ஹலோ with காம்கேர் – 254
September 10, 2020
கேள்வி: எளிமையும் மனிதாபிமானமும் கைகூட என்ன செய்யலாம்?
‘நானும் என் எழுத்தும்’ என்ற புத்தகத்தில் வெளியான என் நேர்காணலில் இருந்து சில கேள்விகளும் என் பதில்களும்.
1.எப்படி இவ்வளவு எளிமையாக எழுதுகிறீர்கள்?
ரொம்ப சிம்பிள். என்னால் எந்த விஷயத்தையும் எளிமையாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும். என்னைப் போலவே பிறரையும் கருதுகிறேன். அவர்களுக்கும் எளிமையாக சொன்னால்தான் புரியும் என நினைத்து எளிமையாக எழுதுகிறேன். அது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி வாழ்வியலாக இருந்தாலும் சரி.
நம்மைப் போல பிறரையும் கருதும் பக்குவம் ஏற்பட்டால் எழுத்தில் மட்டுமல்ல எண்ணத்திலும் எளிமையும் மனிதாபிமானமும் தானாகவே வலிய வந்து ஒட்டிக்கொள்ளும்.
2.உங்கள் எழுத்தில் நேர்மை இருக்கிறது. எல்லா நேரங்களிலும் நேர்மையுடன் செயல்பட முடிகிறதா?
நான் எழுதும்போது எனக்கு நானே சொல்லிக்கொள்வதைப் போலதான் நினைத்து எழுதுவேன். நான் எழுத அமரும்போது எனக்குள் எனது மற்றொரு பிரதி தோன்றி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்ளும். நான் நேர்மைக்கு மாறாகவோ அல்லது நான் கடைபிடிக்க முடியாததையோ எழுதினால் அந்த உருவம் என்னை கேலி செய்யத் தொடங்கிவிடும். அந்த கேலியை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதனால் நான் எழுதுபவை பெரும்பாலும் நேர்மையாகவே அமைந்துவிடுகிறது.
தொழில்நுட்பத்தை எழுதும்போது என்னுள் சிம்மாசனம் போடும் அந்த உருவத்துக்கு எளிமையாக சொல்லிக்கொடுப்பதைப்போல நினைத்து விளக்கமாக எளிமையாக புரியும்படி எழுதுவேன். அதனால்தான் 25 வருடங்களுக்கு முன்னர் என் புத்தகத்தை வாசித்து கம்ப்யூட்டர் கற்றவர்கள்கூட இன்றும் என்னை வாழ்த்துகிறார்கள்.
இறை அருளுடன் இயற்கையும் துணை நிற்பதால் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது.
3.இறை அருள் புரிகிறது அது என்ன இயற்கை துணை?
எண்ணங்களை எழுத்துவடிவில் கொடுக்கும் சக்தியை பெற்றது இறை அருளால். சோர்வில்லாமல் தினந்தோறும் எழுதுவதற்கு தேவையான உடல் மற்றும் மன வலிமைக்கு இயற்கைத்துணை அவசியம்.
இந்த லாஜிக் எழுத்துக்கு மட்டுமல்ல, நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தும்.
4.நீங்கள் ஏன் கதை கவிதைகள் எழுதுவதில்லை?
கதை எழுதியதில்லை என யார் சொன்னது?
என் 10 வயதில் இருந்து 21 வயதுவரை நான் எழுதியவை அனைத்துமே கதை கவிதை கட்டுரைகள்தானே. சும்மா ஒன்றிரண்டு எழுதவில்லை. 100-க்கும் மேற்பட்டு எழுதியுள்ளேன். அவை சாவி, கலைமகள், ராஜம், குமுதம், விகடன், விஜயபாரதம் என பல முன்னணி பத்திரிகைகளில் வெளியாகி பரிசுகளையும் பெற்றுள்ளனவே.
படித்து முடித்து தொழில்நுட்பம் என் பணியாகி காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு என்னைச் சுற்றி இயங்குகின்ற மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆயிரமாயிரம் கதைகள் இருப்பது தெரிந்து கற்பனைக் கதைகள் எழுதுவதை விட்டேன். நிஜத்தை எழுதுவதோடு படைப்பாகவும் மாற்றுகிறேன்.
நிஜங்கள் கற்பனையைவிட வலிமையாக இருக்கிறதே.
5.உங்கள் பிசியான பணிகளுக்கு இடையே எழுதுவதற்கு நேரம் கிடைக்கிறதா?
எங்கள் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகளுக்கு டாக்குமெண்டேஷன் எழுதுவது, எங்கள் நிறுவன அனிமேஷன் படைப்புகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் ஸ்கிரிப்ட் எழுதுவது, தொழில்நுட்ப தொலைக்காட்சி / யு-டியூப் சேனல்களுக்கு நாங்கள் தயாரிக்கும் படைப்புகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது, நான் கலந்துகொள்ளும் மேடைநிகழ்ச்சிகளில் பேசுவதற்காக எழுதுவது என என் அன்றாடப் பணிகள் ஒவ்வொன்றிலும் எழுத்து இடம்பிடிப்பதால் நான் வேண்டாம் என ஒதுக்கினாலும் எழுத்து என்னை விடுவதாக இல்லை.
எழுதுவது எனக்கு சுவாசிப்பதைப் போல. அதுதான் என் பணிகளை நான் செவ்வனே செய்ய தேவையான ஊக்கத்தைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்கு என்னை உயர்த்திக்கொள்ள உதவுவதும் எழுத்துதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software