ஹலோ With காம்கேர் -253: பிறர் மனதில் நமக்கான சிம்மாசனம்!

ஹலோ with காம்கேர் – 253
September 9, 2020

கேள்வி:  பிறர் மனதில் நமக்கான சிம்மாசனத்தை உருவாக்குவது எப்படி?

பொதுவாகவே வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி ஒருசிலர் காரணமே இல்லாமல் முக்கியத்துவம் பெறுவார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அந்த இடத்தில் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள்.

நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதே அவர்களுடைய பழக்க வழக்கங்களினால்தான் இருக்கும். யாரையும் பாதிக்காத, புண்படுத்தாத குணத்தினால் பிறர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்வர். அது மற்றவர்கள் வயிற்றில் புகைச்சலை ஏற்படுத்தலாம்.

இப்படி பிறர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்ளும் யுக்திக்கு பிரத்யோகமாக எந்த பயிற்சியும் தேவை இல்லை. நாம் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஒருதுளி பிறர் நலனையும் சேர்த்து சிந்தித்தால்போதும். பிறர் மனதில் நமக்கான சிம்மாசனம் தானாகவே உருவாகிவிடும்.

எனக்கு எந்த விதத்திலும் சம்மந்தமே இல்லாத, முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு சிறுவன் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நிகழ்வொன்று உள்ளது.

சென்ற வருடம் ஒரு ஹோட்டலில் சாப்பிட காத்திருந்தேன்.

என் சீட்டுக்கு எதிரே ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். ஆறு ஏழு வயதிருக்கும். ஒரே சாயலில் இருந்தார்கள். டிவின்ஸ் என நினைத்துக்கொண்டேன்.

செல்ஃப் சர்வீஸ் என்பதால் குழந்தைகளின் அப்பா அவர்களுக்கு இட்லி எடுத்து வந்து வைத்துவிட்டு தனக்கு ஏதோ எடுத்துவரச் சென்றிருந்தார்.

அதற்குள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து நான் சிரிக்க, அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்க நெருக்கமானோம்.

பெயர் கேட்டேன். தன்சிகா, விஜய் என்றார்கள்.

டிவின்ஸ் என்பதை அவர்களிடமே கேட்டு உறுதி செய்துகொண்டேன்.

அந்தச் சிறுமியைப் பார்த்து ‘உனக்கு இட்லிதான் பிடிக்குமா?’ என்றேன்.

‘எனக்கு ஆனியன் ஊத்தப்பம், பரோட்டா, பூரி மசால், சமோசா சன்னா இதெல்லாம்தான் பிடிக்கும்’ என்றாள் மழலையாக.

அந்த சிறுவன் நான் கேள்வி ஏதும் கேட்காமலேயே ஏதோ பேச வாயெடுத்தான். அவன் தனக்கு என்ன பிடிக்கும் என பட்டியலிடப் போகிறான் என நினைத்திருந்தேன்.

‘உங்களுக்கு என்ன பிடிக்கும் ஆண்ட்டி?’ என்று கேட்டானே பார்க்கலாம். நான் அசந்துத்தான் போனேன்.

அன்று என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த சிறுவன் இன்றுவரை இறங்கவே இல்லை. ஜோராக கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறான்.

இதுதான் பிறர் மனதில் நமக்கான சிம்மாசனம் உருவாக ஒரே லாஜிக்.

ஆமாம். எதுவும் பெரிதாக செய்துவிட வேண்டாம். காசு பணம் செலவழிக்க வேண்டாம். நேரத்தை ஒதுக்க வேண்டாம். உடலாலும் அங்கும் இங்கும் அலைந்து கஷ்டப்பட வேண்டாம்.

நமக்கானதுடன் சேர்த்து பிறருக்காவும் சற்று யோசித்தாலேபோதும்.

‘என்ன பாட்டி, சாப்பிட்டீங்களா?’, ‘என்ன தாத்தா, இன்னிக்கு பொழுது எப்படி போனது?’, ‘என்ன ஆண்ட்டி, ரொம்ப டயர்டா இருக்கீங்க’, ‘என்ன மாமி, இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க…’, ‘என்ன அங்கிள், இன்னிக்கு வாக்கிங் போகலையா?’ இப்படியான  ‘என்ன… என்ன… என்ன…’ கேள்விகளுக்குள்தான் எத்தனை கரிசனம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன பாருங்கள்.

போகிற போக்கில் எதிர்படுபவர்களிடம் இப்படி கேட்கும் கனிவான வார்த்தைகள் அவர்கள் மனதில் நமக்கான சிம்மாசனத்தை தயார் செய்யும்.

காசா பணமா? கனிவும் கரிசனமும் கலந்து கட்டி மனதில் இருந்து பேசும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.

நமக்காக யோசிக்கும்போது நம்மைச் சுற்றிய உலகுக்கும் சேர்த்து கொஞ்சம் யோசிப்போமே!

பிறர் மனதில் சிம்மாசனம் கிடைக்கிறதோ இல்லையோ, நம் மனதில் நாம் கம்பீரமாக விஸ்வரூபம் எடுப்போம். அது நிச்சயம்.

முயற்சித்துத்தான் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 267 times, 3 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari