அறம் வளர்ப்போம் 90-96

அறம் வளர்ப்போம்-90
மார்ச் 30, 2020

மனம் –  எண்ணங்களால் நிரப்பப்பட்டது, சிந்திக்கும் திறன் வாய்ந்தது, மனிதனின் தரத்தை நிர்ணயிப்பது

மனிதனின் மனம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பப்பட்டது.

மனதில் நாம் நிரப்பும் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் சிந்திக்கும் திறன் மாறுபடும்.

நல்ல எண்ணங்கள் நேர்மறையாகவும், தீய சிந்தனைகள் எதிர்மறையாகவும் வினையாற்றி மனிதனின் தரத்தை நிர்ணயிக்கும். இதன் அடிப்படையில்தான் ஒரு மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-91
மார்ச் 31, 2020

அஞ்சாமை –  துணிச்சல், பயமின்மை, நேர்கொண்ட பார்வை

அஞ்சாமை என்பது துணிச்சலுடன் செயல்படும் குணம்.

நாம் செய்கின்ற செயல் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நம் மனதில் பயம் என்பதற்கே இடமில்லை.

அஞ்சாமை குணம் நேர்மையான துணிச்சலையும், சோர்வில்லாமல் போராடும் நேர்கொண்ட பார்வையையும் நமக்குள் புகுத்தி நம்மை வலிமையுடன் செயல்படவைக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-92
ஏப்ரல் 1, 2020 

கோபம் –  நோக்கத்தின் அடிப்படையில் இருவகைப்படும், நல்ல கோபம் பிறரை நல்வழிப்படுத்தும், கெட்ட கோபம் நம்மையும் பிறரையும் பாதிக்கும் 

எந்த நோக்கத்துக்காக கோபப்படுகிறோமோ அதன் அடிப்படையில் அது நல்ல கோபம் கெட்ட கோபம் என இருவகைப்படும்.

நல்ல கோபம் பிறரை நல்லவற்றில் ஈடுபடுத்தவும், அவர்கள் செய்கின்ற தவறுகளை திருத்தவும் பயன்படும்.

கெட்ட கோபம் நம் உடல்நிலையையும் மனநிலையையும் சிதைக்கும். அதுபோல பிறரையும் பாதிக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-93
ஏப்ரல் 2, 2020

பஞ்சபூதங்கள் –  நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம், இயற்கையின் அடிப்படை, உயிர்ப்பின் அடிப்படை.

இந்த உலகம் ஐந்தே ஐந்து மூலப்பொருட்களால் இயங்குகின்றது. அதற்கு பஞ்சபூதங்கள் என்று பெயர். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

இயற்கையின் அடிப்படையும் பஞ்சபூதங்களே.

நம் உடலும் உயிரும், நாடும் நகரமும் உலகமும் சுபிக்ஷமாக உயிர்ப்புடன்  இயங்குவதற்கு முழுமுதற் காரணமும் பஞ்சபூதங்களே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-94
ஏப்ரல் 3, 2020

அதிகாரம் செய்தல் –  ஆதிக்க மனோபாவம், ஆணவத்தை வெளிப்படுத்தல்,  அடக்கி ஆளுதல்  

நம் பதவி அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி பிறர் மீது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அதிகாரம் செய்தல் என்று பெயர்.

தேவையில்லாமல் காட்டப்படும் அதிகார மனோபாவம் அவரவர்களின் ஆணவத்தையே வெளிப்படுத்தும். அதனால் பிறரிடம் எந்த காரியத்தையும் சிறப்பாக முடித்து வாங்க இயலாது. அன்பினால் மட்டுமே பிறரை தன்வசப்படுத்த முடியும்.

பிறரை அடக்கி ஆள்வதன் மூலம் ஆதிக்க மனோபாவமும் ஆணவமும் வெளிப்படுமே தவிர அந்த இடத்தில் அன்பு அடிபட்டுப் போகும். அன்பில்லாத இடத்தில் எதிர்மறை எண்ணங்களே மேலோங்கிப் பரவும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-95
ஏப்ரல் 4, 2020

பழக்க வழக்கங்கள் –  நல்லவை கெட்டவை, நல்லவை நியாய தர்மங்களுக்குக் கட்டுப்படுபவை, கெட்டவை கட்டற்று இயங்குபவை  

பழக்க வழக்கங்கள் நல்லவை கெட்டவை என இருவகைப்படும்.

நல்ல பழக்க வழக்கங்கள் சட்ட திட்டங்களுடன் ஒரு வரையறைக்கு உட்பட்டு நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குபவை. அதை பின்பற்ற திடமான மனமும் உறுதியான குறிக்கோளும் வேண்டும். அப்படி பின்பற்றத் தொடங்கிவிட்டால் செய்கின்ற எல்லா செயலிலும் வெற்றிதான்.

கெட்ட பழக்க வழக்கங்கள் கட்டற்று இயங்கும் தன்மை கொண்டவை. எந்த நியாய தர்மமும் கிடையாது. மனம்போன போக்கில் இயங்க வைக்கும். பெரிய முயற்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. இதற்கு அடிமையாகிவிட்டால் வாழ்க்கையே புதைக்குழிதான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-96
ஏப்ரல் 5, 2020

தாழ்வு மனப்பான்மை –  தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுதல், திருப்தியின்மையால் எழும் உணர்வு, தற்கொலைவரை கொண்டு செல்லும்.

தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுவதால் உண்டாகும் உணர்வுக்கு தாழ்வு மனப்பான்மை என்று பெயர்.

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாங்கள் மற்றவர்களைவிட குறைவானவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்று தங்களைப் பற்றிக் கருதுகின்ற திருப்தியற்ற மனநிலை கொண்டவர்கள்.

இந்த உணர்வுடையவர்கள் எப்போதும் தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தாள முடியாத மன அழுத்தம் தற்கொலை வரை கொண்டு செல்லும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari