ஹலோ With காம்கேர் -287 : பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி!

ஹலோ with காம்கேர் – 287
October 13, 2020

கேள்வி: பிறரை மதிக்கக் கற்றுக்கொள்வதன் முதல் படி என்ன தெரியுமா?

நேற்று நான் எழுதி இருந்த பதிவில் சொல்லி இருந்தபடி திருநங்கைகள் என்னிடம் பேசி விட்டு சென்ற பிறகு என்ன நடந்தது தெரியுமா? (நேற்றைய பதிவை படிக்க: http://compcarebhuvaneswari.com/?p=7176)

அந்த காலகட்டத்தில் நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் செய்து கொண்டிருந்தேன்.

மின்சார ரயிலுக்குள் ஏற்பட்ட மன உளைச்சல், படபடப்பு எல்லாம் அடங்வே இல்லை. திருநங்கைகளில் மனிதாபிமான செயல், அவர்கள் என்னிடம் காட்டிய கனிவு, அவர்களின் பேச்சு என மனம் முழுவதும் பரபரப்பாய் இருக்க அது உடலையும் சேர்த்து ஆட்டிவைத்தது.

ஒருசில நொடிகள் எந்த சிந்தனையும் அற்று நின்றிருந்தேன். திரும்பிப் பார்த்தால் முதல் வகுப்பில் வந்திருந்த டிக்கெட் பரிசோதகர் வேறு யாரிடமோ டிக்கெட் கேட்டு பரிசோதனை செய்துகொண்டிருந்தார்.

அவர் என்னிடம் எதையுமே கேட்கவில்லை. ஆனால் நானே அவரிடம் சென்று, ‘எக்ஸ் க்யூஸ் மி சார், நான் தெரியாமல் முதல் வகுப்பில் ஏறி விட்டேன். சாரி. சென்னை, மின்சார ரயில் எல்லாம் புதிது. இனி கவனமாக இருக்கிறேன்’ என சொன்னேன்.

மனதில் நேர்மை இருந்ததால் அவரிடம் பேசும்போது அது வெளிப்பட்டிருக்க வேண்டும்.

உடனடியாக அவர் ‘ஓ… அப்படியா, இந்த வண்டியிலா வந்தீர்கள்… இப்போ சரியான கம்பார்ட்மென்ட்டில் ஏறிடும்மா… கவனமா ஏறத் தெரியுமா, உதவி செய்யட்டுமா?’ என கேட்க நான் நன்றி சொல்லிவிட்டு நகர்வதற்குள் அந்த ரயில் நகர்ந்துவிட நான் அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தேன்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே நான் விடுப்பு எடுக்க வேண்டிமென்றால் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு அனுமதி பெற்றே விடுப்பு எடுப்பேன். ஆனால் சக மாணவர்கள் சிலர் வகுப்பை கட் செய்துவிட்டு சினிமா கூட செல்வார்கள். அவர்களை எல்லாம் கேள்வி கேட்காத வகுப்பாசிரியர் என்னிடம் ‘ஏன் அடிக்கடி விடுப்பு எடுக்கிறாய்?’ என்ற கேள்வியை கேட்பார். ஆனால் அவருக்கு தெரியும் என்னைப் பற்றியும், மற்ற மாணவர்கள் பற்றியும். ஆனாலும் சம்பிரதாயமாக அவர் கேட்கும் கேள்வி அது. நானும் சின்சியராக பதில் சொல்வேன்.

இப்படித்தான் நேர்மை பலருக்கும் பிடிக்கும்.நேர்மையாக இருப்பவர்களையும் பிடிக்கும். ஆனால் என்ன அவர்களால் நேர்மையாக வாழ முடிவதில்லை. முடிவதில்லை என்பதைவிட முயல்வதில்லை என்றே சொல்ல வேண்டும்.

நேற்று பாருங்களேன். என் வீட்டில் இண்டர்நெட் இணைப்பு வேலை செய்யாததால் காலை 6 மணிக்கு நான் வெளியிடும் ‘ஹலோ With காம்கேர்’ பதிவு 8 மணிக்கு வெளிவரும் என்ற தகவலை அறிவிப்பாகக் கொடுத்திருந்தேன். அடுத்து 8 மணிக்கு நேற்றைய  ‘ஹலோ With காம்கேர்’ பதிவை வெளியிட்டேன். பின்னர் தனிப்பதிவாக தாமதத்துக்கான காரணத்தை வெளியிட்டிருந்தேன்.

பதிவு தாமதமாகும் என்ற பதிவுக்கும், பதிவின் தாமதத்துக்குக் காரணம் சொல்லி இருந்த அந்தப் பதிவுக்கும் நிறைய பாராட்டுகள்.

படிப்பவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அழகாக சொல்லி இருக்கீங்க, வாசகர்கள் மரியாதை மடல், எங்களுக்காக ரொம்ப மெனக்கெட்டு எழுதி இருக்கீங்க நன்றி, பதிவு வர தாமதமாகும் என்ற பதிவை இட்ட தங்கள் சிரத்தைக்கு வாழ்த்துகள், பதிவு தாமதமாக வருகின்ற காரணத்தை விளக்கும் பொழுது உங்களிடம் ஏற்பட்ட டென்ஷனை உணரமுடிகிறது தங்கள் பணிக்கான டெடிகேஷனை பாராட்டுகிறேன், என்ன ஆச்சு தெரியல என்று நினைத்துக் கொண்டேன் என ஒரே வாழ்த்து மழைதான்.

என் பதிவைப் படிக்கும் வாசகர்களை மனதில்கொண்டு நான் செய்த சிறிய செயல் எந்த அளவுக்கு பாராட்டைப் பெற்றுள்ளது என கவனியுங்களேன்.

‘ஃபேஸ்புக் போஸ்ட் தானே, எப்போது போட்டால் என்ன?’ என்ற அலட்சியத்துடன் நான் நினைத்த நேரத்தில் பதிவிட்டிருந்தால் தினமும் சரியாக 6 மணிக்கு காபியோ டீயோ சாப்பிட்டுக்கோண்டே என் பதிவை படிக்கும் வழக்கம் உள்ள வாசகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் தானே?

‘என்ன ஆயிற்றோ?’ என்ற சிந்தனை வரும்தானே. அந்த என்ன ஆயிற்றோவுக்குள் எத்தனை எத்தனை கேள்விகளும், குழப்பங்களும், கற்பனைகளும் நிரம்பி இருக்கும். அந்த நெருக்கடியை என் வாசகர்களுக்கு நான் கொடுக்க விரும்பவில்லை.

அத்துடன் என் பதிவை படிக்கும் வாசகர்கள் எத்தனை கண்ணியமானவர்கள் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

ஈஸ்வரமூர்த்தி நடராஜன் அவர்கள்தான் இருப்பவர்களிலேயே வயதில் மூத்தவர் என நினைக்கிறேன். 84 வயதாகும் அவர் தினமும் காலையில்  என் பதிவை படித்து குறிப்பு எடுத்து அலசி ஆராய்ந்து பின்னூட்டமிடுவார். ஒரு முறை அந்த குறிப்பை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்தார். நாம் எழுதுவதைப் படிப்பதே பெரிய விஷயம். அதிலும் அதற்காகவே ஒரு நோட்டை போட்டு குறிப்பெடுத்து நுணுக்கமாக கவனமாக பின்னூட்டம் எழுதுவதெல்லாம் வேறு லெவல்.

குமரகுருபரன் ராமகிருஷ்ணன் அவர்கள் வின்ஸி என்ற பெயரில் ஓவியங்கள் வரைபவர். இவர் தினமும் காபி குடித்துக்கொண்டே என் பதிவை படித்து ஒரிரு வார்த்தைகளில் மிக அழகாக கருத்திடுவார். பிள்ளையார் சதுர்த்தி அன்று விநாயகரை வரைந்து வாழ்த்தி பின்னூட்டமிட்டுவிட்டு ‘வேலை பளுவினால் தங்கள் பதிவை சில நாட்களாய் படிக்க முடியவில்லை. விரைவில் தொடர்கிறேன். மன்னிக்கவும்’ என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

ரவிக்குமார் சம்பத்குமார் அவர்கள் ‘கண்ணில் ஆபரேஷன் நடந்துள்ளதால் ஓய்வில் இருக்கிறேன். கண் பார்வை நார்மல் ஆனதும் தொடர்ச்சியாய் படிக்கிறேன்…’ என தகவல் கொடுத்திருந்தார்.

உதயபாபு அவர்கள் ஸ்போர்ட்ஸில் தனி இடம் பிடிக்க உழைத்து வரும்  தன் மகள்களுக்கு என் எழுத்தை வாசிக்க வைத்து வாழ்வியலை புகட்டுகிறேன் என்கிறார்.

சவுந்தர்ராஜன் ரஹோத்தமன் அவர்கள் என்னை மட்டுமில்லாமல் என் பெற்றோரையும் வழிகாட்டியாக வைத்துள்ளதாக அடிக்கடி குறிப்பிடுவார்.

வெள்ளங்கிரி சுப்ரமணியன் அவர்கள் (former dy.collector at Govt. of TamilNadu) நாள் தவறாமல் பதிவைப் படித்து கருத்திட்டு வாழ்த்துவார்.

(இங்கு பெயர் குறிப்பிடாத மற்றவர்கள் தவறாக நினைக்க வேண்டாம். இவர்களை எல்லாம் உதாரணத்துக்காகவே குறிப்பிட்டுள்ளேன்.)

குறிப்பெடுப்பது, படிக்க முடியாததுக்கு காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்பது, இடையில் சில நாட்கள் படிக்க இயலாது, உடல் நலம் சரியானதும் தொடர்ச்சியாய் படிக்கிறேன் என விளக்கம் கொடுப்பது, வாழ்வியலை மகள்களுக்கு என் எழுத்தின் மூலம் சொல்லிக் கொடுக்கிறேன் என வெளிப்படையாக சொல்வது என எத்தனை உயர்வான சிந்தனை உள்ளவர்கள் என் எழுத்தின் வாசகர்கள்.

இவர்கள் யாருமே என் எழுத்தை ஜஸ்ட் லைக் தட் கடந்து சொல்வதில்லை. கவனமாக படிக்கிறார்கள். பின்பற்ற நினைக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, நித்தம் என் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவருமே என் எழுத்தின் தீவிர வாசகர்கள். மிக கண்ணியமானவர்கள்.

500 லைக் வந்து, 100 பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்று அதனால் 1000 மன உளைச்சல்கள் வருவதைவிட 1000 பேர் வாசித்து, 50 பேர் லைக் போட்டு, 10 பேர் பின்னூட்டமிட்டு கடந்து சென்றாலும் என் எழுத்தின் சாராம்சம் அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் என் சிந்தனை அமையப்பெற்றது வரம்.

இப்படித்தான் நம்மை மதிப்பவர்களை நாம் மதித்தால் அவர்களும் மனம் மகிழ்ந்து அவர்களுக்குள்ளும் நேர்மறை எண்ணங்கள் நிரம்பி அது இன்னும் சிலரிடம் பரவி, இப்படியாக நல்ல விஷயங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் கடத்தப்படும். பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும். நம்மை நாம் மதித்தால் மட்டுமே மற்றவர்களை மதிக்கும் பண்பு உண்டாகும். நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari