ஹலோ with காம்கேர் – 263
September 19, 2020
கேள்வி: மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா?
மனிதர்கள் மட்டும்தான் இன்ஸ்பிரேஷன் ஆக முடியுமா என்ன? புத்தகங்கள்கூட ஆகலாம்.
எனக்கு இன்ஸ்பிரேஷன் புத்தங்கள்தான்.
பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன், இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள் இருந்த கிரியேட்டிவிட்டியை வளர்த்தன.
இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன். கனவு காணவும் தொடங்கினேன்.
எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் அந்தக் கனவை நனவாக்கி கற்பனையை நிறைவேற்ற ஆரம்பித்தேன் அதன் எல்லைகள் இன்று உலகளாவிய முறையில் விரிவாகி வருகின்றன.
ஒரு நிறுவனம் தொடங்கவும், சாஃப்ட்வேர் / ஆப் / அனிமேஷன் படைப்புகள் தயாரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கவும் கூட புத்தகங்களே இன்ஸ்பையர் செய்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் புத்தகங்களின் வலிமையை.
என் பெற்றோர் நிறைய பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள். அவர்கள் படிப்பதில் முக்கியமானதை தனியாக கிழித்து வைப்பார்கள். விடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து எங்கள் கைகளாலேயே நாங்கள் (நானும் என் சகோதரன் சகோதரியும்) பைண்டிங் செய்து லைப்ரரியில் இருப்பதைப் போல பெயர் ஒட்டி அடுக்கி வைப்போம்.
இப்படி நாங்களே பைண்டிங் செய்த புத்தகங்களால் நிரம்பிய லைப்ரரி எங்கள் வீட்டில் எங்களுடன் சேர்ந்தே வளர்ந்தது. அப்பா அம்மாவின் பணி இட மாற்றல் காரணமாக பல ஊர்களில் வசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும் லைப்ரரியும் எங்கள் கூடவே பயணிக்கும்.
புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.
எனக்குப் புத்தகங்கள்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தன. இருக்கிறது. இனியும் இருக்கும்.
எங்கள் வீட்டு லைப்ரரி நாங்கள் சிறுவயதில் பைண்டிங் செய்த புத்தங்களால் நிரம்பி இருப்பதைப் போல,
எங்கள் நிறுவன லைப்ரரி நான் எழுதிய புத்தகங்களாலும்,
ஆன்லைனில் நான் எழுதிய இ-புத்தகங்கள், எங்கள் அனிமேஷன் படைப்புகள், மொபைல் ஆப்கள் என எங்கள் நிறுவன தயாரிப்புகளாலும் நிரம்பி இருக்கின்றன.
இப்போ சொல்லுங்க… என் இன்ஸ்பிரேஷன் புத்தகங்கள் என்று சொல்வது சரிதானே?
ஜெயா டிவியில் 2000-ம் ஆண்டு வெளியான நேர்காணலில் அவர்கள் என்னிடம் ‘உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?’ என்று கேட்டதற்கு நான் என்ன பதில் சொல்லி இருக்கிறேன் என நீங்களே பாருங்களேன். (ஒரு நிமிட வீடியோதான்)
https://www.facebook.com/100001937835224/videos/4354534517954433/?extid=MsxfYp1S2QHp2N3r
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software