வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!

வாயாடி என சொல்லாதீர்கள், குரல்வளையை நசுக்காதீர்கள்!

ஒரு குடும்ப நிகழ்வு. வயது வித்தியாசமின்றி சிறியவர் பெரியவர் என அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

70 வயது தாத்தா ஒருவர், மூன்றாம் வகுப்புப் படிக்கின்ற சுட்டியிடம் விளையாட்டாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என வேடிக்கையாக கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி, ‘ஏன் பாட்டி அழகாகத் தானே இருக்கா?’ என சொல்ல அனைவரும் கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர்.

அந்த தாத்தாவும் விடவில்லை. ‘சரி கல்யாணம் பண்ணிக்க வேண்டாம், நாம் லவ் பண்ணலாமா?’ என கேட்க அந்த சிறுமியும் விடவில்லை.

‘ஐயே, லவ் பண்ணனும்னா ஓரளவுக்கு சரிசம வயது இருக்கணும்…’ என சொல்ல அனைவருக்கும் ‘ஹோ’ என சிரித்து கைதட்டினர்.

அதில் ஒரு பாட்டி ‘சரியான வாயாடி…’ என சொல்ல அப்போது நான் சொன்னேன்.

‘பாட்டி, அவளை வாயாடி என சொல்லாதீர்கள். அவள் பேசுவதில் உள்ள மனமுதிர்ச்சியை பாருங்கள். இந்தக் காலத்தில் இப்படி பேசினால்தான் பொதுவெளியில் பாதுகாப்பாக இருக்க முடியும்… நல்ல புத்திசாலிப் பெண்ணாக இருக்கிறாள் என்பதுதான் என் கருத்து…’ என்று சொன்னேன்.

இதற்கு அனைவரும் ‘சரிதான்’ என சொன்னார்கள்.

வாயாடித்தனத்துடன் புத்திசாலித்தனமும் சேர்ந்து கொண்டால் அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர்களே போட்டுக் கொள்வதற்கு சமம்.

எத்தனை பெண்களால் பஸ்ஸிலும், ரயிலிலும் வேண்டுமென்றே உரசும் கயவர்களிடம் ‘குரலை உயர்த்தி’ மிரட்டும் துணிவு இருக்கிறது? குரலை உயர்த்தக் கூட வேண்டாம், கண்களால் முறைத்துப் பார்க்கும் தைரியமாவது இருக்கிறதா? இங்கு பலருக்கும் அடி உதை எல்லாம் கூட வேண்டாம், ஆணித்தரமான பார்வை ஒன்று போதும். அதற்குக் கூட தைரியம் இல்லாத (கவுரவம் பார்த்துக் கொண்டு) பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அதிகம் படிக்காத கூடையில் பழம் விற்கும் பெண்களைப் பாருங்கள், குரலை உயர்த்துவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை, அடி கொடுப்பதற்கும் தயங்குவதில்லை. காரணம் அவர்கள் கவுரம் (போலி) எல்லாம் பார்ப்பதில்லை.

இன்றைய பெண் குழந்தைகள் நாளை பாதுகாப்பாக வளர வேண்டுமானால் அவர்கள் குரல்வளையை நசுக்காமல் இருந்தால்போதும்.

படக் குறிப்பு: iMage drawn by Ai & Prompted by me!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 22, 2024 | திங்கள்

(Visited 906 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon