ஹலோ With காம்கேர் -262: அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா?

ஹலோ with காம்கேர் – 262
September 18, 2020

கேள்வி: உங்கள் பதிவுகளில் அப்பாவை பற்றி அதிகம் சொல்கிறீர்களே. அப்பாவைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா?

என் எழுத்துக்கள் மூலம் என்னைப் படிக்கும் வாசகர்கள் என்னிடம்  கேட்கும் கேள்விகளில் முக்கியமான கேள்வி இது.

2019 ஜனவரியில் இருந்து என் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வருபவர்களுக்கு இந்த கேள்வி வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் என் அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி என அனைவரையுமே கொண்டாடியிருக்கிறேன். அவர்களின் அறிவு, தன்னம்பிக்கை, தைரியம், வாசிக்கும் வழக்கம், பன்மொழி புலமை இப்படி பல விஷயங்களை விரிவாகவே சொல்லி இருக்கிறேன். கொள்ளுபாட்டி ‘சஞ்சீவி’ பெயரில் பிராடக்ட் ஒன்றை உருவாக்கி வருகிறோம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

என் அப்பாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் என்ன எழுதுகிறேன் என்பதை கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்.

அதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்கிறேன். என்னை பேட்டி எடுப்பதற்காக திரு. கிளிக் ரவி அவர்கள் வந்திருந்தபோது என் அப்பா தானே தயார் செய்திருந்த மைசூர் பாகு இனிப்பை சாப்பிடக்கொடுத்தார்.

திரு. கிளிக் ரவி எப்போது பேசினாலும்  ‘உங்கள் அப்பா கொடுத்த மைசூர் பாகு இன்றும் வாயில் இனிக்கிறது’ என்று அந்த நிகழ்வை நினைவு கூறாமல் இருக்க மாட்டார்.

ஒரு விஷயத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதையும் பகிர்ந்துகொள்வார்.

‘நான் அவர்களை சந்தித்த அன்று தண்ணீர் கொடுத்தார்கள். பின் காபி கொடுத்தார்கள். காபி குடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன்’ என்று சொல்வது பொதுவாக எல்லோரும் சொல்வது. ஏனெனில் தண்ணீரும் காபியும் எல்லோர் வீட்டிலும் கொடுத்து உபசரிப்பதுதான். புதுமையோ, வித்தியாசமோ ஒன்றும் இல்லை.

இதையே ‘நான் அவர்களை சந்தித்த அன்று தாகத்துக்கு தண்ணீர் கொடுத்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நெய் மணக்கும் மைசூர்பாகு இனிப்பை சாப்பிடக் கொடுத்தார்கள். அதை அவர்கள் வீட்டில் அவர் அப்பாவே தயார் செய்தது என்று சொல்லிக் கொடுத்தது இனிப்பின் சுவையைக் கூட்டியது’ என்று சொல்லும்போது படிப்பவர்கள் நாவையும் சுண்டி இழுப்பதைப் போல் இருக்கும்.

உண்மைதானே. நான் காலம் காலமாக என் எழுத்தில் பின்பற்றுவதையே அவரும் சொன்னார்.

ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என் அப்பாவே ஆகச் சிறந்த முன் உதாரணமாக வாழ்ந்து வருவதால் அப்பாவை பற்றி சொல்லும்போது அவருடைய இயல்புகளை விவரிக்கும்போது அதன் மூலம் மற்ற ஆண்களுக்கும் ஒரு பாடத்தை மறைமுகமாக புகுத்துகிறேன். அவ்வளவே. பெண்களுக்குத்தான் காலம் காலமாக பிறந்ததில் இருந்தே அறிவுரைகள் ‘தாரளமாக’ கிடைத்துக்கொண்டே இருக்கின்றனவே.

உதாரணத்துக்கு சிலவற்றைச் சொல்கிறேன்… படியுங்களேன்.

சமையல் அறை பெண்களுக்கு மட்டுமல்ல!

என் அப்பா நன்றாக சமைப்பார். சமையல் என்றால் அம்மாவுக்கு முடியாத போது சமையல் அறைக்குச் சென்று ஏதோ தெரிந்ததை சமைத்து ஒப்பேற்றுவதை சொல்லவில்லை. வடை பாயசத்துடன் விருந்துக்கே சமைக்கும் அளவுக்கு சமையலில் புலமை பெற்றவர். இனிப்பு காரம் என தின்பண்டங்கள் செய்து அசத்துவார். அப்பா தயாரிக்கும் சாம்பார் சாதத்துக்கும், ரச வடைக்கும் பல ரசிகர்கள் உண்டு எங்கள் குடும்பத்தில். சமைப்பது மட்டுமல்ல, சமைப்பதை இன்முகத்துடன் பரிமாறி உபசரிப்பதிலும் வல்லவர். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி நினைத்துக்கொண்டால் விருந்தினர்களை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்வார்.

என் அப்பா கேட்டரிங் செய்கிறார் என நினைத்துவிட வேண்டாம். என் அப்பாவும் அம்மாவும் தொலைபேசி துறையில் 40 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இப்போது ஓய்வில் இருப்பதால் இதெல்லாம் செய்கிறார் என்றும் நினைத்துவிட வேண்டாம். இருவரும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த நாட்களில் கூட இப்படித்தான்.

நான் வாசகர்களின் மனதில் பதிய வைக்க நினைப்பது என்னவென்றால்…

‘ஆண்களும் சமையல் அறை செல்லலாம். வீடுகளில் சமையல் அறை என்பது பெண்களுக்கு மட்டுமே பட்டா போட்டு வைத்திருக்கும் இடமல்ல’ என்பதை படிப்பவர்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன்.

இதையே அறிவுரையாகச் சொன்னால்….

ஆண்களே நீங்களும் சமைக்கலாம். வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவலாம் என்று ‘அறிவுரை’ சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்பார்கள்?

ஆண்களே நீங்கள் தாயுமானவராகவும் இருக்கலாமே!

தொலைபேசித் துறையில் இருவருமே 24 மணிநேர பணி சுழற்சியில் என் அப்பா அம்மா இருவரும் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் தந்தையுமானவராக அம்மா, அம்மா இல்லாத நேரங்களில் தாயுமானவராக அப்பா. அந்த காலத்திலேயே என் அம்மாவுக்கு இரவு நேர ஷிஃப்டில் பணி இருக்கும். மழை, வெயில், புயல், பண்டிகை தினங்கள் என எல்லா நாட்களிலும் பணிக்குச் செல்ல வேண்டி இருக்கும். இருவரும் சேர்ந்து விடுப்பில் இருக்கும் நாட்கள்தான் எங்களுக்கு மகிழ்ச்சியான தினங்கள்.

நான் வாசகர்களின் மனதில் பதிய வைக்க நினைப்பது என்னவென்றால்…

ஆண்களாலும்  குழந்தைகளை கண்ணும் கருத்துமாக அன்பும் பாசமுமாக தாயைப் போலவே பரிவுடனும் பாசத்துடனும் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை பதிய வைக்க முயல்கிறேன்.

இதையே அறிவுரையாகச் சொன்னால்….

ஆண்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளலாம் என்று ‘அறிவுரை’ சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்பார்கள்.

பார்ஷியாலிட்டி காட்டாமல் வளர்க்கலாமே!

அதுபோலவே அந்தந்த காலகட்டத்தில் சைக்கிள் / பைக் / கார்  ஓட்டக் கற்றுக்கொடுத்தல், அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சர்வீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் அளவுக்கு சரிசெய்யப் பழகுதல், டியூப் லைட் மாற்றுதல், ஃப்யூஸ் மாற்றுதல், தண்ணீர் பைப் லீக்கானால் நாமே டைட் செய்து பழுதுபார்த்தல் இப்படியாக ஏசி யூனிட் முதல் இன்வெர்டர் வரை  பராமரித்தல், சமையல் செய்தல், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என ஆணுக்கான வேலைகள் பெண்ணுக்கான வேலைகள் என பிரித்துப் பார்க்காமல் எனக்கும், என் சகோதரி, சகோதரனுக்கும் ஒரே மாதிரி கற்றுக்கொடுத்தார்கள்.

நான் வாசகர்களின் மனதில் பதிய வைக்க நினைப்பது என்னவென்றால்…

ஆண்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் ‘ஐயோ இதெல்லாம் ஆண்கள் செய்யும் வேலை. நீ ஏனம்மா செய்கிறாய்?’ என சுயபச்சாதாப வார்த்தைகளையும், தங்கள் ஆண் குழந்தைகளிடம் ‘இதெல்லாம் பெண்கள் வேலை… நீ ஏண்டா செய்கிறாய்?’ என சுயமரியாதையை குலைக்கும் வார்த்தைகளையும் சொல்லாமல்  தங்கள் தேவைகளுக்கு என்ன அடிப்படையாக வேண்டுமோ அதை ஆண் பெண் என இருபாலருக்கும் பொதுவாக கற்றுக்கொடுக்க வேண்டும்  என்பதை பதிய வைக்க முயல்கிறேன்.

இதையே அறிவுரையாகச் சொன்னால்….

ஆண்களே உங்கள் பிள்ளைகளிடம் பார்ஷியாலிடி காண்பிக்காதீர்கள் ‘அறிவுரை’ சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்பார்கள்?

ஆண் பெண் பிம்பங்கள்!

ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, தேவையான நேரத்தில் மென்மையாகவும், தேவையான நேரத்தில் கடுமையாகவும் எங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும், எந்த ஒரு விஷயத்துக்காகவும் எங்கள் சுயத்தை இழக்காமல் வாழவும் கற்றுக்கொடுத்தார்கள்.

நான் வாசகர்களின் மனதில் பதிய வைக்க நினைப்பது என்னவென்றால்…

இப்படியெல்லாம் வளர்ப்பது சாத்தியம்தான், என் அப்பாவே இதற்கு முன் உதாரணம் என்பதை பதிய வைக்க முயல்கிறேன்.

இதையே அறிவுரையாகச் சொன்னால்….

ஆண்களே இப்படி நடந்துகொண்டால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ரோல்மாடலாக இருக்கலாம் என்று ‘அறிவுரை’ சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்பார்கள்?

சுருங்கச் சொன்னால் எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் எழுதுவதற்காக எதையும் யோசிப்பதில்லை, எதையும் படிப்பதில்லை. வாழ்வதை, வாழ்க்கையை, நான் உணர்வதை எழுதுகிறேன்.

அறிவுரையாக எதையும் சொல்வதில்லை. ஆனால் நான் எழுதுபவை அறிவுரையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதுதான் அழகான நிஜம். காரணம் நிஜத்தை எழுதுவதால் பலனும் அழகான நிஜமாகிறது.

மற்றபடி எங்கள் பெற்றோர் எப்படி எங்களுக்குப் பாரபட்சம் காட்டாமல் எல்லா செளகர்யங்களையும் பொதுவில் வைத்தார்களோ அதுப்போலவே எங்களுக்கு அப்பா, அம்மா இருவர் மீதும் ஒரே பாசம்தான். இருவரையும் ‘அப்பா அம்மா’ என பிரித்துக்கூட சொல்வதில்லை.  ‘அப்பாம்மா’ என்றே அழைக்கிறோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 11 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari