandran: https://youtu.be/cccNUylqG6g

சிறப்பு விருந்தினர்களின் சிறப்பு குறித்து

திருமிகு. H. ராமகிருஷ்ணன்: இரண்டு வயதில் இரண்டு கால்களும் போலியோவினால் பாதிக்கப்பட்டதால் நடக்க இயலாத இவர் தன்னம்பிக்கை இழக்காமல் சாதனை வீரராக வாழ்ந்து காட்டி வருகிறார். ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் கேரியரைத் தொடங்கிய இவர் 40 ஆண்டுகாலம் மீடியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

இசையிலும், இசை வாத்தியங்களை வாசிப்பதிலும் புலமை பெற்றவர். கே. பாலசந்தரின் வானமே எல்லை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தான் நடத்தி வரும் KRUPA என்ற அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.

டாக்டர் R. ஜெயசந்திரன்:  இரு கண்களும் முழுமையாகப் பார்வையிழந்த இவரது அறிமுகம், 2001-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு மல்டிமீடியா ஒர்க்‌ஷாப்பில் நான் சிறப்புரை ஆற்றியபோது கிடைத்தது.

அப்போது சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்த இவர் தற்போது தமிழ் துறைத்தலைவராக உள்ளார். பார்வையிழந்தவர்களுக்கான ஒரு நிகழ்ச்சிக்கு என்னை தலைமை தாங்க அழைத்திருந்தார்.   தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பி.ஹெச்.டி பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு, அவர்களுக்கு பயன்படுகின்ற திரையைப் படிக்கும் ‘ஜாஸ்’ மற்றும் ‘என்.வி.டி.ஏ’ சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த கற்றுக்கொடுத்தேன்.

இவருக்கு  இரு கண்களாய்  இருப்பது  கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும்தான். ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் வெகு அநாயசமாக கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட்போனையும் பயன்படுத்தும் இவரை பார்க்கும்போது நம் அனைவருக்குமே தன்னம்பிக்கை தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும்.

வருடா வருடம் இவர் பிறந்தநாளை ஒட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கம்ப்யூட்டர்  இன்டர்நெட் தொழில்நுட்பத்துடன் இணைந்த கருத்தரங்குகளை ஒரு வார காலம் நடத்துவதோடு அனைவருக்கும் மதிய உணவிட்டு சிறப்பிப்பார்.

திருமிகு ஜெயஸ்ரீ ரவீந்தர்: நாம் பேசுவதை உதட்டின் அசைவு மூலம் மிகச் சரியாக புரிந்துகொண்டு பதில் கொடுக்கும் அசாத்திய வல்லமை பெற்ற தன்னம்பிக்கைப் பெண்மணியான இவருக்கு இரண்டு காதுகளும் கேட்காது.

மாற்றுத் திறனாளிகளுக்காக Ability Foundation என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தமிழில் வெளிவந்த ‘மொழி’ படத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ‘Sign Language’ – க்கு இவர் உதவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சரஸ்வதி இராமநாதன்: தமிழ் ஆசிரியராகவும் தமிழில் புத்தகங்கள் எழுதியதோடு தலைசிறந்த மேடைப் பேச்சாளராகவும் ஆன்மிக சொற்பொழிவாளராகவும் விளங்கி முத்தமிழ் பேரரசி என்ற பட்டத்தைப் பெற்றுள்ள இவர் தமிழுக்காகவே மதிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களால் வரவேற்கப்பட்டு உலகம் சுற்றி தமிழ் வளர்த்தவர்.

எங்கள் காம்கேரின் ஆகச்சிறந்த அனிமேஷன் படைப்பான ‘குழந்தைகளுக்கான இராமாயணம்’  கார்ட்டூன் சிடியில் கதை சொல்லி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது கந்தபுராணம் சொற்பொழிவை ஆடியோ சிடியாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ – ஆவணப்படம்

முதலில் டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அன்பின் மிகுதியால் ‘தன்னம்பிக்கைத் தாரகை’ என்ற பட்டத்தை எனக்களித்தார்.

அடுத்து “அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…” என்ற 1-1/2 மணி நேர ஆவணப்படம்  காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் சார்பாக வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தை எங்கள் அப்பா-அம்மா பற்றியும், நாங்கள் வளர்ந்த விதம் பற்றியும், சிறு வயது முதல்… நடப்பு நிகழ்வுவரை எங்களுக்கும், எங்கள் பெற்றோருக்குமான தலைமுறை இடைவெளியில்லாத பிணைப்பு பற்றியும், பலரும் பயனடையும் விதத்தில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் நாங்கள் தயாரித்திருந்தோம்.

அடுத்து ‘ திருமிகு. ராமகிருஷ்ணன், திருமிகு. ஜெயசந்திரன், திருமிகு. ஜெயஸ்ரீ ரவீந்திரன் அனைவரும் சிறப்புரை ஆற்றி  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வெப்சைட்டை துவக்கி வைக்க, இறுதியில் அவர்கள் என் அப்பா அம்மாவுக்கு Ideal Parents என்ற பட்டத்தையும், ஆவணப்படத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நினைவுப் பரிசையும் அளிக்க விழா இனிதே நிறைவடைந்தது.

ஆவணப்படம் உருவாக்கம் குறித்து

எங்கள் அப்பா அம்மாவின் தியாகம் விலைமதிப்பற்றது. 24 மணிநேர சுழற்சிப் பணியில் இருவரும். தீபாவளி பொங்கல் என்றால் இருவரும் சேர்ந்து வீட்டில் இருப்பது அரிது. இருவருக்கும் சேர்ந்து விடுமுறை என்று வருகிறதோ அன்றுதான் எங்களுக்கு பண்டிகை தினம்போல. அதற்காக எதையும் விட்டு வைத்ததில்லை. அப்பா இனிப்பு செய்ய, அம்மா காரம் செய்ய எல்லா பண்டிகைகளும் எங்கள் வீட்டில் கலகலதான்.

அப்பா இல்லாதபோது அம்மாவும் இருப்பதைப்போன்ற உணர்வையும், அம்மா இல்லாதபோது அப்பாவும் இருப்பதைப்போன்ற உணர்வையும் கொடுக்க எங்கள் பெற்றோரால் மட்டுமே முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அந்த காலத்திலேயே அம்மாவும் இரவு பகல் பணிநேரமாற்றத்தில்  வேலைக்குச் சென்று 40 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து எங்களுக்கெல்லாம் ரோல்மாடலாக இருந்ததால், எங்கள் அகராதியில் வேலை சுமை, கஷ்டம் போன்ற வார்த்தைகள் எல்லாம் இல்லவே இல்லை.

எங்கள் மூவரையும் எங்கள் விருப்பப்படி படிக்க வைத்து, எங்கள் விருப்பபடி வேலைக்கு செல்ல அனுமதித்து, விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிகொடுத்து எல்லா சுதந்திரங்களையும் கொடுத்து அன்பெனும் ஒரு கயிற்றில் எங்களைக் கட்டி அதன் ஒரு முனையை அவர்கள் கைகளில் வைத்து எங்களை கண்ணுக்குள்ளும், உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்துத் தாங்கினார்கள். நல்ல குணநலன்களும், கல்வியும்தான் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்பதை எங்கள் இரத்தத்தில் கலக்க வைக்க, தாங்கள் அவற்றை தங்கள் நாடி நரம்பெல்லாம் ஏற்றி முன்மாதிரியானார்கள்.

தேவையான நேரத்தில் மென்மையாகவும், தேவையான நேரத்தில் கடுமையாகவும் நடந்துகொள்ளக் கற்றுக்கொடுத்து எந்த நேரத்திலும் நேர்மையை விட்டு எந்த காரியத்தையும் சாதிக்கக் கூடாது என்ற உன்னத குணத்தை எங்களுக்குள் விதைத்த எங்கள் அப்பா அம்மாவுக்கும் எங்களுக்குமான ரிலேஷன்ஷிப்பை அந்த ஆவணப் படத்தில் முதல் பாதியில் காட்சிப்படுத்தி இருந்தேன்.

என் அப்பா அம்மாவாக, என் அப்பாவின் அக்கா மகன் மற்றும் அவர் மனைவியை நடிக்க வைத்தேன். சிறுவயதில் நான், தங்கை, தம்பி மூவரின் கதாபாத்திரத்துக்கு என் அலுவலக ஸ்டாஃப் ஒருவரின் மகன் மற்றும் மகள்களை நடிக்க வைத்தேன்.

இரண்டாவது பாதியில் அப்பா அம்மாவுடன் வெவ்வேறு ஊர்களில் பணி புரிந்த நண்பர்கள் மற்றும் எங்கள் உறவினர்களிடம் பேட்டி எடுத்து காட்சிப்படுத்தியிருந்தேன்.

மொத்தம் 1-1/2 மணி நேர ஆவணப்படம். 15 நாட்களில் மொத்த ஷீட்டிங் மற்றும் எடிட்டிங் அனைத்தையும் முடித்தேன். லொகேஷன் தேர்வு, நடிகை, நடிகர்கள் தேர்வு, பயிற்சி கொடுத்தல், ஸ்கிரிப்ட், எடிட்டிங் என அத்தனையும் நான்தான் செய்தேன் என்றாலும் அந்த டீமின் அனைவரது முழு ஒத்துழைப்பினால் மட்டுமே அது சாத்தியமானது. என் முதல் ஆவணப்படமும் இதுவே.

ஆவணப்படம் :  https://youtu.be/k0CFnRpqjnk

இந்த ஆவணப்படம் இயக்கியதுதான் என் வாழ்க்கையில் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் நான் செய்த முதல் செயல். அதற்குக் காரணம், அவர்களை சர்ப்ரைஸாக அன்பின் மழையில் நனைக்க வேண்டும் என்ற பேராசைதான்…

நினைத்ததைப் போலவே அப்பா அம்மா இருவரும் கண்கள் பனிக்க படத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததை நிகழ்ச்சி வீடியோவில் பார்த்தேன். சபையில் இருந்த பலருக்கும் பல இடங்களில் கர்சீஃப் தேவையாக இருந்தது.

அத்தனை உணர்ச்சிப் பிழம்பான வசனங்கள், நடிப்பு, பின்னணி இசை, காட்சி அமைப்பு… திரையிடலுக்கு முன் எடிட்டிங்கில் இருந்து கிட்டத்தட்ட 3,4 முறை பார்த்திருந்தாலும் எனக்கே ஒரு திரைப்படம் எடுத்ததைப் போன்ற பெருமிதம் ஏற்பட்டது அந்த சபையில்.

ஸ்ரீபத்மகிருஷ் விருது

இன்று எங்கள் அறக்கட்டளை ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் வருடந்தோறும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம். நாங்கள் விருது பெற்ற காலம் போய் நாங்கள் விருதுகொடுக்கும் காலத்தை ஏற்படுத்திய எங்கள் பெற்றோர் பெருமைக்கு உரியவர்கள் தானே.

விரிவான தகவல்கள் இந்த லிங்கில்… http://compcarebhuvaneswari.com/?p=386

(Visited 384 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon