ஜனநாயகக் கடமையை செய்ய எங்கள் இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கு 7 மணிக்கே அப்பா அம்மாவுடன் சென்றுவிட்டேன்.
எங்களுக்கும் முன்பே அந்தப் பள்ளியில் உள்ள அத்தனை வார்டுகளிலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது.
எங்கள் வார்டை தவிர மற்ற வார்டுகளில் உள்ள வரிசை வெகு சீக்கிரம் நகர்ந்து கொண்டே இருந்தது. எங்கள் வார்ட் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தது.
சும்மா நிற்பது சுமை அல்லவா? அந்த சுமையை குறைக்க ஒரு குட்டி சிறுவன் உதவினான்.
எனக்கு முன்பு ஒரு கணவன் மனைவி ஒரு சிறுவன். சிறுவன் அப்பாவின் கைகளில். கொஞ்சம் நேரம் இறக்கிவிட அவன் அம்மாவின் கால்களோடு ஒட்டிக் கொண்டு நின்றான்.
அவன் அம்மா அவனிடம் ’போடா செல்லம், அங்கு ஒரு பூச்செடி இருக்கு பாரு. அதுவரை நடந்து சென்றுவிட்டுவா பார்ப்போம்…’
‘நீ தானே எங்கேயும் உங்களைவிட்டு ஓடிப் போகக் கூடாதுன்னு சொன்னே… இப்ப நீயே என்னை அங்கே போகச் சொல்லறியே…’
‘அது ரோடில் போகும்போது ஓடக் கூடாதுன்னு சொன்னேன்…’
இப்படியாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை. நான் அதனை ரசித்தபடி அந்தச் சிறுவனிடம் ‘என்ன படிக்கறே…’ என்று கேட்டதற்கு நெளிந்தபடி ‘நான் இன்னும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கல… ப்ளே ஸ்கூல்தான் போறேன்…’ என சொல்ல, நான் விடாமல் ‘உன் பேரென்ன?’ என்றதற்கு அவன் வாய்க்குள்ளேயே அவன் பெயரை சொல்லிக் கொள்ள ‘குட் பாய்’ என செல்லமாய் சொல்ல அவன் திரும்பவும் அவன் அப்பாவின் கைகளுக்குள் அடக்கமாகி தோளில் சாய்ந்து கொண்டு என்னை பார்ப்பதும் திரும்பிக் கொள்வதுமாய் விளையாட ஆரம்பித்தான்.
வரிசை மெல்ல மெல்ல முன்னேற, திரும்பவும் அந்தச் சிறுவன் அப்பாவைவிட்டு கீழிறங்கி அம்மாவை அணைத்து நின்றுகொண்டு, ‘ஏம்மா இங்கே இவ்ளோ போலீஸ்… இங்க திருடங்களே இருக்க மாட்டாங்க இல்ல…’ என்றான். அவன் அம்மாவும் ‘ஆமாண்டா…’ என சொல்லிவிட்டு கணவனுடன் ஏதோ பேச ஆரம்பித்தார்.
அந்தக் குழந்தையின் கேள்வி எனக்குள் மற்றொரு கேள்வியை தூண்டியது. ‘இந்த உலகம் குழந்தைகளின் நம்பிக்கைகள் போல இருந்துவிட்டால் எத்தனை அழகாக இருக்கும்?’
என் யோசனையின் வேகத்துக்கு ஏற்ப வரிசை வேகமாக முன்னேறி நான் வாக்களிக்க உள்ளே செல்ல வேண்டிய இடத்துக்கு நகர்ந்தேன்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்து அப்பா அம்மாவுடன் சாலையில் நடக்க ஆரம்பித்தபோது அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன். அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
நான் ‘டாடா’ சொல்ல அவன் வெட்கத்துடன் அவன் அப்பாவின் தோளில் புதைந்து கொண்டான்.
அவன் அம்மாவும் அப்பாவும் என்னை நட்புடன் பார்த்து புன்னகைத்தனர்.
மனம் முழுவதும் மலர்ச்சியாக, இன்றைய பொழுது இப்படியாக மலர்ந்தது!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 19, 2024 | வெள்ளி