ஜம்முனு வாழ காம்கேரின் OTP-108 to OTP-111: நான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்?

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. கோபி சரபோஜி! தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டண்டாகப் பணிபுரிந்து வரும் இவர் கதை, கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என எழுத்தின் பல தளங்களிலும் பயணித்து வரும் ஓர் எழுத்தாளரும் கூட!

#வாசகர்_நேர்காணல்

1. நீங்கள் படித்து முடித்த நேரத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்குச் சேர வாய்ப்பிருந்திருக்கும். safe zone என்ற பக்கத்தில் இருந்து விலகி சுய தொழில் என நீங்கள் முடிவெடுத்த போது குடும்பத்தினர், உறவினர்கள் என்ன சொன்னார்கள்? அப்படி தரப்பட்ட ஆலோசனைகளை அந்த சமயத்தில் எப்படி எதிர் கொண்டீர்கள்?

2. தொழில்நுட்பமே அறிமுகமாக காலகட்டத்தில் அந்தத்துறையில் கால்பதித்த தாங்கள் எப்படி அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள்?

3. கடிவாளம் போட்ட குதிரையாய் இல்லாமல் பல தரப்பட்ட தகவல்கள், நீங்கள் கேட்ட, கவனித்த விஷயங்கள், தகவல் தொழில் நுட்பங்கள், சினிமா இப்படி பல விசயங்களையும் பத்திகளாக்குவதாலயே நாள் தவறாது எழுத முடிகிறதா? அல்லது உங்கள் ஆர்வத்தாலும், விருப்பத்தாலும்  அந்தத் தகவல்களை பத்திகளாக்குகிறீர்களா?

4. பிற பதிப்பகங்களில் உங்கள் நூல்களை வெளியிடுவதற்கும், உங்களின் சொந்த பதிப்பகம் மூலம் பதிப்பிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

5. பதிப்பாளர்களால் உங்களுக்கு ஏற்பட்ட நல்ல, கசப்பான அனுபவங்கள் உண்டா?

6. ஒரு வெற்றிகரமான பெண்மணியாக, சாதனையாளராக இருந்தும் இன்னும் இந்த இலக்கை அடைய முயன்று கொண்டேயிருக்கிறேன் என நீங்கள் நினைக்கும் விஷயம் எது?

7. பல துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அதற்கான நேரத்தை உங்களின் தினப்படி நேரங்களிலிருந்து எப்படி திருடுகிறீர்கள்?

8. தகவல்களில் அப்டேட்டாக இருப்பது, அன்றாட பணிகளைத் திட்டமிடுவது, புதிய முயற்சிகளை தன் துறையில் செய்து பார்ப்பது, நிறுவனத்தை பரவலாக அறிமுகம் செய்வது – இது தவிர ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கும், அதைத் தக்க வைப்பதற்கும் தேவையான பிற விசயங்கள் எவை என நினைக்கிறீர்கள்?

9. தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ ஒரு பணியை முடித்துக் கொடுத்த பின் அவர்கள் சொன்ன படி நடந்து கொள்ளாத போது ஏற்படும் ஏமாற்றத்தை (இழப்பை அல்ல) எப்படிக் கடந்து வருகிறீர்கள்?

10. தனிநபர் ப்ராஜெக்ட்டுக்கும், நிறுவனங்களுக்கான ப்ராஜெக்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

11. உங்களின் துறை சார்ந்த பணிகளுக்கிடையில் தினம் ஒரு நூல் வெளியீடு, இரண்டாண்டுகளுக்கு மேலாக தினம் ஒரு பத்தியை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவது, இணைய, அச்சு இதழ்களில் கட்டுரைகள் எழுதுவது ஆகியவைகளை முன் கூட்டியே திட்டமிடுகிறீர்களா? அல்லது தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறீர்களா?

12. வெற்றியாளராக இருப்பதை விட அதைத் தொடர்ந்து தக்க வைப்பது தான் இன்றைய வெற்றியாளர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. ஒரு தொடர் வெற்றியாளராக இருக்கும் நீங்கள் அதற்குச் சொல்லும் இரகசியம் என்ன?

பதிவு எண்: 839 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 108
ஏப்ரல் 18, 2021

நான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்!

1. நீங்கள் படித்து முடித்த நேரத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்குச் சேர வாய்ப்பிருந்திருக்கும். safe zone என்ற பக்கத்தில் இருந்து விலகி சுய தொழில் என நீங்கள் முடிவெடுத்த போது குடும்பத்தினர், உறவினர்கள் என்ன சொன்னார்கள்? அப்படி தரப்பட்ட ஆலோசனைகளை அந்த சமயத்தில் எப்படி எதிர் கொண்டீர்கள்?

உண்மைதான். 1992-ல், எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம்தான் நம் நாட்டில் முதன் முதலில் ஒரு பெண் பொறியாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவனம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. அப்போதே விருதுகள் கொடுத்து கெளரவித்தார்கள். இப்போதுள்ள மாதிரி விருதுகளுக்குப் பின்னால் அத்தனை அரசியல் எல்லாம் இல்லை அந்த நாட்களில். உண்மையான திறமைக்கு மதிப்பு கொடுக்கும் மனோநிலை அதிகம் இருந்த காலகட்டம் அது.

இந்தக் கேள்விக்கு இன்னும் விரிவாக பதில் சொல்ல வேண்டுமானால், நான் தொழில்நுட்பம் படித்ததில் இருந்துத் தொடங்க வேண்டும்.

நான் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் திருச்சி இந்திராகாந்திக் கல்லூரியில் முடித்தேன். பின்னர் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். அதன் பின்னரும் நித்தம் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப படித்து அப்டேட் செய்துகொண்டே வருகிறேன். இடையில் எம்.பி.ஏ-வும் முடித்தேன்.

நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்த போது நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தில் அப்போதுதான் அறிமுகம் ஆகி இருந்தது. இன்ஜினியரிங்கில் எல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகம் ஆகவே இல்லை. எனவே என் பெற்றோர் தொலைநோக்குப் பார்வையில் என்னை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டதைத் தேர்ந்தெடுத்து  பி.எஸ்ஸியில் சேர்த்தார்கள். இப்போதுள்ள பி.ஈ, பி.டெக் இவற்றை எல்லாம் விட நல்ல கட்டமைப்புடன் கூடிய பாடத்திட்டமாக இருந்தது. ஒரு புள்ளி, கமா வைப்பதற்கும் நாம்தான் புரோகிராம் எழுத வேண்டும். பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கும் அந்தத் துறை புதிதுதானே. கணிதம், இயற்பியல் என பிற பிரிவு பேராசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்துதான் அவர்களை எங்களுக்குப் பாடம் எடுக்க வைத்தார்கள் என்பதால் சுய முனைப்புடன் சுய சார்புடன் செயல்படுபர்களால் மட்டுமே கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்து படிக்க முடியும். மனப்பாடம் செய்து படித்து மதிப்பெண் வாங்கும் குணம் உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஒத்து வராது.

பொதுவாகவே கிரியேட்டிவிடியில் திளைத்துக்கொண்டிருக்கும் என் மனதுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பெருந்தீனி போட்டது என்றே சொல்ல வேண்டும். சி மொழியிலேயே புரோகிராம் எழுதி கார்ட்டூன் வரையும் அளவுக்கு என் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொண்டேன்.

இப்படியாக தொழில்நுட்பத்தை பாடமாக எடுத்து அதிலும் இரட்டைப் பட்டம் பெற்று வெளிவந்ததில் முதல் செட் எங்களுடையதே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போது தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றார்கள். ஆனால் என் கனவு சிறு வயதில் இருந்தே என் பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்பதே. அதன் தாக்கத்தில் என் பெற்றோர்தான் என் ஆசைகளுக்கு வடிவம் கொடுத்து  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி வைத்தார்கள்.

இன்று எங்கள் காம்கேர் நிறுவன பிராண்டில் கணக்கிட இயலாத அளவுக்கு சாஃப்ட்வேர்/அனிமேஷன் தயாரிப்புகள் உருவாகி உலகளாவிய முறையில் அங்கீகாரம் பெற்றுள்ளன.

இத்தனைக்கும் நாங்கள் பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தினர்தான். பெற்றோர் இருவருக்கும் தொலைபேசித் துறையில் பணி. மற்றபடி பரம்பரை வீடு, சொத்து என எதுவும் கிடையாது. அவர்கள் உழைப்பில் எங்களைப் படிக்க வைத்தார்கள். அவரவர் விருப்பம்போல் வாழ்வதற்கான சூழலை அமைத்துக்கொடுத்தார்கள். எங்களுடன் சேர்ந்தே அவர்களும் உழைத்தார்கள். எல்லா சூழல்களிலும் எங்களுக்கு ஈடு கொடுத்து மனோரீதியாக உறுதுணையாக இருந்தார்கள்.

ஒரு கம்ப்யூட்டரின் விலை 1 லட்சம். ஒரு பிரிண்டரின் விலை 75 ஆயிரம். இதுதான் நான் கம்ப்யூட்டரில் முதுகலைப் பட்டம் பெற்றதும் என் பெற்றோர் எனக்குக்கொடுத்தப் பரிசு.

இவற்றுடன் என் படிப்பு, திறமை, ஊக்கம், உழைப்பு இவற்றை மூலதனமாக்கி நிறுவனத்தை முதல் கியரில் இருந்துத்தொடங்கி இன்று நான்காம் கியரில் சென்றுகொண்டிருக்கிறேன்.

என் பெற்றோரை நேசிக்கிறேன். நான் வாழும் இந்த நாட்டையும் நேசிக்கிறேன். அதனால்தான் என் நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் நம் தேசம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. அயல்நாட்டு ப்ராஜெக்ட்டுகளை எடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. நம் நாட்டு தயாரிப்பை அயல்நாட்டினரும் பயன்படுத்தும்வண்ணம் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் காம்கேரின் பணி.

உதாரணத்துக்கு நம் நாட்டு உயர் கல்விக்கும் அயல் நாட்டு உயர்கல்விக்குமான ஒப்பீடு என்ற தலைப்பில் அமெரிக்காவின் புகழ்பெற்ற மிசெளரி பல்கலைக்கழத்தில் ஆவணப் படம் எடுத்தேன். நம் நாட்டின் சிறப்பை அயல்நாட்டுக்குக் கொண்டு சேர்த்தேன். இப்படி எங்கள் காம்கேரின் சாஃப்ட்வேர் அனிமேஷன் மற்றும் இன்னபிற தொழில்நுட்பத் தயாரிப்புகளை அயல்நாட்டினரும் வியந்து பயன்படுத்தும்வண்ணம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு தரமானதாக இருக்கும் எங்கள் தயாரிப்புகள்.

பிசினஸுக்காக பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தாலும் விமானம் நம் நாட்டில் தரையிறங்கும்போதுதான் நிம்மதியான மனநிலை கிடைக்கிறது.

என் பெற்றோர்தான் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரோல்மாடல். அவர்களின் புதுமையான எண்ணங்களினால் வளர்க்கப்பட்ட நாங்கள்தான் இந்தத் தலைமுறையினர்களுக்கெல்லாம் ரோல் மாடல்.

ஆகவே, நான் நிறுவனம் தொடங்கியபோது எங்கள் குடும்பத்தினர் யாரும் எந்த விமர்சனமும் செய்யவில்லை.

ஆனால், அப்போதெல்லாம் சுயதொழில் என்பது படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை கிடைக்காதவர்கள் செய்யக் கூடியது என்ற மனோநிலை இருந்தது. எனவே என்னைச் சுற்றி இயங்கிய குறுகிய மனம்படைத்த ஒரு சிலர் அந்தக் கண்ணோட்டத்தில் ‘ஏன் வேலை கிடைக்கலையா?’, ‘ஏன் அமெரிக்கா செல்லலையா?’, ‘ஏன் படிப்பை இன்னும் முடிக்கலையா, ஏதேனும் அரியர்ஸ் வைத்திருக்கிறாயா?’,  ‘திருமணம் ஆகிவிட்டால் இந்த பிசினஸை என்ன செய்வாய்?’, ‘பெண்களுக்கு பிசினஸ் ஒத்து வராதே’ என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆனால் எதையுமே காதில் வாங்கிக்கொள்ள நேரம் இல்லை எனக்கு. எனக்கான பாதை. அதில் நிதானமான விவேகமான ஓட்டம். சின்னச் சின்ன குறிக்கோள்கள். அதை முடித்துக்கொண்டு அடுத்தக்கட்ட குறிக்கோள்கள் என என்னை நானே செதுக்கிக்கொண்டு இன்று தொழில்நுட்ப உலகில் முக்கியமான நபராக நானும், பெயர் சொல்லும் நிறுவனமாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேரும் திகழ்கிறது.

என் அப்பா அம்மா இருவருமே கடுமையான உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். புதுமையாக சிந்திப்பவர்கள். பண்பாளர்கள். இருவருக்குமே இரவு பகல் என 24 மணி நேர பணி சுழற்சியில் பணி. அம்மாவுக்கும் இரவு ஷிஃப்ட்டில் வேலை இருக்கும். அப்பா வேலைக்குச் சென்றிருக்கும்போது அம்மா தந்தையுமானவர். அம்மா பணிக்குச் சென்றிருக்கும்போது அப்பா தாயுமானவர்.

ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர பெற்றோர்தான் மிக முக்கியக் காரணம். அவர்களின் முழு ஆதரவு இருந்துவிட்டால் விண்ணை முட்டும் சாதனைகளை அதிரடியாக செய்துவிட முடியும்.

எனக்கு அந்த வரம் கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட வரம் பெற்று வந்தவள் என்ற பெருமிதம் என்றும் எனக்குண்டு.

2. தொழில்நுட்பமே அறிமுகமாக காலகட்டத்தில் அந்தத்துறையில் கால்பதித்த தாங்கள் எப்படி அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள்?

நாங்கள் நிறுவனம் தொடங்கிய 1992-களில் நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸே முழுமையாக நுழைந்திருக்கவில்லை. எங்களைச் சுற்றி இயங்கும் வங்கிகள், பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள் என ஒவ்வொன்றாக அணுகி அவர்களின் தேவைகளின் ஒரு சிறு பகுதிக்கு சாப்ஃட்வேர்களை  நாங்கள் இலவசமாகவே உருவாக்கிக்கொடுத்து, நாங்களே கம்ப்யூட்டர்களை அசம்பிள் செய்து அதையும் சில நாட்கள் இலவசமாக அவர்கள் அலுவலகத்தில் அவர்களின் பயன்பட்டுக்காக வைத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டின் சுவையை உணர வைத்தோம்.

அப்போதெல்லாம் விண்டோஸ் கூட அறிமுகம் ஆகவில்லை என்பதால் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கிவந்த லோட்டஸ் என்ற சாஃப்ட்வேரில் அவர்கள் இன்புட் கொடுத்தால் பில் பிரிண்ட் ஆகி வருமாறு சிறு புரோகிராம்கள் செய்து கொடுத்தோம்.

இரண்டு வாரங்கள் அவர்கள் நிறுவன வரவேற்பரையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஜம்மென ஆக்கிரமித்து அவர்களின் அன்றாட பில்லிங்குகள் பிரிண்டர் வழியாக பேப்பரில் கிடைக்கப்பெற்றவர்கள் தங்களை மிக பெருமையாக உணர ஆரம்பித்தார்கள். தங்கள் நிறுவனம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நிறுவனம் என மிக உயர்வாக எண்ண ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு இன்னும் ஒரு மாதம் கம்ப்யூட்டரை தாங்களே வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள். அந்த காலகட்டத்துக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு கம்ப்யூட்டரை அவர்கள் பயன்பாடுகளுக்கு கொடுத்து வந்தோம்.

இதற்கிடையில் க்ளிப்பர், டிபேஸ், ஃபாக்ஸ் பேஸ் போன்ற சாஃப்ட்வேர்களில் அவர்களின் பில்லிங் மட்டுமில்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த நிறுவனப் பணிகளுக்கும் நாங்களே சாஃப்ட்வேர் தயாரித்துக்கொடுத்து, கம்ப்யூட்டர் ஒன்றுதான் பணிகளை சுலபமாக்கும் என்பதை நிரூபித்து அவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்திருக்கும் கம்ப்யூட்டரை எங்களுக்கு குறைந்த லாபம் வைத்துக்கொண்டு அவர்களுக்கே விற்பனை செய்யத் தொடங்கினோம். மேலும் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களையும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

சில நிறுவனங்கள் கம்ப்யூட்டரை இலவசமாகக் கொடுத்தால்கூட வைத்துப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். காரணம் பயம். கம்ப்யூட்டரைப் பார்த்தால் அத்தனை பயம். அவர்களை எப்படி ஊக்குவித்தோம் தெரியுமா?

அவர்கள் கைகளால் பேப்பரில் கணக்கீடுகள் செய்யும் அன்றாடப் பணிகளை அன்றைய தினத்தின் அவர்களின் அலுவலக நேரம் முடியும்போது வாங்கி வந்து இரவு முழுவதும் எங்கள் சாஃப்ட்வேரில் தகவல்களை உள்ளீடு செய்து கணக்கீடுகளை செய்து பிரிண்ட் எடுத்து அடுத்த நாள் காலை அவர்கள் நிறுவனம் இயங்க ஆரம்பிக்கும்போது அவர்கள் கண்முன் நீட்டுவோம்.

தங்கள் நிறுவன தகவல்கள் கம்ப்யூட்டர் ஷீட்டுகளில் ‘ஜம்மென’ வந்திறங்குவதைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் ஒரு பரவசம் ஒட்டிக்கொள்ளும்.

அந்த பரவசத்தை நாங்கள் நேர்மறையான ஆயுதமாக்கினோம். இப்படித்தான் பல்வேறு வங்கிகள் எங்கள் கஸ்டமர்களானார்கள். பல பள்ளிகளை கம்ப்யூட்டர் மயமாக்கினோம். பல மருத்துவமனைகளில் பேஷண்டுகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவாக்க வைத்தோம். மளிகைக்கடை, மெடிகல்ஷாப் என கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் அறிமுகம் செய்தோம். இத்தனையும் விண்டோஸ், விஷூவல் பேசிக், டாட்நெட், ஜாவா போன்ற சாஃப்ட்வேர்கள் பரவலாக அறிமுகம் ஆகாத ஆரம்ப நாட்களில் 1992 முதல் 1996-களுக்குள் நாங்கள் செய்த சாதனைகள்.

தொழில்நுட்பத் துறையின் அத்தனை விஷயங்களையும் தமிழகமெங்கும், இந்தியா முழுவதும் கொண்டு சென்றதில் எங்கள் காம்கேர் நிறுவனத்திற்கும் என் உழைப்புக்கும் பெரும் பங்குண்டு.

இது கர்வமல்ல. சுய தம்பட்டம் அல்ல. பேருழைப்புக் கொடுத்துக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கை. தைரியம். மிடுக்கு!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

பதிவு எண்: 840 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 109
ஏப்ரல் 19, 2021

வாழ்க்கையே வாய்ப்புகளால் நிரம்பியதுதானே!

3. கடிவாளம் போட்ட குதிரையாய் இல்லாமல் பல தரப்பட்ட தகவல்கள், நீங்கள் கேட்ட, கவனித்த விசயங்கள், தகவல் தொழில் நுட்பங்கள், சினிமா இப்படி பல விசயங்களையும் பத்திகளாக்குவதாலயே நாள் தவறாது எழுத முடிகிறதா? அல்லது உங்கள் ஆர்வத்தாலும், விருப்பத்தாலும் அந்தத் தகவல்களை பத்திகளாக்குகிறீர்களா?

எங்கள் துறையில் கடிவாளம் போட்ட குதிரையாய் பல மாதங்கள் பல ஆண்டுகள் ஒரு சாஃப்ட்வேர் ரிலீஸுக்காக, ஒரு அனிமேஷன் படைப்பிற்காக உழைக்க வேண்டி இருக்கும்.

நான் இயங்கும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் ஒரு சாஃப்ட்வேரை உருவாக்க வேண்டுமென்றால் கூட அதற்கு பல மாதங்கள் R & D (Research and Development) செய்ய வேண்டும். ஆக பல நாட்கள் ஒரே ப்ராஜெக்ட்டில் ஆழந்த கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ஆராய்ச்சி முடிந்ததும் அதற்கான வேலைகளைத் தொடங்குவோம். பின்னர் இம்ப்ளிமெண்டேஷன். அதைத்தொடர்ந்து குவாலிட்டி செக். பின்னர் மாற்றங்கள் இருந்தால் செய்து பீட்டா வெர்ஷன் சாஃப்ட்வேரை வெளியிடுவோம். பயனாளர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்ப ஒரிஜினர் வெர்ஷனை வெளியிட ஒரு வருடம் கூட ஆகலாம். இது நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களுக்கும் பொருந்தும். அனிமேஷன்களுக்கும் பொருந்தும். ஆப்களுக்கும் பொருந்தும். எங்கள் துறையில் நாங்கள் பின்பற்றும் வழிமுறை இது. ஏன் புத்தகம் எழுத வேண்டும் என்றால்கூட ஒரே புத்தகத்துக்கு மாதக்கணக்கில் உழைக்க செய்ய வேண்டி இருக்கும்.

அதனால் உழைப்பதில் கடிவாளம் போட்ட குதிரை, மனம்போல இயங்குதல் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. உழைப்பு. பேருழைப்பு. அயராத உழைப்பு. அவ்வளவுதான்.

நம் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி பேச்சைக் குறைத்துக்கொண்டால் பார்க்கும் விஷயங்களில் எல்லாம் அழகியலையும் வாழ்வியலையும் உணர முடியும்.

மேலும் நான் புறத்தில் இயங்குவது முழுக்க முழுக்க தொழில்நுட்பம். ஆனால் அகத்தில் இயங்குவது அழகான வாழ்வியலில். எனவே நான் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையுமே மனித நேயத்துடன் அணுக முடிகிறது. இயந்திரமாகமல் இயல்பாக வாழ்க்கையைக் கடக்க சாத்தியமாகிறது.

நான் இயங்கும் துறையில் என் துறை சார்ந்து எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை என் தலைமுறைக்கும், எனக்கு முந்தைய தலைமுறையினருக்கும், என் அடுத்தத் தலைமுறைக்கும் பயனுள்ள வகையில் பதிவாக்கி வருகிறேன். தொழில்நுட்ப அனுபவங்கள் தொழில்நுட்பப் படைப்புகளாகின்றன. வாழ்வியல் அனுபவங்கள் வாழ்வியல் படைப்புகளாகின்றன. அவ்வளவே.

மூன்று தலைமுறையினருக்கும் பயனுள்ள வகையில் என் படைப்புகள் பாடமாகின்றன என்பது என்னைப் பொருத்த அளவில் மிகப் பெரிய விஷயமே.

4. பிற பதிப்பகங்களில் உங்கள் நூல்களை வெளியிடுவதற்கும், உங்களின் சொந்த பதிப்பகம் மூலம் பதிப்பிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வித்தியாசமும் இல்லை. காரணம், இரண்டுக்குமே நாம் தான் உழைக்க வேண்டும். நம் அளவில் விளம்பரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

வாசகர்களில் இருவகையினர். உங்கள் எழுத்திற்கான வாசகர்கள் முதல் பிரிவினர். உங்கள் புத்தகத்தை வெளியிடும் பதிப்பகத்தார் தங்களுக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். ‘இவர்கள் வெளியிட்டால் நன்றாகவே இருக்கும்’ என்ற ஆழமான நம்பிக்கையை பெற்றிருப்பார்கள். அந்த வகை வாசகர்கள் இரண்டாவது பிரிவினர்.

உங்கள் பதிப்பகம் மூலம் விற்பனை செய்யும்போது அவை உங்களுக்கான வாசகர்களை சென்று சேரும். பிற பதிப்பகங்கள் மூலம் புத்தகம் வெளியிடுவது என்பது உங்கள் புத்தகங்களை உங்களுக்கான வாசகர்களை மட்டுமில்லாமல் பதிப்பகத்தாரின் வாசகர்களையும் சென்று சேரும்.

புத்தகங்கள் மக்களிடம் சென்று சேரும் நுணுக்கம் இதுதான்.

மற்றபடி விற்பனை, ராயல்ட்டி இத்யாதி வகைகளில் பெரும்பாலும் எந்த பெரிய மாற்றமும் இருப்பதில்லை.

5. பதிப்பாளர்களால் உங்களுக்கு ஏற்பட்ட நல்ல, கசப்பான அனுபவங்கள் உண்டா?

எனக்கு எந்த கசப்பான அனுபவங்களும் ஏற்படவில்லை. ஏனெனில் நான் யாரிடமும் சென்று எந்தப் பதிப்பாளரையும் அணுகி என் புத்தகத்தை வெளியிடுங்கள் என்று கேட்கும் சூழல் ஏற்படவே இல்லை.

10 வயதில் இருந்து ‘தினமும்’ (Note this point) எழுதுகிறேன். எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடிப்பதற்குள்ளேயே 100-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வந்திருக்கிறேன். அவற்றைக் கொண்டாடியது கோகுலம், கல்கி, மங்கையர்மலர், விகடன், குமுதம், பாக்யா, கல்கி, சுமங்கலி, கலைமகள், விஜயபாரதம் என முன்னணி பத்திரிகைகள். சாவி பத்திரிகை உட்பட பல்வேறு பத்திரிகைகளில் முத்திரைக் கதைகளில் என் கதைகளும் வெளியாகி விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன.

என் திறமைகளையும் என் படைப்புகளையும் என் எழுத்தையும் கொண்டாடும் பதிப்பகங்கள்தான் அதிகம். என் முதல் நூலை வெளியிட்ட அநுராகம் பதிப்பகம் முதல் நூறாவது நூலை வெளியிட்ட விகடன் பதிப்பகம் வரை எனக்கு ராஜ மரியாதைதான்.

என் புத்தகங்களில் பல,  அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன.

எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் வெளியிட்ட ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர், இவ்வளவுதான் இண்டர்நெட், தமிழும் கம்ப்யூட்டரும்’ என்ற மூன்று புத்தகங்களும் சென்னை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமானபோது என் வயது 25. சென்ற மாதம் ’வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற புத்தகம்  மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறையின் ஊடகவியல் சான்றிதழ் படிப்பின் பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் என் புத்தகங்கள் நூலகங்களில் உள்ளன.

அநுராகம் பதிப்பகத்தார் என் 23 வயதில் என் நிறுவனத்துக்கே வந்து அப்போது நான் மங்கையரில் மலரில் தொடராக எழுதி வந்த ‘உலகம் உன் கையில்’ என்ற கட்டுரைத்தொகுப்பை ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் புத்தகமாக்கலாமா அனுமதி கொடுப்பீர்களா என முறையாக மரியாதை கொடுத்து பதிப்பித்தார்கள். 23 வயதில் சமுதாயத்தில் இப்படிப்பட்ட கெளரவமான சூழல் எனக்கு வாய்த்தது என் கொடுப்பினை.

வாழ்க்கை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கைகளை வாரி இறைத்தபடியே எனக்கு வழிகாட்டியது. இன்றும் வழிகாட்டுகிறது. இனியும் தொடரும்.

என் வாழ்க்கைப் பாதையில் என் கண் முன் விரிந்த வாய்ப்புகளில் நல்லவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பயணம் செய்கிறேன். வாழ்க்கையே வாய்ப்புகளால் நிரம்பியதே. அதில் நல்ல வாய்ப்புகளும் இருக்கும். தீயவையும் இருக்கும். தேர்ந்தெடுப்பதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நான் கவனமாக இயங்குகிறேன்.

நான் ஏதேனும் கொஞ்சமாவது வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு இதுவே மிக முக்கியக் காரணம்.

வாய்ப்புகளில் நல்லவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

பதிவு எண்: 841 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 110
ஏப்ரல் 20, 2021

உங்கள் அனுமதி இன்றி யாரும் உங்களை ஆட்டுவிக்க முடியாது!

6. ஒரு வெற்றிகரமான பெண்மணியாக, சாதனையாளராக இருந்தும் இன்னும் இந்த இலக்கை அடைய முயன்று கொண்டேயிருக்கிறேன் என நீங்கள் நினைக்கும் விஷயம் எது?

எதுவும் இல்லை. பூரண மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

காரணம். நீண்ட கால இலக்குகளே வைத்துக்கொள்வதில்லை. குறுகியகால இலக்குகளை நிர்ணயிக்கிறேன். குட்டி குட்டியாய் சிறு சிறு இலக்குகள். அதை எட்டியபிறகு அடுத்தடுத்த இலக்குகள். சிறு புள்ளியில் ஆரம்பித்து சிறிய சிறிய வட்டமாக போட்டுக் கொண்டே பெரிய வட்டத்துக்கான இலக்கை நிர்ணயித்தல் என்பது என் லாஜிக். இதனால் சிறு இலக்குகளில் கிடைக்கும் வெற்றி அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு உத்வேகத்தைக் கொடுக்கும். எல்லா வகையிலும் பூரணத்துவம் கிடைக்கும்.

இதுவே எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணமும்கூட.

7. பல துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அதற்கான நேரத்தை உங்களின் தினப்படி நேரங்களிலிருந்து எப்படி திருடுகிறீர்கள்?

தினமும் 3 மணிக்கு எழுந்துகொள்ளும் அற்புதமான பழக்கம் ஒன்று போதுமே. எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். நேரமும் கிடைக்கும். உத்வேகமும் கிடைக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். நினைத்ததை சாதிக்கும் நேர்மறை எண்ணங்கள் பெருக்கெடுத்து ஓடும்.

8. தகவல்களில் அப்டேட்டாக இருப்பது, அன்றாட பணிகளைத் திட்டமிடுவது, புதிய முயற்சிகளை தன் துறையில் செய்து பார்ப்பது, நிறுவனத்தை பரவலாக அறிமுகம் செய்வது – இது தவிர ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கும், அதைத் தக்க வைப்பதற்கும் தேவையான பிற விசயங்கள் எவை என நினைக்கிறீர்கள்?

நேர்மையாக இருப்பது.

நேரம் தவறாமையுடன் பணி செய்வது.

நேர்த்தியாக செயல்படுவது.

மனிதாபிமானத்தை எந்த நேரத்திலும் கைவிடாமல் இருப்பது.

பணிபுரியும் பொறியாளர்களின் திறமைகளை சரியாகப் பயன்படுத்துவது.

அவர்களை மனதளவில் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது.

பிரச்சனைகள் சிறியதாக இருக்கும்போதே சரி செய்ய முனைவது.

கடன் சுமையைக் கூட்டிக்கொண்டு தன் எல்லைக்கு அப்பாற்பட்டு நிறுவனத்தை விரிவாக்க முயற்சி செய்யாமல் இருப்பது.

முக்கியமாக, ஏதேனும் சறுக்கல் வந்தால் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நம் இமேஜைப் பற்றிய எண்ணத்தை மனதில் சுமக்காமல், இமேஜூக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது.

பிரச்சனைகளை ஒன்றுமே இல்லாத சாதாரண விஷயம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் பிரச்சனைகளைப் பிரச்சனைகளாக பார்த்தால் மட்டுமே பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் யுக்திகள் நம் அறிவுக்குப் புலப்படும். ஒரு நிறுவனத்தின் நீடித்திருக்கும் வெற்றிக்கான காரணிகளை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தனி மனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இயக்கும் நிறுவனத்தையும் வெற்றிகரமாக திறம்பட நடத்த முடியும். அந்த வெற்றியை நீண்ட காலங்களுக்கு தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். தனி மனித ஒழுக்கமே நாம் கற்ற கல்வியை நம் உழைப்பை நம் மனதை நேர்வழியில் இயக்க வைக்கும்.

வீட்டிலும் சரி, பொதுவெளியிலும் சரி, அலுவலகத்திலும் சரி தனிமனித ஒழுக்கத்தில் சிறப்பானவர்களே மனதளவில் ஆரோக்கியமாக இயங்க முடியும். ஆரோக்கியமான மனதுதான் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தரும். ஆரோக்கியமான சூழல் புதுப்புது விஷயங்களை உருவாக்கித்தரும் வல்லமை பெற்றது.

தனிமனித ஒழுக்கமே அனைத்துக்கும் அடிப்படை.

9. தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ ஒரு பணியை முடித்துக் கொடுத்த பின் அவர்கள் சொன்ன படி நடந்து கொள்ளாத போது ஏற்படும் ஏமாற்றத்தை (இழப்பை அல்ல) எப்படிக் கடந்து வருகிறீர்கள்?

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். ஒரு பணியை செய்கிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் உடலும் மனதும் சேர்ந்துதான் உழைக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் உழைப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம். 99 சதவிகிதம் உங்கள் அனுமதி இன்றி யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. மீதம் இருக்கின்ற 1 சதவிகிதத்தில்தான் ஏமாற்றங்கள் எல்லாம் வந்து சேரும். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அந்த ஒரு சதவிகிதத்தையும் கடந்து வந்துவிட முடியும்.

ஆளுமைகள், பிரபலமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு  நீங்களே வலுக்கட்டாயமாக உங்களுக்கும் ஏதேனும் ஆதாயம் வைத்துக்கொண்டு, அவர்களுக்காக பணி செய்துவிட்டு ஏமார்ந்துபோவதுதான் பெரும்பாலும் நடக்கும்.

தவிர சில துறைகள் தீர்க்க முடியாத இதுபோன்ற பிரச்சனைகளை   வெளிப்படையாக தாங்கிக்கொண்டுதான் இயங்கி வருகின்றன. உதாரணத்துக்கு பதிப்பகத் துறையில் ராயல்ட்டி விஷயத்தில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் நடக்கும் பனிப்போர். திரைத்துறையில் ஒருவரது கதையை எடுத்து பயன்படுத்திவிட்டு அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது.

வேலையையும், பர்சனலையும் ஒன்றாக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் மீதோ அல்லது தனிநபர் மீதோ உங்கள் விசுவாசத்தை நீங்களே அதிகப்படியாய் சுமந்துகொண்டு  ‘எத்தனை பெரிய நிறுவனம்… அதற்காக இந்தப் பணியை செய்து தருவது எவ்வளவு பெரிய கொடுப்பினை?’ என்றோ, ‘எவ்வளவு பெரிய மனிதர், எப்பேற்பட்ட பிரபலம், இவருக்காக இதை செய்வதே பிறவிப் பயன்’ என்றோ உங்கள் மனதில் உங்களுக்கான சிம்மாசனத்தை நீங்களாகவே வலிய மற்றவர்களுக்காக கொடுத்துவிட்டு நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ‘ஆச்சா போச்சா…’ என குதிப்பதில் அர்த்தமே இல்லை. யாரும் உங்களை மீறி உங்களை செயல்படுத்தி வைக்கவே முடியாது.

‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு!’ என்று சும்மாவா சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் மிக குறைவே. காரணம், தனி நபர்களுக்கு நாங்கள் சாஃப்ட்வேர்களோ வெப்சைட்டுகளோ அல்லது அனிமேஷன்களோ தயாரித்துத் தருவதில்லை. காரணம் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து பயன்படுத்த வைப்பதற்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பல நூறு பேர் இயங்கும் நிறுவனத்துக்கு சாஃப்ட்வேர்கள் தயாரித்துக்கொடுத்து அவர்கள் அனைவருக்கும் பயிற்சியும் கொடுத்துவிட முடியும். மேலும் நிறுவனங்களில் கம்ப்யூட்டர் செக்ஷன் இருக்கும். அவர்கள் டீம் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களை கையாள்வதில் திறன் பெற்றிருப்பார்கள். எங்கள் பங்களிப்பு சாஃப்ட்வேர் தயாரித்து ஒரே ஒரு முறை பயிற்சி கொடுப்பதுடன் முடிந்துவிடும். இடையில் ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்புகொள்வார்கள். அப்டேட் செய்துகொடுப்போம்.

ஆனால் தனிநபர்களுக்காக தயாரிக்கும் எந்த ஒரு தயாரிப்புக்கும் 24*7 எங்கள் கவனிப்பு அவசியம் தேவைப்படும். அது எங்கள் அன்றாடப் பணிகளை பாதிக்கும் என்பதால் தனிநபர்களுக்கான தயாரிப்புகளை செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை.

நிறுவனங்களுக்கான தயாரிப்புகளிலும் அவற்றைப் பயன்படுத்தப்போவது தனிநபர்கள்தான் என்றாலும் அவர்கள் தனித்தனி குழுக்களாக அந்தந்த நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் நாங்கள் செய்யும் பணி சுலபமாகிறது.

மற்றொரு முக்கியமான விஷயம். ஒரு ப்ராஜெக்ட்டைத் தொடங்கி  செய்துகொண்டிருக்கும்போதே அது சரியாக வராது, குழப்பங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் வரும் என தெரிந்தால் அது எப்பேற்பட்ட ப்ராஜெக்ட்டாக இருந்தாலும் நாசூக்காக சொல்லி அதைவிட்டு விலகிவிடுவேன். இதனால் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்த அனுபவங்களே இல்லை.

பணத்துக்காகவோ, புகழுக்காகவோ இன்னபிற செளகர்யங்களுக்காகவோ எந்த ஒரு விஷயத்தையும் செய்வதே இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். உழைப்பும், அதில் நான் காட்டும் நேர்மையுமே என்னை பெரிய சிக்கல்களில் சிக்கவிடாமல் வழி நடத்துகின்றன.

10. தனிநபர் ப்ராஜெக்ட்டுக்கும், நிறுவனங்களுக்கான ப்ராஜெக்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் எல்லோருக்கும் புரியும்படியாக வெப்சைட்டை வடிவமைப்பதை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன்.

தனிநபர் ப்ராஜெக்ட் என்றால் ஒரு நபரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒரு வெப்சைட்டை வடிவமைத்துக் கொடுப்பதை சொல்லலாம்.

அதே வெப்சைட்டை ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவிற்காக வடிவமைத்துத் தருதல் என்பது நிறுவனம் சார்ந்ததாகச் சொல்லலாம்.

இதே லாஜிக்தான் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆப் இப்படி எந்த தயாரிப்புக்கும்.

எங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்தே சிறு பணியாக இருந்தாலும் அதற்கு முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் அடிப்படையில்தான் பணிகளைத் தொடங்குவோம்.

அதைவிட முக்கியமான விஷயம், பெரும்பாலும் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், ஆவணப்படங்கள் இவை அனைத்துமே எங்கள் காம்கேர் நிறுவன பிராண்டில் நாங்களே தயாரித்து நாங்களே மார்க்கெட்டிங் செய்வதுதான். தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்துகொடுக்கும் ERP (Enterprise Resource planning) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறோம்.

உதாரணத்துக்கு மைக்ரோசாஃப்ட் தன் நிறுவன சாஃப்ட்வேர்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைப் போல். அவர்கள் தனி நபர்களுக்கு என சர்வீஸ் செய்வதில்லை அல்லவா? அவர்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களை பொதுவெளியில் மக்களைப் பயன்படுத்த செய்கிறார்கள். விற்பனை செய்கிறார்கள். மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதே கான்செப்ட்தான்.

நான் மைக்ரோசாஃப்ட்டைப் பார்த்து இப்படி செய்கிறேன் என நினைக்க வேண்டாம். உங்களுக்குப் புரிய வைக்கவே மைக்ரோசாஃப்ட் உதாரணம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

பதிவு எண்: 842 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 111
ஏப்ரல் 21, 2021

வெற்றியாளர், தொடர் வெற்றியாளர் என்பது எல்லாம் மாயை,
நிம்மதியான வாழ்க்கையே வெற்றி!

11. உங்களின் துறை சார்ந்த பணிகளுக்கிடையில் தினம் ஒரு நூல் வெளியீடு, இரண்டாண்டுகளுக்கு மேலாக தினம் ஒரு பத்தியை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவது, இணைய, அச்சு இதழ்களில் கட்டுரைகள் எழுதுவது ஆகியவைகளை முன் கூட்டியே திட்டமிடுகிறீர்களா? அல்லது தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறீர்களா?

என் வாழ்க்கையை கா.மு, கா.பி என இரு வகையாகப் பிரிக்கலாம்.

காம்கேருக்கு முன் என்பது நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். கல்வியுடன் சேர்த்து என் திறமையை, என் ஆர்வத்தை நான் கண்டறிந்த காலகட்டம். காம்கேருக்குப் பின் என்பது நான் படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டம் என சொல்லலாம்.

முதலில் கா.மு பார்க்காலாம்.

என் பத்து வயதில் இருந்து நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என சொல்லி இருக்கிறேன் அல்லவா? முதுகலை பட்டம் முடிப்பதற்குள், அதாவது என் 21 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. விருதுகளும், பரிசுகளும், கெளரவங்களும் கிடைத்துள்ளன.

காலை 3 மணிக்கு எழுந்து 5 மணி வரை எழுதுவேன். என்ன தோன்றுகிறதோ அவற்றை எழுதுவேன். அது கதை, கவிதை, கட்டுரை என ஏதேனும் ஒரு வடிவத்தில் வந்து நிற்கும். 5 மணி முதல் 6 மணி வரை தூங்குவேன். 6 மணிக்கு எழுந்து பள்ளி/கல்லூரி பாடங்களைப் படிப்பேன். 8 மணிக்கு பள்ளி/கல்லூரிக்கு கிளம்பிவிடுவேன். இதுவே என் வாழ்க்கைமுறையாக இருந்து வந்தது.

அந்த காலகட்டத்தில் நான் எழுதுபவற்றை தினமும் ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு அனுப்பி வைப்பேன். தேர்வாகாவிட்டால் திரும்ப அனுப்பத் தேவையான சுயமுகவரியிட்ட கவரை வைத்து அனுப்புவதை வழக்கமாகக் கொள்வேன்.

ஒன்று நான் அனுப்பும் படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாகும் அல்லது திரும்ப எனக்கே வந்து சேரும்.

அடுத்து கா.பி காலகட்டம்.

இந்த காலகட்டத்தில் என் திறமைகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் தானகவே எனை நோக்கி வந்தன.

திறமை, கல்வி, உழைப்பு இவற்றுடன் புதுமையான ஐடியாக்களினால் காம்கேரின் ஒவ்வொரு ப்ராஜெக்ட்டையும் பட்டை தீட்டிக்கொண்டிருந்ததால் கேள்விபடும் இடங்களில் இருந்தெல்லாம் வாய்ப்புகள்.

ஆரம்பத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி. இணைய வளர்ச்சிக்குப் பிறகு இணையம் சார்ந்த மீடியாக்களில் இருந்து வாய்ப்புகள். அத்தனை மீடியாக்களும் என் திறமைகளைக் கொண்டாடின. என் 35 வயதுக்குள் அத்தனை பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் என் திறமை சார்ந்த நேர்காணல்கள். அவை அனைத்துமே என்னை மென்மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டிய காரணிகளாயின. பல பத்திரிகைகள் தங்கள் பத்திரிகை அட்டைப் படங்களை என் புகைப்படங்களால் அலங்கரித்தன.

கால மாற்றத்துக்கு ஏற்ப என் எழுத்தை பல்வேறுவிதமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். என்னைப் பொருத்தவரை என் எழுத்து என்பது எனக்கு வெறும் எழுத்து மட்டுமல்ல. என் ஒட்டு மொத்த கிரியேட்டிவிட்டி.

அதை பத்திரிகை என்ற வட்டத்துக்குள் அடைக்கவே இல்லை. என் கிரியேட்டிவிட்டியை எங்கள் காம்கேரின் அத்தனை படைப்புகளிலும் இணைத்தேன். சாஃப்ட்வேர் மற்றும் ஆப் தயாரிப்புகளுக்கு டாக்குமெண்டேஷன் எழுதுவது முதல் அனிமேஷன், ஆவணப்படங்கள் என எல்லாவற்றிலும் என் கிரியேட்டிவிடிதான். என் ஸ்கிரிப்ட்தான். நாங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அத்தனை தொலைககாட்சி நிகழ்ச்சிகளிலும் என் ஸ்கிரிப்ட் தான்.

தவிர மேடை நிகழ்ச்சிகளில் நான் பேசுவதற்கும் முதலில் முழுமையான முறையான ஸ்கிரிப்ட் தயாரித்து விடுவேன். அதைத்தான் மேடை நிகழ்ச்சிக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ மல்டிமீடியா ப்ரசன்டேஷனுடன் சுவாரஸ்யமாக்கி பேசுவேன். அது நேரடியான மேடை நிகழ்ச்சியாக இருக்கலாம் அல்லது இணைய மேடை நிகழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதே லாஜிக்தான்.

2000-ம் ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள்  ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற தொழில்நுட்பப் பத்திரிகையை தலைமை ஏற்று நடத்தி வந்தேன். அந்தப் பத்திரிகையுடன் சிடிக்களில் அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரித்து இலவச இணைப்பாகக் கொடுத்து செய்தோம். அந்த பத்திரிகையின் பதிப்பாளர் மதுரையை சேர்ந்தவர். பொருளாதார ரீதியாக அவரால் ஈடுகொடுக்க முடியாததால் ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகை நின்று போனது. ஆனால் ஒரு பத்திரிகையை நடத்தும் ஒரு அனுபவத்தையும் பெற்றேன்.

நம் திறமையை வளர்த்துக்கொண்டால் நாம் வாய்ப்புகளை நோக்கி செல்ல வேண்டியதில்லை. வாய்ப்புகள் தானாக நம்மை நோக்கி வரும். ஆனால் அந்தத் திறமை கொஞ்சமாவது சமுதாயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் வெற்றி உங்களை நோக்கி வரும்.

12. வெற்றியாளராக இருப்பதை விட அதைத் தொடர்ந்து தக்க வைப்பது தான் இன்றைய வெற்றியாளர்களுக்கு சவாலான விசயமாக இருக்கிறது. ஒரு தொடர் வெற்றியாளராக இருக்கும் நீங்கள் அதற்குச் சொல்லும் இரகசியம் என்ன?

வெற்றி தோல்வி என்பதை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. என் வாழ்க்கையில் எனக்காக நான் அமைத்துக்கொண்ட பாதையில் நேர்மையான நேர் சிந்தனையுடன் யாரையும் கீழே தள்ளிவிட்டு உயராமல், முடிந்தால் ஒவ்வொருவரையும் என்னுடன் இணையாக அழைத்துக்கொண்டே, சில நேரங்களில் என்னை விட உயரத்துக்கும் செல்ல உதவி செய்துகொண்டே மிக இயல்பாக பயணிக்கிறேன்.

என்னை நோக்கி வாய்ப்புகளும் வெற்றிகளும் தானாக வருவதற்கு நான் செலவிட்டவை என் 21 வயது வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம்.

அப்படியானால்  ‘உங்களுக்கு தோல்விகளே வந்ததில்லையா?’ என கேட்கலாம்.

என்னைப் பொருத்தவரை தோல்வி என்பது குறைந்த அளவிலான வெற்றி, வெற்றி என்பது குறைந்த அளவிலான தோல்வி. வெற்றியாளர், தொடர் வெற்றியாளர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை. வாழ்க்கையே வாழ்வதற்குத்தான். நிம்மதியாக வாழ்வதே பெரிய வெற்றிதான் என்பதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.

நான் நிம்மதியாக வாழ்கிறேன். அது பிறர் பார்வையில் தொடர் வெற்றியாளர் என்ற பார்வையைக் கொடுக்கிறது. அவ்வளவுதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. கோபி சரபோஜி!

(Visited 514 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon