ஹலோ With காம்கேர் -149: நீங்களும் கடவுளின் மைக்ரோ அவதாரங்களாக வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 149
May 28, 2020

கேள்வி:   நீங்களும் கடவுளின் மைக்ரோ அவதாரங்களாக வேண்டுமா?

ஒரு வீடியோ. அசலா அல்லது கற்பனையா என தெரியவில்லை. எதுவானால் என்ன, மனிதாபிமானமும் அன்பும் எந்த ரூபத்தில் இருந்தாலும் தெய்வீகம் தானே.

சிறுவர்களுக்கான கூடைப் பந்து விளையாடும் மைதானம் அது. சுலபமாக இடம் மாறி வைக்கும்படியான கூடைப் பந்து கம்பம். ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் அவனுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனால் கையையோ காலையோ ஏன் கை விரல் சுண்டுவிரலைக் கூட தன் இஷ்டத்துக்கு அசைத்துவிட முடியாது.

மற்ற சிறுவர்கள் பந்தை கைகளால் தூக்கி எறிந்து கூடைக்குள் விழ வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவனோ விளையாடும் மற்ற சிறுவர்களை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான் விளையாட்டில் இருந்த மற்றொரு சிறுவன்.

எல்லோரும் விளையாடி முடித்ததும் அந்தச் சிறுவன் கூடைப் பந்துக் கம்பத்தை மாற்றுத்திறனாளி சிறுவன் இருக்கும் இடத்துக்கு அருகே கொண்டு சென்றான். சிறுவர்களுக்கான மைதானம் என்பதால் எடை குறைவாக உள்ள கம்பமாக இருக்க வேண்டும். அதனால்தான் அந்த சிறுவனால் கம்பத்தை நகர்த்த முடிந்திருக்கிறது.

பந்தை அவன் பிடித்துக்கொள்ள ஏதுவாக வைத்தான். பிறகு, அவனுக்கு அருகே அந்தக் கம்பத்தை பாந்தமாக சாய்த்தான்.

அந்த மாற்றுத்திறனாளி மாணவன் தன் பிடிக்குள் அடங்காமல் திமிறும் பந்தை முகத்தாலும், கைகளாலும் பிரம்மப் பிரயத்தனப்பட்டுப் பிடித்துக்கொண்டு மார்பால் எக்கி எக்கி அந்த கம்பத்தில் இருந்த வலைக்குள் போட முயற்சி செய்தான்.

உதவி செய்த சிறுவன் கம்பத்தை பந்து வலைக்குள் விழுவதற்கு வாகாய் காண்பித்துக்கொண்டு பொறுமையாக நின்றிருந்தான்.

ஒரு கட்டத்தில் பந்து வலைக்குள் விழுந்தது. அந்த மாற்றுத்திறனாளி மாணவன் முகத்தில் வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த சந்தோஷத்துக்குக் காரணமான சிறுவனின் முகத்தில் அதைவிட பலமடங்கு சந்தோஷம்.

வெகு சிலருக்கே போகிற போக்கில் இப்படி சின்ன சின்ன செய்கைகளில் நம்பிக்கையை அள்ளித் தெளித்துவிடத் தெரிந்திருக்கிறது. அவர்கள் கடவுளின் மைக்ரோ அவதாரங்களாக இருப்பார்களோ என நான் நினைப்பதுண்டு. எல்லோருக்கும் அந்த மனம் இருந்துவிடுவதில்லையே.

உளவியல் ரீதியாக இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா?

நம்மில் பலருக்கு பிறர் கொடுக்கும் இதுபோன்ற சின்ன சின்ன நம்பிக்கைகளே வாழ்நாள் முழுவதற்குமான உயிர்ப்பைக் கொடுக்கிறது.

பிறரிடம் காட்டும் இதுபோன்ற சின்ன சின்ன மனிதாபிமான செய்கைகள் பிறரை  வாழ்க்கையெனும் வானத்தில் சிறகடித்துப் பறக்கச் செய்வதுடன்  நம்மை அதைவிட உயரத்தில் பறக்கச் செய்யும் அபார சக்தி வாய்ந்தது. அதுவும் நாம் எந்தவிதமான பெருமுயற்சியும் செய்யாமலேயே என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

நாம் பிறரிடம் காட்டும் மனிதாபிமானமும், அன்பும், கனிவும், கருணையும் நம்மை எஸ்கிலேட்டர் வைத்து சொகுசாக சந்தோஷமான வாழ்க்கையின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

இதுவரை அந்த எஸ்கிலேட்டரில் பயணிக்காதவர்கள் இனி முயற்சித்துப் பாருங்களேன்.

ரொம்பவே பரவசமாக இருக்கும். பல நேரங்களில் அந்த பரவசத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon