சமீபத்தில் நடிகை நயன்தாராவை அதே சினிமா துறைச் சார்ந்த ஒரு நடிகர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் எதிர்மறையாக விமர்சித்ததை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
இது சினிமா துறைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெண்களுக்கும் பகிரங்கமாக நடக்கின்ற நிகழ்வுகளே.
இன்று சமூக வலைதளங்களும் மீடியாக்களும் பெருகி தொழில்நுட்ப உச்சத்தில் இருப்பதால் பெரும்பாலானோருக்கு அது குறித்து கருத்துக்களைப் பகிர ஒரு களமும், தளமும் கிடைத்திருக்கிறது. அது ஒன்றுதான் பெண்கள் விஷயத்தில் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றம்.
நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பிரைவேட்டாக இந்தி கற்றுக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் எனக்கு வகுப்பெடுக்கும் இந்தி மாஸ்டர் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி குறைவாகப் பேச மாணவர்களும் கைத்தட்டி சிரித்தனர்.
வங்கியில் பணத்தை எண்ணும் ஆண் கேஷியர் லாவகமாக எண்ணுவதையும், பெண்கள் மெதுவாக எண்ணுவதையும் கிண்டல் செய்தார்.
மேலும் பெண்கள் வேலைக்குச் செல்வதே மாதம் ஒரு புடவை வாங்கவும், வருடம் புது நகை வாங்கவும்தான் என்றும் ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார்.
வாயைத் திறந்து பேசவே பயப்படும் மென்மையான சுபாவம் உள்ள அந்த வயதில் எனக்கு எங்கிருந்துதான் கோபம் வந்ததோ தெரியவில்லை.
‘பெண்கள் புடவை, நகைக்காக ஒன்றும் வேலைக்குச் செல்லவில்லை… அவர்களுக்கும் எய்ம் இருக்கிறது…’ என்று அந்த வயதுக்குரிய மொழியில் சற்றே குரலை உயர்த்திச் சொல்ல இந்தி மாஸ்டர் உட்பட மாணவர்கள் அத்தனைபேரின் கவனமும் என் மீதுதான்.
இப்படியாக எல்லா காலங்களிலும் பெண்கள் மீதான விமர்சனங்கள் இருந்துகொண்டுதான் இருந்திருக்கின்றன. நம்மை திசை திருப்பும் யுக்திகள் அவை.
அதற்கெல்லாம் வீண் விவாதம் செய்து சக்தியை இழப்பதற்கு பதில் விவேகமாக ஒரு சொல் ஒரு செயலால் தகுந்த பதிலடிக்கொடுத்துவிட்டு நம் வேலைகளை கவனிப்பதுதான் புத்திசாலித்தனம்.
இப்போதெல்லாம் பெண்கள் ஐடி நிறுவனங்களிலும், மீடியாக்களிலும் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிவது சகஜமாகி வருகிறது.
ஆனால் என் அம்மா 50 வருடங்களுக்கு முன்பே 24 மணி நேர பணி சுழற்சியில் தொலைபேசித் துறையில் பணியில் இருந்தவர். அப்பாவும் அதே துறைதான்.
என் சிறு வயதில் அவர்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு பணி ஓய்வு பெறும் நாள் வரை அவ்வப்பொழுது சென்றிருக்கிறேன். மெகா சைஸ் கட்டிடங்களில் 500, 600 பெண்கள் பணிபுரிந்துகொண்டிருக்கும் அந்த கம்பீரத்தை என் சிறுவயது முதலே பார்த்து ரசித்து வளர்ந்தவள் நான்.
என் அம்மாவைப் போல நானும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன்.
இயற்கை அதற்கும் அடுத்த நிலையாக பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் தொழில்சார்ந்த ஒரு நிறுவனத்தையும், சேவைசார்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தும் அளவுக்கு வாய்ப்பை அள்ளிக்கொடுத்தது.
நம் குறிக்கோளில் உறுதியாக இருந்தால் இயற்கை அதைவிட பலமடங்கு உயர்வான வாழ்க்கையை நமக்கு அளிக்கும்.
ஒரு அப்பாவும் பத்து வயது மகளும் ஒரு பெரிய தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பாதையை அடைத்துக்கொண்டு வழியில் பெரிய மரக்கிளை ஒன்று கீழே விழுந்திருந்தது.
அப்பா அந்தக்கிளையை நகர்த்த முயல, “நான் நகர்த்துகிறேன் அப்பா” என மகள் சொல்கிறாள்.
“சரி, உன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி நகர்த்த முயற்சி செய்” என்கிறார் அப்பா.
மகளும் அப்பா சொன்னபடி நகர்த்த முயற்சிக்கிறாள். ம்ஹும். இம்மியும் நகரவில்லை.
முகம் சோர்ந்து போன மகளிடம், “மீண்டும் சொல்கிறேன். உன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி நகர்த்த முயற்சி செய்” என்கிறார்.
மகள் மீண்டும் முயற்சிக்கிறாள். நகர்த்தவே முடியவில்லை.
அப்பா, “நான் என்ன சொன்னேன்… உன்னுடைய சக்தி முழுவதையும் பயன்படுத்து என்று சொன்னேன். ஆனால் நீ என்னுடைய உதவியை கேட்கவே இல்லை…” என்று சொல்கிறார்.
மகள் புரியாமல் திகைக்கிறாள்.
அப்பா தொடர்கிறார்.
“நம்முடைய சக்தி என்பது சுதந்திரமாக நாம் மட்டுமே தன்னந்தனியாக செயல்படுவதில் மட்டும் இல்லை. செய்கின்ற செயல்களோடு தொடர்புடையவர்களின் உதவியுடன் எடுத்துக்கொண்ட பணியை முழுமையாக வெற்றியாக்குவதில்தான் நம்முடைய சக்தியை சரியாகப் பயன்படுத்தும் மதிநுட்பம் அடங்கியுள்ளது.
மேலும் மற்றவர்களின் உதவியை அல்லது திறமையைப் பயன்படுத்துவதும் எதிர்பார்ப்பதும் நம்முடைய பலவீனம் கிடையாது. அதுதான் நம்முடைய உண்மையான பலம்.”
இந்த நிகழ்வில் அப்பா மகளுக்குச் சொன்ன அறிவுரை குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் பொருந்தும்.
மேலை நாடுகளில் இந்த மனப்பாங்கு இருப்பதை பரவலாகக் காணலாம். வெவ்வேறு துறைகளில் திறமையானவர்கள் பலர் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பணியில் ஈடுபடும் நுட்பத்தை அவர்களால் ஈகோ இல்லாமல் பின்பற்ற முடிகிறது. இதன் காரணமாய் அவர்களால் பல்வேறு துறைகளில் முன்னணியில் நிற்க முடிகிறது.
நம் நாட்டில் தனித்தனியாக ஜெயித்துக்காட்டி புகழை சம்பாதிக்கவே ஆசைப்படுகிறோம். அதில்தான் நம்முடைய திறமை இருக்கிறது என்று நினைக்கிறோம்.
மேலை நாடுகளில் இருந்து எத்தனையோ விஷயங்களை காப்பி அடிக்கிறோம். இந்த விஷயத்தை கண்களை மூடிக்கொண்டு தைரியமாக காப்பி அடிப்போமே!
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,
‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’,
‘மாதா பிதா குரு தெய்வம்’
போன்றவை ஏதோ குழந்தைகளுக்கான அறிவுரை மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அவை அப்பா, அம்மா, குரு ஸ்தானத்தில் இருக்கும் ‘நாமும்’ (அழுத்தி வாசியுங்கள்) அந்த அளவுக்கு தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே உணர்த்துகின்றன.
இந்தக் கோணத்தில் நம்மில் எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்போம்.
நம் பலத்தை நாம் அறிவோமே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
November 4, 2019
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (நவம்பர் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 8
புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி நவம்பர் 2019