Picture-1
புகழ் – நம்மிடம் இல்லாத திறமைக்காக ஏங்கும் விஷயம் அல்ல. நம்மிடம் பூரணத்துவம் பெற்றிருக்கும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம்.
சிலருக்கு இயல்பாகவும் இயற்கையாகவுமே புகழ் கிடைத்துவிடும். சிலர் கொஞ்சம் PRO செய்து பெறுவார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பது அவர்களின் பேச்சு, நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்துவிடும்.
ஒரு திறமைமிக்க மனிதன் ஏதேனும் ஒரு புள்ளியில் தவிர்க்க முடியாத நபராக வேண்டும். பின்னர் அந்த சூழலே அவனை புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.
எல்லோரையும்போல பத்தோடு பதினொன்றாக இருந்தால் அவனால் அந்த புள்ளிக்கு வரவே முடியாது.
எந்தப் புள்ளியில் அவன் தவிர்க்க முடியாத மனிதனாகிறான் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம்.
அந்த சூட்சுமம் பிடிபட்டு அந்தப் புள்ளிக்கு வந்துவிட்ட ஒருவனுக்குக் கிடைக்கின்ற மாலை மரியாதை கேமிராக்களின் ஃப்ளாஷ் லைட் போன்றவை அவன் தானே தனக்குப் பூட்டிக்கொண்ட விலங்குகள். பெரும்பாலான நேரங்களில் அவற்றுக்குக் கட்டுப்பட்டே செயல்பட வேண்டியிருக்கும்.
பொதுவெளியில் தன் இயல்பில் இருக்க முடியாது. உதாரணத்துக்கு ஒருமணிநேர நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் வெகு கான்ஷியஸாகவே இருக்க வேண்டும். அமர்தல், சிரித்தல், முகபாவனை என சின்ன சின்ன அசைவிலும் கவனம் வேண்டும்.
புகழ் பூட்டிய விலங்கு
சமீபத்தில் நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகரின் மொபைலை தட்டிவிட்ட செய்தி பரபரப்பானது.
அவர் இடத்தில் நாம் இருந்திருந்தாலும் இதையேத்தான் செய்திருப்போம். முன்பின் அறிமுகமில்லாத நபர் நம் அருகில் வந்து செல்ஃபி எடுக்க முயன்றால் நமக்குக் கோபம் வரத்தானே செய்யும். நாம் நம் கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவோம். முகத்தை சுருக்குவோம். கடுமையான வார்த்தைகளால் திட்டுவோம். வாக்குவாதம் முற்றினால் அவரது மொபைலை தூக்கி அடிப்போம்.
ஆனால் இதை ஒரு பிரபலம் செய்ய முடியாது. கூடாது. உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அவரது புகழ் அவருக்கு பூட்டிய விலங்கு அது.
பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களை கடவுள் ஸ்தானத்தில் வைத்திருப்பதால்தானே தங்கள் ஆதர்ச சினிமா நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் நாளில் அவர்கள் கட் அவுட்டுக்கு மாலை மரியாதை பால் அபிஷேகமெல்லாம் செய்கிறார்கள்.
ஒரு நிகழ்ச்சிக்கு சினிமா துறை சார்ந்த பிரபலம் தலைமை தாங்குகிறார் என்றால் வருகின்ற கூட்டத்துக்கும், தமிழ் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களோ அல்லது கல்வியாளர்களோ தலைமை தாங்கும்போது வருகின்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.
2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் இறுதிச்சடங்குக்கும், வானொலி அண்ணா கலைமாமணி கூத்தபிரான் இறுதிசடங்குக்கும் வந்திருந்த கூட்டமே பிரபலங்களின் தரவரிசையை ஊர்ஜிதம் செய்கின்றன.
சினிமா இயக்குநரின் ஊர்வலத்துக்கு கூட்டமோ கூட்டம். வானொலி அண்ணா கூத்தபிரான் இறுதிச்சடங்குக்கு அவரது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே.
இயக்குநருக்கான கூட்டத்துக்குக் காரணம் அவர் மீதுள்ள உண்மையான அன்பு என்பதையும் தாண்டி அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் நடிகை நடிகர்களைக் காண கூடிய கூட்டமே அதிகம்.
இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் காரணம், நாம் வளர்த்துவிட்ட வழக்கமும் பழக்கமும்தான்.
ஒரு பொது இடத்தில் ஏதேனும் ஒரு நடிகரை / நடிகையைப் பார்த்துவிட்டால் முகமெல்லாம் பரவசமாக ஏதோ வேற்றுக்கிரஹத்தில் இருந்து வந்தவர்களைப் போல பார்ப்பதும், அவர்களுடன் பேசத் துடிப்பதும், ஆட்டோகிராஃப் வாங்க ஆசைப்படுவதும் நம்மில் பெரும்பாலானோரின் இயல்புதானே.
இப்போதெல்லாம் கையெழுத்தில் ஆட்டோகிராஃப் வாங்கும் மோகம் போய், செல்ஃபி எடுத்து விஷுவல் ஆட்டோகிராஃபாக்கிக் கொள்ளும் மனோநிலைக்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளோம்.
இப்படி சினிமாத்துறை சார்ந்த நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவர்களுக்கு அடுத்தகட்டமாக புகழ் வளையத்துக்குள் வருபவர்கள் டிவியில் செய்தி வாசிப்பாளர், ஸ்பெஷல் ஷோ நடத்துபவர்கள், நிகழ்ச்சி ஆங்கர்கள்.
இதற்கும் அடுத்தகட்டமாக இலக்கியத்துறைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்.
ஆனாலும் பொதுவாக அனைவருக்கும் அறிமுகம் ஆகி இருப்போர் சினிமாத் துறையினர் மட்டுமே. இவர்களிலும் உலக அழகி ‘ஐஸ்வர்யாராய்’ பற்றி கூட தெரியாதவர்களும் இருக்கிறார்கள். அத்தகையோரின் பர்சன்டேஜ் மிகமிகக் குறைவு.
2018-ல் தன் 88 வயதில் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் மறைவுக்கு வந்திருந்த 40 பேரில் 30 பேர் அவரது உறவினர்கள் மட்டுமே.
1921-ல் தன் 39 வயதில் இறந்த பாரதியின் மறைவுக்கு 20 பேர்தான் வந்திருந்தனர்.
இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பிரபலங்களின் வரிசையில் முதலாவதாக சினிமா நடிகர்கள் மட்டுமே என்பது நிரூபணமாகிறது.
சாதாரணனும் பிரபலங்களும்!
சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சாளர், உடன் பங்கேற்ற மற்றொருவரும் ஒரு பேச்சாளர். அவர் எழுத்தாளர் என்பது கூடுதல் செய்தி.
அவர் பேச ஆரம்பிக்கும்போது மைக்கில் என் குறித்து பேசுகையில்… ‘மேடம் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருப்பதாக அறிமுகம் செய்து வைத்தார்கள். ஆனால் எனக்கு இவங்களை பற்றி எதுவுமே தெரியாது…. அடுத்த முறை வேறேதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது இவரை தெரிந்து வைத்துக்கொண்டு பேசுகிறேன்…’ என்றாரே பார்க்கலாம்.
என்ன சொல்வது?
எல்லோருக்கும் எல்லோரையும் தெரிய வேண்டும் என்பதில்லை. இலக்கியம், கதை கவிதைகள் எழுதுபவர்களுக்கு தொழில்நுட்ப புத்தகங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டிய வாய்ப்பில்லை என்றே வைத்துக்கொள்வோம்.
ஆனால் மேடை நிகழ்ச்சி என்று வரும்போது சக பேச்சாளர்கள் குறித்து முன்பே தெரிந்து வைத்திருக்க வேண்டும். பக்கம் பக்கமாக இல்லை என்றாலும் சுருக்கமாகவாவது. அதுதான் அடிப்படை மேடை நாகரிகம்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனிடம் ஒரு தொலைக்காட்சியிலிருந்து தொலைபேசி வழிப் பேட்டி எடுக்கிறார்கள். சேனலில் பேசிய பெண் ‘மேடம், உங்ககிட்ட ஒரு கேள்வி’ என்று ஆரம்பிச்சதும் எழுத்தாளர் குறுக்கிட்டு, நான் மேடம் இல்லை, சார்தான்’ என்று சொல்லி இருக்கிறார்.
யாரிடம் பேசப் போகிறோம், அவர் ஆணா, பெண்ணா, எப்படிப்பட்டவர், என்ன செய்கிறார் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாமல் எப்படி பேட்டி எடுக்க வருகிறார்கள்.
இதுவே ஒரு நடிகை அல்லது நடிகராக இருந்தால் இந்தக் குழப்பம் வந்திருக்காது. காரணம் அவர் பிரபல வரிசை எண்ணில் முதலாவது பிரிவில் இருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள் நம் முனைப்பின்றி நமக்குள் செல்ல வாய்ப்புகள் ஏராளம்.
எங்கள் குடும்பத்தில் ஒருவர் தன் 40 வயதுவரை திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என சொல்லி வந்தார். ஒரு நாள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு வந்த பிறகு தன் பெற்றோரிடம் தன்னுடன் படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார்.
ஆனால் அந்தப் பெண் குறித்த விஷயங்கள் அவருடைய பெற்றோருக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் மகனின் சந்தோஷத்துக்காக ஒத்துக்கொண்டு சீரும் சிறப்புமாக அந்தத் திருமணத்தை ஜமாய்த்து விட்டார்கள்.
அந்த பெண் ஏற்கெனவே திருமணம் ஆகி கணவனை இழந்தவர். 5 வயதில் ஒரு மகனும் உண்டு. இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். முன்னாள் மாணவர்கள் மீட்டிங்கில் சந்தித்த பிறகு ‘நாம் ஏன் இவரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது’ என மண்டையில் மணி அடிக்க ஆசையை பெற்றோரிடம் சொல்ல அந்தப் புரட்சித் திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தேறியது.
இதே நிகழ்வு ரஜினி போன்ற மெகா பிரபலத்தின் வீட்டில் நடைபெறும்போது அது சமுதாயத்தின் பார்வையில் பெரும் புரட்சியாகிறது. அவரது இரண்டாவது பெண்ணின் இரண்டாவது திருமணம் அவரது குழந்தையின் முன்னிலையில் நடந்ததை பெரிய விஷயமாக கொண்டாடுகிறார்கள்.
இதுதான் சாதாரணனுக்கும், பிரபலத்துக்குமான வித்தியாசம்.
சாதாரணன் வீட்டில் எது நடந்தாலும் அது அவன் குடும்பத்துக்குள் அடங்கிவிடும். பிரபலத்தின் வீட்டில் சின்ன தூசி விழுந்தாலும் அது பெரிய விஷயமாக அலசப்படும்.
பிரபலங்களின் எண்ணம், சொல், செயல் எல்லாமே கண்காணிப்பு வளையத்துக்குள். அவர்களை தங்கள் ரோல் மாடலாகக் கொள்பவர்கள் ஏராளம்.
பிரபலங்கள் தங்களை நன்றாக வடிவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கும் புகழ் என்ற அந்தஸ்துக்கு அவர்கள் காட்டும் மரியாதையும்கூட.
யோசிப்போம்!
ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/02/23/8
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 16