என் மகிழ்ச்சியின் Tag

சென்ற வாரத்தில் ஒரு நாள்…

மதிய சாப்பாட்டுக்கு ரெடியாகி டைனிங் டேபிளில் நானும் அப்பாவும்…

காய், கூட்டு, பருப்பு என ஒவ்வொன்றாய் அவரவர்கள் எடுத்துப் போட்டுக்கொண்டோம்.

சாதம் போட்டு குழப்பு போட்டு  சாப்பிடத் தொடங்கினோம்.

இன்னிக்கு காய்ல கொஞ்சம் உப்பு தூக்கலா இருக்கு… – அப்பா.

எனக்கு சரியாத்தானே இருக்கு… – நான்.

கூட்டு கூட கொஞ்சம் கெட்டியா இருந்திருக்கலாம்… – அப்பா.

எனக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்கும் – நான்.

சாம்பாரில் கொஞ்சம் காரம் போடலாம்… – அப்பா

இல்லை இல்லை சரியத்தான் இருக்கு – நான்.

இனி மோர் கரைக்கும் போது இஞ்சி போட வேண்டாம்… – அப்பா.

நான் கோபமாகி கத்தத் தொடங்கினேன்.

‘அப்பா ஒருநாள் அப்படி இப்படித்தான் இருக்கும். எல்லா நாளும் ஒரே மாதிரி

இருக்குமா… மனுஷா தானே நாம். மெஷினா என்ன ஒரே மாதிரி தினமும் சமைக்க…’

அப்பா மெளனமாகி சாப்பிட்டு முடித்து இடத்தை சுத்தம் செய்யத் தயாரானார்.

கொடுமைக்கார அப்பா என நினைத்து யாரும் என் மீதுப் பரிதாபப்பட வேண்டாம்.

அன்றும் அப்பாதான் சமைத்தார். தானே சமைத்திருந்தாலும் ‘நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்ற கணக்கில் சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருப்பார் அப்பா.

அப்பா நன்றாக சமைப்பார்… அப்பா செய்யும் சாம்பார் சாதத்துக்கும், ரசத்துக்குமே எங்கள் குடும்பத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அப்பா டிகாஷன் போட்டால் காபிக்கே தனி சுவை கிடைக்கும்.

இனிப்பு, காரம் என எப்போதும் வீட்டில் தானே தயார் செய்வார். கடைகளில் பெரும்பாலும் வாங்க மாட்டோம். எப்போதும் ஏதேனும் ஒரு ஸ்வீட் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும்.

அப்பா அம்மா இருவரின் ரிடையர்மெண்ட்டுக்கு முன்…

தொலைபேசித் துறையில் சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் இருந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்கிச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில் அப்பா அம்மாவைப் போலவும் செயல்படுவார்கள்… தாயுமானவராக அப்பா, தந்தையுமானவராக அம்மா…

சமையல், வீடு பெருக்குதல், பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல் முதற்கொண்டு அத்தனையும் ஆண் பெண் பாகுபாடின்றி இருவருமே செய்வார்கள். எங்களுக்கும் அத்தனையும் அத்துப்படி.

அதுபோலவே அந்தந்த காலகட்டத்தில் சைக்கிள் / பைக் / கார்  ஓட்டக் கற்றுக்கொடுத்தல், அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சர்வீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் அளவுக்கு சரிசெய்யப் பழகுதல், டியூப் லைட் மாற்றுதல், ஃபியூஸ் மாற்றுதல், தண்ணீர் பைப் லீக்கானால் நாமே டைட் செய்து பழுதுபார்த்தல் இப்படியாக ஏசி யூனிட் முதல் இன்வெர்டர் வரை  பராமரித்தல் என ஆணுக்கான வேலைகள் பெண்ணுக்கான வேலைகள் என பிரித்துப் பார்க்காமல் எனக்கும், என் சகோதரி, சகோதரனுக்கும் ஒரே மாதிரி கற்றுக்கொடுத்தார்கள்.

இப்படி ஆண் பெண் பாகுபாடின்றி அவர்கள் நடந்து கொண்டதாலும், எங்களையும் அப்படியே வளர்த்ததாலும் எங்களால் அவரவர்கள் துறையில் ஜெயிக்க முடிந்ததோடு வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது.

துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, பவழமள்ளி, செம்பருத்தி, இன்சுலின் செடி, நிலவேம்பு செடி, வெப்பம் செடி, சோற்றுக்கற்றாழை, மணிப்ளாண்ட், பாகற்காய் கொடி, பச்சைமிளகாய், பிரண்டை என இருக்கின்ற இடைவெளிகளில்  எல்லாம் செடி கொடிகள்…

அந்தக் கால கல்கி, ஜெயகாந்தன் புத்தகங்கள் முதல் சமகால இலக்கியம் வரை கிடைக்கும் இடங்களில் எல்லாம் புத்தகங்கள்…

சமையல் அறை முழுவதும் நாட்டு மருந்துகள், வீட்டு வைத்தியம் என வீட்டையே சொர்க்கமாக வைத்திருப்பார்கள்.

இப்போது அப்பா அம்மா இருவருக்கும் ஆளுக்கொரு பிளாக், ஃபேஸ்புக் அக்கவுண்ட், இமெயில், கிண்டில் புத்தகங்கள் என தொழில்நுட்ப ரீதியாக எல்லாவற்றிலும் UPDATE.

இன்று காம்கேரில் ஒரு மொபைல் APP உருவாக்கி வெற்றிகரமாக இம்ப்ளிமெண்ட் செய்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஸ்டோர்களில் ரெஜிஸ்ட்டர் செய்த மகிழ்ச்சியில் இன்று காம்கேரின் மீது பாசம் கொஞ்சம் கூடுதலாய்…

எப்போதெல்லாம் காம்கேர் மூலம் தயாராகும் படைப்புகளின் வெற்றியின் மீதான மகிழ்ச்சி மிதமிஞ்சுகிறதோ, அப்போதெல்லாம் என் அப்பா அம்மா மீதும்…

என்  மகிழ்ச்சியின் Tag என் அப்ப அம்மா… அதனால் இந்தப் பதிவு…

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
அக்டோபர் 12, 2018

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!