ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 17: வீட்டு நிர்வாகத்திலேயே தொழில்முனைவோருக்கான பயிற்சி!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 17
ஜனவரி 17, 2021

வீட்டு நிர்வாகத்திலேயே தொழில்முனைவோருக்கான பயிற்சி!

எங்கள் அப்பாம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்தவர்கள். தொலைபேசி துறையில் பணி.

நிறைய புத்தகங்கள் வாசிப்பார்கள். அவர்கள் சேகரித்து வைத்த பத்திரிகை செய்திகளை நாங்களே எங்கள் கைகளால் பைண்டிங் செய்து புத்தகங்களாக்கி உள்ளோம். அப்படி நாங்களே உருவாக்கிய புத்தகங்களில் உள்ள எழுத்தும், ஓவியமும், சிந்தனைகளும் எங்களுக்குள் நுழைந்து சிறு வயதிலேயே கற்பனைத் திறனை வளர்த்தது.

பெண்கள் அலுவலகங்களுக்குச் சென்று வேலைக்குச் செல்வது, அதுவும் இரவு பகல் என 24 மணி நேர பணி சுழற்சியில் இருப்பது என்பதெல்லாம் அந்த காலத்தில் மிக அரிது. எங்கள் அம்மா அந்த காலத்திலேயே எங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தார்.

அலுவலக வேலையுடன் சேர்த்து தோட்ட வேலை, வீட்டு வேலை என எதையுமே விட்டுக்கொடுத்துக்கொள்ள மாட்டார். சாப்பாடுக்குத் தேவையான காய்கறிகள், பூஜைக்கு அவசியமான பூக்கள், சமையலுக்கு வேண்டிய பொடிவகைகள், வடாம் வகைகள், தின்பண்டங்கள் என அத்தனையும் வீட்டிலேயே தயார் செய்வார்.

உதிரும் தலைமுடியையும் விட்டு வைக்க மாட்டார். அவற்றை சேகரித்து விக்கெல்லாம் கூட தயார் செய்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தீபாவளி, பொங்கல், மழை, வெயில், புயல் என எல்லா நாட்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய பொறுப்பான பணியில் சுறுசுறுப்பாக இயங்கிய எங்கள் அம்மாவிடம் இருந்து ஆளுமையை கற்றுக்கொண்டோம்.

அந்த காலத்தில் ஆண்கள் சமையல் செய்தாலோ அல்லது துணி துவைத்தாலோ அவர்களை ‘பெண்டாட்டிதாசன்’ என கிண்டல் செய்வார்கள். அப்படித்தான் பத்திரிகைகளிலும் ஜோக்குகள் என்ற பெயரில் வெளியாகும். அந்த மாதிரியான சூழலில் சமையல் வேலை, பாத்திரங்கள் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்குதல், எங்களை பள்ளிக்குத் தயார் செய்தல் என அத்தனை வேலைகளையும் முகம் சுளிக்காமல் ஈடுபாட்டுடன் கலைநயத்துடன் செய்த என் அப்பாவிடம் இருந்து பரந்த மனப்பான்மையையும், எந்த வேலையும் கேவலம் இல்லை, ஆணுக்கான வேலை, பெண்ணுக்கான வேலை என்ற பாகுபாடில்லை என்ற உயரிய பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.

எங்களை பள்ளிக்குக் கொண்டுவிட்டு அழைத்துக்கொண்டு வருதல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என எங்கள் அத்தனை தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்ததோடு எங்கள் படைப்பாற்றலை கண்டுகொண்டு எங்களை ஊக்குவிக்கும் விதமாக எங்களுக்கு எங்கள் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்து ஊக்குவித்தார். மொத்தத்தில்  எங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிய அப்பாவிடம் இருந்து பாதுகாப்பு உணர்வை திகட்டத் திகட்டப் பெற்றுக்கொண்டோம்.

அப்பா ஒரு சர்வகலா வல்லவர். எலக்ட்ரிகல் வேலை, மர வேலை, என அனைத்தையும் செய்வார். எங்களுக்கும் அதையெல்லாம் கற்றுக்கொடுத்தார்.

சைக்கிள் ஓட்டக் கற்றுகொடுத்தபோது சைக்கிளில் செயின் அறுந்து போனால் அதை நாங்களே மாட்டி சரிசெய்வது முதற்கொண்டு சைக்கிளில் ஏற்படும் சின்ன சின்ன பழுதுகளை நாங்களே சரி செய்ய பழக்கினார்.

பெண்கள் ஓட்டும் பைக்கெல்லாம் வராத காலத்திலேயே, கியர் வைத்த பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்.

கார் ஓட்டப் பழகி சொந்தமாக கார் வாங்கியவுடன் தமிழகமெங்கும் நாங்களும் எங்கள் அப்பாவும் மாற்றி மாற்றி கார் ஒட்டி காரிலேயே வெளியூர்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.

இருவருமே பணிக்குச் செல்வதால் எங்களை சுயசார்புடன் செயல்பட கற்றுக்கொடுத்தனர். எங்கள் வேலைகளை நாங்களே செய்யப் பழக்கினர்.

இதன் காரணமாய் அசாத்திய தன்னம்பிக்கை எங்களுக்கு அஸ்திவாரமானது. இன்றுவரை எங்களை சரிவர இயக்குவதும் அது ஒன்றே.

அப்பாவுக்கு இரவு ஷிஃப்ட் என்றால் அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட், அப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அம்மாவுக்கு இரவு ஷிஃப்ட் என மாறி மாறி வேலை இருக்கும். வீட்டில் பொதுவாக ஒரு நோட்டு வைத்திருப்பார்கள். நாங்கள் தனியாக வீட்டில் இருக்கும் நேரங்களில் வீட்டுக்கு யாரேனும் வந்தால், ஏதேனும் விஷயங்கள் நடந்திருந்தால், போஸ்ட் வந்திருந்தால் என அன்றாட விஷயங்களை அந்த நோட்டில் எழுதி வைப்போம். தடையில்லாத தகவல் பரிமாற்றம் எங்களுக்குள் நடைபெற அந்த நோட்டுதான் உதவி செய்தது.

ஆளுமை, கற்பனைத் திறன், தன்னம்பிக்கை, ஆண் பெண் பாகுபாடில்லா பரந்த மனப்பான்மை, சுயசார்புடன் செயல்படுதல் என ஒரு தொழில்முனைவோருக்கும், தொழிலதிபருக்கும் இருக்க வேண்டிய அத்தனை குணநலன்களையும் சிறு வயதிலேயே எங்கள் பெற்றோரிடம் பார்த்துப் பார்த்து எங்களுக்குள் உறு ஏறியதால் பின்னாளில் நான் சாஃப்ஃட்வேர் நிறுவனம் தொடங்கியதோ, அதுவும் தமிழகத்தில் முதல் முதலில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் என்ற அங்கீகாரம் பெற்றதோ, அதற்கான விருதுகள் பெற்றதோ ஆச்சர்யமான விஷயங்கள் இல்லைதானே!

இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என யோசிக்க வேண்டாம். சொல்கிறேன், கேளுங்கள்.

2008-ஆம் ஆண்டு கல்வி, சேவை, இலக்கியம், சாஃப்ட்வேர் என பல்வேறுதுறை சார்ந்தவர்களுக்கு Swadeshi Entrepreneur Award என்ற விருதை Swadeshi Jagaran Manch என்ற அமைப்பு வழங்கியது.

விருது பெற்றவர்கள் அனைவருமே அவரவர் துறையில் கடின உழைப்பால் உச்சத்தைத் தொட்டவர்கள். சொல்லப்போனால் அனைவரும் தொழிலதிபர்களே.

சாஃப்ட்வேர் துறை மென்பொருள் நிறுவனத்தின் சி.ஈ.ஓ என்ற முறையில் எனக்கும் அந்த விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விருது பெறுபவர்களுக்குள் ஒரு சின்ன விவாதம். தொழிலதிபருக்கும் (Business Man) தொழில்முனைவோருக்கும் (Entrepreneur) என்ன வித்தியாசம் என்பதே அது.

தொழிலதிபர் தொழில்முனைவோர் இருசாராரும் செய்வது என்னவோ பிசினஸ்தான். ஆனாலும்  சிற்சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, மாதுளைப் பழம் ஒன்றை 50 ரூபாய்க்கு வாங்கி 70 ரூபாய்க்கு விற்கும் பழக்கடை முதலாளி தொழிலதிபர் என்ற பிரிவின்கீழ் வருவார். அதே மாதுளையை 50 ரூபாய்க்கு வாங்கி பக்குவமாக ஜூஸ் செய்து விற்று 90 ரூபாய் சம்பாதிப்பவர் தொழில்முனைவோர். பின்னாளில் அதே கிரியேட்டிவிடியின் அடிப்படையில் ஜூஸ் ஃபேக்ட்டரி வைத்து உலகமெங்கும் கிளைகள் ஆரம்பித்தால் தொழில்முனைவோர் தொழிலதிபராகிறார்.

  1. தொழிலதிபர்கள் பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அதில் கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை செய்வார்கள். அந்தந்த காலகட்டத்து ட்ரெண்ட்டுக்கு ஏற்ப அவர்கள் வியாபாரத்தை விரிவாக்கி பணம் சம்பாதிப்பார்கள்.

தொழில்முனைவோர்கள் செய்கின்ற வேலைகளில் கிரியேட்டிவிட்டி இருக்கும். முன் அனுபவம் எதுவும் இல்லை என்றாலும் மிக எளிமையாக தொடங்கிய செயலை தங்கள் கடின உழைப்பாலும் கிரியேட்டிவிட்டியாலும் உச்சத்துக்குக் கொண்டு செல்வார்கள். அவர்களின் செயல்பாடுகளும் படைப்புகளும் தனித்தன்மையுடன் இருக்கும்.

  1. தொழிலதிபர்கள் வரையறுக்கப்பட்ட பாதையில் பயணிப்பார்கள். ஏற்கெனவே உள்ள ஐடியாவின் அடிப்படையில் தொழிலை தொடங்கி படிப்படியாக லாபத்தின் அடிப்படையில் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் பாதையை தாங்களே வரையறுப்பார்கள்.

  1. தொழிலதிபர்கள் வணிக சந்தையில் தங்கள் உழைப்பாலும், செயல்பாடுகளாலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடுவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் கிரியேட்டிவிட்டியால் தங்களுக்கான வணிக சந்தையை உருவாக்குவார்கள்.

  1. தொழிலதிபர்களுக்கு எல்லாமே லாப நஷ்டக் கணக்குதான் என்பதால் வணிக சந்தையில் முட்டி மோதி உச்சத்துக்கு வருவார்கள்.

தொழில்முனைவோர் தங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுவதால், வணிக சந்தையில் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி புதுமையான செயல்பாடுகளால் முதன்மையாகத் திகழ்வார்கள்.

  1. தொழிலதிபர்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ள தொழிலையே செய்வதால் போட்டி அதிகம் இருக்கும். வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

தொழில்முனைவோர்கள் புதுமையாகவும் தனித்தன்மையுடனும் செயல்படுவதால் போட்டிகள் இருந்தாலும் வெற்றி சதவிகிதம் அதிகம் இருக்க வாய்ப்புண்டு.

  1. தொழிலதிபர்களின் குறிக்கோள் லாபம் மட்டுமே. மற்றதெல்லாம் அதற்கடுத்துதான்.

தொழில்முனைவோர்கள் லாபத்தை விட தங்கள் பணியாளர்கள் மற்றும் கஸ்டமர்களின் நலனையும் கருத்தில்கொள்வார்கள்.

தங்கள் தனிதன்மையால் தங்களுக்கானப் பாதையை உருவாக்கிக்கொண்ட தொழில்முனைவோர்கள் ஒரு கட்டத்தில் தொழிலதிபர்களாக மாறும்போது அவர்கள் உச்சத்தை அடைகிறார்கள்.

மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்கள் அனைவருமே தங்கள் புதுமையான ஐடியாக்களினால் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர்கள். தொழில்முனைவோர்களாக இருந்து தொழிலதிபர்களாக விஸ்வரூபமெடுத்தவர்கள்.

இவர்களை முன் உதாரணம் காட்டிபேசி இந்த வரிசையில் நானும் இருப்பதாகச் சொல்லி விருதளித்தத் தருணம் வாழ்நாள் வரம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 55 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon