ஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா?

ஹலோ with காம்கேர் – 150
May 29, 2020

கேள்வி:  நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா?

அவர் ஒரு பத்திரிகையாளர். பி.ஈ சிவில் முடித்து விட்டு ஐடி துறைக்குள் செல்லாமல் தன் கனவுப் பணியான பத்திரிகை துறையில் பதினைந்து ஆண்டுகள் உழைத்து மெல்ல மெல்ல முன்னேறி பெயர் சொல்லும் அளவுக்கு தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர். இப்போது லே ஆஃபில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தற்சமயம் இதே துறையில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைப்பது கடினம். எல்லா இடங்களிலும் ஆட்குறைப்பும் சம்பளக் குறைப்பும் நடந்தவண்ணம் இருக்கின்றனவே.

அவர் பி.ஈ படிக்கும்போது ப்ராஜெக்ட் செய்வதற்காக எங்கள் நிறுவனத்தை அணுகி இருக்கிறார். அந்த முறையில் அறிமுகம். அதன் பிறகு பத்திரிகை துறைக்கு நுழைந்ததும் ஏதேனும் தொழில்நுட்ப கட்டுரைகள், பேட்டி வேண்டுமென்றால் போன் செய்வார்.

இரு தினங்கள் முன்பு எனக்கு போன் செய்து பேசினார். லே ஆஃப் குறித்து சில நிமிடங்கள் புலம்பித் தள்ளினார். தன் கனவுப் பணியைத் தவிர வேறெதும் சிந்திக்கத் தோன்றவில்லை என்று கலக்கத்துடன் பேசினார். தனக்கு ஏற்ற, தன் பணி சார்ந்த மற்றொரு பணி கிடைக்கும் வரை என்ன செய்வது என வருத்தப்பட்டார்.

நான் சில ஆலோசனைகளை சொன்னேன்.

‘உங்கள் துறை சார்ந்த பணி கிடைக்கும் வரை கிடைக்கின்ற பணியை ஏற்று செய்யலாமே. பொறியியல் படித்திருக்கிறீர்கள்…’

அதற்கு அவர், ‘இல்லை மேம், அப்படி சேர்ந்து விட்டால் நான் நிரந்தரமாக என் துறையில் இருந்து ஒதுங்கி விடுவேனே…’

‘ஆன்லைனில் இ-பத்திரிகை, யு-டியூப் சேனல் என ஆரம்பிக்கலாமே?’

‘அதில் எல்லாம் உடனடியாக வருமானம் பார்க்க முடியாதே மேம்’

‘இருக்கட்டுமே, இப்போது தொடங்குங்கள். உங்களுக்கான பணியையும் தேடுங்கள். விருப்பமான பணி கிடைத்த பிறகும் ஆன்லைன் பிசினஸை நேரம் கிடைக்கும்போது அப்டேட் செய்து வரலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற லே ஆஃபோ அல்லது வேறு ஏதேனும் சிக்கல் வரும்போது இப்போது உள்ளதைப் போல சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் ஓடுவதற்கு முன் ஏற்பாடாக செய்துகொள்ளலாமே’

‘இல்லை மேம், எனக்கு இப்போதைக்கு அதில் எல்லாம் மனம் செல்லவில்லை… மன உளைச்சலாக உள்ளது…’

இவர் எதற்கும் ஒத்து வராமல் பிடிகொடுக்காமல் பேசியதால், ‘சரி. கொஞ்சம் உங்கள் சிந்தனைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு பொறுமையாக காது கொடுத்து கேட்க முடியுமா’ என்று கேட்டுக்கொண்டு ஓர் உண்மைக் கதையைச் சொன்னேன்.

ஒரு இளவயது பெண்மணி. முப்பது மூன்று வயதுதான். எங்கள் உறவினர். சாதாரண ஜூரம், தலைவலி, கால் வலி இதற்கெல்லாம் மருத்துவமனையே செல்ல மாட்டார். அவர் அம்மாவின் இயற்கை வீட்டு வைத்தியத்திலேயே சரி செய்துகொள்வார். சுருங்கச் சொன்னால் மருத்துவமனை என்றாலே அலர்ஜி.

அவருக்கு 30 வயதில் கேன்சர். அதுவரை மருத்துவமனைக்கே செல்லாதவர் கேன்சர் குணமடைய  ஹீமோதெரபி முதலான சிகிச்சைகளுக்காக மருத்துவமனையே கதி என்று கிடக்க வேண்டிய சூழல் வந்தது. அவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். தொடர் சிகிச்சையில் இருந்தார். முழுமையாக குணம் அடைய இரண்டு வருடங்கள் ஆனது. ஆனாலும் மனம் தளராமல் ஒத்துழைத்தார்.

மருத்துவமனைக்கே செல்லாதவரால் எப்படி ஒத்துழைக்க முடிந்தது. உயிர் வாழ வேண்டும் என்றால் மருத்துவமனை செல்லத்தானே வேண்டும். பூரண குணம் ஆனவுடன் மருத்துவமனை, சிகிச்சை எல்லாவற்றையும் நிறுத்திவிட்டார். மருந்து மாத்திரை என எடுத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பியுள்ளார்.  நல்ல பணியிலும் சேர்ந்துவிட்டார்.

இந்த சூழலை உங்கள் லே ஆஃப் காலகட்டத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்களேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்தத் துறையில் பணியில் இருந்திருக்கிறீர்கள். இடையில் சின்ன சறுக்கல். அதே துறையில் பணி கிடைக்காத சூழல். அதனால் என்ன அப்படியே விட்டுவிட முடியுமா. வீட்டிலேயே முடங்கித்தான் கிடக்க முடியுமா. கிடைத்த வேலையில் சேர்ந்து சில நாட்கள் பணி புரிந்துகொண்டே உங்கள் துறை சார்ந்த பணியை தேடுங்கள். கிடைத்த வேலையிலும் உங்கள் கிரியேட்டிவிட்டியை காண்பியுங்கள். முழு ஈடுபாட்டையும் போட்டு உழையுங்கள். அதுவும் ஒரு புது அனுபவமாக உங்களை புதுப்பித்து புத்துணர்வு கொடுக்கும். நிச்சயம் நிலைமை சரியானதும் உங்கள் துறையிலேயே வாய்ப்புகள் உருவாகி உங்களை வரவேற்கும்.

அதை விட்டு வேலைக்கே செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பது என்பது கேன்சர் வந்துவிட்டது என தெரிந்தும் மருத்துவமனை செல்ல மாட்டேன் என்பதுதான் என் கொள்கை என வரட்டுப் பிடிவாதத்துடன் வீட்டில் முடங்கி தன்னையும் வருத்திக்கொண்டு, உடன் இருப்போரையும் திண்டாடவிடுவதற்கு  ஒப்பான செயல்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர் ‘முயற்சி செய்கிறேன் மேம், தொழில்நுட்ப உதவி ஏதேனும் தேவை இருந்தால் கேட்கிறேன். என்னுடைய யு-டியூப் சேனலுக்கு உங்கள் நேர்காணல்தான் முதல் வீடியோ. விரைவில் நேரில் சந்திக்கிறேன்…’ என்றார் நம்பிக்கையுடன்.

‘ஆரம்பியுங்கள். வாழ்த்துகள். கோவிட்-19 வைரஸ் பிரச்சனைகள் கொஞ்சம் தீர்ந்ததும் நேர்காணல் ஷூட்டிங் போன்றவற்றை பார்த்துக்கொள்ளலாம். அதுவரை வெப்சைட், யு-டியூப் சேனல் இவற்றுக்கான அடிப்படை விஷயங்களை தயார் செய்துகொள்ளுங்கள்… தற்சமயத்துக்கு ஜூம் ஆப் போன்றவை மூலம் ரெகார்ட் செய்ய முயற்சிக்கலாம்…’ என்றேன்.

முயற்சிதான் வாழ்க்கை, முன்னேற்றத்துக்கு முயற்சியைத் தவிர வேறெது கைக்கொடுக்கப் போகிறது?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

குறிப்பு: இந்தப் பதிவில் வரும் பத்திரிகையாளரைப் போலவே அதே மனநிலையில் இருக்கும் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவருடைய அனுமதி பெற்று இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon