ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 44
பிப்ரவரி 13, 2021
‘கடைசி சொட்டு’ டிகாஷன்!
இன்று காலை சூடாக டிகாஷன் போட்டு காபி கலக்கும்போது ஏற்பட்ட அனுபவத்தின் தாக்கமே இன்றைய பதிவு.
பால் நன்றாக பொங்கி வந்ததும் ஒரு டம்ளரில் விட்டு தேவையான சர்க்கரை போட்டேன். டிகாஷனை விடும் போது கொஞ்சம் கொஞ்சமாகவே விடுவேன். ஏனெனில் நாங்கள் தயாரிக்கும் டிகாஷன் திக்காக இருக்கும் என்பதால் கொஞ்சமாக விட்டாலே நல்ல ஸ்ட்ராங் ஆகிவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாக டிகாஷனை விட்டு ஸ்பூனால் டம்ளரில் உள்ள பாலை கலக்கிப் பார்த்தபடி கலந்து கொண்டிருந்தேன். கடைசி சொட்டு டிகாஷன் விடும்போது ஏதோ யோசனையில் கவனம் சிதறி கை அழுத்தம் கூடி டிகாஷனின் அளவு அதிகரித்து விட்டது. காபி நல்ல ஸ்ட்ராங் ஆகிவிட்டது. சாப்பிடவே முடியாத அளவுக்கு அடர் கருப்பாகி விட்டது.
அப்புறம் என்ன இன்னும் கொஞ்சம் பாலை சூடு செய்து ஏற்கனவே கலந்திருந்த காபியில் கலந்து பதமாக்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தேன்.
காலை 3.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் மூன்று முறை காபி சாப்பிடுவேன். சிறிய டம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முறை, தொண்டை நனையும் அளவுக்கு இரண்டு வாய் குடிக்கும் அளவுக்குதான் இருக்கும் ஒருமுறை குடிக்கும் காபியின் அளவு.
ஆனால் இன்று முதன் முறையே மூன்று டம்ளர் காபியையும் ஒரே நேரத்தில் குடிக்கும்படியாக காபியின் அளவு அதிகமாகி விட்டது.
இப்படித்தான் நம்முடைய ஆர்வமும் ஈடுபாடும் கூட நம் கட்டுக்குள் இருக்க வேண்டும். எந்த செயலிலும் ஈடுபாடில்லாமல் சோம்பேறித்தனமாய் வேலை செய்வது எப்படி பயனளிக்காதோ அதுபோலவே அதீத ஈடுபாடும் ஆபத்தில் முடியும்.
‘இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். இளம் கன்றுக்குட்டிக்கு நிதானமாக நடக்கத் தெரியாது. நடப்பதே ஓடுவதைப் போலத்தான் இருக்கும். அதுவும் ஓட ஆரம்பித்தால் கேட்கவா வேண்டும். அங்கும் இங்கும் தாறுமாறாய் ஓடும். பார்ப்பவர்களுக்கு பயமாய் இருக்கும். எங்கே தன் மேல் வந்து முட்டிவிடப் போகிறது என்ற பயம் ஒருபுறம். எங்கேயாவது சென்று இடித்துக்கொண்டோ அல்லது வாகனத்தில் அடிபட்டோ காயமடையப் போகிறதோ என்கின்ற பயம் மற்றொருபுறம்.
அதுவே பசுவைப் பாருங்கள். வாயில் எதையாவது மென்றுகொண்டே நின்று நிதானமாக நடக்கும். நம்முடைய நிதானமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
நம்முடைய ஈடுபாடு என்பது, முதல் சொட்டு டிகாஷனை பாலில் விடும்போது எத்தனை நிதானத்தை கடைபிடித்தோமோ அத்தனை நிதானம் கடைசி சொட்டு டிகாஷனை பாலில் கலக்கும் வரை சீராக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் எடுக்கும் முயற்சி ழுமையடையாது. ஈடுபாடில்லாமல் கடமைக்குச் செய்தால் மன நிறைவு கிடைக்காது. அதீத ஈடுபாட்டுடன் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்து படபடப்புடன் செய்தால் செய்கின்ற செயலில் ஏதேனும் ஒரு குறை வந்து சேரும்.
ஒருசிலர் தங்களுக்கான குறிக்கோளில் உறுதியாக இருப்பார்கள். மெல்ல மெல்ல கடுமையாக உழைத்து முன்னேறி வருவார்கள். ஒரு கட்டத்தில் நிறைய முதலீடு, அதன் காரணமாய் பெருமளவு கடன்கள், உலகளாவிய கிளைகள் என அகலக்கால் வைத்துவிடுவார்கள். இத்தனை காலம் உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீராய் போய்விடும். படுபாதாளத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி வீழ்ந்த சாம்ராஜ்ஜியங்கள் நிறைய உண்டு.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நிதானம் வேண்டும். நமக்கான எல்லைகளை நாம் மறக்கக் கூடாது. நம் எல்லைகள் விரியும்போது உண்டாகும் லாபக் கணக்குகளை மட்டும் பார்க்காமல் கஷ்ட நஷ்டங்களை தொலைநோக்குப் பார்வையில் பார்க்க வேண்டும். அப்போதுதான் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைகிறதோ இல்லையோ தோல்வி அடையாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டாவது இருக்கும்.
டிகாஷனை பாலில் விடும் அந்த நொடிக் பொழுதில் ஏற்பட்ட கவனச் சிதறல்கூட காபியின் சுவையையும் காபியின் அளவையும் கூட்டி அந்த நேரத்தை பரபரப்பாக்கி விடுகிறது.
ஒரு டம்ளர் காபி தானே. அதனால் நம்மால் அனுசரித்துக்கொண்டு சென்றுவிட முடியும். இதே கவனச் சிதறல் வாழ்க்கையில், தொழிலில், வேலையில், பயணத்தில் இருந்துவிட்டால் நினைத்துப் பாருங்கள்.
நடு இரவு கார் பயணங்களில் ஓட்டுனரின் நொடிப்பொழுது கண் அசறல் எத்தனை பெரிய விபத்துக்களை ஏற்படுத்துகிறது. எத்தனை குடும்பங்கள் விபத்துகளில் சிதைந்து சின்னாபின்னமாகின்றன. எத்தனை பேரை முடமாக்குகின்றன. நினைத்துப் பாருங்கள்.
இதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எந்த ஒரு வேலையிலும், முயற்சியிலும் நம்முடைய ஈடுபாடும் நிதானமும் முதல் சொட்டு டிகாஷனை பாலில் விட்டு கலக்கும்போது இருக்கும் பொறுமை கடைசி சொட்டு டிகாஷனை பாலில் விடும் வரை இருப்பதைப் போல இருக்க வேண்டும். அதாவது தொடக்கத்தில் இருப்பதைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் இறுதிவரை தொடர்ச்சியாக சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் சுவையை முழுமையாக நாம் அனுபவிக்க முடியும்.
முயற்சித்துப் பாருங்களேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP