ஹலோ With காம்கேர் -207: ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு தப்பிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 207
July 25, 2020

கேள்வி: ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு தப்பிக்க முடியுமா?

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பலர் வேலை இழந்துள்ளனர். ஆனால் தன்னம்பிக்கையுடன் தொழில்நுட்பத்துடன் தங்களை இணைத்துக்கொண்டு சுயமாக முன்னேறத் தொடங்கிவிட்டனர்.

வெப்சைட் ஆரம்பித்தல், இணைய இதழ்கள் தொடங்குதல், இ-புத்தகங்கள் வெளியிடுதல், யு-டியூப் சேனல் ஆரம்பித்தல், வாட்ஸ் அப்பில் கதை சொல்லுதல் என ஏதேனும் ஒருவகையில் தங்களை தொழில்நுட்பத்தில் முன்னிருத்தி தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

ஃபேஸ்புக்கில் எழுதாதவர்கள் கூட தங்கள் கடந்த கால அனுபவங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர். சிலர் தங்கள் நண்பர்கள் குறித்து எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் ஃபேஸ்புக் லைவில் தங்கள் அனுவவங்களை பகிர்கிறார்கள்.

டிவிட்டர் பக்கமே செல்லாதவர்கள் கூட டிவிட்டரில் என்ன நடக்கிறது என எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படி தொழில்நுட்பம் நம் மக்களை கைவிடவில்லை. சோர்ந்து போயிருக்கும் நம் மக்களை அரவணைத்து ‘நான் இருக்கிறேன் கவலைப்பட வேண்டாம்’ என ஏதேனும் ஒருவிதத்தில் அவர்கள் மனதை ஒருமுகப்படுத்தும் அற்புத ஆசானாக விளங்குகிறது தொழில்நுட்பம்.

சமூக வலைதளங்கள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் என்ற நிலை மாறி அதை வைத்து சம்பாதிக்கவும் ஆரம்பித்துள்ளனர் நம் மக்கள்.

ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப், வாட்ஸ் அப் எதுவாக இருந்தாலும் அதில் தங்கள் கருத்துக்களை எழுத்தாகவும், வீடியோவாகவும், ஆடியோவாகவும் வெளியிட முடிகிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை கான்செப்ட்.

அடிப்படையில் கான்செப்ட் தயார் செய்துகொண்ட பின்னரே, அதற்கான ஸ்கிரிப்ட் எழுதுகிறோம். பின்னர் அதை பொதுவெளியில் எழுத்தாகவோ ஆடியோவாகவோ வீடியோவாகவோ பதிவிடுகிறோம்.

அப்படி பதிவிடும்போது சில விஷயங்களில் கவனமாக இருந்தால் இணையவெளியில் நம் அஸ்திவாரத்தை பலமாக வேரூன்ற முடியும்.

1.இணையவெளியில் நிரந்தமாக ஓரிடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் அங்கு நாம் வெளிப்படுத்தும் கான்செப்ட்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து கான்செப்ட்டுகளை உருவாக்கினால் நமக்கான இடத்தைப் பெற முடியும்.

2.பரபரப்புக்காக புகழ் அடைய விரும்பி சற்றே தரம் தாழ்ந்த கான்செப்ட்டுகளை தயார் செய்தால் அது நீண்டகாலத்துக்கு பயன் தராது. நீங்கள் கொடுக்கும் கான்செப்ட் இப்படித்தான் இருக்கும் என மக்கள் மனதில் ஒரு முத்திரையை குத்திவிடும். அதை நீக்குவது கடினம்.

3.கான்செப்ட்டுகளை முடிவு செய்த பிறகு அதற்கான ஸ்கிரிப்ட் எழுத வேண்டும். அப்படி ஸ்கிரிப்ட் எழுதும்போது வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். இங்கிதமாக எழுதப் பழக வேண்டும்.

4.கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, பிறர் மனதை நோகடிக்காத கோணத்தில், ஜாதி மத இன வேறுபாடில்லாமல் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் எழுதப்படும் எழுத்துக்களே நிலைத்து நிற்கும்.

5.இணைய வெளியில் பெயரெடுப்பதற்கும் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இணையவெளியில் மக்கள் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்தித்து எந்த மாதிரி வேண்டுமானாலும் எழுதிவிடலாம், பேசிவிடலாம். ஆனால் இணையவெளியில் மக்கள் மனதில் நிரந்தரமாக ஓரிடத்தைப் பெறவும் உங்கள் திறமைகளை சம்பாத்யமாக்கவும் கண்ணியமும், நேர்த்தியும், இங்கிதமும் முக்கியம்.

6.நீங்கள் எழுதும் எழுத்துக்களுக்கு நீங்களே ஆசான். அதன் சாதக பாதகங்களுக்கு நீங்களே பொறுப்பு. ‘பொறுப்புத் துறப்பு’ போட்டு தப்பித்துவிட முடியாது.

7.இணையவெளியில் நீங்கள் வைக்கும் ஒவ்வொரு புள்ளி கமாவும், பேசும் வார்த்தைகளும், வெளியிடும் வீடியோக்களும் நிரந்தரமாக ஏதேனும் ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டேதான் இருக்கும். நீங்கள் டெலிட் செய்தாலும் அதன் பிரதியை யாரேனும் எங்கேயேனும் டவுன்லோட் செய்திருப்பார்கள். அல்லது இணையத்திலேயே எங்கேயேனும் யாரேனும் மறுபிரதியாக்கி பத்திரப்படுத்தி இருப்பார்கள். முழுவதுமாக டெலிட் ஆகிவிடாது. எனவே பொதுவெளியில் எதைப் பகிர நினைத்தாலும் பகிரும் முன்னர் சிந்தியுங்கள்.

8.இணையவெளியில் உங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் விட்டுச் செல்லும் அடையாளம் கண்ணியமானதாக இருக்கட்டும்.

9.அதுபோல உங்கள் எழுத்துக்களுக்கு நீங்களே பிழைத் திருத்துனர். நீங்களே வடிவமைப்பாளர். நீங்களே பதிப்பாளர், நீங்களே விற்பனையாளர். சுருங்கச் சொன்னால் நீங்கள் ஒரு வியாபாரி. திறமையை விற்பனை செய்யும் ஆகச் சிறந்த விற்பனையாளர் என்பதை நினைவில் வையுங்கள்.

10.உங்கள் படைப்புகள் உங்கள் சொந்த உருவாக்கமாக இருக்கட்டும். பிறரது எழுத்துகள், புகைபடங்கள், ஓவியங்கள், படைப்புகள் இவற்றைப் பயன்படுத்தும்போது அவர்களின் பெயரை குறிப்பிட்டு உரிய மரியாதை கொடுக்க மறந்துவிடாதீர்கள். அத்துடன் அந்தத் தகவலை உரியவர்களின் பார்வைக்கும் கொண்டு சேருங்கள்.

11.சமூகவலைதளங்களில் பொழுதுபோக்குக்கு எழுதும்போது உங்கள் எழுத்து எப்படி இருந்தாலும் அதை ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்தவர்கள், நீங்கள் ஒரு இணைய பத்திரிகையோ, யு-டியூப் சேனலோ தொடங்கிவிட்டால் அதை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளக் கூட யோசிப்பார்கள். அது முற்றிலும் இலவசம் என்றால் கூட. எனவே நண்பர்களைத் தாண்டி இணைய உலகை சந்திக்க ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சமூகவளைதல தொடர்புகளை வாய்ப்புகளாக்க முயற்சியுங்கள்.

ஒரு  பொருளை வாங்குவதற்கு ஒரு கடைக்குச் செல்கிறோம். அந்தக் கடை எப்படி இருந்தால் நாம் திரும்பவும் அந்தக் கடைக்குச் செல்வோம் என்பதை மனதில் வையுங்கள். கடை சுத்தமாக இருக்க வேண்டும், கடையில் ஏசி நன்றாக இயங்க வேண்டும், கடையில் விற்பனை பிரதிநிதிகள் முகம் சுளிக்காமல் வரவேற்று நமக்குத் தேவையானதை எடுத்துக்காண்பிக்க வேண்டும் அல்லது நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும், அன்பாக பேச வேண்டும், கனிவான அணுகுமுறை வேண்டும், மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும், வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப கிஃப்ட் ஏதேனும் கொடுக்க வேண்டும்… இப்படி எத்தனை ‘வேண்டும்’-களை மனதில் நிறுத்திக்கொண்டு கடைக்குச் செல்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சாதாரண கைக்குட்டை வாங்க வேண்டும் என்றாலும் இதே எதிர்பார்ப்புதான், கோட் சூட்டும், பட்டும் வாங்கச் செல்வதென்றாலும் இதே எதிர்பார்ப்புகள்தான்.

இதே மனநிலைதான் இணையவெளியில் நீங்கள் தொடங்கி இருக்கும் இணைய பத்திரிகைகள், வெளியிட இருக்கும் இ-புத்தகங்கள், ஆரம்பித்திருக்கும் யு-டியூப் சேனல்களில் மீது உங்களைப் பின் தொடர்பவர்களுக்கும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இங்கிதம்-கண்ணியம்-கட்டுப்பாடு. இணையவெளியில் வெற்றிபெற இதுதான் லாஜிக். வெற்றிபெறுவோம். வாழ்ந்து காட்டுவோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 150 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon