சுருங்கச் சொன்னால் தன் குழந்தைகளை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பி விட்டு நோட்டு புத்தகம் வாங்கிக்கொடுப்பதும், கட்டணம் செலுத்துவதும் மட்டுமே நம் கடமை என்று செயல்பட்டால் அந்தப் பெற்றோர்களை சாதாரண டேட்டா பேஸ் சாஃப்ட்வேர்களோடு ஒப்பிடலாம். இந்த வகை பெற்றோர்கள் பெற்ற கடமைக்கு படிக்க வைக்கும் வகையில் அடங்குவர்.
மேலே சொன்னவற்றையும் தாண்டி தன் பிள்ளைகளின் நெருங்கிய நண்பர்களின் பெயர் மற்றும் அவர்களின் பெற்றோர் பற்றிய தகவல்கள், ஆசிரியர்கள், விரோதியாக எண்ணி செயல்படும் நட்புகள் குறித்த விழுப்புணர்வு, தன் பிள்ளைகளுக்கு எந்த சப்ஜெட்டில் ஆர்வம் உள்ளது, அதை எப்படி மேம்படுத்தலாம், அதற்கான போட்டிகளில் எப்படி கலந்துகொள்ளச் செய்யலாம் என்பது போன்ற தகவல்களை தெரிந்து வைத்திருப்பதோடு அவர்கள் நண்பர்களை மட்டுமல்லாது விரோத மனப்பான்மையோடு செயல்படும் நண்பர்களையும் அவ்வப்பொழுது வீட்டுக்கு அழைத்து பேசி அவர்களுக்குள் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதும், அடிக்கடி ஆசிரியர்களை சந்தித்துப் பேசி பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள், படிப்பு, குணநலன்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதும் அவசியம்.
மேலும் சாதாரணமாக அதிக மதிப்பெண் பெறும் பிள்ளைகள் மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அடிக்கடி சிடுசிடுத்தாலோ அல்லது பேச்சைக் குறைத்தாலோ அல்லது இரவில் வெகுநேரம் தூங்காமல் தவித்தாலோ அவர்களுக்குள் என்ன மாற்றம் ஏற்படுள்ளது ஏன் இப்படி செய்கிறார்கள் எப்படி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருவது என ஆராய்ந்து அறிய வேண்டும்.
மேக் அப்பில் அதிக ஆர்வமில்லாத பிள்ளைகள் மேக் அப்பில் அதிக கவனம் செலுத்தினாலோ அல்லது தொடர்ச்சியாக போனில் பேசிக்கொண்டும், வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றத்தில் இருந்தாலோ அல்லது சாப்பாடு குறைந்தாலோ பிள்ளைகள் காதல் போன்ற செயலில் ஈடுபடுகிறார்களோ என பெற்றோர் அலர்ட் ஆகி கொஞ்சம் கவனமாக கண்காணித்து திருத்த வேண்டும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படை கடமையோடு அவர்களை நல்ல குணநலன்களோடு திறமைசாலிகளாக புத்திசாலிகளாக வளர்ப்பதோடு அவர்களிடம் ஏற்படும் சிற்சில மாற்றங்களையும் கவனித்து தேவைப்பட்டால் அலர்ட் செய்து கொஞ்சமாக கண்டித்தும் தேவைப்பட்டால் மன்னித்தும் பிள்ளைகளை வளர்ப்பவர்கள் ‘பிக் டேட்டா’ போல செயல்படும் பெற்றோர்கள். இவர்கள் நல்ல அனலிடிகல் திறன் பெற்ற பெற்றோர்கள். பல்வேறு கோணங்களில் சிந்தித்து பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதையை சீரமைக்க வல்லவர்கள்.
சாதாரண டேட்டா பேஸ்கள் தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும். தேவைப்பட்டால் தேவைப்பட்ட தகவல்களை தேடி எடுத்து பயன்படுத்த உதவி செய்யும்.
பிக் டேட்டா என்பது அனலிடிகல் தன்மை வாய்ந்தது. தன்னிடம் குவித்து வைத்துள்ள தகவல்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக அதி வேகமாக அலசி ஆராய்ந்து, தேவைப்படும் தகவல்களை மட்டுமில்லாமல், தேவைப்படாமலேயே சரியான நேரத்தில் தானாகவே தகவல்களை எடுத்துக் கொடுக்கும் அதி புத்திசாலி டேட்டா பேஸ்.
இதற்காகவே ஹடூப், நோ எஸ்.கியூ.எல், எம்.பி.பி , மங்கோடிபி போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதோடு அதில் என்னதான் நடக்கிறது என தெரிந்துகொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட.
பிக் சல்யூட் to பிக் டேட்டா!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software private Limited
மார்ச் 25, 2019
(குங்குமம் – வார இதழில் 2017-ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து…)