ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4: பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 4
ஜனவரி 4, 2021

பணிகளில் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்கை’ அதிகப்படுத்துவோமே!

நாம் செய்கின்ற வேலைகளில் மனநிறைவும் அடுத்தடுத்து  தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்கின்ற உத்வேகமும் வர வேண்டுமென்றால் அதற்கும் ஒரு லாஜிக் உண்டு.

நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்குமே மூன்று நிலைகள் உண்டு. ஒன்று செய்ய இருக்கும் வேலைக்கான முன் தாயாரிப்புகள். அதாவது Preprocessing. இரண்டாவது வேலையை செய்ய ஆரம்பித்து முடித்தல். Processing. மூன்றாவது செய்து முடித்த வேலையை சரியானபடி காட்சிப்படுத்தல், செயல்படுத்தல். அதாவது Postprocessing.

உதாரணத்துக்கு சமையலையே எடுத்துக்கொள்ளலாமே. சமையல் என்பது சமைப்பது மட்டுமல்ல.

சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் இவற்றை வாங்குதல். நாம் என்ன சமைக்க இருக்கிறோமோ அதற்குத் தேவையானதை தயாராக எடுத்துவைத்துக்கொள்ளுதல். இது Preprocessing.

அடுத்தது சமைத்தல். இதுவே Processing.

மூன்றாவதாக ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு சமைத்ததை பத்தே நிமிடங்களில் நிறையும் குறையும் சொல்லி வீட்டு உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்தல், பாத்திரங்களை அலம்பி வைத்தல் இத்யாதி இத்யாதி. இது Postprocessing.

இதே லாஜிக்தான் நாம் அலுவலகத்தில் செய்கின்ற பணிகளுக்கும். இலக்கியம், திரைத்துறை, எழுத்து, பேச்சு, ஓவியம் என கலைத்துறை சார்ந்த எல்லாவற்றுக்கும்.

ஐஸ்க்ரீமின் மேல் தூவுகின்ற முந்திரி, பாதாம், பிஸ்தா, சாக்லெட் துருவல்களைப் போல வேலைக்கான லாஜிக்கில் டாப்பிங் செய்துகொள்ள முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

நாம் செய்கின்ற பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த வேலையை முடித்தால் கிடைக்கும் இறுதி வடிவத்தை மனதுக்குள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். மேலும் பணிகளைத் தொடங்கி மெல்ல மெல்ல அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போது நாம் கற்பனை செய்து வைத்ததை மீண்டும் மீண்டும் மனதுக்குள் கொண்டுவர வேண்டும். நாம் பணிகளை உத்வேகத்துடன் செய்யும் போது நம் கற்பனை வடிவத்துக்கு மேலும் மேலும் மெருகு கூடிக்கொண்டே வருவதை உணர முடியும். அதுவே நமக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்து பணிகளை நிறைவாக செய்துமுடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும். நாம் எடுத்துக்கொண்ட செயலை செய்து முடிப்பதற்குள் நாம் கற்பனையில் வைத்திருந்த அந்த இறுதி வடிவம் பரிபூரண அழகுடன் மாறி இருக்கும். நம் கண்முன் செயல்வடிவம் பெற்றிருக்கும் பணி கற்பனை செய்ததைவிட பல மடங்கு பிரகாசத்துடன் ஜொலித்துக்கொண்டிருக்கும்.

இப்படி நாம் செய்கின்ற பணிகள் எதுவானாலும் அதன் இறுதி வடிவத்தை நாம் கற்பனை செய்துகொண்டு செய்ய ஆரம்பிப்பதைத்தான் ‘ஐஸ்கிரீம் மீது நாம் தூவிக்கொள்ளும் டாப்பிங்’ என்கின்றேன்.

ஐஸ்க்ரீமே ஆனந்தம்தான். அதில் டாப்பிங் வேறு செய்து சாப்பிட்டால் பரமானந்தம்தானே.

நமக்கு கொடுக்கப்படும் அல்லது நாம் எடுத்துக்கொள்ளும் பணிகளை செய்வதே ஆனந்தம். அதில் கற்பனை எனும் ‘டாப்பிங்கை’ சேர்த்து சுவைத்துக்கொண்டே செய்தோமேயானால் அது பேரானந்தமான விஷயமாகத்தானே இருக்க முடியும்.

நாம் செய்கின்ற பணி புத்தகம் எழுதுவதாக இருக்கலாம், புத்தக வெளியீட்டு விழா நடத்துவதாக இருக்கலாம், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் தயாரிப்பதாக இருக்கலாம், தினமும் யு-டியூபில் அப்லோட் செய்கின்ற வீடியோவாக இருக்கலாம் அது எதுவாக இருந்தாலும் இதே லாஜிக்தான்.

லாஜிக் மேஜிக் போல அதிசயங்கள் புரிய வேண்டுமானால் கற்பனையில் செயல்வடிவம் கொடுத்துப் பார்ப்பது என்பது ஒரு அற்புதமான வழி.

வீடுகளில் பொதுவாக அம்மாவோ சமைக்கும்போது பொறியல் செய்யும்போது மகனுக்கு இது பிடிக்குமே என நினைத்துக்கொண்டும், ரசம் செய்யும்போது எலுமிச்சைப்பழ ரசம் மகளுக்குப் பிடிக்குமே என நினைத்துக்கொண்டு மனதுக்குள் அவர்கள் சாப்பிடும்போது எப்படி ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் என ஒரு கற்பனையை தன்னிச்சையாக அவர்களை அறியாமலேயே செய்துகொண்டு சமைப்பதால்தான் அம்மாக்கள் செய்கின்ற சமையலில் சுவை கொஞ்சம் கூடுதாலாக இருக்கிறது. பல வீடுகளில் அம்மாக்களைப் போலவே அப்பாக்களும் சமையலில் இப்படி அன்பையும் பாசத்தையும் கலந்துகட்டி சமைத்து கலக்குகிறார்கள் என்பது வேறுவிஷயம்.

‘இப்படி எல்லாம் கற்பனை செய்துகொண்டு சமைப்பதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது… எழுதுவதற்கும் பேசுவதற்கும் வேண்டுமானால் இது சாத்தியம். நடைமுறையில் சாத்தியமில்லை…’ என்று விவாதிப்பவர்கள் ‘கற்பனையை தன்னிச்சையாக அவர்களை அறியாமலேயே செய்துகொண்டு சமைப்பதால்தான் அம்மாக்கள் செய்கின்ற சமையலில் சுவை கொஞ்சம் கூடுதாலாக இருக்கிறது…’ என்று எழுதியிருக்கும் பகுதியை மீண்டும் ஒருமுறை நன்கு படித்துப் பார்க்கவும்.

ஒருசிலர் செய்கின்ற வேலைகள் மட்டும் மற்றவர்கள் செய்வதைவிட பிரமாதமாக இருப்பதையும், பெருமளவில் கவனத்தைப் பெறுவதையும் பார்த்திருக்கிறீர்களா?

அது எப்படி?

எல்லோரும் வேலைக்கான லாஜிக்கைப் பயன்படுத்தும்போது அவர்கள் மட்டும் ‘ஐஸ்க்ரீம் டாப்பிங்’ லாஜிக்கை பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

என் அலுவலகத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒவ்வொரு ப்ராஜெக்ட் முடிந்ததும் இரண்டு மூன்று நாட்களுக்கு அதிக வேலைகள் எதுவும் இருக்காது. ப்ராஜெக்ட் லைவ் ஆனதும் மிக சந்தோஷமாக அது குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள்.

எனக்கும் சந்தோஷமும் மனநிறைவும் இருக்கும்தான். ஆனால் என் முழுகவனமும் அடுத்தடுத்த பணிகளின் மீதே இருக்கும். அவர்கள் என்னிடம் ‘மேடம், இரண்டு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பரபரப்பாகுங்களேன்…’ என்பார்கள்.

அதற்கு நான் கொடுக்கும் பதில் என்ன தெரியுமா?

‘நடந்து முடிந்த ப்ராஜெக்ட்டின் இறுதி வடிவத்தை நான் பலமுறை கற்பனை செய்து பார்த்ததால் இப்போது கிடைத்திருக்கும் வெற்றி என்பது எனக்கு புதிதாக இல்லை… இந்த ப்ராஜெக்ட் நடைபெற்றுக்கொண்டிருந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு நாளுமே அதன் இறுதிவடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதை சிந்தித்து அந்த சூழலை நினைத்துப் பார்த்துகொண்டே இருந்ததால் பலமுறை வெற்றி அடைந்ததைப் போல நிறைவாக உள்ளது…’

ஆமாம் நான் ஐஸ்கிரீமில் டாப்பிங் கொஞ்சம் அதிகமாகவே போட்டு சாப்பிடுவேன். அதனால்தான் இத்தனை மனநிறைவு.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon