ஹலோ With காம்கேர் -212: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி?


ஹலோ with காம்கேர் – 212
July 30, 2020

கேள்வி: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி?

லாக் டவுன் தளர்த்தப்பட்டு Work From Home முடிவுக்கு வந்து நேரடியாக பணிக்குச் செல்ல தொடங்க இருப்பவர்களுக்காகவே இந்தப் பதிவு.

லாக் டவுனில்தான் தளர்வுகளே தவிர கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக நம்மை விட்டு விலகிவிடவில்லை என்பதை தீர்க்கமாக நினைவில் வையுங்கள்.

உங்களையும் உங்கள் மனநிலையையும் அதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்திக்கொண்டால் இந்த கடினமான கால கட்டத்தை கடந்துவிட முடியும்.

இந்தப் பதிவைப் படித்து முடிக்கும்போது இதையெல்லாம் செய்ய நேரம் இருக்குமா, செய்ய முடியுமா, சாத்தியமா என அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன்.

எத்தனையோ பேர் சிறுவயதிலேயே சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்கள், எத்தனையோ பேர் இளம் வயதிலேயே சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு மாற்று கிட்னி கிடைக்காமல் வாரம்தோறுமோ, மாதந்தோறுமோ டயாலிஸிஸ் செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அதற்காக அவர்கள் வீட்டிலேயே முடங்கி விடுவதில்லை. வேலைக்கும் வருகிறார்கள். அவர்களை கவனித்துப் பாருங்கள்.  குறிப்பிட்ட நேரத்தில் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வதை தவறவிடமாட்டார்கள். சுத்தம் சுகாதாரத்திலும் கவனமாக இருப்பார்கள்.

அவர்களின் கஷ்டங்களை விடவா நித்தம் நாம் கடைபிடிக்கும் உணவு பழக்க வழக்கங்களும், சுத்தம் சுகாதாரத்துக்காக நாம் எடுக்க இருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்துவிடப் போகிறது?

எனவே அலுத்துக்கொள்ளாமல் வாழ்க்கை முறையை கொஞ்சம் மெனக்கெட்டு மாற்றி அமைத்துக்கொண்டால் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது.

வாரத்தில் ஒருநாள் கறிவேப்பிலையையும், இஞ்சியையும், மிளகையும் சேர்த்து நிறைய தண்ணீர் விடாமல் கொஞ்சம் கெட்டியாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

மாதம் ஒருமுறை மிளகையும் பனங்கல்கண்டையும் சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், நல்ல ஜீரணத்துக்கும் உதவும் அறுபெரும் பொருட்கள் கலந்த பொடியையும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். செய்முறை: சீரகம் (100 கி), பெருஞ்சீரகம் (100 கி), கருஞ்சீரகம் (100 கி), ஓமம் (100 கி), சாப்பாட்டு மஞ்சள் (5), கடுக்காய் கொட்டை எடுத்தது (5) போன்றவற்றை சுத்தம் செய்து லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

1.அலுவலகம் கிளம்பும் முன்னரே வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகு குளித்து உடை மாற்றுவதற்கு வசதியாக ஒரு செட் உடையை குளியல் அறைக்கு அருகே ஒரு ஸ்டூல் போட்டு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. அலுவலகம் விட்டு திரும்பியதும் குளித்து உடை மாற்றுவதற்கு பீரோவை திறந்து உடைகளை நேரடியாகத் தொட வேண்டாமே.

2.தினமும் துவைத்து காய வைக்கும் வகையில் எளிமையான உடைகளையே பயன்படுத்தினால் துவைத்து காய வைக்க வசதியாக இருக்கும்.

3.அலுவலகம் செல்லும்போது காலையில் கஞ்சி, காபி, மோர் என நீராகரமாக இல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி என திட உணவாக நிறைவாக சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம். மதியம் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்வதற்கு விரைவாக சாப்பிட்டு முடிக்கும்படியாக உணவை எடுத்துச் செல்லலாம். ஏனெனில் அலுவலகத்தில் பொது இடத்தில் டிபன் பாக்ஸை நீண்ட நேரம் திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இப்படிப் பழக்கம் இல்லையே என கருதினால் கொரோனாவிற்காக மாறித்தான் ஆக வேண்டும்.

4.மதியம் சாப்பாட்டில் கறிவேப்பில்லை இஞ்சி மிளகு விழுதை சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். வேக வைத்த ஒரு நெல்லிக்காயையும் சாப்பிடத் தவறாதீர்கள்.

5.சாப்பிடும்போது குழுவாக அமர்ந்துகொண்டு பேசியபடி சாப்பிடுவதைத் தவிர்த்து தனியாகவே அமர்ந்து சாப்பிட்டால் விரைவாக சாப்பிட முடியும்.

6.வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற தண்ணீரை மட்டுமே அருந்துங்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒரு ஃப்ளாஸ்க்கில் காபி கலந்து எடுத்துச் செல்லலாம். குறைந்தபட்சம் வெந்நீராவது எடுத்துக்கொள்ளலாம்.

7.சாப்பிடும் முன்னரும், பின்னரும் மிளகில் பனங்கல்கண்டு பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள்.

8.வெளியிடங்களில் டிபன், காபி, டீ, பால், டிபன் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

9.கையில் ஏதேனும் ஒரு பழம் அல்லது பிஸ்கட் பாக்கெட் எடுத்துச் செல்லுங்கள். மாலை வீடு திரும்பும் முன் பசி எடுத்தால் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

10.இரண்டு முகக்கவசம் இரண்டு கிளவுஸ்கள் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு செட் அணிந்து செல்வதற்கு. மற்றொரு செட் முகக் கவசம் தவறுதலாக கீழே விழுந்துவிட்டால் பயன்படுத்துவதற்காக.

11.கைக்குட்டைக்கு பதிலாக டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துங்கள். ஒரு முறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்த வேண்டாம்.

12.கைப்பையில் கொஞ்சம் பட்ஸ் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் லிஃப்ட் பட்டனை ஆப்பரேட் செய்வதற்கு அதையே பயன்படுத்துங்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டால் தூக்கி எறிந்து விடுங்கள்.

13.லிஃப்ட் கதவுகள், அலுவலக அறைக் கதவுகள் என எதையுமே கைகளால் தொடாதீர்கள். பாத்ரூம் கதவுகள், வாஷ்பேசின் பைப்புகள் போன்றவற்றை தொடும்போது கைகளில் கிளவுஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவற்றை தனியாக ஒரு கவரில் வைத்துக்கொண்டு, வேலைக்கு கம்ப்யூட்டரை தொடும்போது புதிதாக கிளவுஸ் அணிந்துகொள்ளுங்கள்.

14.கிளவுஸ் பயன்படுத்த இயலாது என நினைத்தால் சானிடைசர் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

15.உங்கள் டேபிளில் சேனிடைசர் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகம் சென்றதும் உங்கள் டேபிள் சேர் கம்ப்யூட்டர் என அத்தனையையும் நன்றாக சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் வேறு வேலைகள் முடித்த பிறகு சேனிடைசர் போட்டு கைகளை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

16.பிறரது கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.

17.பிறருக்கு லிஃப்ட் கொடுப்பது (பைக்கோ, காரோ), கைகுலுக்கி வணக்கம் சொல்வது, தொட்டு ஆறுதல் சொல்வது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். பிறர் கொடுக்கும் உணவுப் பண்டங்களை சாப்பிட வேண்டாம்.

18.கைகூப்பி வணக்கம் சொல்வோம், தள்ளி நின்று வாயால் பேசி ஆறுதல் சொல்வோம், தனியாகவே பயணம் செய்வோம். இதுவே இந்த காலகட்டத்துக்கு சிறந்தது.

19.வீட்டுக்குச் சென்றதும் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் கொண்டு செல்லும் கைப்பை, சாப்பாட்டுப் பை, செருப்பு, குடை போன்றவற்றை சுத்தம் செய்வதுதான். அப்பார்ட்மெண்ட் வாசலில் பைப் இருந்தால் காலை அங்கேயே நன்றாக அலம்பிக்கொண்டு வீட்டுக்குள் செல்லலாம். டெட்டால் நனைத்த துணியால் / டிஷ்யூ பேப்பரால் பைகள், குடை, மொபைல், வாட்ச், தோடு, வளையல், செயின் போன்றவற்றை துடைத்து ஓரமாக வைக்கலாம். உங்கள் முகக்கவசம் மறுமுறை பயன்படுத்தும் வகையானதாக இருந்தால் அதை வெந்நீரில் நன்றாக அலசி உணர்த்தவும். உடைகளை டெட்டால் போட்டு அன்றன்றே துவைத்த பிறகு குளித்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கலாம்.

20.இரவு உணவில் வேப்பம்பூ ரசம், மிளகு சீரக ரசம் என தினம் ஒரு ரச வகை இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். எந்த வகை ரசமாக இருந்தாலும் பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் பொடி நிறைய கலந்து செய்யும் உணவு வகைகள் சாப்பிடுங்கள்.

21.இரவில் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அறுவகை பொருட்கள் கலந்த பொடியை வெந்நீரில் கலந்து ஒரு டம்ளர் சாப்பிட்டு விட்டு தூங்குவதை கட்டாயப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

22.இடையில் ஏதேனும் ஒரு நேரம் அரசு பரிந்துரைத்துள்ள கபசுப குடிநீருக்கான பொடியையும், ஹோமியோபதி மருந்தான Arsenicam album 30  இரண்டையும் அவர்கள் சொல்லியுள்ள அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இதெல்லாம்தான் கொரோனா நம்மை அணுகாமல் இருப்பதற்கும், அணுகிவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை விரட்டுவதற்கும் உதவும் மந்திரங்கள்.

கொஞ்சம் சிரமமான செயல்பாடுகள்தான். நோய்க்குப் பின் போராடுவதைவிட நோய்க்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடினமாக இருந்தாலும் கொஞ்சம் பிரயத்தனப்பட்டு கடைபிடிக்க மனதைப் பக்குவப்படுத்துவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon