ஹலோ with காம்கேர் – 16
ஜனவரி 16, 2020
கேள்வி: சென்னையில் ஓர் இரவின் நட்ட நடு நிசி. நிகழ்வது என்ன?
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் அம்மாவை ஏர்போர்ட்டில் இருந்து அழைத்துவர நானும் அப்பாவும் பொங்கல் தினத்துக்கு முன்தினம் இரவு 12 மணிக்கு காரில் கிளம்பினோம்.
பெளர்ணமி முடிந்து நான்காம் தினமானதால் இருட்டை துளைத்தெடுத்துக்கொண்டு நிலவு வெளிச்சம். பார்த்துப் பழகிய சாலைகள் நிலவு ஒளியில் ஓவியம்போல் ஜொலித்தன.
எங்கள் தெரு முனையில் இருந்த சிறிய டிபன் சென்டரில் ஒரு வயதான பெண் தோசை வார்த்துக்கொண்டிருந்தார். யார் இந்த நேரத்தில் சாப்பிட வரப்போகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.
அடுத்திருந்த ஒரு மளிகைக்கடையில் கணவனும் மனைவியும் கணக்கு பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. காலையில் 8 மணிக்கு திறக்கும் கடை. இதோ இரவு மணி 12. ஆச்சர்யம்.
வேளச்சேரி 100 அடி ரோடில் ஓரிரு கார்களும், ஸ்கூட்டர்களும் எங்களுடனேயே பயணித்தன.
மெயின் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக ஒருசிலர் காத்திருக்க, சில இளைஞர்கள் ஓலா ஊபருக்காக போனையும் சாலையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே ஒரு சில ஆட்டோக்களும் ஷேர் ஆட்டோக்களும் வலம் வந்துகொண்டிருந்தன.
சிக்னலை தாண்டி இருந்த ஏ.டி.எம்மின் வெளியே மூன்று பேர் காத்திருக்க ஒருவர் உள்ளே பணம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அருகில் இருந்த டீக்கடையில் ஓரிருவர் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு டீ குடித்தபடி புகைத்துக்கொண்டிருந்தனர்.
A2B ஓட்டலுக்கு அருகே ஆள் அரவமற்ற சாலையில் ஒரு வயதானவருடன் ஒரு இளம் பெண் இரண்டு குழந்தைகளை கைபிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தாள். அவர்களிடம் எந்த லக்கேஜும் இல்லை. அந்த நட்ட நடு இரவில் வெளியே வரும் அளவுக்கு என்ன அவசரமோ என பரிதாபப்பட்டேன்.
ஏர்போர்ட் செல்லும்வரை உள்ள பெட்ரோல் பங்குகள், நட்சத்திர ஓட்டல்கள், பெரிய மால்கள் அனைத்துமே அலங்கார விளக்குகளால் மின்னிக்கொண்டிருந்தன.
ஏர்போர்ட் முழுவதுமே ஜகத்ஜோதியாய் இருந்தது. நுழைவாயிலேயே கரும்பு, பானை, மஞ்சள்கொத்து இவற்றுடன் Happy Pongal என ஆங்கிலத்திலும் தமிழிலும் டிஜிட்டல் வாழ்த்துகள்.
ஏர்போர்ட்டில் பார்வைகளால் உறவுகளை தேடியபடி காத்திருக்கும் கண்களில் தூக்கக் கலக்கத்தையும் மீறி எத்தனையோ எதிர்பார்ப்புகள்.
ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வந்ததால் அம்மாவும் சீக்கிரமே வெளியே வர கிளம்பினோம்.
இரவு மணி 1.30. இப்போது ஊர் சற்றே உறங்கத் தொடங்கியிருந்தது.
100 அடி சாலையின் திருப்பத்தில் ஓர் அப்பார்ட்மெண்ட் வாசலில் மூன்று இளைஞர்கள் நாற்காலியில் அமர்ந்து சிரித்து சிரித்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். நட்ட நடு நிசியில் இப்படி வீதிக்கு அருகே அமர்ந்து பேசுபவர்கள் எனக்கு ஆச்சர்யமே.
எங்கள் வீட்டை கார் நெருங்கியதும், பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் மேலே உள்ள வீட்டின் ஜன்னல் திறந்திருந்தது தெரிந்தது. விளக்கும் எரிந்துகொண்டிருந்தது. ஓம்… ஓம்… என்ற டிஜிட்டல் மியூசிகல் சிஸ்டத்தின் தொடர் சப்தம் மெல்லியதாக ஒலித்துக்கொண்டே இருந்தது. விளக்கையும், மியூசிகல் சிஸ்டத்தையும் ஆஃப் செய்ய மறந்துவிட்டார்களோ என்றெண்ணிக்கொண்டே எங்கள் இருப்பிடத்துக்கு நகர்ந்தோம். அந்த நேரத்தில் அந்த சப்தம் இறை உணர்வை கொடுக்கவில்லை. ஒருவித அச்சத்தையே கொடுத்தது.
தினமும் அம்மாவுடன் வீடியோ காலில் அன்றாட நிகழ்வுகளை பேசிவிடுவது வழக்கம் என்றாலும் சுடச்சுட ஃபில்டர் காபியை சாப்பிட்டுக்கொண்டே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்கச் சென்றபோது இரவு மணி 2.30.
விடிந்தால் பொங்கல். எந்த பொங்கலுக்கு முன் தினமும் இப்படிப்பட்ட கலவையான உணர்வுடன் தூங்கச் சென்றதில்லை.
இதுபோன்ற அழகிய இரவுகள் எப்போதும் வாய்ப்பதில்லையே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software