ஆக்கப்பூர்வமான விஷயங்களை Ai மூலம் செய்வதில் மகிழ்ச்சி! (குமுதம் சிநேகிதி : மே 2, 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க: குமுதம் சிநேகிதி மே 2, 2024

Ai குறித்து நாங்கள் செய்து வரும் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், ப்ராஜெக்ட்டுகள் குறித்த நேர்காணல் 02-05-2024 குமுதம் சிநேகிதியில். வாய்ப்பிருப்பவர்கள் வாசிக்கவும்.

குறிப்பாக நான் அண்மையில் எழுதி, அச்சு புத்தகத்தில் பேசும் அவதார் என்ற புதுமையை பதிப்பகத் துறையில் முதன் முதலாகப் புகுத்தி சாதனை செய்து வெளியிட்ட அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்கள் குறித்தும் மிக விரிவாக பேசி உள்ளேன்.

அசத்தும் Ai – Part1, Part2 என்ற இரண்டு நூல்களையும் வாங்க விருப்பம் இருப்பவர்கள் வாட்ஸ் அப்: 9444949921.

நேர்காணலில் பேசியுள்ளவை: 

சமீபத்தில் பரபரப்பாகி பேசுபொருளாகியுள்ள Ai தொழில்நுட்பத்துக்காக, எளிய தமிழில் தொழில்நுட்பம் சாராதவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்ட, அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai- Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காரணம் இந்த இரண்டு நூல்களிலும் உள்ள  ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் கண் முன் தோன்றி அந்தந்த அத்தியாத்தின் சுருக்கத்தை சொல்கிறது.

இந்த இரண்டு நூல்களை எழுதிய காம்கேர் கே. புவனேஸ்வரி நூலாசிரியர் மட்டுமல்ல. காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தின் நிறுவனர் & CEO, Ai- ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், ஃப்லிம் மேக்கர்,  கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், சமூக சிந்தனையாளர் என பன்முக சாதனையாளர்.

1992-ம் ஆண்டு நம்நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய ‘முதல் பெண் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் மலர்வனம் மின்னிதழ் வழங்கிய ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர்’ என்ற விருதை  பெற்றுள்ள காம்கேர் கே. புவனேஸ்வரி நம் குமுதம் சிநேகிதிக்காக தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

நீங்கள் எழுதிய அசத்தும் Ai- Part-1 & Part-2 இரண்டு நூல்களிலும் என்ன புதுமை செய்துள்ளீர்கள்?

தொழில்நுட்பத் துறை சாராதவர்களுக்கும் புரியும் வகையில் எளிமையான  அழகான தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த இரண்டு நூல்களிலும் ஒரு புதுமையான முயற்சியை புகுத்தி உள்ளோம். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு QR Code பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். அந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தால் அந்தந்த அத்தியாயச் சுருக்கத்தை நூலாசிரியர் காம்கேர் கே. புவனேஸ்வரியின் Ai அவதார் பேசும் வீடியோ வெளிப்படும். Ai தொழில்நுட்பத்தை அச்சுப் புத்தகத்துடன் இணைத்துப் பயன்படுத்துவது பதிப்பக உலகில் இதுவே முதன் முயற்சி.

பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் சாதனை என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்குப் பின்னால் எங்கள் அயராத உழைப்பு இருக்கிறது.

இதுவரை 250 நூல்கள் எழுதி இருக்கிறேன். அவற்றில் 200 தொழில்நுட்பம் சார்ந்தவை. பல புத்தகங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன. உலகமெங்கும் உள்ள பல்வேறு நூலகங்களிலும் என் புத்தகங்கள் வீற்றிருப்பது என் உழைப்புக்கான சான்று.

இரவு 11 மணிக்கு உறங்கி காலை 3 மணிக்கு எழுவது என் சிறுவயது பழக்கம். இதனால் எனக்கு நேரம் அதிகம் கிடைக்கிறது.

உங்களுக்கு Ai மீது ஆர்வம் எப்போது ஏற்பட்டது?

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முழுமையாக நுழையாத காலகட்டத்தில், நம் நாட்டு கல்லூரி பாடத்திட்டதில் முதன் முதலாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட வருடமே பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸும், எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸும் சேர்ந்து (1987 – 1992) இரட்டைப் பட்டம் பெற்றேன்.

எப்போது இயற்கை நமக்குக் கொடுத்துள்ள நம் மூளையை உபயோகித்து அதன் கட்டளைபடி நம் கைகளால் செய்கின்ற பணிகளை எல்லாம் கம்ப்யூட்டர் எனும்  இயந்திரத்தின் மூலம் செய்ய வைக்க ஆரம்பித்தோமோ அப்போதே செயற்கை நுண்ணறிவுக்கு பிள்ளையார் சுழி போட்டாயிற்று என்றுதானே சொல்ல வேண்டும். அந்தப் புள்ளிதான் செயற்கை நுண்ணறிவின் மீது எனக்கு உண்டான ஆர்வத்துக்கான முதல் புள்ளி.

அதன் பிறகு 1992-ஆம் ஆண்டு இறுதியில் சொந்தமாக ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கி சாஃப்ட்வேர்கள் தயாரிக்க ஆரம்பித்தவுடன் செயற்கை நுண்ணறிவின் நீள அகலங்கள் அத்தனையையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

நீங்கள் Ai குறித்து என்னென்ன ஆராய்ச்சிகள் செய்து வருகிறீர்கள்?

சாஃப்ட்வேர் தயாரிப்பின் நீட்சியே Ai என்பதால் இதுவரை நாங்கள் சாஃப்ட்வேர் தயாரித்து வருகின்ற ஆன்மிகம், கல்வி, கலை, இலக்கியம், மருத்துவம், ஜோதிடம், இராணுவம், என்ஜினியரிங், விவசாயம், அக்கவுண்ட்டிங், சட்டம், ஜோதிடம் இப்படி எல்லா துறைகளுக்கும் தேவையான Ai தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகிறோம்.

Ai தொழில்நுட்பத்தை கம்ப்யூட்டரில், மொபைலில், காமிராவில், காரில், பைக்கில், வாஷிங் மெஷினில், வேக்யூம் கிளீனரில் என எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பொருத்தி செயல்பட வைக்க முடியும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு Ai தொழில்நுட்பம் எந்த வகையில் உதவுகிறது?

2000 களிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திரையை படிக்க உதவும் ஜாஸ், என்.வி.டி.ஏ போன்ற ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’  (Screen Reading Software) மூலம் அவர்கள் எம்.எஸ்.வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்ற சாஃப்ட்வேர்களை கற்றுப் பயன்படுத்தவும், PDF ஃபைல்களாக உள்ள புத்தகங்களை வாசிக்கவும், இன்டர்நெட்டில் இமெயில் அனுப்பவும், கூகுள் செய்து பார்க்கவும் கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறோம்.

என் அப்பா (கிருஷ்ணமூர்த்தி) அம்மா (பத்மாவதி) பெயரில்  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறோம். அதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்புக்கு, வாழ்வாதாரத்துக்கு வெவ்வேறு வழிகளில் தொழில்நுட்பம் சார்ந்து தீர்வு கண்டுபிடித்து உதவுகிறோம். வருடா வருடம் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்.

குறிப்பாக பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்க்ரைப் உதவியுடன் தான் தேர்வெழுதுவார்கள். அவர்கள் வாயால் சொல்ல சொல்ல,  ஸ்க்ரைபர்கள்  எழுதுவார்கள்.

இதுபோல பார்வைத்திறன் அற்றவர்கள் பிறரை நம்பி இருக்காமல், தாங்களாகவே தேர்வெழுதும் வகையில் 2008 ஆம் ஆண்டிலேயே நாங்கள் திரையைப் படிக்கும் (Monitor Screen Reader) சாஃப்ட்வேர்களை உருவாக்கினோம். அதன் மூலம் பார்வையற்றவர்கள் தாங்களே கம்ப்யூட்டர் மானிட்டரில் வெளிப்படும் கேள்விகளை வாசிக்க வைத்து அவற்றை காதால் கேட்டு, அந்த கேள்விகளுக்கான பதில்களை தாங்களே வாயால் சொல்ல சொல்ல அந்த பதில்கள் கம்ப்யூட்டர் திரையில் தானாகவே (டைப் செய்யாமல்) வெளிப்படுமாறு செய்யும் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exam) என்ற சாஃப்ட்வேரை உருவாக்கிக் கொடுத்தோம். இப்போது அவற்றில் Ai தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகிறோம்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோல் நிறைய செய்து வருகிறோம்.

நேர்காணல் செய்தவர்: அகிலா ஜ்வாலா!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 21, 2024 | ஞாயிறு

(Visited 1,334 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon