Reading Ride: ஆட்டோபயோகிராஃபி!

என் எழுத்தின் வாசகர்கள் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை பின்தொடர்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் என்ன… லைக், கமெண்ட் எல்லாம் செய்யாமல் அநாவசிய கேள்விகள் எதுவும் கேட்காமல் கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் என்ன… என் நூல்களையும், எங்கள் காம்கேர் நிறுவனத்தின் தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்களே. அது போதாதா?

இரண்டு தினங்களுக்கு முன்னர் திருவாரூரில் சொந்தமாக எலக்ட்ரானிக் சேல்ஸ் & சர்வீஸ் பிசினஸ் செய்து வரும் ஒரு வாசகர் நான் எழுதியுள்ள Ai நூல்களை வாங்குவதற்காக வாட்ஸ் அப்பில் அணுகினார். வழக்கம்போல் என் உதவியாளர், ‘அசத்தும் Ai நூல்கள் குறித்து எங்கு பார்த்தீர்கள்?’ என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டுள்ளார்.

‘I am regular reader of Madam’s Books and with that knowledge only i am still surviving in my field’ – இதுதான் அந்த அன்பர் அனுப்பிய தகவல். அதை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தார் என் உதவியாளர்.

இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு உழைப்பாளியின் உழைப்பின் பரிசாக?

மகனை இன்ஜினியரிங் படிக்க வைப்பதாகவும், பெண் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிவதாகவும் கூடுதல் தகவல் கொடுத்திருந்தார்.

இன்று ஒரு வாசகர் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அசந்துவிட்டேன் அவர் கேட்ட கேள்வியில். இவரும் என் பல நூல்களை வாங்கிப் பயனடைந்தவர், அசத்தும் Ai நூல்கள் உட்பட!

‘நீங்கள் எழுதிய ‘IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?’ என்ற நூலை நான் படித்திருக்கிறேன் அதைப் போல் ‘ஒரு நிறுவனத்துக்கு CEO ஆவது எப்படி?’ என்ற நூல் ஏதேனும் எழுதி இருக்கிறீர்களா? எழுதி இருந்தால் சொல்லுங்கள்…’ – இதுதான் அந்த வாய்ஸ் மெசேஜின் உள்ளடக்கம்.

‘இதுவரை எழுதவில்லை. எழுதிட்டா போச்சு, எழுதி வெளியிட்டால் உங்களுக்கு தகவல் கொடுக்கிறேன்’ என்று பதில் கொடுத்த பிறகு நீண்ட நேரம் அவர் குறிப்பிட்ட புத்தகத் தலைப்பு ரீங்காரமிட்டபடியே இருக்கிறது.

அந்த வாசக அன்பர் சொன்ன தலைப்பு நூல் வடிவம் பெற்றால் அதுதானே ‘என் ஆட்டோபயோகிராஃபி!’

விரைவில் அதுவும் நடக்கும்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 26, 2024 | வெள்ளி

(Visited 1,015 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon