ஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 151
May 30, 2020

கேள்வி:   வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா?

நான் மருத்துவர் அல்ல. ஜோதிடரும் அல்ல. முழு நேர சமூக சேவகரும் அல்ல. ஆனாலும் என் அனுபவம் காரணமாக என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை வாரி வழங்க முடிகிறது. அவ்வளவுதான்.

நேற்று நான் எழுதி இருந்த ‘நீங்கள் பணி நீக்கப் பட்டியலில் இருக்கிறீர்களா?’ என்ற பதிவைப் படித்த ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருக்கும் நண்பர் ஒருவர் ஐடியில் பணி புரிந்துவரும் தன் மகளுக்கு சில வருடங்கள் முன்பு லே ஆஃபினால் ஏற்பட்ட மனோரீதியான பிரச்சனையையும் அதில் இருந்து அவர் மீண்டு இப்போது நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வருவதையும் மிக உருக்கமாக மெசஞ்சரில் தனித்தகவலாக எழுதி இருந்தார். தன்னம்பிக்கை வார்த்தகள் மட்டும் போதாது, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனையும் இருந்தால் மட்டுமே மன உளைச்சலில் இருந்து வெளிவர முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு தனியாக பதில் அளிப்பதைவிட நான் எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன் என்பதை பொதுவில் பதிவிட்டால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றையப் பதிவு இப்படியாக.

தனிநபர் பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு முதலில் தேவைப்படுவது தன்னம்பிக்கை. அதற்கடுத்து அந்தப் பிரச்சனை தீர்வதற்கான வழிகள். அதற்கும் அடுத்தது பிரச்சனையினால் மனோ ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான தகுந்த மருத்துவ ஆலோசனைகள். இப்படி படிப்படியாக பல வழிமுறைகளைத் தாண்டி சம்மந்தப்பட்டவர்களை அந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வந்து, பிரச்சனையை தூரத் தள்ளிவைக்கப் பழக்கி பின்னர் புதிய பாதையில் பயணிக்க மனதையும் உடலையும் தயார் செய்ய வேண்டும்.

என்னுடைய பணி முழுக்க முழுக்க தொழில்நுட்பம். ஆனாலும் என்னுடைய இளம் வயதிலேயே நிறுவத்தைத் தொடங்கி நடத்தி வரும் அருமையான சூழல் வாய்க்கப்பெற்றதால் கம்ப்யூட்டர்களுடன் சேர்த்து மனிதர்களின் மனங்களையும் படிக்கக் கற்றுக்கொண்டேன். கம்ப்யூட்டர் பிரச்சனைகளை நிமிடத்தில் சரி செய்ய முடிவதைப் போலவே, என்னுடன் பணிபுரியும் வல்லுநர்களையும் மனித மனங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது. முடிகிறது.

பொதுவாகவே பிறரது பிரச்சனைகளை என்னுடையதாக எண்ணிப் பார்க்கும் பக்குவம் இருந்ததால் மனித மனங்களைக் கற்பதில் சிக்கல் ஏதும் இல்லை. அதனால்தான் உளவியல் ரீதியாக எந்த ஒரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. அதற்கேற்றவாறு என்னையும் நான் இயங்கும் களத்தையும் தளத்தையும் சூழலையும் வடிவமைத்துக்கொள்ள முடிகிறது.

பிறரது பிரச்சனைகளை அவர்கள் பிரச்சனையாக நினைத்தால் ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயமா, யாருக்கு நடக்காதது உங்களுக்கு நடந்துவிட்டது’ என ‘ஜஸ்ட் லைக் தட்’ சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் பிறர் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும் பக்குவமும் மனநிலையும் உள்ளவர்களால் மட்டுமே பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி சம்மந்தப்பட்டவரை நகர்த்த முடியும். அப்படி நகர்த்துவதற்கான திறனும் அவர்களுக்குள் வலுவடையும்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

ஒருசிலர் நடக்கின்ற பிரச்சனைகளுக்கும் அவர்களது மனோ ரீதியான மாற்றங்களுக்கும் அவரது ஜாதகத்தில் அந்த காலகட்டத்தில் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்புவார்கள். தவறில்லை. அவரவர் நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கை ஒருதுளி தன்னம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்துமேயானால் அந்த நம்பிக்கையை நாம் மட்டம் தட்ட வேண்டாமே.

என் அப்பா வழி தாத்தா, பெரியப்பா என வழிவழியாக  ஹோமியோபதி மருத்துவத்தில் அனுபவம் உள்ளவர்கள். அந்த வகையில் என் அப்பாவுக்கும் அதில் ஈடுபாடு. தன் அப்பா, அண்ணா இவர்கள் கூடவே இருந்ததால் ஹோமியோபதியில் அனுபவமும் உண்டு. ஆனால் என் அப்பா பணி சார்ந்து பிறதுறை சென்றுவிட்டதால் அந்த அனுபவத்தை குடும்பத்துக்குள் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துகிறார்.

அதுபோல என் தாத்தாவுக்கு ஜோதிடத்தில் அதீத ஞானம். ஜாதகம், ஜோதிடம் இதெல்லாம் ஏதோ வெறும் கட்டங்கள் என்றோ, ராசி நட்சத்திரம் என்றோ, சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி பலன்கள் சொல்வது என்றோ அத்தனை சுலபமாக நினைத்துவிடாதீர்கள். ஜோதிடம் என்பது அதையெல்லாம் தாண்டிய துல்லியமானக் கணக்கு. உண்மையிலேயே அந்தக் கணக்கில் புலமைப் பெற ஆழமாக கற்றிருக்க வேண்டும். ஆழ்ந்த புலமை வேண்டும். ஏராளமான அனுபவம் வேண்டும். அந்தப் புலமை என் தாத்தாவிடம் உண்டு. என் அப்பாவுக்கும் உண்டு. அந்த வகையில் அடுத்தத் தலைமுறையினரான எங்களுக்கும். நாங்கள் படித்ததும் இயங்குவதும் தொழில்நுட்பம் என்பதால் ஜோதிடத்துக்கான சாஃப்ட்வேரை உருவாக்கினோம்.

இந்தக் கதையெல்லாம் எதற்காக சொல்லிக்கொண்டிருக்கிறேன் என யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன். உளவியல் ரீதியாக ஆலோசனை சொல்வது என்னுடைய முழுநேரப் பணியும் அல்ல முழு நேர சேவையும் அல்ல. என்னிடம் கேட்பவர்களுக்கு எனக்குத் தெரிந்த முறையில் நானறிந்த வகையில் ஆலோசனைகள் கொடுப்பதுண்டு.

பிரச்சனைகளை உள்ளது உள்ளபடி பார்த்தல், மனோரீதியாக உளவியலாக சிந்தித்தல், ஜோதிட ரீதியாக ஒப்பிட்டுப் பார்த்தல் என பிரச்சனையை துண்டு துண்டாக சிறியதாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டுபிடிக்கிறேன். பிறரது பிரச்சனைகளை மட்டுமல்ல. நான் எதிர்கொள்ளும் பிரச்சனைக்களுக்குக் கூட.

எளிமையாகத் தோன்றும் வலிமையான ஹோமியோபதி மருத்துவத்தையும், தேவைப்பட்டால்  நம்பிக்கைச் சார்ந்த ஜோதிட சாஸ்திரத்திரத்தையும், என் பெற்றோரின் அனுபவங்களையும், என்னுடைய கல்வி கேள்வி வாழ்க்கை அனுபவங்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு முடிந்த அளவுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அனுப்புகிறேன்.

முக்கியமாக அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கிறேன். அதுவே மிகப் பெரிய மருந்தல்லவா?

மீண்டும் முதல் பத்தியை வாசிக்கவும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon