ஹலோ With காம்கேர் -211: லாக் டவுன் காலத்து நிகழ்வுகள்!

ஹலோ with காம்கேர் – 211
July 29, 2020

கேள்வி: ‘லாக் டவுன்’ காலத்து நிகழ்வுகளில் உங்கள் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடந்த  நல்லவற்றையும், நல்லவை அல்லாதவற்றையும் சொல்ல முடியுமா?

முதலாவதாக,

சாதாரண நாட்களில் காலை 7 மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்றால் இரவு 9 மணி ஆகும் வீடு திரும்ப. இந்த லாக் டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் நிர்வாகம் செய்ததால் அப்பா அம்மாவுடன் நிறைய நேரம் செலவிட முடிந்தது. இதனால் அவர்களுடன் நிறைய விஷயங்களை நிதானமாக பேசவும், புத்தகம் வாசிக்கவும், அமேசானில் சினிமா பார்க்கவும், கூடுதல் நேரம் வாக்கிங் செல்லவும், கிரியேட்டிவாக புதுப்புது கான்செப்ட்டுகளை யோசிக்கவும் முடிந்தது.

இரண்டாவதாக,

நேற்று, புதுக்கோட்டையில் இருந்து என் வாசகர் ஒருவர் போன் செய்திருந்தார். நான் என்ன புத்தகம் எழுதினாலும் வாங்கிவிடுவார். நீண்டநாள் வாசகர். தொழில்நுட்பம் தொடர்பாக நான் எழுதிய முதல் புத்தகத்தில் இருந்து இதோ சென்ற வருடம் வெளியான 120- ஆவது ‘Big Data’ புத்தகம் வரை வாங்கி  இருக்கிறார். 121-ஆவது புத்தகமான ‘டேட்டா சயின்ஸ்’ புத்தகத்துக்கு முன் பதிவு செய்து வைத்துள்ளார். என் புத்தகங்களின் தீவிர வாசகர். எங்கள் அனிமேஷன்  படைப்புகள் சிடிக்களில் வந்துகொண்டிருந்த காலத்தில் அவர் குழந்தைகளுக்காக அவற்றையும் தவறவிடாமல் வாங்கிவிடுவார். பின்னர் அவை யு-டியூப், ஆப்பில் வெளியாக ஆரம்பித்த பிறகு அவர்கள் பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள்.

இவர் ஒரு மாற்றுத்திறனாளி. ஆரம்பத்தில் எஸ்டிடி பூத் வைத்திருந்தவர் கம்ப்யூட்டர் பரவலாக ஆரம்பித்த பிறகு டிடிபி சென்டர் ஆரம்பித்து நடத்திவந்தார். கம்ப்யூட்டர் சென்டர் சென்று கம்ப்யூட்டர் படித்தாலும் நான் எழுதிய புத்தகங்களை படித்துதான் மிக விரிவாக தொழில்நுட்பம் கற்றறிந்ததாக அடிக்கடி சொல்வார்.

நேற்று போன் செய்தபோது தான் சமையலுக்காக ஒரு யு-டியூப் சேனல் ஆரம்பித்திருப்பதாகவும், அவர் மனைவிதான் அதை நடத்தி வருவதாகவும் வீடியோ எடிட்டிங் என அத்தனையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார். எல்லாமே ஸ்மார்ட்போனிலேயே செய்துவிடுவதாக சொன்னவர், சேனல் எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சேனலுக்கு நிறைய பார்வையாளர்களை எப்படி சேர்ப்பது என்றும் டிப்ஸ்களை கேட்டறிந்தார்.

அவர் வளர்ச்சி அபாரம். மாற்றுத் திறனாளி. எஸ்டிடி பூத்தில் இருந்து தொடங்கிய பயணம் கம்ப்யூட்டர் டைப்பிங், பிரவுசிங் சென்டர் டிடிபி சென்டர் என மெல்ல மெல்ல வளர்ந்து இன்று சொந்தமாக யு-டியூப் சேனலும் ஆரம்பித்துவிட்டார். எல்லாமே சிறிய அளவில்தான் என்றாலும் தொழில்நுட்பத்துடன் அவர் இணைந்து வளர்வது எனக்கு பெரு மகிழ்ச்சியே.

‘நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல மேடம், புதுக்கோட்டை வந்தால் நிச்சயம் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்,  உடம்பை பார்த்துக்கோங்க, உங்களை நம்பி உங்கள் நிறுவனம் இருக்கிறது’ என்று அன்புடன் சொல்லி பேச்சை முடித்தார்.

மூன்றாவதாக,

எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் வெளியிட்ட ‘Big Data’ புத்தகமும், சூரியன் பதிப்பகம் வெளியிட்ட ‘ஸ்மார்ட்போனில் சூப்பர் உலகம்’ புத்தகமும் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு பாடதிட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எந்த பல்கலைக்கழகம் என்பதை அஃபிஷியல் அறிவிப்பு கிடைத்தவுடன் சொல்கிறேன்.

நான்காவதாக,

எங்கள் காம்கேர் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆன்லைன் மீட்டிங்குகள், ப்ராஜெக்ட் இப்ளிமென்டேஷன்கள் என்று நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களையும் ஆன்லைன் பணிக்கு சாத்தியமாக்க முடிந்தது. ‘லாக் டவுன்’ ஆரம்பித்த நாளில் ஆன்லைனில் பணி என முடிவானபிறகு நான் அனைவருக்கும் அறிவுறுத்தியது ஒரே  ஒருவிஷயத்தைதான்.

‘வசதியாக உட்கார்ந்து வேலை செய்யும் அளவுக்கு ஒரு டேபிள் சேர் ரெடி செய்துகொள்ளுங்கள்.  இல்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி என அத்தனை வலிகளும் வந்துவிடும்’

இடையிடையில் லாக் டவுன் தளர்த்தப்பட்டபோது குறைந்தபட்ச வல்லுநர்களை வைத்துக்கொண்டு ஒருசில ப்ராஜெக்ட்டுகளை முடிப்பதற்காக நான் நேரடியாக அலுவலகம் சென்று வர வேண்டி இருந்தது.

இதனால் இலக்கிய அமைப்புகள், யு-டியூப் நேர்காணல்கள், ஃபேஸ்புக் லைவ் என ஒருசிலர் அழைத்த ஜூம் மீட்டிங்குகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஒருசில மீடியாக்களுக்கு போனில் பேட்டி கொடுத்தேன். சில மீடியாக்களுக்கு நானே வீடியோவில் பேசி ரெகார்ட் செய்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அனுப்பினேன். வழக்கமாக எழுதும் புதிய தலைமுறை பெண், நம் தோழி போன்றவற்றுக்கு தொடர் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். தவிர சில புத்தகங்கள் எழுதி முடித்தேன்.

சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆப், ஆவணப்படங்கள் என வழக்கமான பணிகளும் ஆன்லைன் நிர்வாகத்தில் நடந்துகொண்டே இருந்தன. எங்கள் தயாரிப்புகளின் விற்பனையும் விரிவாக்கமும் லாக் டவுன் முடிந்து நிலைமை சரியான பிறகுதான் என்பதால் புது ப்ராஜெக்ட்டுகள் குறித்து யோசிப்பது கொஞ்சம் சிரமமான செயலாக இருக்கிறது.

இதுபோல லாக்டவுன் காலத்தில் என் நாட்கள் இப்படியாக மகிழ்ச்சியுடன் கடந்திருந்தாலும் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என ஒருசிலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தது, அவர்களை நேரில் சென்று பார்க்க முடியாதது போன்றவை மனதை உருக்கிய நிகழ்வுகளாயின.

எது நடந்தால்தான் என்ன, எல்லோருக்கும் நடப்பது நமக்கும் என்ற மனப்பக்குவம் மட்டுமே சிரமமான காலகட்டத்தையும் சிரமமின்றி கடத்த உதவும்.

கிருமி, நோய், மருந்து பயமின்றி வாழும் நல்ல காலம் இதோ வெகு அருகில். வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 6 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari