ஹலோ with காம்கேர் – 82
March 22, 2020
கேள்வி: உருவாக்க முடியாவிட்டால் பரவாயில்லை, உடைக்காமலாவது இருக்கலாமே?
அமெரிக்காவில் ஒரு மூலையில் இயற்கையின் அத்தனை வளங்களுடன் அமைந்துள்ளது அந்த ஊர்.
இரவு மணி 8. வெளியே காற்றில் குளிர் உறைந்திருந்தது.
அந்த மியூசிக் பள்ளி மாணவர்கள் அனைவரும் சென்றுவிட தன் பிள்ளைக்காக காத்திருந்த அவள் பொறுமை இழந்து குளிர் கோட்டை சரி செய்துகொண்டு பள்ளியினுள் நுழைகிறாள்.
மகன் மென்மையாக ஏதோ பாடியபடி மியூசிக் சாதனங்களை சரி செய்துகொண்டிருக்கிறான். சேர் டேபிள்களை அதனதன் இடத்தில் வைத்துவிட்டு கீழே சிதறியிருக்கும் குப்பைகளை எடுத்து சுத்தம் செய்துகொண்டிருக்கிறான். அவன் ஆசிரியர் மற்றொரு அறையில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்.
‘என்னடா, நான் எத்தனை மணி நேரம் காத்திருக்கிறேன். நிகழ்ச்சி முடிந்ததும் வரலாம் அல்லவா…’ என கடிந்துகொள்கிறாள்.
‘அம்மா, எல்லோரும் சென்றுவிட்டால் இந்த இடத்தை யார் சரி செய்வது. யாரோ ஒருவர் ஆசிரியருக்கு உதவி செய்யத்தானே வேண்டும். அந்த யாரோ ஏன் நானாக இருக்கக் கூடாது?’
மியூசிக் பள்ளியில் அவனை விட சீனியர் மாணவனை தவிர்த்து இவனை லீடராக்குகிறார் ஆசிரியர். அவன் ஏற்கெனவே தாழ்வுமனப்பான்மை கொண்டவன் அவன். அவன் தாழ்வுமனப்பான்மையை போக்குவதற்காக ஆசிரியரிடம் சொல்லி அந்த பதவியை சீனியருக்கு கொடுக்கச் சொல்கிறான். மேலும் அவனுக்கு இசையில் தான் அறிந்த நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து அவனை தனக்கு இணையாக திறமைசாலியாக்க முயற்சி எடுத்தான்.
அந்த இசை பள்ளி சார்பாக நகரத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியின் சிறந்த மாணவன் என்ற சிறப்பை அறிவிப்பார். ஒவ்வொரு முறையும் அந்த சிறப்பை அவனுக்கே வழங்குவார் ஆசிரியர். பொறுக்க மாட்டாமல் அவன் ஆசிரியரிடம் சொல்லி இனி ஒவ்வொரு முறையும் வெவ்வெறு மாணவர்களுக்கு அந்த சிறப்பை வழங்கச் சொல்லி பேசியிருக்கிறான். அங்கு ஆசிரியர்களுடன் நட்பாகப் பேச முடியும் என்பது ஒரு வசதி.
அவனுடைய 12 வயதில் இருந்து இசை பயில்கிறான். டிரம்ஸில் சேம்பியன். மோர்சிங், மிருதங்கள் என பல்வேறு இசையில் ஞானம் பெற்றவன். பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் என அனைத்தையும் ஆழமாக தெரிந்து வைத்திருப்பவன். இறை நம்பிக்கை அதிகமுள்ளவன். பெரியோர்களை மதிப்பவன்.
உயிரே போனாலும் பொய் சொல்லவே மாட்டான், பொய் சொல்பவர்களையும் அறிவுரை சொல்லி திருத்துவான். பொதுவெளியில் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பான். தனக்கான சமையலை தானே சமைத்து சாப்பிடுவதில் அலாதி ஈடுபாடு கொண்டவன். பள்ளிக்கு தினமும் சந்தன குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டுதான் செல்வான். யாரும் ஏதும் கிண்டல் செய்ய மாட்டார்களா என கேட்டால் இரண்டு நாட்கள் பேசுவார்கள். பின்னார் இவன் இப்படித்தான் என அவர்களுக்கு புரிந்துவிடும் பேச மாட்டார்கள் என பதில் சொல்லும் மனமுதிர்ச்சி கொண்டவன்.
இவன் வேறு யாருமல்ல. அமெரிக்காவில் வசித்துவரும் என் உறவினரின் மகன்.
இப்படித்தான் பிள்ளைகளும் நமக்குப் பாடம் சொல்லித்தருவார்கள். பொறுமையாக கற்க நமக்குத்தான் நேரம் இருப்பதில்லை.
ஒவ்வொரு குழந்தைகளிடமும் விவேகானந்தரும், அப்துல் கலாமும், சாரதா தேவியும், பாரதியாரும் ஒளிந்திருக்கிறார்கள். எல்லா அழுத்தங்களையும் மீறி அவர்கள் அவ்வப்பொழுது வெளி வரத்தான் முயற்சிக்கிறார்கள். ஆனால் நாம்தான் அவர்களை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி கதவை மூடிவிடுகிறோம்.
நம்மில் பெரும்பாலானோர் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது படிப்பில் 100-க்கு 100 எடுக்க வேண்டும், திறமை இருந்தால் அதையும் சம்பாத்தியமாக்கும் நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆக வேண்டும்.
இந்த டெம்ப்ளேட்டில் இருந்து கொஞ்சம் மாறினாலும் பதட்டமடையும் பெற்றோர்களே இங்கு அதிகம்.
வருங்காலத்து இளம் தலைமுறையினருக்கு வாழும் உதாரணங்களையும் ரோல் மாடல்களையும் உருவாக்க வேண்டியது நம்முடைய கடமையல்லவா?
நம்மால் உருவாக்க முடியவில்லை என்றாலும் தானாகவே வடிவமெடுப்பதை தடுக்காமல் இருப்போமே. குறைந்தபட்சம் உடைக்காமலாவது இருக்கலாமே!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software