கனவு மெய்ப்பட[4] – நம் பலம் நம் கையில்தான்! (minnambalam.com)

‘அதிர்ஷ்டக்காரர்கள்’, ‘கொடுத்து வைத்தவர்கள்’, ‘பிக்கல் பிடுங்கள் இல்லை’, ‘பணம் கொட்டிக் கிடக்கு’ – இவை சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் இலவச பட்டப்பெயர்கள்.

பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம்போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும், விடா முயற்சிகளும்தான்.

இவர்களின் சாகசங்களைப் பார்த்து வயிற்றில் எரிச்சலும் காதில் புகையும் வருபவர்கள் தாழ்வு மனப்பான்மையை கேடயமாக வைத்துக்கொள்வதால் அவர்களை நோக்கி வர இருக்கும் வெற்றியும் உள்ளே வரமுடியாமல் விலகிச் செல்கின்றன.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கர்நாடக இசைப் போட்டியில் கலந்துகொண்டேன். ஸ்டேஜுக்கு முன் வரிசையில் போட்டியில் கலந்துகொண்டவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தோம். போட்டிக்கு ஒவ்வொருவரின் பெயரை அழைக்கும்போதும் எனக்குள் பயம் புயல்காற்றாய். எனக்கு முன் அமர்ந்திருந்த பெண்ணின் பெயரை அழைத்ததும் நான் வரிசையில் இருந்து கழன்று வீட்டுக்கு ஓடிவராத குறையாக வந்து சேர்ந்தேன். அந்த அளவுக்கு Stage Fear.

என் சிறுவயதில் உள்ளுக்குள் தைரியமானப் பெண்ணாக இருந்தாலும்  பொதுவெளியில் பயந்த சுபாவம்தான். என் வயதை ஒத்த நண்பர்களும் குறைவு. காரணமாய் சாதாரண பேச்சும் குறைவு. அதுவும் நான்கு பேருக்கு முன் நின்று பேச நினைத்தால் வாயில் இருந்து காற்றுதான் வரும்.

ஆனால் என்னுள் எப்பவும் ஜான்சிராணி குதிரைமேல் வாளுடன் ஏறி புரட்சியுடன் பயணித்துக் கொண்டிருப்பாள், மகாகவி பாரதி ‘அச்சமில்லை அச்சமில்லை’ என கவிதை பாடிக்கொண்டிருப்பான்.

இளம் வயதில் தைரியத்தை உள்ளுக்குள் உரம்போட்டு வளர்த்தேன். என்னைச் சுற்றி நடக்கின்ற விஷயங்கள் அத்தனையையும் கூர்ந்து கவனித்து ஒவ்வொன்றையும் அணு அணுவாக உள்வாங்கிக்கொண்டே வந்தேன். Inner Strength – ஐ அடித்தளமாக்கினேன். இதனால் அமைதியான பெண். ரொம்ப சாஃப்ட் என சமர்த்துப் பெயர் எடுத்தேன்.

இந்த நேரத்தில் பொதுவெளியில் அதிரடியாக இருந்த ஒரு சக மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி என்னை உருகுலைத்தது. பெற்றோரை கேள்விகளால் குடைந்தெடுத்தேன்.

தைரியமான பெண் ஏன் தற்கொலை செய்துகொண்டாள்? இதுதான் என் கேள்வி. ‘வெளியில் அதிரடியாக பேசுபவர்கள் அனைவருமே தைரியமானவர்கள் என்று பொருள் அல்ல… உள்ளுக்குள் இருக்கும் கோழைத்தனத்தை வெளியில் கொட்டப் பயன்படுத்தும் ஆயுதமே அதிரடி…’ – என் பெற்றோர் சொன்ன கருத்துக்களால் அப்போதைக்கு நான் சமாதானமடைந்தாலும் எனக்கான பக்குவம் வரும்போது Inner Strength வேறு, Outer Strength வேறு என்பதை புரிந்துகொண்டேன்.

என் 21 வயதுவரை படிப்புடன் சேர்த்து என்னுடன் வளர்ந்தது என் Inner Strenth.

உள் வலிமையும், புற வலிமையும்

சுயமாக நிறுவனம் தொடங்கியவுடன் பிராஜெக்ட்டுகள் சம்மந்தமாக பலரை சந்திப்பது, என் நிறுவனத்துக்காக நேர்காணல் செய்து ஆட்களை தேர்வு செய்வது போன்றவற்றை நான் திறமையாக செய்வதற்கு நான் வளர்த்தெடுத்த Inner Strength எனக்கு உதவியது.

நான் தொழில்ரீதியாக வளர வளர பொது மேடையில் சிறப்பு விருந்தினர்களாக பேசுவதற்கு அழைப்புகள் வரத்தொடங்கின. அங்குதான் திரும்பவும் Stage Fear எட்டிப் பார்த்தது.

22 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலில் பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிக்கான ஒர்க்‌ஷாப்புக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். பேச்சாளராக மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஜாஸ் எனப்படும் திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டரை அவர்களாகவே பயன்படுத்தும் பயிற்சியை அறிமுகப்படுத்தவும் அந்த நிகழ்ச்சி.

எனக்கு முன் டாக்டர் பட்டம் பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரும் டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் உட்பட அனைவருமே பார்வைத்திறன் இழந்தவர்கள்.

முதல் மேடை நிகழ்ச்சி. மைக்கைப் பிடித்ததும் கை லேசாக உதறல் எடுத்தது. கால்களும் அப்படியே. முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டேன். ‘அனைவருக்கும் வணக்கம்’ எனச் சொல்லி மெல்ல பேசத்தொடங்கினேன்.

எனக்கு முன் அமர்ந்திருந்த பேராசிரியர்கள் அமைதியாக நான் என்ன சொல்கிறேன் என கூர்ந்து கவனிக்கத் தொடங்க, எனக்குள் இருந்த நடுக்கம் எங்கே சென்றது என தெரியவில்லை. அனைவரின் முகத்தைப் பார்த்து தைரியமாக பேச ஆரம்பித்தேன். அரை மணி நேரம் தொடர் உரை. அரங்கத்தில் பேரமைதி. எனக்குள் நான் வளர்த்திருந்த Inner Strength என்னை மெருகேற்றி தக்க சமயத்தில் Outer Strength ஆக வெளிப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

இந்த நிகழ்வில் முக்கியமாக மற்றொன்றையும் சொல்லியாக வேண்டும். பார்வையற்றவர்கள் என்பதால் அவர்கள் யாருமே மேடையில் பேசும் என் உருவத்தையும் பேசும் பாவத்தையும் கவனிக்க முடியாது என்பது கூடுதல் அனுகூலம். அதனால் என்னால் இன்னும் சிறப்பாக பேச முடிந்தது.

அதன் பிறகு எப்போதெல்லாம் பொதுமேடையில் பேச மைக்கைப் பிடிக்கிறேனோ அப்போதெல்லாம் நான் சொல்ல வருவதில் மட்டும் கவனமாக இருக்க ஆரம்பித்தேன். எதிரில் இருப்பவர்கள் என்னை பார்க்கிறார்கள் என்ற உணர்வையே தூக்கி எறியும் பக்குவம் பெற்றேன்.

இப்படித்தான் மேடை நிகழ்ச்சிகளிலும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்.

பயமும், கூச்ச சுபாவமும் ஏதோ பெண்களுக்கான பண்புகளாக பொதுமைப்படுத்த வேண்டாம். இவை ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

சோதனைகளைக் கடந்த சாதனைகள்

வெற்றியாளர்கள் அனைவரும் சாதனையாளர்களாகவே பிறப்பதில்லை. அவர்களும் சாதாரணமானவர்களைப் போலவேதான் பிறக்கின்றனர்.

ஆனால் அவர்கள் வளர்கின்றபோது, ஒரு காலகட்டத்தில் தங்கள் நிலை உணர்ந்து, அடிப்படையான தங்களின் குணநலன்களில் தேவையான மாற்றங்களை செய்து கொண்டதோடு, வாழ்நாள் முழுவதும் தங்கள் பண்புகளை மேம்படுத்தி உயர்த்திக் கொள்ள தொடர்ச்சியாக உழைத்ததால்தான் உலகம் போற்றும் வெற்றியாளர்களாக மாறியிருகிறார்கள்.

உலகமே ‘மஹாத்மா’ என்று போற்றுகின்ற காந்திஜி சிறுவயதில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர். படிப்பிலும் சராசரிக்கும் சற்று கீழ்தான். பிறரிடம் பேசுவதற்கே பயப்படும் கோழையும்கூட.

‘என்    புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான    நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம்    விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவது இதுவே எனது     அன்றாடப் பழக்கம்.   யாருடனும் பேசவே பிடிக்காததால்  உண்மையில் ஓட்டமாகத்தான் வீடுவந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில்  யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்…’ என தன் சுயசரிதையில் காந்திஜியே குறிப்பிட்டிருக்கிறார்.

தன் மாமாவின் வற்புறுத்தலினால் லண்டனுக்கு சட்டம் படிக்கச் சென்றார். அங்கும் பல மாதங்கள் வீட்டு நினைவுகளால் இரவு நேரங்களில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தூக்கத்தைத் துறந்திருக்கிறார். அடுத்த கப்பல் ஏறி ஊர் திரும்பி விடலாம் என்று பல நாட்கள் யோசித்திருக்கிறார்.

எல்லாவற்றையும் மீறி சட்டம் முடித்து இந்தியா திரும்பியவருக்கு தொடர்ச்சியான தோல்விகள். லண்டனில் படித்த சட்டம் தவிர இந்தியாவின் சட்டம் பற்றி தெரிந்திருக்கவில்லை. முதல் வழக்கைக் கையாளும் போது கோர்ட்டில் வாதாட முடியாமல் கால்களில் நடுக்கம். பயம் உலுக்கி எடுக்க, தன் வழக்கை சக வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு கோர்ட் அறையை விட்டு வெளியேறினார்.

இந்த சூழலில் காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவில் கணக்குப் பதிவேடுகளை பராமரிக்கின்ற ஒரு நிறுவனத்துக்கு சட்ட ஆலோசனை வழங்கும் பணி கிடைத்தது. அதுவும் காந்திஜிக்கு சவாலாகவே இருந்தது. ஏனெனில் அவருக்கு கணக்கு பற்றி எதுவுமே தெரியாது.

இந்த காலகட்டத்தில்தான் காந்திஜி தன் நிலை உணர ஆரம்பித்தார். தொடர்ச்சியான சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதையும், ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொண்டே இருந்தால் எந்த ஒரு பணியிலும் நிலைத்திருக்க முடியாது என்பதையும் உணரத் தொடங்கினார்.

கணக்குகளைக் கற்றுக் கொண்டார். தன்னிடம் வருகின்ற வழக்குகளை தைரியமாக கையாள முயற்சி செய்தார்.

வழக்கு கோர்ட்டுக்கு வரும் முன்னர், தன் வழக்கின் இரு தரப்பினரிடமும் கோர்ட்டுக்கு வெளியே பேசி அவர்களை சமாதானம் செய்து வைக்கின்ற திறமையைப் பெற்றார்.  இதன் காரணமாக வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்தன.

மனிதர்களின் குணத்தைப் படித்து, அவர்கள் இதயத்துக்குள் இடம் பிடித்து, இரு தரப்பினரின் அன்பையும் பெற்று, வழக்கை சுமூகமாக முடித்துக் கொடுத்து சிறந்த வழக்கறிஞர் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்தார்.

பேசுவதற்கே நடுங்கிய காந்திஜி, தலைசிறந்த வழக்கறிஞர் என்று பெயரெடுக்கக் காரணம், அடிக்கடி சூழலை மாற்றிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்து கிடைத்த சூழகுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு திறமைகளை மேம்படுத்திக் கொண்டதினாலேயே வெற்றி கிடைத்தது.  பின்னாளில் உலகம் போற்றும் மஹாத்மாவானதும் அந்த உத்வேகத்தினாலேயே.

தன் மீதுள்ள நம்பிக்கை!

‘காற்றின் மொழி’ என்ற திரைப்படத்தின் கதாநாயகி +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன், ஒரே மகன் என அழகான நடுத்தரக் குடும்பம்.

எதேர்சையாக ரேடியோ ஸ்டேஷனில்  ‘நீங்கள் RJ ஆக வேண்டுமா?’ என அறிவிப்பைப் பார்த்து ’என்னால் முடியும் மேடம்…’ என கண்களில் நம்பிக்கைத் தெரிக்கப் பேசியே வேலைக்குச் சேர்கிறாள்.

இரவு நேர பணி. போனில் அந்தரங்கப் பிரச்சனைகளை கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி. ஆண்கள் பலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்க கதாநாயகி சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பதில் சொல்லி அவர்கள் மனமாற்றத்துக்கு உதவுவதாக கதை செல்கிறது.

இந்த நிகழ்ச்சி குறுகிய நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்று விருதுக்கும் தயாராகிறது.

+2 தோல்வி. வேலைக்குச் சென்ற அனுவமே இல்லை. சமயோஜிதமாக பேசும் திறமை மட்டுமே கதாநாயகியின் ஒரே திறமை. அவளால் எப்படி இதை சாத்தியமாக்க முடிந்தது?

தன் மீதுள்ள நம்பிக்கை. அதன் பெயர்தான் தன்னம்பிக்கை.

யோசிப்போம்.

ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2018/11/30/13

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 4

(Visited 104 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon