பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவரும் ஒரு பெண்மணியே.
அவர் சகோதரி நிவேதிதை.
மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார். ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்தத்துடன் பாரதியாரிடம், ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்’, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.
மற்றொரு நிகழ்வு.
பாரதியார் ஒருமுறை கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது, தேசப் பக்தர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பாரதியாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடியும் தருவாயில், பாரதி தன்னை சகோதரி நிவேதிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அத்துடன், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக்காட்டினார். அதனைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா. அப்போது, ‘உன் கவித் திறமையை பாரத மாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள்…’ என்று பாரதியிடம் வேண்டுகோள் வைத்தார் நிவேதிதா.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு… நிவேதிதா, பாரதியின் வழிகாட்டியாய், ஞானகுருவாய் விளங்கினார்.
பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடல்களைப் பாடுவதற்கும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதாவே காரணமாக இருந்தார்.
பின்னாளில் தான் எழுதிய ‘ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார், நிவேதிதையை குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு சமர்ப்பணம் செய்தார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே பெரிய விஷயமாய் இருந்த காலகட்டத்தில்…
ஒரு பெண்ணே பல விஷயங்களில் தனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்று தைரியமாக சொன்னதோடு அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டு…
எழுத்தில் மட்டும் பெண்களைக் கொண்டாடாமல் நிஜத்திலும் மதித்து வாழ்ந்து காட்டிய பாரதியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எழுத்தும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல… இரண்டும் வேறாக இருப்பவரின் எந்த படைப்பையும் என்னால் ரசிக்கவும் முடிவதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை… இது என் தனிப்பட்ட கருத்து… என் கருத்தின்படியே நானும்…
http://www.akshra.org/ என்ற வெப்சைட்டில் (24 இந்திய மொழிகளில் இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ்) பாரதிக்கும், தாகூருக்கும் அஞ்சலி கட்டுரைகளை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட பாரதியின் நினைவலைகளில் இந்தப் பதிவு…
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
செப்டம்பர் 22, 2018
ஹிந்து மித்திரன் பத்திரிகையில் (அக்டோபர் 15-31, 2018) வெளியான கட்டுரை