ஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா?

ஹலோ with காம்கேர் – 152
May 31, 2020

கேள்வி:   பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா?

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நான் பார்க்கவில்லை. பரவலாக பலரும் எழுதும் விமர்சனங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். அந்தத் திரைப்படத்தில் இருந்து சிறிய வீடியோ கிளிப் ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.

‘பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று சொல்லித் தருவதைப் போல ஆண்களுக்கும் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்று சொல்லித் தாருங்கள்’ என்று ஜோதிகா கோர்ட்டில் பேசிக்கொண்டிருக்கும் காட்சி அது.

நல்ல கருத்துதான். ஆனால் டீன் ஏஜில் பிள்ளைகளை வைத்துள்ள ஆண்களில் சிலர் சமூக வலைதளங்களில் யாருக்குத் தெரிந்துவிடப் போகிறது என நினைத்து மெசஞ்சரிலும் வாட்ஸ் அப்பிலும் தனித்தகவலிலும் முறையற்றதாக நடந்துகொள்வதை கேள்விப்படத்தானே செய்கிறோம். ஒருசிலர் வீட்டில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரியாமல் ஃபேக் ஐடி வைத்துக்கொண்டு நேரடியாகவே தங்கள் மன வக்கிரங்களை பகிர்ந்துகொள்வதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிவர்.

சொல்லிக்கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பெற்றோர்களில் ஒரு சிலரே  திருந்த வேண்டிய சூழலில் இருக்கும்போது அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்களால் எப்படி நல்ல விஷயங்களை கடத்திவிட முடியப் போகிறது.

பெற்றோர்களைப் பொறுத்தவரை கற்றுக்கொடுப்பது என்பது தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்துகாட்டுவதையே குறிக்கும். தனிமனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் மட்டுமல்ல பல பெரியவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

இது குறித்து யோசித்துக்கொண்டிந்தபோது சென்ற ஆண்டு (2019) இதே நாள் என்ன எழுதி இருக்கிறேன் என பார்க்கும் ஆவலில் அந்தப் பதிவை எடுத்துப் பார்த்தேன். what a coincident? சென்ற வருடமும் இதே நாளில் தனிமனித ஒழுக்கம் குறித்தே எழுதியிருக்கிறேன்.

அதிலிருந்து சில கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வது, பிறருக்கு உதவி செய்வது, எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருப்பது இதெல்லாம் முக்கியம்தான்.

ஆனால் அதைவிட முக்கியம் நம்மை நாம் மதிக்கிறோமா? நம் மீது அன்பு செலுத்துகிறோமா?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். பதில் சொல்லத் தயங்குவார்கள். ஏன் உங்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்களேன்.

இதற்கான பதில் சுலபம்தான். ஆனால் யாரும் இந்தக் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நம் மீது நமக்குள்ள அன்பை மரியாதையை எப்படி வெளிப்படுத்துவது? நன்றாக உடை அணிந்துகொள்வதினாலா அல்லது நமக்குப் பிடித்த உணவை சாப்பிடுவதினாலா அல்லது நம் மனம் விரும்புவதை எல்லாம் செய்வதினாலா?

நிச்சயமாக இவை எதுவுமே இல்லை.

பிறர் நம்மிடம் அன்பாக இல்லை என்பதை அவரது கடுமையான பேச்சு, நடவடிக்கைகளினால் உணரலாம். மரியாதை கொடுக்கவில்லை என்பதை அவர் நம்மிடம் நடந்துகொள்ளும் விதத்தைவைத்து அறியலாம்.

நம்மை நாம் மதிப்பதையும், நம்மிடம் நாம் அன்பாக இருப்பதையும் எப்படி அறிவது?

‘தனிமனித ஒழுக்கம்’ என்ற அற்புதப் பண்பினால் அறியமுடியும்.

யார் பார்க்கப் போகிறார்கள், என்ன நடந்துவிடப் போகிறது, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்பது போன்ற அசட்டுத் துணிச்சலினால் அந்த நிமிடத்தில் சந்தோஷமாக இருந்தால்போதும் என்கின்ற மனப்பாங்கினால் இன்று பெரும்பாலானோரிடம் தனிமனித ஒழுக்கம் காணாமல் போய் விட்டது. இன்று நடைமுறையிலும் ஆன்லைன் உலகிலும் குற்றங்கள் பெருகிப் போனதுக்குக் காரணம் ‘தனிமனித ஒழுக்கம்’ குறைந்துபோனதே.

நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையே நாம் ஒழுக்கத்துடன் வாழ்வதினால் மட்டுமே.

ஒரு சிறிய கற்பனை.

ஒழுக்கமும் நற்பண்புகளும் இல்லாத எழுபது வயதான ஒருவர் இறந்த பிறகு அவர் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர் அவர் உறவினர்கள். அப்போது அவரைவிட்டுப் பிரிந்து சென்ற உயிர் இறந்த உடலைப் பார்த்து கேட்டதாம்.

‘உன்னை நான் இந்த உலகத்தில் எங்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறேன். அப்படியெல்லாம் சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறேன். எவ்வாறெல்லாம் உன் குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நாட்களை செலவழிக்க உதவியிருக்கிறேன், நீ செய்த அத்தனை அழிச்சாட்டியங்களையும் சகித்துக்கொண்டு உனக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறேன்.

எனக்கு எதுவுமே கொடுக்கவில்லையே நீ?

ஆனால் உன் உடலை சுமந்துவந்த ஆம்புலன்ஸுக்கு பணம் கொடுக்கிறார்கள், இதோ உன்னை எரிக்கப் போகிறவருக்கும் பணம் கொடுக்க எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டுள்ளனர் உன் உறவினர்கள்.

உன்னை இந்த உலகில் வாழ வைத்த எனக்கு என்ன ஊதியம் கொடுக்கப் போகிறாய்?’

தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து தாம் வாழ்ந்த காலத்திலேயே தன் உயிருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிட்ட ஒருவனைப் பார்த்து அவனது உயிர் இந்தக் கேள்வியைக் கேட்காது.

தனிமனித ஒழுக்கமே நமக்கு நாம் கொடுக்கும் மரியாதை, அன்பு, பாசம் etc., etc.,

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 7 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari