ஹலோ with காம்கேர் – 91
March 31, 2020
கேள்வி: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன?
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதின் நீங்கள் இல்லை என்று புலம்புகிறீர்களா, காரணம் வேறு யாருமல்ல. நீங்களேதான்.
ஆமாம். நீங்கள்தானே உங்கள் பிள்ளைகள் மனதின் சிம்மாசனத்துக்கு மற்றவர்களை பரிந்துரை செய்து அனுப்பி வைக்கிறீர்கள் உங்களை அறியாமலேயே.
இசை ஜாம்பவானை உதாரணம்காட்டி இசையில் அவரைப்போல வரணும், ஸ்போர்ட்ஸில் உச்சத்தில் இருப்பவரை உதாரணம்காட்டி ஸ்போர்ட்ஸில் அவரைப் போல வரணும், பிசினஸில் ஜெயித்தவரை உதாரணம்காட்டி அவரைபோல வாழ்க்கையில் ஜெயிக்கணும் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவரை நீங்களே மற்றவர்களை பரிந்துரை செய்து உங்கள் பிள்ளைகள் மனதில் உள்ள சிம்மாசனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னர் என் பிள்ளைகளின் மனதில் இடம்பிடிக்கவே முடிவதில்லை என புலம்புவதால் என்ன பயன்?
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்னுதாரணமாக உங்கள் மூதாதையர்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தினரை பரிந்துரை செய்யுங்கள். அவர்களாகவே உங்களை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் வகையில் நடந்துகொள்ளுங்கள்.
இந்த ஊரடங்கு காலகட்டம் கொடுத்துள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் இளமைகால வாழ்க்கை முறையை சுவாரஸ்யமாக உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம். இதுவரை உங்கள் தாத்தா பாட்டி, உங்கள் கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி இவர்களின் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தவில்லையெனில் இனியாவது செய்யலாம். அவர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை கதைபோல பேசலாம்.
இதுநாள் வரை தன்னுடைய திறமை என்னவென்றே தெரியாமல் இருக்கும் பிள்ளைகளுக்குக்கூட, இப்படி பல விஷயங்கள் உள்ளுக்குள் செல்லும்போது ஏதேனும் ஒரு புள்ளியில் அவர்களுக்கு தங்கள் திறமை என்ன என்பது புரியவரும்.
நம் உறவினர்கள் ஒவ்வொரிடமும் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அந்த நல்ல விஷயங்களை தேடித்தேடி கண்டுபிடித்தாவது அவற்றை எடுத்துச் சொல்லலாம். தங்கள் கெட்ட பழக்க வழக்கங்களினால் சீரழிந்த உறவினர் யாரேனும் இருந்தால் அது குறித்தும் பேசலாம்.
எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் நம் குடும்பத்தில் இருந்தே பாடம் கற்றுக்கொடுக்க முடியும். எப்படி வாழக்கூடாது என்பதற்கும் நம் குடும்பத்திலேயே முன்உதாரணங்கள் இருக்கும்.
நேர்மறையை எடுத்துச் சொல்லும் அதே நேரம் எதிர்மறையையும் சொல்ல வேண்டும்.
உங்கள் குடும்பத்துக்காக Family Tree ஒன்றை தயாரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டு உறுப்பினர்களை தலைமுறைவாரியாக பிரித்து ஒவ்வொருவர் பற்றியும் சிறு குறிப்பை தயார் செய்யுங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் குடும்பப் புத்தகம் (Family Book) இருப்பது அவசியம்.
நாங்கள் 2007-ம் ஆண்டு அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்ற தலைப்பில் எங்கள் குடும்பத்துக்கான ஆவணப் படத்தையும், குடும்பப் புத்தகத்தையும் தயார் செய்து பொக்கிஷமாக்கியுள்ளோம். வருடா வருடம் அப்டேட்டும் செய்கிறோம்.
வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கூடி இருக்கும் இந்த அருமையான விடுமுறை காலகட்டம் முடிவடைதற்குள் உங்கள் வீட்டுக்கு குடும்பப் புத்தகம் தயார் செய்யுங்களேன். வாழ்த்துகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software