இங்கிதம் பழ(க்)குவோம்: 42-50

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 42
மே 25, 2020

கொண்டாடவும் வேண்டாம், அற்பமாகவும் நினைக்க வேண்டாமே!

நம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும் வாரி வழங்குகிறார்கள்.

அவரவர்கள் துறையில் சிறப்பாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் பணி செய்பவர்களே பிரபலம்.

அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவது கொண்டாடுபவருக்கும், கொண்டாடப்படுபவருக்கும் கஷ்டத்தைத்தான் கொடுக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 43
மே 26, 2020

வெற்றியை கொண்டாடுவோம், தோல்வியை திருத்தம் செய்வோமே!

எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும், ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும்.

பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். இரண்டுமே உங்கள் உழைப்பு. கிடைக்கின்ற வெற்றி உங்கள் சொத்து.

தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படி சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்தான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 44
மே 27, 2020

எதிர்மறையையும் எதிர்கொள்வோமே!

எதிர்மறை சூழல் அமைந்துவிட்டாலும் நேர்மறையாக இருப்பதைப்போலவே நடந்துகொள்வதும் சிந்திப்பதும் உயிர்ப்புடன் காலத்தைக் கடத்த உதவும் மந்திரம்.

நம் ஒவ்வொருவரிடமுமே நேர்மறையும் எதிர்மறையும் கலந்தே இருக்கும். எத்தனை சதவிகிதம் நேர்மறை, எத்தனை சதவிகிதம் எதிர்மறை என்பதில்தான் விஷயமே உள்ளது. நேர்மறை என்பது அரை லிட்டர் பாலில் கால் டம்ளர் தண்ணீர் கலப்பதுபோல. எதிர்மறை என்பது அரை லிட்டர் தண்ணீரில் கால் டம்ளர் பாலை கலப்பதுப் போல. நீங்கள் பாலில் தண்ணீராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது தண்ணீரில் பாலாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

நேர்மறையாக சிந்திப்பவர்களிடம் தைரியம் அதிகமாக இருப்பதைக் காணலாம். காரணம் அவர்கள் எதிர்மறையாகவும் சிந்திப்பார்கள். அதனால் அந்த சூழலை லாவகமாக கையாளும் திறன் பெற்றிருப்பார்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 45
மே 28, 2020

நம்மையும் உயர்த்துமே நாம் காட்டும் மனிதாபிமானம்!

பிறரிடம் காட்டும் சின்ன சின்ன மனிதாபிமான செய்கைகள் பிறரை  வாழ்க்கையெனும் வானத்தில் சிறகடித்துப் பறக்கச் செய்வதுடன்  நம்மை அதைவிட உயரத்தில் பறக்கச் செய்யும் அபார சக்தி வாய்ந்தது.

நாம் பிறரிடம் காட்டும் மனிதாபிமானமும், அன்பும், கனிவும், கருணையும் நம்மை எஸ்கிலேட்டர் வைத்து சொகுசாக சந்தோஷமான வாழ்க்கையின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

மனிதாபிமானமும் அன்பும் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது தெய்வீகம் தானே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 46
மே 29, 2020

நம்மை நாம் மதிப்போமே!

நம்மை நாம் மதிப்பதையும், நம்மிடம் நாம் அன்பாக இருப்பதையும் எப்படி அறிவது? ‘தனிமனித ஒழுக்கம்’ என்ற அற்புதப் பண்பினால் அறியமுடியும்.

யார் பார்க்கப் போகிறார்கள், என்ன நடந்துவிடப் போகிறது, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற அசட்டுத் துணிச்சலினால் அந்த நிமிடத்தில் சந்தோஷமாக இருந்தால்போதும் என்கின்ற மனப்பாங்கினால் இன்று பெரும்பாலானோரிடம் தனிமனித ஒழுக்கம் காணாமல் போய் விட்டது.

இன்று நடைமுறையிலும் ஆன்லைன் உலகிலும் குற்றங்கள் பெருகிப் போனதுக்குக் காரணம் ‘தனிமனித ஒழுக்கம்’ குறைந்துபோனதே. நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையே நாம் ஒழுக்கத்துடன் வாழ்வதினால் மட்டுமே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 47
மே 30, 2020

வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறிவோமே!

தனிநபர் பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு முதலில் தேவைப்படுவது தன்னம்பிக்கை. அதற்கடுத்து அந்தப் பிரச்சனை தீர்வதற்கான வழிகள். அதற்கும் அடுத்தது பிரச்சனையினால் மனோ ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான தகுந்த மருத்துவ ஆலோசனைகள்.

இப்படி படிப்படியாக பல வழிமுறைகளைத் தாண்டி சம்மந்தப்பட்டவர்களை அந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வந்து, பிரச்சனையை தூரத் தள்ளிவைக்கப் பழக்கி பின்னர் புதிய பாதையில் பயணிக்க மனதையும் உடலையும் தயார் செய்ய வேண்டும்.

பிரச்சனையை துண்டு துண்டாக சிறியதாக்கிக்கொண்டு ஒவ்வொன்றாக உற்று நோக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதாக கிடைக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 48
மே 31, 2020

நேர்மையை உடல்மொழியில் உணர்த்துவோம்!   

நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடன் செய்வது, பரிபூரண ஈடுபாட்டுடன் செய்வது, வேலை பளு என புலம்பாமல் செய்வது, செய்கின்ற வேலைக்காக லஞ்சம் வாங்காமல் இருப்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது  இவைதான் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம்.

தாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு முன்னும் பின்னும்  ‘நான் எத்தனை  நேர்மையானவன் தெரியுமா?’ என தாங்களே சான்றிதழ் கொடுத்துக்கொள்பவர்களில் பலர் நேர்மையாக இருப்பதில்லை. பிறரை நம்ப வைக்க அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அது.

உண்மையாகவே நேர்மையாக இருப்பவர்களின் நேர்மை அவர்கள் உடல்மொழியிலும், செயல்களிலும் வெளிப்படும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai


அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 49
ஜூன் 1, 2020

வாழ்வோம், வாழ விடுவோமே!

வாழ் வாழவிடு என்பது அறம். வாழ் என்றால் பிறருக்கு இடையூறின்றி வாழ்வதாகும். வாழ விடு என்றால் பிறருக்கு உதவுவதால் அவர்களுக்கும் நம்மைப் போல வாழ வழியமைத்துக் கொடுப்பதாகும்.

நாம்தான் கருணையோடு இருக்கிறோம் என நினைத்து சின்ன பெருமிதத்துடன் நடந்துகொள்ளும்போது ‘நான் அதைவிட கருணையுடன் இருப்பேன்’என மிகவும் இயல்பாக நம்மைக் கடந்து செல்லும் அன்புள்ளங்கள் நம்மைச் சுற்றி இருப்பதால்தான் இன்னும் இந்த பூமி இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் ஒரு துளி கருணையைக் காண்பித்தால்போதும், இந்த பிரபஞ்சம் கடலளவு கருணையை நமக்காகக் கொட்டிக் கொடுக்க காத்திருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai 


அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 50
ஜூன் 2, 2020

நல்லவையும் கெட்டவையும் நம் கையில்தான்!

நல்ல பழக்கவழக்கங்களை விட கெட்ட பழக்க வழக்கங்கள்தான் நம்மை மிக எளிதாக ஆட்கொள்கின்றன.

நல்லவை சட்டத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதால் அதை பற்றிக்கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். கெட்டவை கட்டற்று இயங்கும் தன்மை கொண்டதால் பெரிய முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே நம்மிடம் குடிகொள்ளும்.

முன்னதைப் பற்றிக்கொள்வது ஆரம்பத்தில் கடினம். பற்றிக்கொண்டுவிட்டால் ஜெயமே. பின்னதை பற்றிக்கொள்வது சுலபம். பற்றிக்கொண்டுவிட்டாலோ நம் வாழ்க்கையே புதைக்குழிதான். ஜெயம் வேண்டுமா புதைக்குழி வேண்டுமா என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 110 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon