உங்களுக்கு தமிழில் Ai பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமா? யாரிடம் சென்று தமிழில் Ai கற்றுக் கொடுங்கள் என கேட்பது என தயக்கமாக இருக்கிறதா?
இந்த குழப்பமும் வேண்டாம், எந்த தாழ்வு மனப்பான்மையும் வேண்டாம்.
காரணம், ஐஐடி-யில் படிப்பவர்கள் கூட நான் தமிழில் எழுதியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களை வாங்குகிறார்கள். (புத்தகங்களை வாங்க, வாட்ஸ் அப் காம்கேர் 9444949921)
இங்கு நான் பயன்படுத்தி இருக்கும் ‘ஐஐடி-யில் படிப்பவர்கள் கூட’ என்ற சொல்லாடலை கவனித்தீர்களா? இங்கு பலருக்கும் ஐஐடி-யில் படிப்பவர்கள் தமிழில் பேச மாட்டார்கள், தமிழே தெரியாது என்று நினைத்திருப்பதால்தான் அவர்களை நாம் உயரத்தில் வைத்து பார்க்கிறோம்.
ஐஐடி மாணவர்கள் ப்ராஜெக்ட்டுக்காக எங்கள் நிறுவனத்துக்கு வரும்போது அவர்களில் பலர் என்னிடம் அருகாமையில் ஏதேனும் ‘English Speaking training center’ இருக்கிறதா என்று கேட்பார்கள் அல்லது ‘நீங்களே ஆங்கிலம் பேச சொல்லித்தர முடியுமா?’ என்பார்கள்.
அவர்களில் பலர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆக, தமிழில் படிப்பது கெளரவ குறைவல்ல. ஆங்கிலத்தில் பிளந்து கட்டுபவர்களை பார்த்து பிரமிக்கவும் வேண்டாம்.
அதுவும் நான் எழுதும் தமிழ் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக இருக்கும். தொழில்நுட்பத்தை தமிழில் கொண்டு செல்வதுதான் என் நோக்கம் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். தமிழை நான் கொண்டாடுவது வேறு, தொழில்நுட்பத்தை தமிழில் கொண்டு செல்வது என்பது வேறு. இரண்டையும் நான் என்றுமே குழப்பிக் கொண்டதில்லை.
இதுவரை 250 நூல்களுக்கும் மேல் எழுதி இருப்பது சமூக வலைதளத்தில் என்னைப் பின்பற்றும் உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். என் தமிழ் ஆர்வத்தை என் தொழில்நுட்ப எழுத்துக்களில் புகுத்தியதே இல்லை. அதனால்தான் 1992-ல் இருந்து இன்று வரை நான் தமிழில் எழுதும் தொழில்நுட்ப நூல்களை வாசிக்க ஒரு வாசகப் பட்டாளமே உருவாகியுள்ளது.
மூன்று தலைமுறை மக்களாலும் (தாத்தா பாட்டி, அப்பா அம்மா, குழந்தைகள்) என் நூல்கள் வாசிக்கப்படுவது எனக்கு கடவுள் கொடுத்த வரம். அந்த வரத்தின் சக்தியை அப்படியே பொத்தி பொத்திப் பாதுகாத்து வருவதற்கு, நாள் தவறாமல் எழுதுகிறேன். எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருப்பது ஒன்று தான் நான் உயிருடன், உயிர்ப்புடன் இருப்பதற்கு சான்று.
எல்லா வாசகர்களுமே எனக்கு அதிமுக்கியம்தான். அவர்கள் காட்டும் அன்பு அபரிமிதமானது. இரண்டு வாசகர்களை உதாரணத்துக்கு சொல்கிறேன்.
ஒருவர்…
திருச்சியை சேர்ந்த 75+ வயது பெரியவர். வாரா வாரம் போன் செய்து ‘ஏதேனும் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளீர்களா?’ என கேட்டபடியே இருக்கிறார். ‘மாதா மாதம் 2000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குகிறேன் மேடம், நீங்கள் வெளியிடும் புத்தகங்களை எனக்கு தெரிவியுங்கள்…’ என சொல்லியபடி இருப்பார். இத்தனைக்கும் அவர் செல்வந்தர் எல்லாம் இல்லை. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
அவரது வாசிக்கும் ஆர்வத்துக்கு அவரது மகளும், மருமகனும் உறுதுணையாக இருக்கிறார்கள். என் நூல்கள் அனைத்தையும் அவர் வீட்டில் வைத்திருக்கிறார்.
மேடம் ‘என் மாமனார் இப்படி அடிக்கடி போன் செய்து புத்தகம் வெளியிட்டிருக்கிறீர்களா? என கேட்டுக் கொண்டே இருந்தால் தொந்திரவாக நினைக்காதீர்கள், நாங்கள் இல்லாத சமயத்தில் அவர் போன் செய்கிறார். எனவே அவரை கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. என்னவென்று தெரியவில்லை, அவருக்கு எதுவுமே நினைவில் இருப்பதில்லை. ஆனால் உங்கள் நூல்களை மட்டும் வாங்கி அடுக்கி உள்ளார். ஏதேனும் நூல் வெளியிட்டால் என்னுடைய வாட்ஸ் அப்புக்கு தகவல் கொடுங்கள். நான் வாங்கிக் கொடுக்கிறேன்…’ என்று அவரது மாப்பிள்ளை கூறியுள்ளார்.
மற்றொருவர்…
சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் சதீஷ்குமார் என்ற கைதி. அவர் 2008-லேயே எனக்கு இன்லேண்ட் கடிதம் எழுதி என் நூல்களை வாசிப்பது குறித்து கூறியிருக்கிறார். இதோ இப்போது ஏப்ரல் 21, 2024 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழில் ‘சிறைக்குள் புதிய வானம்’ கட்டுரையில் காம்கேர் புவனேஸ்வரியின் நூல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது என சொல்லி உள்ளார்.
இவர்களைப் போல, என் எழுத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஒரு இன்ச்சாவது முன்னேற்றி பயன்பெற்றிருக்கும் மூன்று தலைமுறை வாசகர்கள் அனைவருமே என் எழுத்து இன்ஜினின் பெட்ரோல்.
அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 24, 2024 | புதன்