பாக்கியராஜ் பாராட்டிய ‘வாழ்க்கையின் OTP’

பாக்கியராஜ் பாராட்டிய ‘வாழ்க்கையின் OTP’

இன்று காலை மொபைலில் ஓர் அழைப்பு. எதிர்முனையில் ‘ஹலோ வணக்கம். காம்கேர் புவனேஸ்வரி மேடம் இருக்காங்களா?’ என்று கேட்ட கேள்விக்கு, வழக்கமாக நான் கேட்கும் எதிர் கேள்வியான ‘வணக்கம். நீங்கள் யார் பேசுகிறீர்கள்?’ என்றேன். ‘நான் பாக்யராஜ் பேசுகிறேன்’ என்றபோது ‘சொல்லுங்க சார், நான்தான் காம்கேர் புவனேஸ்வரி’ என்று மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

அதன் பிறகு எனக்கும், நடிகரும் இயக்குனருமான திரு பாக்கியராஜ் அவருக்குமான உரையாடல் இன்றைய பொழுதை இனிமையாக்கியது.

‘நீங்க எழுதின வாழ்க்கையின் OTP புத்தகத்தை வாசித்தேன். பிரமாதமான எழுத்து நடை. குறிப்பாக ஒரு இடத்தில் நீங்கள் சொல்லி இருந்த விஷயம் அருமை. உங்கள் இடத்தில் மரவேலை செய்ய வந்த ஒரு கார்பென்டர், நீங்கள் 100 புத்தகங்களுக்கும் மேல் எழுதியதை பார்த்து வியந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கச் சொன்னதற்கு ‘நீங்கள் 25 வருடங்களாக கார்பென்டராக இருந்திருக்கிறீர்கள். எத்தனை விதமான மரவேலை செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்கு அவர் ‘நிறைய செய்திருக்கிறேன். ஏன்னா அதுதானே என் வேலை… கணக்கு வைத்துக்கொள்ளவில்லை’ என்ற போது ‘நான் எழுதியவை வெறும் 100 புத்தகங்களே, நீங்கள் செய்துள்ளவையோ எண்ணற்றவை… இப்போது சொல்லுங்கள் யார் பெரியவர்?’ என்று பதில் சொல்லிவிட்டு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராஃப் போட மறுத்திருக்கிறீர்கள்….’ என என் எழுத்தை பாராட்டி வார்த்தையால் மகுடம் சூட்டினார்.

இத்தனைக்கும் நான் அவருக்கு அந்த நூலை அனுப்பவில்லை.  அவர் டெல்லி பயணத்தில் அந்த நூலை படித்ததாகவும், பொதுவாக பயணங்களில் நூல்களை வாசிக்கும் வழக்கத்தை வைத்திருப்பதாகவும் வெகு இயல்பாக கூறினார்.

நான் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி, பல வருடங்களுக்கு முன் அவரது மகனுக்கும் மகளுக்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு தொடர்பாக கவுன்சிலிங்கிற்காக என்னை அணுகியபோது, நேரில் சந்தித்து பேசியதையும், சில வருடங்களுக்கு முன்னர், அவர் பங்கேற்ற ஒரு  நிகழ்ச்சியில் நானும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் நினைவு கூர்ந்தேன்.

அந்த கார்பென்டர் என்னிடம் வேலைக்கு வந்தபோது நான் 100 நூல்கள் எழுதி இருந்தேன். இப்போது 250 நூல்களுக்கும் மேல் எழுதி உள்ளேன் என்று சொன்னேன். நூல் பட்டியலை தனக்கு அனுப்பச் சொன்னார்.

அத்துடன் விடுவேனா நான், நான் இயக்கியுள்ள ‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற என் தந்தையின் ஆட்டோபயோகிராஃபி படம் குறித்து சொன்னேன். வியந்து பாராட்டினார்.

இன்றைய நாள் இப்படியாக…

வாழ்க்கையின் OTP நூலில் நான் எழுதி இருந்ததை அப்படியே உங்கள் பார்வைக்கும் பகிர்கிறேன்.

// அண்மையில் என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியில் ஏற்கெனவே இருந்த புத்தக ஷெல்ஃபுகளைப் பார்வையிட்டவர் அதில் அடுக்கி இருந்த நான் எழுதிய புத்தகங்களைப் பார்த்துவிட்டு ‘இத்தனையும் நீங்கள் எழுதியவையா?’ என கேட்க, நான் ‘ஆமாம். 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்….’ என இயல்பாய் சொல்ல, அவர் கண்களில் கண்ணீர் மல்க என்னை கை கூப்பி வணங்கினார்.

உடனே தன் சட்டைப் பையில் இருந்த 10 ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகிராஃப் போட்டுத்தரச் சொன்னார்.

எனக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராஃப் போட உடன்பாடில்லை. மறுத்துவிட்டு ‘அவரிடம் எத்தனை வருடங்களாக கார்பென்டராக இருக்கிறீர்கள்… இதுபோல எத்தனை விதமான மரவேலை செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டேன்.

‘25 வருடங்களுக்கு மேல் கார்பென்டரா இருக்கேன். எவ்வளவு மரவேலை செய்திருக்கிறேன் என சரியா கணக்குத் தெரியலை… நிறைய செய்திருக்கிறேன்….ஏன்னா அதுதானே என் வேலையே…’ என்று பதில் சொன்னவரை பார்த்துப் புன்னகைத்தேன்.

‘நான் எழுதியவை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களே… நீங்கள் செய்ததோ எண்ணற்றவை… அப்போ யார் பெரியவர் சொல்லுங்கள்…’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்பென்டர், டிரைவர், ஆடிட்டர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும்.

ஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்.’ //

வாழ்க்கையின் OTP நூலை எடுத்து மீண்டும் இதைப் படித்தபோது எனக்கே என் எழுத்தை பிடித்துப் போனது. காரணம் அதில் இருந்த அக்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட உண்மை.

காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய ‘வாழ்க்கையின் OTP’ புத்தகம் தேவைப்படுவோர் 9444949921 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும். விவரம் அனுப்பப்படும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
பிப்ரவரி 12, 2026 | வியாழன்

(Visited 1,011 times, 5 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon