ஹலோ with காம்கேர் – 213
July 31, 2020
கேள்வி: பிறருக்கு நாம் எப்படிப்பட்ட சுவையை கொடுக்கிறோம்?
நம் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். ஒவ்வொருவரினாலும் ஒவ்வொரு அனுபவங்கள். ஒன்றுபோல் அமைவதில்லை. காலப் போக்கில் அவர்களின் முகமும் பெயரும்கூட நமக்கு மறந்து போய்விடலாம். ஆனால் அவர்களினால் நமக்கு ஏற்பட்ட தாக்கம் மட்டும் எப்போது நினைத்துக்கொண்டாலும் மறைவதே இல்லை.
அதாவது நாம் அந்த அனுபவத்தை எப்படி உணர்ந்தோம் என்ற அந்த உணர்வுகளின் தாக்கம் சுகமானதாகவும் இருக்கலாம், சுமையானதாகவும் இருக்கலாம்.
தாக்கத்தின் நினைவுகள் தட்டிவிட்டுச் செல்லும் உணர்வுகள் சுகமானதாக இருந்துவிட்டால் அன்றைய தினம் சொர்க்கம். சுமையானதாக இருந்துவிட்டால் நரகம் என சொல்ல மாட்டேன். நம் சுறுசுறுப்பை கொஞ்சம் குறைத்து நம்மை அடக்கி வாசிக்க வைக்கும். அவ்வளவே.
அண்மையில் ஒரு வயதான பெரியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நன்றாக நடமாடிக்கொண்டிருந்த பெரிவருக்கு திடீரென ஜூரம். வீடு வீடாக வந்து செல்லும் கார்ப்பரேஷன் பணிபெண் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என எழுதிக்கொண்டு சென்றுவிட அடுத்த சில மணி நேரங்களில் அவரை பரிசோதனை கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இப்போது அவர் மருத்துவமனையில். அவரது மனைவிக்கு கொரோனா இல்லை என்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்கள். கார்ப்பரேஷனில் தன்னார்வத் தொண்டர்கள் அவருக்கு உதவினார்கள்.
பிறகு மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் செய்துவரும் ராமன் அவரை உடன் இருந்து கவனிக்க வந்துவிட்டார். பொறுப்பாக கவனித்துக்கொண்டார். தினமும் மருத்துவமனைக்கு போன் செய்து பெரியவரின் உடல் நிலை குறித்தும் விசாரிப்பார். வீட்டில் இருந்து அவருக்கு சாப்பிட ஏதேனும் எடுத்துச் செல்ல மருத்துவமனை அனுமதித்திருக்கும் உணவுபொருட்களை தானே தயார் செய்து எடுத்துச் சென்று நர்ஸிடம் கொடுத்துவிட்டு அவரை நன்கு கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார்.
அவர் நல்லபடியாக குணமாகி கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆன தினம் நர்ஸ் அந்த பெரியவரிடம் ‘உங்கள் மகன் உங்கள் உடல் நலம் குறித்து தினமும் விசாரித்தார். நன்கு பார்த்துக்கொள்ளச் சொன்னார். நீங்கள் கொடுத்து வைத்தவர்…’ என்று ராமனைப் பற்றிச் சொல்ல அவர் முகம் ஆச்சர்யக்குறியால் குழப்பமானது.
‘என் மகனா’ என்று ஆச்சர்யப்பட்டார். வீடு சென்று சேரும் வரை குழப்பத்துடனேயே இருந்தார். காரணம் அவருக்கு குழந்தைகள் கிடையாது.
வீட்டுக்குள் சென்றதும் மனைவிக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்த ராமனை பார்த்து அதிசயத்து ‘யாரப்பா நீ’ என கேட்டார்.
இதற்குள் அவரது மனைவி நான் சொல்கிறேன் என்று சொல்லி விஷயத்தை விவரித்தார்.
குழந்தைகள் இல்லாததால் அந்த தம்பதிகள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏதேனும் ஒரு காப்பகத்துக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு தீபாவளி நாளில் ஒரு ஐந்து வயது சிறுவன் அந்த காப்பகத்துக்கு வந்து சேர்ந்திருந்தான். ஒரு விபத்தில் தாய் தகப்பனை பறிகொடுத்ததால் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர் உறவினர்.
காப்பகத்தில் மற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்க அந்த சிறுவன் அழுதுகொண்டே இருந்தான்.
அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி தாங்கள் கொண்டு சென்றிருந்த லட்டுவை அவனிடம் கொடுத்தனர். அவன் சாப்பிட மறுக்க பெரியவர் தானே தன் கைகளால் லட்டுவை உடைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட்டார். வாயிலும் உதட்டிலும் முகத்திலும் ஆங்காங்கே லட்டு துண்டுகளுடன் அந்த சிறுவன் லட்டு தின்னும் அழகை கண்கொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த சிறுவன்தான் ராமன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியில் இருந்தார். ஆஸ்ரமத்தில் லட்டு சாப்பிட்ட பிறகு பெரியவருக்கு கொரோனா உறுதி ஆன தினம் அவரை அழைத்துச் செல்ல வந்தபோதுதான் அவரை சந்தித்தார். அவர் மனைவியையும் அவரையும் பார்த்தபிறகு பெரியவர் வரும் வரை அவர் மனைவிக்கு உதவியாக வீட்டில் இருப்பதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டார்.
இதோ பெரியவரும் குணமாகி திரும்பிவிட்டார்.
‘ஏனப்பா இப்படி ஒரு கரிசனம் எங்கள் மீது. நாங்கள் உனக்கு எதுவுமே செய்யவில்லையே. ஒரே ஒருதினம் தானே உன்னை சந்தித்தோம். அதுவும் எதேச்சையாக அன்றைய தினம் காப்பகத்துக்கு நீ வந்து சேர்ந்ததால் அந்த சந்திப்பு அமைந்தது. அதன்பிறகு நாங்கள் உன்னை சந்திக்கவே இல்லையே….’
‘அப்பா, உங்களுக்கு என்னை மறந்திருக்கலாம். ஆனால் என் நாவில் நீங்கள் ஊட்டிய அந்த லட்டுத் துணுக்குகளின் சுவை இன்னும் மறையவில்லை…’ என்று சொல்ல அழுதேவிட்டார் பெரியவர். குறிப்பாக அப்பா என சொல்லி பேசியதில் கரைந்து போனார்.
இப்படித்தான் நம் ஒவ்வொருவருக்குமே நம் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை மறந்துவிட வாய்ப்புண்டு. ஆனால் அவர்களினால் உண்டான அனுபவங்களின் சுவை என்றுமே மறப்பதில்லை. ஆனால் சுவையை மறந்துவிட்டதுபோல் நடிக்கிறோம் அவ்வளவே. நாம் எப்படிப்பட்ட சுவையை பிறருக்குக் கொடுக்கிறோம் என்ற இடத்தில்தான் வாழ்க்கை நின்று நிதானித்து விளையாடுகிறது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software